காய்கறிகள் சொல்லும் அழகுக் குறிப்புகள்

காய்கறிகளில் உள்ள தாதுப் பொருட்கள், புரத சத்துக்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திட உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறிகள் சருமத்தை பாதுகாத்து அழகாக திகழ்ந்திடவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காய்கறிகளின் உதவியுடன் மாசுமறுவற்ற பளபளப்பான சருமத்தை எந்தவித பக்கவிளைவுகள் இல்லாமல் பெறமுடியும். அதற்கு காய்கறிகளின் சிறப்புக்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது. கீழே நாம் பார்க்க இருக்கும் காய்கறிகள் அன்றாடம் நம்முடைய வீட்டின் சமயலறையிலேயே கிடைக்கின்றன. அவற்றின் சிறப்புக்களை அறிந்து நாமும் அழகுறலாமே!

வெள்ளரி

வெள்ளரியின் சிறப்பம்சங்கள்

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த வெள்ளரியில் இருக்கு அமினோ அமிலங்கள் சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்வதோடு சருமத்தில் இருக்கும் ஒவ்வாமையையும் நீக்கிட உதவுகிறது. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்க உதவுவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், முகப்பருக்கள், சருமம் வறண்டு போகாமல் காப்பது என பல வகைகளில் உதவுகிறது. இதனை உபயோகிப்பதன் மூலம் மிருதுவான சருமத்தை பெறலாம்.

வெள்ளரி தரும் அழகுக் குறிப்புகள்

* வெள்ளரிச் சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் முகத்திற்கு நல்ல பொலிவை தந்திடும்.

* ஒரு மேஜைக்கரண்டி வெள்ளரி சாறுடன் ஒரு மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறைச் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மினுமினுப்பு கூடும்.

தக்காளி

தக்காளியின் சிறப்பு அம்சங்கள்

தக்காளியில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (Alpha hydroxy Acids) உள்ளது. இது சருமத்தின் PHஐ சமன் செய்திட உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்களை இருக்கமாக்கி சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாத்திட
உதவுகிறது. இதில் இருக்கும் லைகோபின் (lycopene) கூட்டுப்பொருள்களில் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுகிறது.

தக்காளி தரும் அழகுக் குறிப்புகள்

* தக்காளியின் சாறை தினமும் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவுவதால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

* இரண்டாக வெட்டிய தக்காளித் துண்டுகளால் முகத்தை நன்றாக மஸாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவினால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* ஒரு மேஜைக்கரண்டி தக்காளி சாறுடன் ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிடவும். இதனால் நம்முடைய சருமத்தின் நுண்ணிய துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியின் சிறப்பம்சங்கள்

வெள்ளை முள்ளங்கியில் வைட்டமின் சி மற்றும் நச்சுப் பொருட்களை எதிர்த்திடும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின் சி சருமப் புற்றுநோய் (Melanoma) ஏற்படாமல் தடுத்திட உதவுகிறது. நம்முடைய உணவில் வெள்ளை முள்ளங்கியைச் சேர்த்து கொள்வதன் மூலம் பொலிவான மிருதுமான சருமம் பெற்றிடலாம். காய்கறி சாலட்களிலும் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளை முள்ளங்கி தரும் அழகுக் குறிப்புகள்

* வறண்ட சருமம் உடையவர்கள் வெள்ளை முள்ளங்கி சாறுடன் சிறு வெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவுவதால் சருமம் மிருதுவாவது மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள கறைகளையும் நீக்குகிறது.

* வெள்ளை முள்ளங்கியின் சாறை முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நாளடைவில் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் சிறப்பம்சங்கள்

அனைவருக்கும் பிடித்தமான ஒரு காய் என்ராலே அது உருளைக்கிழங்கு தான். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கான காய் இது. இதில் இருக்கும் கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,
இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறது. இதில் இருக்கும் கேட்டேகோலஸ் (Catecholase) என்ஸைம் (enzyme) நம்முடைய சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் அதிகபடியான எண்ணெயை நீக்கவும் 
உதவுகிறது. கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையத்தை இவைகள் நீக்கிட உதவுவது நாம் அனைவரும் அறிந்ததே. 

உருளைக்கிழங்கு தரும் அழகுக்குறிப்புகள்

* உருளையை இரண்டு துண்டுகளாக வெட்டி அவைகளைக் கொண்டு முகத்தில் மேலும் கீழுமாக மஸாஜ் செய்து 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவுவதால் முகத்தில் இருக்கும் அதிகப்படி எண்ணெய் நீங்கி முகம் பொலிவுடன் திகழும்.

* முகத்தின் பொலிவை அதிகரித்திட தினமும் உருளைக்கிழங்கின் சாறினை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவிவிடவும்.

* உருளையை வேகவைத்த நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது உங்களுடைய கைகளை அதில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு சுத்தமான நீரினால் கழுவுவதால் கைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு கைகள் மிருதுவடையும்.

புதினா

புதினாவின் சிறப்பம்சங்கள்

குளுமையை தரும் மூலிகையான புதினாவை உட்கொள்ளுவதன் மூலமாக புலன்களை சுறுசுறுப்படைகின்றன. இவைகளை பச்சையாகவும் உலர்ந்த பின்பு பயன்படுத்தலாம்.

புதினா தரும் அழகுக் குறிப்புகள்

* புதினா இலைகளை மூன்று நாட்கள் , அந்த நீரை பஞ்சின் உதவியுடன் முகத்தில் தடவுவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்திட உதவுகிறது.

* அரைத்த புதினா இலைகளை முகத்தில் தடவிடும்போது முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கறைகள் நீங்கக் காணலாம்.

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.

About The Author