காளித்தம்பியின் கதை (4)

வண்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அது மதுரையை விட்டு விலக விலக, வண்டிக்குள் இருந்த பழனியின் மனம் மதுரையோடு போய் ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது. பழனி மதுரையிலேயே பிறந்தவன். மதுரையிலேயே வளர்ந்தவன். மதுரையில் பிறந்தது ஒரு பேறு என்றும், அங்கே வாழ்வது ஒரு பேறு என்றும் நினைப்பவன். அவன் இனி ஒரு வருடத்திற்கு மதுரையைப் பார்க்கப் போவதில்லை.

பழனி திடீரென்று சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். கடைசியாக, பிறந்த ஊரை ஒரு முறை பார்க்க விரும்பினான்.
மதுரைமா நகரம் கண்ணுக்குச் சரியாகத் தெரியவில்லை என்றாலும் பழனி அந்தத் திசையை நோக்கி உண்மையான பக்தியுடன் வணங்கினான்.

தன் விருப்பப்படி மதுரையை விட்டுப் போவது மிகவும் சிரமம் என்று முதலில் பழனி நினைத்தான். அப்பாவும் அம்மாவும் எளிதில் சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்கள் இருவரும் அவன் நினைத்த அளவு அவன் லட்சியத்திற்குக் குறுக்கே நிற்கவில்லை.

இதை எண்ணிய பழனிக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. "இப்போது நாம் கோயமுத்தூருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கோவைக்குப் போ என்று அப்பாதானே சொன்னார்? ஏன்? திருநெல்வேலி, திருச்சி, சென்னை என்று எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. அப்படியிருக்கக் கோவைக்குப் போ என்றது ஏன்?"

பழனி யோசித்தான். ‘கோவைக்குப் போகிறாயா’ என்று அப்பா கேட்டார். பழனி ‘சரி’ என்றான். அப்போது அவர் முகம் ஏதோ மகிழ்ச்சியால் நிறைந்து மலர்ந்ததைப் போலத் திகழ்ந்ததைப் பழனி நினைத்தான்.

"ஒருவேளை, கோவையில் என்னைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பாரோ? கோவையில் நான் எங்கே தங்குகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி என்னைப் பார்க்க வருவார்களே? வருபவர்கள் சும்மா போவார்களா? ஏதாவது பணம் தருவார்கள். வசதிகள் செய்து கொடுப்பார்கள். அப்புறம் என் சொந்த முயற்சிக்கு இடம் ஏது?" என்று நினைத்தான் பழனி.

"கோவைக்குப் போ என்று அப்பா சாதாரணமாகச் சொன்னாரோ, ஏதாவது ஏற்பாடு செய்துவிட்டுச் சொன்னாரோ எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குச் சந்தேகம் வந்த பிறகு அந்த ஊருக்குப் போகக் கூடாது. நான் எந்த ஊரில் இருக்கிறேன் என்பது கூட அப்பாவுக்குத் தெரியக்கூடாது" என்று முடிவு செய்தான் பழனி.

அப்படியானால் எங்கே செல்வது?

பழனி யோசித்தான். தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னைக்குச் சென்றால் என்ன, என்று நினைத்தான். பிறகு சென்னைக்கே போக முடிவு செய்தான்.

திண்டுக்கல் வந்தது. பழனி இறங்கினான். பெட்டியிலிருந்த பர்ஸை எடுத்தான். திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொண்டான். டிக்கெட்டைப் பர்ஸில் வைத்து, பர்ஸைக் கால்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். பழனி ஏறி வந்த வண்டி போனது. சென்னை வண்டிக்காகப் பழனி காத்திருந்தான். வந்ததும் அதில் ஏறிச் சென்னைக்குச் சென்றான்.

அதனால்தான் கோவை ரயில் நிலையத்தில் பழனியின் புகைப்படம் வைத்துக்கொண்டு தேடு தேடென்று தேடிய சுந்தரேசரின் நண்பர் கிருஷ்ணன் கண்களுக்குப் பழனி அகப்படவில்லை.

