காவியத்தின் நோக்கம்

மூன்று பயன்கள்

ஒரு காவியம் அல்லது கவிதை பயனாக எதைத் தருகிறது? இதைப் பற்றி வடமொழிக் கவிவாணர்கள் பெரிதும் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மூன்று பயன்களை ஒரு காவியம் / கவிதை தருகிறது.

இதைக் ‘காவ்யானுசாஸனம்’ என்ற நூலில் ஹேமசந்திரர் அழகுற விளக்குகிறார்.
ஒரு காவியம் / கவிதை ஆனந்தம் தரும். புகழைத் தரும். மனைவி அன்புடன் கூறும் அறிவுரை போல அறிவைப் புகட்டும்.
ஆனந்தமும் அறிவுரையும் அனைவருக்கும் உரித்தானது. புகழ் படைப்பாளிக்கு உரித்தானது.

இன்பம் நல்கும் கவிதை

ஒரு நல்ல கவிதையைப் படித்தவுடன் இனம் காண முடியாத இன்பம் உள்ளமெங்கும் பொங்குகிறது. கவிதையில் மூழ்கி மெய்மறந்து போகிறோம். வேறு எதையும் நினைக்கத் தோன்றாது. அதைப் படிக்கும்போதெல்லாம் அதே உணர்வு திருப்பித் திருப்பி எழும்.

புகழ் தரும் கவிதை

புகழ் என்பது படைப்பாளிக்கு மட்டும் என்றாலும் கூட அதை அழகுற விளக்குபவர்களுக்கும் வந்து சேர்கிறது. காளிதாஸன், கம்பன் போன்ற மாபெரும் கவிஞர்களின் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும். பாரதியாரின் மேனி சிலிர்க்க வைக்கும் கண்ணன் பாட்டையும் பாஞ்சாலி சபதத்தையும் படிப்போர் சொல்லப்படும் கதாபாத்திரமாகவே ஆகி உள்ளம் உருகுவர்; ஆவேசப்படுவர். அதே நேரம், இவற்றை நேரடியாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக உரையாசிரியர்கள் பல வழிநூல்களை எழுதுகின்றனர்; அவற்றையும் படித்துப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் படிக்காதவர்களுக்குச் சொற்பொழிவாளர்கள் அவற்றை உணர்த்துகின்றனர். அப்பொழுது, மூல காவியத்தின் புகழும் பெருமையும் அதைப் புரியச் செய்த இவர்களுக்கும் வந்து சேர்கிறது.

மனைவி போல அறிவுரை தரும் கவிதை

கவிதை வெறும் இன்பம் மட்டும் தந்தால் போதாது. அது வாழ்க்கைக்குப் பயன்படும் அற்புதமான வழியைச் சுட்டிக்காட்ட வேண்டும். அறிவுரை தர எஜமானன், நண்பன், மனைவி என மூவர் உண்டு. BOSS எனப்படும் அதிகாரி அல்லது எஜமானனின் கண்டிப்பான தோரணையும் அதட்டலுடன் கூடிய ஆணையும் சற்று ஒத்து வராத ஒன்று.

நண்பன் உரிமையுடன் வற்புறுத்திக் கூறும் அறிவுரை சில சமயம் மனதைத் தொடும். சில சமயம் மனதைச் சுடும் – அது உண்மைதான் என்றாலும் கூட.

ஆனால், அன்புள்ள மனைவியின் கவர்ச்சியான வார்த்தைகளோ அன்பைத் தோய்த்து அறிவுரை தரும்போது அதில் இருக்கும் கிளுகிளுப்பு, அறிவுரையை ஏற்கச் செய்கிறது.

இவற்றுள் வேதங்கள், புராணங்கள், ஆக்யானங்கள் முதல் இருவகையில் இருக்கும்போது காவியங்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவையாக அமைவதால் அதைப் படிக்கும்தோறும் உள்ளத்தில் உவகை பொங்குகிறது; அறிவுரையை மனதில் ஏற்பது சுலபமாகிறது.

ஹேமசந்திரரின் சூத்திரம்

காவ்யமானந்தாய யஷஸ்ச காந்தாதுல்யதயோபதேஷாய ச I

(ஆனந்தம் – மகிழ்ச்சி; யஷஸ் – புகழ்; காந்தா – மனைவி; துல்யம் – சமமாக; உபதேசம் – அறிவுரை).

இப்படி ஹேமசந்திரர் காவ்யானுசாஸனத்தில் (1-3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.

ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார்.
இந்த உரைகல்லில் தேறுகின்றவையே காவியம்.

காவ்யசாஸ்த்ர விநோதேன காலோ கச்சதி தீமதாம் I
வ்யஸனேன ச மூர்கானாம் நித்ரயா கலஹேன வா II

– நீதி சாரம் செய்யுள் 106

புத்திசாலிகள் காவிய சாஸ்திரங்களைப் படித்தும் கேட்டும் அனுபவித்துத் தங்கள் நேரத்தைக் கழித்து மகிழ்கின்றனர். ஆனால், முட்டாள்களோ தூங்கியும் கலகம் செய்தும் தங்கள் நேரத்தை வீணாக்குகின்றனர்.

ஆகவே, புத்திசாலிகளாக கம்பனின் ராமாயணம், வில்லியின் பாரதம் ஆகியவற்றைப் படித்துப் பார்ப்போம்! காளிதாஸனின் கவிதைகளை ரசித்துப் படிப்போம்! பாரதியைப் பயில்வோம்! காவிய பிரயோஜனம் நமக்குக் கை கூடும்!

About The Author