காரியவாதியா?(2)

முதல் நாள் செந்திலோடு நடந்த உரையாடலை நினைத்துக் கொண்டே கூடத்து சோபாவில் உட்கார்ந்திருந்தாள் மாலா. அவமான உணர்ச்சி மறைந்து எத்தனை பெரிய சிக்கலிலிருந்து தப்பினோம் என்ற நிம்மதியே மேலோங்கியிருந்தது.

இலக்கின்றி அறையறையாகப் போய்க்கொண்டிருந்தார் சித்தப்பா. அவருக்குள் ஏதோ ஒருவித தவிப்பு இருந்தது. "என்ன சித்தப்பா, குட்டிபோட்ட பூனைய மாதிரி அலையறீங்க?", என்று கேட்டதும் அவசர அவசரமாக, "ஒண்ணுமில்லையே", என்றார்.

"இல்ல, ஏதோ இருக்கு."

"அப்பறம் சொல்றேன்."

"சரி", என்றுவிட்டு அவர் முகத்தையே பார்த்தாள்.

"அது வந்து,..", என்று சொல்லிக்கொண்டே அடுத்த இருக்கையில் வந்து உட்கார்ந்துகொண்டார் சித்தப்பா. ‘ம்’,. "சொல்லுங்க", என்று அவர் முகத்தைப் பார்த்துத் திரும்பினாள் மாலா.

அம்மா கூடத்துக்கு வருவதைப் பார்த்ததும்,"அண்ணி வராங்க. நா அப்புறமா சொல்றேன்", என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக்கொண்டு விடுவிடுவென்று வெளியேறிவிட்டார்.

என்னவாகயிருக்கும் என்று யோசித்தபடியே உட்கார்ந்திருந்தாள். "மாலா, பூங்கொடிக்கு கொஞ்சம் சூப்பு வச்சிருக்கேன். கொண்டு போயி குடுத்துட்டு வாயேன்", என்றாள் அம்மா.

"டிஸ்சார்ஜ் ஆயாச்சா?"

"டிஸ்சார்ஜ் ஆகி நேத்தே வீட்டுக்கு வந்தாச்சி."

"இன்னும் அழுதுகிட்டு தான் இருக்காங்களா?"

"இப்பப் பரவாயில்ல. கொஞ்சம் சாதாராணமாப் பேசுது."

"சரி, சித்தப்பா ஏம்மா ஒரு மாதிரியா ரெஸ்ட்லெஸா இருக்காரு?"

"என்ன?"

"அவருக்கு ஏதும் பிரச்சனையான்னு கேட்டேன்."

"ஒருவேள நேத்திக்கி என் கிட்ட பவானியப்பத்தி சொல்லிகிட்டிருந்தாரே, அதப்பத்தியா இருக்குமோ?"

"அவங்களுக்கென்ன?"

"ப்ச், புருசன் டிவோர்ஸ் கேக்கறானாம். அவங்க ஒரே கவலையாயிருக்காங்களாம்."

"சரி, அதுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்?"

"அவங்களுக்காக இவரு கவலப்படறாரு. கொஞ்சநாளா ரெண்டுபேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்ஸா இருக்காங்களே."

"ஓ,..", என்றபடி பூங்கொடி வீட்டுக்குக் கிளம்பினாள். வழியெல்லாம் சித்தப்பாவின் திடீர் போக்குக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே நடந்தாள்.

****

மதியம் வீடு திரும்பியதிலிருந்து மணிமாறன் சூயி வீட்டில் நடந்தவற்றையே சொல்லிக்கொண்டிருந்தான். குடும்பத்தினர் எல்லோரும் பவானிக்காக வருத்தப்படும் அதே வேளையில் அக்கறையான ஆதரவும் கொடுத்தார்கள். அதனால் தான், இந்தியாவிற்கு உடனே பறந்து போய் விடத்துடித்த அவள் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு தினசரி வாழ்க்கையைத் தொடர முடிந்தது. ஒரு நாள் ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். "வேலையில கொஞ்சமானும் மனசுல இருக்கற கவலைய மறக்கமுடியுது. அதுவுமில்லாட்டி கஷ்டம்", என்று மறுத்து விட்டாள் பவானி. "சரி, நீ வேணா ஊருக்குப் போயிட்டு வா பவானி. செலவப் பத்தி யோசிக்காத", என்றபோது நெகிழ்ந்து போய் விட்டார். ஊருக்குப் போவதில் அவருக்கு இஷ்டமில்லை.