பழனி சென்ற வண்டி சென்னை எழும்பூரை அடைந்தது. பழனி வண்டியிலிருந்து இறங்கினான். தன் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான். வாயிலில் டிக்கெட் வாங்குபவர் நின்றார். அவன் தன் கால் சட்டைப் பையிலிருந்த பர்ஸை எடுத்தான். அதிலிருந்த டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பர்ஸை கால்சட்டைப் பையில் திரும்பவும் வைத்துக் கொண்டான்.

பழனி ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தான். எதிரே பல ஓட்டல்கள் இருந்தன. பழனிக்கும் பசி. பர்ஸிலே அப்பா கொடுத்த பணம் இருந்தது. "அது அப்பாவின் பணம். இன்று முதல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். அப்பாவின் பணத்தால் சாப்பிடக்கூடாது" என்று நினைத்தான்.

ஐந்நூறு ரூபாயில் டிக்கெட் வாங்கியது போக மீதிப் பணம் இருந்தது. அதை என்ன செய்வது? அந்தப் பணம் தன்னைச் சோம்பேறி ஆக்கிவிடுமோ என்று அஞ்சினான். "சரி அதை ஏழைகளுக்குக் கொடுத்து விடுவோம். இப்போது நாம் எங்கே போவது?" என்று யோசித்து நின்றான்.

யாரோ ஒருவன் பழனியின் மீது மோதினான். "என்ன நைனா வழியிலே நிக்கறே! ஓரமா நில்லு" என்று சொல்லிவிட்டுப் போனான். பழனி, தான் நின்ற இடத்தைப் பார்த்தான். அவன் ஓர் ஓரமாகத்தான் நின்றிருந்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. "இதைக் காட்டிலும் ஓரமாக எங்கே நிற்பது?" என்று நினைத்துக் கொண்டான்.

அருகே ஒருவன் "பேப்பர் பேப்பர்" என்று கூவியவாறு புயல் வேகத்தில் திரிந்து பேப்பர் விற்றுக் கொண்டிருந்தான்.
பழனியின் வீட்டுக்குத் தினமும் காலையில் ஆங்கிலச் செய்தித்தாளும், மாலையில் தமிழ்ச் செய்தித்தாளும் வரும். பழனி காலையில் செய்தித்தாள் படித்துப் பழகியவன். அதனால் "பேப்பர்" என்று அழைத்தான். பேப்பர் விற்பவன் நொடியில் ஓடிவந்தான். ஒரு செய்தித்தாளைக் கொடுத்தான்.

பழனி அதை வாங்கிக் கொண்டான். அதற்குப் பணம் தரவேண்டுமே? எங்கிருந்து தருவது? அப்பாவின் பணத்தை இதற்கு மட்டும் பயன்படுத்தலாமா?

பழனி யோசிக்கும்வரை பேப்பர்காரன் சும்மாயிருக்கவில்லை. "சீக்கிரம் துட்டு கொடுப்பா" என்று அவசரப்படுத்தினான்.

பழனி பையில் கையை விட்டான். என்ன ஆச்சர்யம்! பர்ஸைக் காணோம்! பழனி மீண்டும் ஒரு முறை பையைத் துழாவினான். பர்ஸ் இல்லை. பர்ஸ் எங்கே போனது?

கால் சட்டையில் சற்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது பர்ஸ். அதைப் பார்த்த ஒருவன்தான் அவன் மீது மோதி, அதே நேரத்தில் பர்ஸை எடுத்துக் கொண்டு சென்றான். பாவம், பழனிக்கு இது புரியவில்லை.

"துட்டு கொடுப்பா!"

பேப்பர்காரன் மீண்டும் அவசரப்படுத்தினான். பழனியிடம் பணம் ஏது?

"மன்னிக்கவேண்டும்! என் பர்ஸ் தொலைந்து விட்டது" என்று சொல்லி வாங்கிய பேப்பரை அவனிடம் நீட்டினான்.

