காலிபிளவர் மசாலா குழம்பு

தேவையானவை:

காலிபிளவர் – 1,
உருளைக்கிழங்கு – 3,
பச்சைப் பட்டாணி – ¼ கோப்பை,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 4,
உப்பு, கொத்துமல்லி – தேவையான அளவு,

அரைக்க:

இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு – 6 பற்கள்,
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
தனியாத்தூள் – ½ தேக்கரண்டி,
சோம்பு – ½ தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி,
பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி.

செய்முறை:

முதலில், காலிபிளவரைத் தனித்தனிப் பூவாக உதிர்த்து உப்பு நீரில் போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
பின்பு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகப் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, பாத்திரத்தை வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, காலிபிளவர், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, தேவையான உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு, இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து, காலிபிளவர், உருளைக் கிழங்கு, பட்டாணி வேகும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர், அரைத்த விழுதைப் போட்டு, ஒரு கோப்பை தண்ணீரை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவேண்டும்.

10 நிமிடம் குழம்பு கொதித்ததும், கொத்துமல்லியைத் தூவி இறக்குங்கள். சுவையான காலிபிளவர் மசாலா குழம்பு தயார். இது இட்லி, சப்பாத்தி, பிரைடு ரைசுக்குச் சரியான சைட் டிஷ்! சுவைத்துப் பாருங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author