காளித்தம்பியின் கதை (8)

இருநூறு ரூபாய் பரிசு கிடைத்ததால் காளிக்கு ஒரு விருந்து வைக்கப் பழனி விரும்பினானல்லவா? அன்று காளி வந்ததும், "மாலை, ஐந்து மணிக்கு விருந்து. அதனால் எங்கும் போகாதே" என்று சொல்லிவைத்தான் பழனி. காளி அதற்குச் சம்மதித்தான்.

பழனி அன்று சாமி ஏஜென்ஸியில் விடுமுறை பெற்றுக்கொண்டான். காளியும் பிற்பகலில், பழைய பேப்பர் வாங்கச் செல்லவில்லை. இருவரும் அறையில் இருந்தனர். காளி படுத்துத் தூங்கினான். பழனி ஏதோ ஒரு கதை எழுதிக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் பழனி ஓய்ந்த நேரத்தில் கதையோ பாட்டோ எழுதி வந்தான். அதை அவ்வப்போது ‘மல்லிகை’ சிறுவர் வார இதழுக்கு அனுப்பி வந்தான். ஆனால், அதுவரை அனுப்பியவற்றின் முடிவு தெரியவில்லை. பழனி அதனால் சலிப்படையவில்லை. விடாமுயற்சி வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருமல்லவா?

மணி நான்கு அடிக்கும் சத்தம் கேட்டது. பழனி, அறையிலிருந்து வீட்டின் பின்னே சென்றான். முகம் கழுவிக்கொண்டு திரும்பி வந்தான். காளியை எழுப்பினான். "காளி! மணி நாலாகிவிட்டது. போ, போய் முகம் கழுவிக் கொண்டு வா"என்றான்.

காளி எழுந்து வீட்டுக்குள் சென்றான். பழனி அறையில் தலைவாரிக்கொண்டிருந்தான். அப்போது "தம்பீ, தம்பீ" என்று குரல் கேட்டது. பழனி வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே தோளில் ஒரு காமிராவைத் தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர், "தம்பீ, நான் பத்திரிகை நிருபர். பணப்பையைக் கண்டுபிடித்த பழனியைப் படம் எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன். இங்கேதானே பழனி இருப்பது?” என்று கேட்டார்.

"ஆமாம். நீங்கள் படம் எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?"என்று கேட்டான் பழனி.

"என்ன செய்யப்போகிறோமா? நாளை காலையில் எங்கள் பத்திரிகையில் அதை வெளியிடுவோம். தம்பீ, நீ யார்? ஒருவேளை நீதான் பழனியோ" என்று நிருபர் கேட்டார்.

பழனி உடனே, "என் பெயர் காளி. பழனியின் நண்பன். பழனி பின்பக்கம் போயிருக்கிறான். இதோ அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்னே ஓடினான்.

ஏன் தெரியுமா?

பழனியின் படம் பத்திரிகையில் வெளிவந்தால் அப்பாவும் அம்மாவும் பார்க்கக் கூடுமல்லவா? அது மட்டுமா, மதுரையிலிருக்கும் அவனுடைய நண்பர்கள், சுந்தரேசரின் நண்பர்கள் முதலிய அவ்வளவு பேரும் பழனி இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்வார்களே! பழனி அதை விரும்பவில்லை. யாருக்கும் தெரியாமல் சென்னையில் வசிக்க வேண்டும் என்று விரும்பினான். அதை நிருபரிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிருபர் அதையும் ஒரு செய்தியாகச் செய்தித்தாளில் வெளியிட்டாலும் வெளியிட்டு விடுவார். பின் என்ன செய்வது? ‘ஆள் மாறாட்டம் செய்தால் என்ன’ என்று ஓர் எண்ணம் தோன்றியது. அதனால்தான் "நான் காளி" என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

முகம் கழுவிக்கொண்டிருந்த காளியிடம் நிருபர் வந்திருப்பதைக் கூறினான் பழனி. "காளி என் படம் பத்திரிகையில் வருவதை நான் விரும்பவில்லை. அதனால் பழனி உள்ளே இருக்கிறான். அழைத்து வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். நீ தயவு செய்து பழனியாக நடி" என்று கேட்டுக்கொண்டான். காளி சம்மதித்தான்.