"என்னப்பா, பிக்பாக்கெட்டா? இது பட்ணம்! இங்கே உஷாரா இருக்க வேண்டும்" என்று சொன்னான் பேப்பர்காரன். இதற்குள் யாரோ "ஏய் பேப்பர்" என்று அழைத்தனர். உடனே பழனி நீட்டிய பேப்பரைப் பறித்துக்கொண்டு அவரிடம் ஓடினான் பேப்பர்காரன்.

பழனி சிரித்தான். அப்பாவின் பணம் தனக்கு வேண்டாம் என்று நினைத்தான். அவன் எண்ணத்தை அறிந்தவர்கள் போல யாரோ பர்ஸை எடுத்துக் கொண்டார்களே! பழனி மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தான். ரயிலிலேயே பல் விளக்கிக் கொண்டான். அதனால், முதலில் ஏதாவது சிற்றுண்டி சாப்பிட்டால் நல்லது என்றது வயிறு. அதற்குப் பணம்? சற்று முன்பாவது அப்பாவின் பணம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

அங்கேயே நிற்பதால் பலனில்லை என்று நினைத்த பழனி நடந்தான். சற்று தூரத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தைக் கடந்து மறுபுறம் செல்லப் படிகள் அமைத்த பாலம் இருந்தது. பழனி அதன் மீது ஏறினான். அங்கிருந்து சென்னை நகரத்தைப் பார்த்தான். பிறகு பாலத்தின் மறுபுறம் இருந்த படிகள் வழியே இறங்கி நடந்தான்.

சூரியன் நகரையே எரித்துச் சாம்பலாக்குவதைப் போல உஷ்ணத்தை வாரி வழங்கினான். மே மாதத்து வெய்யில் சென்னையில் எப்படியிருக்கும் என்று சொன்னால் புரியாது. அனுபவித்தால்தான் தெரியும். பழனியால் அந்தக் காலை நேரத்து வெய்யிலையே தாங்க முடியவில்லை.

மதுரையாக இருந்தால், இந்த வெயிலுக்கு ஏர்கண்டிஷன் செய்த அறைக்குள் நுழைந்து விடுவான். அல்லது பூங்காவில் கொடிகளால் அமைந்த ‘கிரீன் ஹவுஸ்’ஸில் புகுந்து கொள்வான். இல்லையென்றால் கோடைக்கானலுக்குப் போய்விடுவான். அங்கே அவர்களுக்குச் சொந்தமான பெரிய பங்களா இருந்தது.

அப்படிப்பட்டவன் இங்கே இந்தச் சென்னையில் என்ன செய்வான்? பாலத்திலிருந்து இறங்கி அந்தச் சாலையில் நடந்தான். வெம்மை பொறுக்க முடியவில்லை. உடல் வியர்வையால் நனைந்தது. அவன் நேரே ரண்டால்ஸ் சாலையில் நடந்தான்.

அவன் கையில் சிறிய பெட்டிதான் இருந்தது. பழக்கமில்லாத காரணத்தால் அதுவே பெருஞ்சுமையாக இருந்தது. அதைத் தூக்க முடியவில்லை. வெய்யிலைத் தாங்க முடியவில்லை. பசியைப் பொறுக்க முடியவில்லை. அதனால் அவனால் நடக்கவும் முடியவில்லை. வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனைக் கடந்ததும் நின்றான். சாலையின் இடப்புறத்தில் முக்கோண வடிவில் ஒரு சிறிய பூங்கா இருந்தது. வெயில் அவனை அங்கே விரட்டியது. பழனி பூங்காவில் ஒரு மரத்தடியில் பெட்டியை வைத்தான். அதன் மீது உட்கார்ந்தான்.

நிழலின் அருமையைப் பழனி நன்றாக உணர்ந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. அவன் என்ன செய்வான்? அவனிடம் ஒரு காசு கூட இல்லை. ஊரோ புதிது. "ஒரு வேளையைக் கழிப்பதே இவ்வளவு சிரமமாக இருக்கிறதே, இந்த ஊரில் ஒரு வருடத்தை எப்படித்தான் கழிக்கப் போகிறேனோ?" என்று ஒரு நிமிடம் நினைத்தான். மறுநிமிடம் "முயற்சி திருவினை ஆக்கும் என்று வள்ளுவர் சொன்னதை மறக்கலாமா? முயன்றால் எதுவும் முடியும். இடையில் வரும் துன்பத்தைக் கண்டு மனம் கலங்கலாகாது" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.