"உன்னத் தான் வேணான்றானே உன்னோட புருஷன், பேசாம விலகிடேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ வருத்தம்? அங்கங்க தனியா இருக்கறப்போ அழுதுகிட்டே இருந்த நேத்திக்கி முழுக்க. கவனிச்சுட்டுதான் இருந்தேன். ஒண்ணு செய், நீ போகல்லன்னா உம்பிள்ளைங்கள லீவுக்கு வரவழச்சுக்கோ. இருந்துட்டு ஸ்கூல் தெறக்கும் போது போகட்டும்", என்றும் சொன்னார்  திருமதி.டான்.

பவானிக்கு பிள்ளைகளைக் கூட்டிவர ஆசை தான். சீக்கிரமே போன் போட்டு இளங்கோவிடம் டிக்கெட்டுக்குச் சொல்லி வைக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். நல்ல வேளை போன லீவுக்குக் கூட்டி வரலாமென்று பாஸ்போர்ட் தயாரித்தாயிற்று.

"இன்னும் நாலு வருஷம் வேலபார்த்துட்டு, நீ போனபிறகு உன்னோட கடசி காலம் வரைக்கும் உனக்கு மாசமாசம் ஒரு தொகைய பென்ஷனாக் கொடுக்கத் தான் நெனச்சிருக்கோம். அதெல்லாம் பொதுவா யாரும் செய்யறதில்ல. இருந்தாலும், நாங்க செய்யறதாத் தான் இருக்கோம். இங்க இருக்கறப்பவே ஏதாவது நல்ல ஆளாப் பார்த்தீன்னா பிடிச்சிருந்தா சொல்லு. கவலையே படாம கல்யாணம் பண்ணு. எங்க சப்போர்ட் உனக்கு இருக்கு. வயசான காலத்துல உனக்கு ஒரு ஆள் வேணுமேன்றது தான் ஐடியா”, என்று திரு. டான் சொன்னதும் பவானிக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் தைரியமாக இருந்தது. மாலாவின் சித்தப்பாவின் நினைவு வந்தது. அவரும் ஏற்கனவே இதைச் சொல்லிவிட்டிருந்தார். ஆனால், பவானி தான் பிடிகொடுக்காமல் பேச்சை மாற்றியிருந்தாள்.

"ஆண்டி இன்னும் நாலு வருஷம் இருப்பீங்கல்ல. உடனே கெளம்பணும்னு சொல்லிடுவீங்களா?", என்று சின்யீ கேட்டதும், "கவலப்படாத. இருப்பாங்க. வகவகயா சாப்பாடு கெடைக்காதோன்ற பயம் வந்திடுச்சு இவளுக்கு", என்று சீண்டினான். சின்யீ அவனை அடிக்கக் கையோங்கினாள்.

"ஆண்டி, நீங்க உங்க நாட்டுக்குப் போனதும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் வைங்க. வியாபாரம் பிச்சுக்கும்", என்றான் சூயி.

அவன் யோசனையைக் கேட்டுவிட்டு, சிரித்துக்கொண்டே, "அதுக்கெல்லாம் சென்னையில இருக்கணும். மன்னார்குடி சரிப்படாது", என்றாள் பவானி.

அடுத்து வந்த நாட்களில் கிட்டத்தட்ட தினமும் ஊருக்கு தொலைபேசியில் அழைத்து பிள்ளைகளுடன் பேசினாள். இருவருக்கும் நிலைமை மிக நன்றாகப் புரிந்தது. சின்ன வயதில் அத்தனை தெளிவாக யோசித்தது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "அம்மா, நாங்க வந்தா மொதலாளி வீட்டுலயே தான் தங்கணுமா? விடுவாங்களா?", என்று கேட்ட பெண்ணிடம் சிரித்துக்கொண்டே, "ஒண்ணும் பிரச்சனையில்ல. ரொம்ப நல்லவங்க. என்னோட ரூம்ல இருந்துக்கலாம்", என்றாள். "அம்மா, வீஸான்றாங்களே. அது,..", என்ற மகனிடம், "அதொண்ணும் பிரச்சனையில்ல. பாஸ்போர்ட் காபி எங்கிட்ட இருக்கு. இவங்களே வீஸா எடுத்துக் குடுப்பாங்க", என்றதும், "அப்ப நா சித்தப்பாட்ட டிக்கெட்டு எடுக்கச் சொல்லிடறேம்மா", என்றான். சில வாரங்களில் பிள்ளைகளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் பவானிக்கு தூக்கம் கூட வர மறுத்தது.

(நெய்தல் -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author