இருவரும் நிருபரிடம் வந்தனர். நிருபர் காளியை நிற்க வைத்து ஒரு படம் பிடித்துக் கொண்டு சென்றார். அந்தப் படந்தான் மறுநாள் செய்தித்தாளில் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்துதான் சுந்தரேசர் சென்னைப் பயணத்தை நிறுத்தினார். அந்தப் படத்தைப் பார்த்துதான் அழகனும் ஏமாந்தான்.

பழனி புத்திசாலித்தனமாக அப்படி ஆள் மாறாட்டம் செய்யாவிட்டால் என்ன நடந்திருக்கும்? சுந்தரேசர், தன் மகன் நெரிசலான, சுகாதாரக் குறைவான இடத்தில், காற்றோட்டம் இல்லாத சின்ன அறையில் சிரமப்படுவதையும், பேப்பர் போடும் வேலையால் மெலிந்து வருவதையும் கண்டு சகித்திருப்பாரா? நல்ல வேளை! பழனியின் இலட்சியம் தப்பியது.

நிருபர் புகைப்படம் எடுத்துச் சென்ற பின் பழனியும் காளியும் ஒரு ஓட்டலுக்குப் போய் நன்றாகச் சாப்பிட்டனர். அன்றிரவு பழனி தனக்குப் பரிசாகக் கிடைத்த பணத்தில் நூறு ரூபாயைக் காளியிடம் கொடுத்து "காளி, இது நீ சைக்கிளுக்காகக் கொடுத்த பணம்! பெற்றுக்கொள். உன் உதவிக்கு மிக்க நன்றி" என்று சொன்னான்.

காளி உடனே பெற்றுக்கொள்ளவில்லை. "இந்தப் பணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நீ பள்ளியில் சேரவேண்டும். அதற்குத் தேவையாக இருக்கலாமல்லவா?" என்றான்.
"தேவையானால் உன்னிடம் வாங்கிக்கொள்கிறேன். அப்புறம் கேட்டால் தரமாட்டாயா என்ன?" பழனி சிரித்துக் கொண்டே கேட்டான்.

காளியும் சிரித்துக்கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டான். "காளி, நான் பள்ளியில் சேரவேண்டும். இந்த ஊரில் எந்தப் பள்ளியில் சேரலாம்" என்று கேட்டான்.

காளி யோசித்தான். திடீரென்று துள்ளிக் குதித்தான். "சேச்சே! இதைச் சொல்ல மறந்து விட்டேனே!" என்று சொல்லிக்கொண்டு தன் தலையில் ஓர் அடி வைத்துக் கொண்டான்.

"என்ன காளி" என்று ஆவலோடு கேட்டான் பழனி.

"பழனி! ஹண்டர்ஸ் ரோட் முனையிலே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதே! உனக்குத் தெரியுமா?"

"ஹண்டர்ஸ் ரோட் முனையிலா?"

"ஆமாம்! அந்தப் பள்ளி இலவச உயர்நிலைப்பள்ளி."

"என்னது! இலவச உயர்நிலைப்பள்ளியா?"

"ஆமாம்! அங்கே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது இலவச உயர்நிலைப்பள்ளி என்பதைக் கவனிக்கவில்லை. நான் பேப்பர் போடும் வீடுகளில் ஒன்று, ஒரு ஹெட்மாஸ்டர் வீடு. இன்று காலையில் அவரைப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் பற்றிக் கேட்டேன். அவர் வேலை செய்யும் பள்ளியில் சம்பளமே இல்லை. ஸ்பெஷல் பீஸ் இல்லை. ஆனால், ஏழை மாணவர்களை மட்டும்தான் சேர்த்துக் கொள்வார்களாம்! அவர் சொன்ன இந்தச் சேதியை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்" என்றான் காளி.

பழனியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. "காளி! என் கவலை பறந்துவிட்டது. பேப்பர் போடுவதால் வரும் பணத்தையும் சைக்கிள் துடைப்பதால் வரும் பணத்தையும் வைத்துக்கொண்டு ஒரு வழியாகச் சாப்பாட்டுக் கவலையையும் தீர்த்து விடலாம்" என்றான்.

"பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகும் சைக்கிள் துடைக்கப் போகிறாயா?"

"ஆமாம். அதில் என்ன இழிவு? அதுவும் ஒரு வேலைதானே? காலையில் ஒரு மணிநேரம், மாலையில் கொஞ்ச நேரம். அவ்வளவுதான். மாலை ஐந்து மணிக்கு பேப்பர் போடப் போய்விடுவேன். இதில் எதையும் விடப்போவதில்லை. காளி, நாளைக்கு முதலில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போய் ஒரு அப்ளிகேஷன் பாரம் வாங்கி வரவேண்டும்" என்றான் பழனி.

"ஓ! போகலாம். அதற்குமுன் ஹெட்மாஸ்டரைப் பார்க்கலாம். காலையில் பேப்பர் போடப்போகும்போது நீயும் கூட வருகிறாயா?

"ஓ வருகிறேன்."

மறுநாள் காலை காளி, பழனியை அந்தத் தலைமையாசிரியர் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பழனியை அறிமுகப்படுத்தினான். அவர், "பழனி, காளி உன்னைப் பற்றிச் சொன்னான். வேலை செய்து கொண்டே பள்ளியில் படிக்க முடியுமா? எங்கள் பள்ளியில் ஒரு முறை பெயில் ஆனால் அவர்களைப் பள்ளியிலிருந்து நீக்கி விடுவது வழக்கம்."

"வேலை செய்துகொண்டே படிக்க முடியும் என்று நம்புகிறேன் சார்" என்றான் பழனி.

"உம், நீ எந்த வகுப்பில் சேரவேண்டும்!"

"ஒன்பதாம் வகுப்பில் சார்!"

"ஒன்பதாம் வகுப்பில் சேரவேண்டுமா? அதில் மூன்று பேருக்குத்தான் இடம் இருக்கிறது. இதுவரை சுமார் இருபது பேர்கள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். நீயும் விண்ணப்பம் செய்! நாங்கள் ஒரு தேர்வு வைப்போம். அதில் அதிக மார்க்கு வாங்கும் முதல் மூன்று பேரைச் சேர்த்துக் கொள்வோம். அதனால் நீ மிக நன்றாகத் தேர்வு எழுதினால்தான் இடம் கிடைக்கும்" என்றார் தலைமை ஆசிரியர்.

காளியும் பழனியும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றனர். தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் பெயர் தியாகராஜர். அவருக்குப் பழனியை மிகவும் பிடித்து விட்டது. அதனால் அவனைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியுமா? ‘பார்த்தாலே பையன் கெட்டிக்காரனாகத் தோன்றுகிறான். அதிக மார்க்கு வாங்கி முதல் மூவரில் ஒருவனாக வந்தாலும் வரலாம்’ என்று எண்ணினார்.

பழனி அன்றே அப்ளிகேஷன் பாரம் வாங்கினான். அதைப் பூர்த்தி செய்தான். கார்டியன் என்ற இடத்தில் காளியப்பன் என்று எழுதினான். அதைப் பள்ளியில் சேர்த்துவிட்டான்.

பிறகு தேர்வுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான்.

தேர்வு நாள் வந்தது.