பூங்காவின் எதிரே பெரிய கட்டடம் இருந்தது. பழனி அங்கிருந்த பெயர்ப்பலகையைப் படித்தான். செங்கல்வராய நாயகர் அனாதை விடுதி அது. பேசாமல் அங்கே போய் அனாதை என்று சொல்லிச் சேர்ந்து விடலாமா என்றுகூட நினைத்தான். பிறகு "என்னதான் வந்தாலும், எத்தனை நாள் பட்டினியாக இருந்தாலும் சரி, கவலையில்லை. நாமே உழைத்துச் சாப்பிட வேண்டும். நாமே பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும். நாமே நம் திறமையால் புகழ் பெற வேண்டும். அந்தப் புகழால் நம் தந்தை புகழ் பெறவேண்டும். இதிலிருந்து மாறக் கூடாது" என்று முடிவு செய்து கொண்டான்.

பூங்காவில் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு எங்காவது வேலை கிடைக்குமா என்று பார்க்க விரும்பினான் பழனி. உடனே பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த டவலைக் கீழே விரித்தான். பிறகு பெட்டியைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். அவன் தூங்க விரும்பவில்லை. களைப்புத் தீர ஓய்வு எடுத்துக் கொள்ளவே விரும்பினான். ஆனால் அவன் விருப்பம் நிறைவேறவில்லை. ரயிலில் இரவு தூங்கவில்லை. அதனால் அவனையறியாமலே அவன் கண்கள் மூடின. சற்று நேரத்தில் அவன் நன்றாகத் தூங்க ஆரம்பித்தான்.

தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்தான். அவன் பக்கத்தில் யாரோ உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்தான். தன் அருகே இருப்பவனைப் பார்த்தான். அவனை எங்கேயோ பார்த்ததைப் போல் இருந்தது. அவன் "தம்பீ! தூக்கம் முடிந்ததா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

பழனி தன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எதிரே உட்கார்ந்திருப்பவன் யார்? அவன் கையில் சில செய்தித் தாள்களும் சில வார, மாதப் பத்திரிகைகளும் இருந்தன. அவற்றைப் பழனி பார்த்தான். உடனே அவன் யார் என்பதைப் புரிந்து கொண்டான். அவன்தான் காலை எழும்பூர் ரயில் நிலையத்தில் பேப்பர் விற்றவன்.

"காலையில் பேப்பர் விற்றது நீதானே?" என்று கேட்டான் பழனி.

"ஆமாம். நீ கூட பர்ஸ் காணோம் என்று சொன்னாயே. பாவம், அதில் நிறையப் பணம் இருந்ததா?" பேப்பர்காரன் கேட்டான்.

"உம்… இருந்தது. அது போனதே நல்லதுதான்" என்றான் பழனி.

"ஓஹோ… அப்படியா? இந்தப் பெட்டி போனால் கூட உனக்கு நல்லதுதானோ?" என்று கேட்டான் பேப்பர்காரன்.

பழனி சடாரென்று கீழே இருந்த பெட்டியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். ‘பெட்டி போனால் நல்லதா? இதில்தானே என்னுடைய சர்ட்டிபிகேட் இருக்கிறது’ என்று நினைத்தான் பழனி. உடனே, "ஏன் அப்படிச் சொல்கிறாய்" என்று கேட்டான்.

"இல்லை. நான் இந்த வழியே போனபோது யாரோ ஒருவன் உன் தலைக்குப் பக்கத்தில் இருந்தான். அவன் கைகள் உன் பெட்டியை நகர்த்துவதைப் பார்த்தேன். எனக்குச் சந்தேகம். கொஞ்சம் நெருங்கி வந்தேன். என்னைக் கவனித்ததும் அவன் எழுந்து போய்விட்டான்" என்றான் அவன்.

