காவிய தலைவன் – இசை விமர்சனம்

இயக்கம்: வசந்தபாலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருப்பதற்கு முக்கிய காரணம், இதில் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பதே. அது போக கதைக்களமும் மற்றுமொரு காரணம். நாடகக்கலைதான் கதைப் பொருள்.

வாங்க மக்க வாங்க

1950 களில் பிரபலமான நாடகத்தின் விளம்பரப் பாடலாக ஒலிவழி அழைப்பிதழ் நீட்டுகிறது. நா.முத்துகுமார் வரிகளை நாராயணன் மற்றும் ஹரிச்சரண் ஏற்ற இறக்கத்துடன் படித்து அழைப்பிதழைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

ஏய் மிஸ்டர் மைனர்

புல்லாங்குழல் மெலிதாக ஒலிக்க, சற்றே மேற்கத்தியச் சாயலில் காதல் நிலை பாடுகிறது. மிக மிக மெலிதாக இசை பாடல் நெடுகிலும் வந்து நம்மைக் கட்டிப்போடுகிறது. சாஷா மற்றும் ஹரிச்சரண் பாட காதல் மடல் எழுதியிருக்கிறார் பா.விஜய்.

பாடல் துளி :

"காற்றின் காலில் கொளுசுகட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினம் நூறு மடங்கு கூட்டுற"

யாருமில்லா

இதுவும் புல்லாங்குழலோடுதான் தொடங்குகிறது, காதல் ஏக்கத்துடன் ஸ்வேதா மோகன் பாட காற்றில் கனம் சேர்க்கிறது. ஏக்க மடல் எழுதியதும் பா.விஜய்தான்.

பாடல் துளி :

"இசையால் ஒரு உலகம் அங்கே நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம்தான் என்றும் நிஜமாய்
அதுவொரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்தகாலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல்"

சண்டி குதிரை

இது ஒரு காமிக் வகை பாடல். குரலை மாற்றி மாற்றி ஹரிச்சரண் மிக அழகாகப் பாடியிருக்கிறார். வரிகளில் பெரிதாக் அர்த்தம் இல்லாவிட்டாலும் குறும்பாக ஒலிக்கிறது. ஒலி சேர்ப்பும் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. நிச்சயம் கவனம் பெறும் பாடல் இது.

சொல்லிவிடு சொல்லிவிடு

பாடலின் தொடக்க இசையே பாடலின் குணத்தை உறுதி செய்கிறது. முகேஷின் குரலில் உணர்வுகள் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன. கீதை உருவாகக் காரணமாக இருந்த அர்ஜுனனின் கேள்விகள்தான் இந்த மொத்தப் பாடலும். அதை நேர்த்தியாக எழுதிய விதத்தில் பா.விஜயை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

பாடல் துளி :

"காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
கர்ணனை கொன்ற பாபம் கண்ணனுக்கு போகும் என்றாய்
கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ"

திருப்புகழ்

வாணி ஜெயராம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடியிருக்கிறார். சரியான மறு தொடக்கம் என்றே சொல்லாம். இவரை அழைத்து வந்தமைக்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றிகள். இடையிடையே ஒலிக்கும் மிருதங்கத்தை வாசித்தவரை தனியாகப் பாராட்டலாம்.

அல்லி அர்ஜுனா

தற்கால தமிழ் சினிமாவில் பாடலின் அதிகபட்ச நீளம் குறைந்து கொண்டே வந்து 5 முதல் 6 நிமிடங்களில் நிற்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு பத்து நிமிடப் பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கேட்காமலா இருப்போம்! நம்ம ஊர் மேல தாளத்துடன் தொடங்கி பின்னர் அல்லி-அர்ஜுனனின் காதல் கதை பாடுகிறது. அநேகமாக இது காட்சியாக விவரிக்கப்பட்டிருக்கலாம்.

காவியத்தலைவன் – ஆட்சி செய்வான்.

About The Author