பழனி பள்ளிக்குச் சென்றான். மதுரை மீனாட்சியை மனத்தில் நினைத்துக் கொண்டே கேள்வித் தாளை வாங்கினான். தேர்வு எழுதினான். ஆங்கிலம், கணக்கு, பொதுஅறிவு மூன்றிலும் தேர்வு நடந்தது. மூன்று மணி நேரம் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தான்.

காளி வெளியே காத்திருந்தான். பழனி தேர்வு எப்படி எழுதியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான். அவனே வீட்டுக்கு வந்து சொல்லும் வரை காத்திருக்க விரும்பவில்லை. அதனால்தான் முன்னதாகவே வந்து வெளியே காத்திருந்தான்.

பழனியைக் கண்டதும் ஓடினான். "பழனி! எப்படி எழுதினாய்? கேள்விகள் எல்லாம் சுலபம்தானா" என்று கேட்டான்.
பழனியோ "தேர்வெல்லாம் நன்றாகத்தான் எழுதியிருக்கிறேன்" என்று உற்சாகமில்லாமல் சொன்னான்.

காளி திடுக்கிட்டான். "என்ன பழனி, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? தேர்வு சரியாக எழுதவில்லையா" என்று கேட்டான்.

"மூன்று தேர்வுகளையும் நன்றாக எழுதியிருக்கிறேன். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறேன். அவை சரியாக இருக்கும் என்றும் நம்புகிறேன்" என்றான் பழனி.

"பின் ஏன் உன் முகம் இப்படி இருக்கிறது?" என்று கேட்டான் காளி.

"நான் நன்றாக எழுதியிருக்கிறேன். என்னுடன் இருபத்திரண்டு பேர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்களில் என்னை விட கெட்டிக்காரர்கள் இருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பானே! என்னைக் காட்டிலும் நன்றாக எழுதியவன் ஒருவன் அல்லது இருவராக இருந்தால் பரவாயில்லை. மூன்றாவது இடமாவது எனக்குக் கிடைக்கும். அப்படியில்லாமல் மூன்று பேர் என்னைக் காட்டிலும் நன்றாக எழுதியிருந்தாலும் எனக்கு இடம் கிடைக்காதே" என்றான் பழனி.

"பழனி சொல்வதும் உண்மைதான். இருப்பதோ மூன்று இடம். மொத்தம் இருபத்து மூன்று பேரல்லவா பரீட்சை எழுதியிருக்கிறார்கள்?” என்று ஒரு நிமிடம் நினைத்தான் காளி. “பழனி கெட்டிக்காரன். நிச்சயம் அவனுக்கு இடம்  கிடைக்கும்" என்று நம்பிக்கையும் உடனே எழுந்தது. பழனியின் சோர்ந்த முகம் காளியை வருத்தியது.

"சே… சே… இதென்ன பழனி, இப்படி உன் முகம் அழுது வடிகிறது! உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவலையை விடு! உனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். வேண்டுமானால் பாரேன்" என்று காளி பழனியைத் தேற்றி அவனைச் சாப்பிட அழைத்துச் சென்றான்.

தேர்வு திங்கட்கிழமை நடந்தது. புதன்கிழமை காலையில் தேர்வின் முடிவைத் தெரிவிப்பார்கள். செவ்வாய்க்கிழமையே பழனி வருத்தத்தில் ஆழ்ந்து விட்டான். அன்று பகல் காளி அறைக்கு வந்தான். "பழனி! உம், சீக்கிரம் புறப்படு! சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தான்.

பழனியோ, "எனக்குப் பசிக்கவில்லை. நீ போய்ச் சாப்பிடு" என்றான்.

பழனியின் மனக்கவலை காளிக்குத் தெரியும். என்றாலும் அவனா பழனியைப் பட்டினி இருக்க விடுவான்? "பழனி, இது என்ன கோழைத்தனம்? உம் புறப்படு! சாப்பிட்டு வரலாம்" என்று அவனை இழுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றான்.