"ஐயையோ! இந்தப் பெட்டி போனால் என் லட்சியம் என்னாவது?" என்றான் பழனி.

"தம்பீ! நீ இந்த ஊருக்குப் புதியவன். இதைக் காலையிலேயே தெரிந்து கொண்டேன். யாரோ போக்கிரி உன் பெட்டியைத் தட்டிக் கொள்ளப் பார்த்தான். நான் வந்ததால் அது தப்பியது. உன்னை எழுப்பி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன். நீயே எழுந்து விட்டாய்" என்றான் பேப்பர்காரன்.

பழனி "நன்றி. மிக மிக நன்றி" என்றான்.

"உன்னைப் பார்த்தால் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்பது தெரிகிறது. ரொம்பப் பசிக்குமே" என்றான் பேப்பர்காரன்.

பழனி பசியை மறந்திருந்தான். அவனோ அதை நினைவுபடுத்தி விட்டான். மறைந்திருந்த பசி பழனியைத் திரும்பவும் வாட்டியது. என்றாலும் "ஊஹும்! அதெல்லாம் இல்லை. எனக்குப் பசியே இல்லை" என்றான்.

"உன் பெயரென்ன?" – அவன் கேட்டான்.

"பழனி" என்றான் பழனி.

"பழனியா? என் பெயர் காளியப்பன். காளி என்று சுருக்கமாக அழைப்பார்கள். பழனி, எழுந்து வா!" என்றான் காளியப்பன்.

பழனிக்கு ஒன்றும் புரியவில்லை. "எழுந்து வருவதா? எங்கே போவதற்கு?" என்று கேட்டான்.

"முதலில் உன் பசி போக ஏதாவது சாப்பிட ஓட்டலுக்குப் போவோம். பிறகு நான் தங்கியிருக்கிற இடத்துக்குப் போவோம்" என்றான் காளி.

"நான்தான் பசி இல்லை என்றேனே?"

"நீ அப்படித்தான் சொல்கிறாய். உன் முகம் அப்படிச் சொல்லவில்லையே! காலையில் பேப்பர் வாங்கவே உன்னிடம் துட்டு இல்லை. நாஸ்தா சாப்பிட மட்டும் எங்கிருந்து வரும்?"

‘காளி சொல்வது உண்மைதான். ஆனால் இவனுடன் போய் இவனுடைய பணத்தில் சாப்பிடுவதா? சே… சே… கூடாது’ என்று நினைத்தான் பழனி.

"காளி, உன் அன்புக்கு நன்றி! நான் சாப்பிடவில்லை என்பது உண்மைதான். ஆனால் பிறர் தானமாகத் தருவதைச் சாப்பிட விரும்பவில்லை. நானே சம்பாதித்துச் சாப்பிட வேண்டும். நானே சம்பாதித்துப் படிக்க வேண்டும். நானே என் திறமையால் புகழ் பெற வேண்டும். இதுதான் என் லட்சியம்" என்றான் பழனி.

"சபாஷ்! அப்படிச் சொல்லு! நீயும் ஒரு லட்சியவாதி. பழனி, நானும் ஒரு லட்சியவாதிதான். என் லட்சியத்தை உனக்குப் பிறகு சொல்கிறேன். இப்போது என்னுடன் புறப்படு. நான் தானமாகத் தரவில்லை. கடனாகக் கொடுக்கிறேன். அந்தக் காசில் சாப்பிடு. பிறகு அதை நீ திருப்பித் தரலாம். உம்… உம்… புறப்படு" என்றான் காளி.

பழனி சற்று யோசித்தான். காளிக்கு, பழனியைக் காட்டிலும் இரண்டு மூன்று வயது இருக்கும். நிறம் கருப்பு. அந்தக் கருப்பு உருவத்தைச் சற்றே உற்றுப் பார்த்தான் பழனி. அதற்குள்ளே இருக்கும் பால்போல் வெளுத்த பளிங்கு மனத்தை அவன் உணர்ந்து கொண்டான். "சரி காளி! உன்னுடன் வருகிறேன். ஆனால் கடனாகத்தான் சாப்பிடுவேன்" என்று கூறினான்.