கவலை மனத்தை அடைத்துக் கொள்ளும்போது சாப்பாடு பிடிக்குமா? பழனி, காளியின் திருப்திக்காகச் சாப்பிட விரும்பினான். முடியவில்லை. ஏதோ சாதத்தைக் கிளறிவிட்டு இலையிலிருந்து எழுந்தான்.

காளி வேலைக்குப் போனான். பழனி அறைக்குச் சென்றான். காளியின் மனம் வேலையில் ஈடுபடவில்லை. பழனியின் வருத்தமே அவனையும் வருத்திக் கொண்டிருந்தது. அதனால் நான்கு மணிக்குள்ளே அறைக்குத் திரும்பினான்.

பழனி அதே நிலையில் இருந்தான். காளி அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். "பழனி! என்ன இது, இப்படி இருக்கிறாய்? நீ இப்படிக் கவலையே உருவாக இருப்பதைக் கண்டு என் மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா?" என்று கேட்டான் காளி.

"காளி, எனக்கு அது புரிகிறது. ஆனால் என் வருத்தத்தை மறைக்கவும் தெரியவில்லை. மறக்கவும் முடியவில்லை. பள்ளியில் இடம் கிடைக்கவில்லையென்றால் நான் என்ன செய்வேன்? நன்கொடை கேட்கும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் சக்தி இல்லையே!" பழனி சொன்னான்.

"பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கவில்லை என்று உறுதியாகத் தெரிந்து விட்டதைப் போல் பேசுகிறாயே? உம்… தேர்வின் முடிவோ நாளைக்குத்தான் தெரியும். நீ இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் சாயந்திரம் எப்படி சைக்கிளில் போவாய்? கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டு சைக்கிளில் எச்சரிக்கையாகப் போனாலே பல விபத்துக்கள் நடக்கின்றன. நீ இந்த நிலையில் சைக்கிளில் போனால் என்ன நடக்குமோ?… உம்… ஆ… அதுதான் சரி" என்றான் காளி.

‘எதுதான் சரி’ன்று கேட்பவனைப் போல் பழனி காளியைப் பார்த்தான். காளி, "இதோ பார் பழனி! இப்பவே நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் ஹெட்மாஸ்டரைப் பார்க்கிறேன். பார்த்து உன் பரீட்சையின் முடிவு என்ன என்று கேட்டுக் கொண்டு நொடியில் திரும்பி வருகிறேன்" என்று எழுந்தான் காளி.

பழனியின் முகம் மலர்ந்தது. "பழனி, என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்" என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் காளி.

"காளி! சீக்கிரம் வா" என்றான் பழனி. "காற்றாகப் பறந்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் காளி பள்ளியை நோக்கி நடந்தான். இல்லை ஓடினான். ஆமாம். உண்மையில் காளி ஓட்டமாய்த்தான் ஓடினான்.

பழனி, காளியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். பள்ளி கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது. மெல்ல நடந்து போனால் கூடப் பத்து நிமிடத்தில் திரும்பி விடலாம். காளி போய் இருபது நிமிடமாகி விட்டது. இன்னும் திரும்பவில்லை. நேரமாக ஆக பழனியின் மனம் துடித்தது. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. தீர்ப்பை எதிர்பார்த்துக் கைதிக் கூண்டில் நிற்கும் குற்றவாளியின் நிலையிலிருந்தான் பழனி.

காளி போய் அரைமணியாய் விட்டது. திரும்பிவரவில்லை. "நொடியில் வருவதாகச் சொன்ன காளி, காற்றாய்ப் பறந்து வருவதாகக் கூறிவிட்டு ஓட்டமாய் ஓடிய காளி, ஏன் இன்னும் வரவில்லை? "

"ஒருவேளை… ஒருவேளை… எனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லையோ?" இதை நினைக்கும்போதே தன் இதயம் வெடித்துச் சிதறுவதைப்போல வேதனைப்பட்டான் பழனி.

–தொடரும்…

About The Author