காளி எழுந்தான். பழனி தன் பெட்டியை எடுக்கும் முன் காளி அதை எடுத்துக் கொண்டான். "நீ மிகவும் களைத்திருக்கிறாய். பெட்டியை நானே கொண்டு வருகிறேன்" என்றான் காளி.

பழனி ஒத்துக் கொள்ளவில்லை. ‘வேண்டாம்’ என்று கூறிக் காளியிடமிருந்து தன் பெட்டியை பலவந்தமாக வாங்கிக் கொண்டான். காளி மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. "பழனி! மணி பதினொன்றுக்கு மேலாகி விட்டது. பேசாமல் சாப்பாடே சாப்பிடலாமா?" என்று கேட்டான். பழனி அதற்குச் சம்மதித்தான். இருவரும் அங்கிருந்து அருகேயிருந்த சூளை என்னும் இடத்தை நோக்கிச் சென்றனர்.

ஒரு பெரிய ஓட்டல் வந்தது. இருவரும் நின்றனர். "பழனி! உன்னைப் பார்த்ததும் நீ பெரிய இடத்துப் பிள்ளை என்பதைத் தெரிந்து கொண்டேன். சுவையான சாப்பாடு சாப்பிட்டுப் பழகியிருப்பாய். இந்த ஓட்டலில் சாப்பிடுகிறாயா? இங்கே ஏழு ரூபாய் சாப்பாடு இருக்கிறது, பன்னிரண்டு ரூபாய் சாப்பாடும் இருக்கிறது" என்றான் காளி.

பழனி அந்த ஓட்டலைப் பார்த்தான். பிறகு "காளி நீ வழக்கமாக எங்கே சாப்பிடுவாய்" என்று கேட்டான்.

"நானா? எனக்குச் சமைத்துப் போட யாரும் இல்லை. நான் ஒரு பாட்டி வீட்டில் சாப்பிடுகிறேன். மாதா மாதம் பணம் தருகிறேன். அந்தப் பாட்டி என்னைப் போலப் பலருக்கும் சாதம் போடுகிறாள்" என்றான் காளி.

"அங்கே எனக்கும் போடுவார்களா?" என்று கேட்டான் பழனி.

"ஓ! போடுவார்கள். ஒரு சாப்பாடு இரண்டு ரூபாய். ஆனால் அந்தச் சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்காதே" என்றான் காளி.

பழனி "பரவாயில்லை. அங்கேயே போகலாம்" என்றான்.

காளி பழனியை அழைத்துக் கொண்டு தான் சாப்பிடும் வீட்டுக்குச் சென்றான். அங்கே போட்ட சாப்பாட்டைப் பழனியால் சாப்பிட முடியவில்லை. பசியைப் போக்க எப்படியோ சாப்பிட்டு முடித்தான். காளி பழனியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சூளையில் இருந்த சந்தில் ஒரு பழைய வீட்டின் முன்புறம், எட்டடி நீளமும் நாலடி அகலமும் உள்ள சின்ன அறையில்தான் காளி இருந்தான். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரின் கடையில்தான் காளி வேலை செய்து வந்தான். அதனால் முப்பது ரூபாய் வாடகைக்கு அந்த அறையை விட்டிருந்தார். இல்லையென்றால் அதற்கே நூறு ரூபாய் வாடகை தரவேண்டும்.

அறையில் இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தனர். காளியே அமைதியைக் கலைத்தான்.

"பழனி! உன் பெயர்தான் எனக்குத் தெரியும். மற்ற விவரங்களைச் சொல்கிறாயா?" என்று கேட்டான் காளி.

"காளி! உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன் உதவியுடன் என் லட்சியத்தை முடித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஆனால் தயவு செய்து என் ஊர் எது, தாய் தந்தை யார் என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்காதே! நான் தனியே இருந்து படித்துப் புகழ் பெற முடியும் என்பதை நிரூபிக்க இங்கே வந்திருக்கிறேன். அதை மட்டும் சொல்கிறேன்" என்றான் பழனி.

"சரி பழனி! நான் மேற்கொண்டு உன்னை வற்புறுத்தவில்லை. இனி நீ என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல்லு" என்று கேட்டான்.

"அதுதான் எனக்கும் புரியவில்லை. காளி! பேப்பர் விற்பதுதான் உன் வேலையா?"

"அது ஒன்று மட்டும் இல்லை."

"ஒன்றில்லை என்றால் ஒன்பது வேலை செய்கிறாயா?"

"ஒன்பதல்ல என்றாலும் பல. காலை ஐந்து மணியிலிருந்து ஆறரை வரையில் ஒருவர் வீட்டில் பம்பு அடித்துத் தண்ணீர் பிடிக்கிறேன். ஏழு மணியிலிருந்து ஒன்பது பத்து வரையில் பேப்பர் விற்கிறேன். அதற்கு மேல் பழைய பேப்பர் வாங்கத் தெருவெல்லாம் சுற்றுவேன். மாலையில் எங்காவது கூட்டம் நடந்தால் அங்கே புத்தகங்கள் விற்பேன். இவற்றைத் தவிர, வீடுகளுக்குப் பத்திரிகை போடும் வேலையும் செய்கிறேன்."

"அடேயப்பா! இத்தனை வேலையா? ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வேலை செய்வது அஷ்டாவதானம் என்று சொல்கிறார்கள். காளி நீ அஷ்டாவதானம் காளியப்பன்தான். எனக்கு இப்படி ஏதாவது ஒரு வேலை பார்த்துத் தருகிறாயா?"

"பார்த்துத் தருவதென்ன? என் வேலைகளில் எது உனக்கு விருப்பமோ அதை நீ எடுத்துக்கொள். அதற்குரிய சம்பளம் கிடைக்கும்."

"வேண்டாம் காளி! உன் வேலையை எனக்குத் தர வேண்டாம். வேறு புதிதாக ஏதாவது வேலை கிடைத்தால் சொல்லு, செய்கிறேன். நானும் ஏதாவது வேலை கிடைக்காதா என்று பார்க்கிறேன். அதுவரையில்……" என்று இழுத்தான் பழனி.

"அதுவரையில் உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதுவரையில் என்ன, அதற்குப் பிறகும் என்னுடனே தங்கலாம்" என்றான் காளி. "சரி. ஆனால் எனக்காகச் செலவழிப்பதெல்லாம் கடனாகத்தான் இருக்கவேண்டும். சரிதானா?" – பழனி கேட்டான்.

"கடனாகவே இருக்கட்டும்" என்று பதில் அளித்தான் காளி.

காளி தன் வேலைகளைக் கவனித்தான். பழனி வேலை தேடி அலையலானான். ஆனால் சாப்பிடும் நேரத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

பழனி சென்னை வந்த மூன்றாம் நாள்! மணி காலை பத்திருக்கும். பழனி வேலை தேடுவதற்காக வெளியே செல்ல நினைத்தான். அப்போது பேப்பர் விற்று முடித்த காளி அறைக்குள் வந்தான்.

"பழனி! மதுரையில் ஒரு திருட்டு. அதுவும் ஒரு சிறுவன் செய்திருக்கிறான்" என்றான் காளி.

மதுரையில் என்றதால் பழனி அதில் கவனம் செலுத்தினான். "சிறுவன் செய்த திருட்டா?" என்று கேட்டான்.

"மதுரையில் ஒரு பதினாலு வயதுச் சிறுவன் ஒரு பணக்காரர் வீட்டில் நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி விட்டான் என்ற செய்தி வந்திருக்கிறது. இதோ பார்" என்று தன் கையில் இருந்த பத்திரிகையைப் பிரித்து ஓர் இடத்தைக் காட்டினான்.

பழனி பத்திரிகையைப் பார்த்தான். மறு நிமிடம் அவன் முகம் மாறியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. காளியப்பன் இதைக் கண்டு விழித்தான். எவனோ திருடிய செய்தியைக் கண்டு பழனி ஏன் கண்கலங்குகிறான்? காளிக்குப் புரியவில்லை.

-தொடரும்…

About The Author