கிளியோபாட்ரா-(20)

ஜூலியஸ் சீஸர், கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடப்பதையும்,ரோமாபுரிக்கு தான் பேரரசராகி, கிளியோபாட்ராவை அரசியாக்க அவர்போட்டிருந்ததொலைநோக்குத் திட்டத்தையும் நன்றாகவே அறிந்திருந்தனர், அவருடன் நெருங்கி
நட்பு பாராட்டிய சில செனட் உறுப்பினர்கள். சீஸர் அதை அரசல் புரசலாக அறிந்திருந்தாலும், அது தொடர்பான செனட்டர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்.

ஒருநாள் இரவு –

டைபர் நதிக்கரையில் அமைந்திருந்த அரண்மனையில் தனது ஆசைக் காதலி கிளியோபாட்ராவுடன் பேசிக் கொண்டிருந்தார் ஜூலியஸ் சீஸர். அப்போது அங்கே வந்த காவலாளி ஒருவன், ரோமானிய படைத்தளபதியும், சீஸரின் நெருங்கிய
நண்பனுமான ஆண்டனி அங்கே வந்துள்ள செய்தியத் தெரிவித்துவிட்டு வேகமாக அகன்றான்.

ஆண்டனியைக் காண்பதற்காக தனி அறை ஒன்றில் ஆஜராகி இருந்தார் சீஸர். அடுத்த ஓரிரு நிமிடத்தில் சீஸர் முன்பு வந்து நின்றான் ஆண்டனி.

“எனதருமைத் தோழன் ஆண்டனியே… வா… வா…!“

“ஆருயிர் நண்பன் சீஸருக்கு என் பணிவான வணக்கம்!“

“என்ன ஆண்டனி… உன் முகத்தைப் பார்த்தால், எப்போதும் இல்லாத உற்சாகத்தில் மிதப்பதுபோல் இருக்கிறதே… என்ன விஷயம்?“

“நான் கொண்டு வந்துள்ள விஷயத்தைச் சொன்னால் நீங்கள் என்னைவிட இன்னும் அதிக உற்சாகத்தில் மிதப்பீர்கள்…“

“அப்படி என்ன விஷயம்? நீயே சொல்…“

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த செய்திதான். நீங்கள் இந்த ரோமாபுரிக்கு
அதிகாரப்பூர்வ நிரந்தர பேரரசர் ஆகப் போகிறீர்கள்…“

“என்ன சொல்கிறாய் ஆண்டனி? நீ சொல்லும் செய்தி வியப்பாக இருக்கிறதே…
எல்லா செனட்டர்களும் இதற்கு ஒத்துக்கொள்வார்களா?“

“நல்ல விஷயத்தை பேசும்போது, குடியாட்சி பற்றிக் கொக்கரிக்கும் அந்த செனட்டர்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?“

“ஏனென்றால் அவர்கள் ஆதரவும் வேண்டுமே… அதுமட்டுமல்லாமல், இப்போதைய குடியாட்சி முறையை விட்டுக் கொடுக்க இந்த ரோமாபுரி மக்களும் முன்வர வேண்டுமே… இதெல்லாம் சாத்தியமாகுமா?“

“நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள்? நாளை லூபர்கால் திருவிழா நடைபெற இருக்கிறது அல்லவா?“

“ஆமாம்…!“

“அந்த விழாவில் நானே உங்களுக்கு மணிமுடி சூட்டி, இந்த ரோமாபுரியின் மாமன்னராக அழகு பார்க்கப் போகிறேன்…“

“என்ன சொல்கிறாய் ஆண்டனி? நீ சொல்லச் சொல்ல எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் உன்னுடன் நிஜத்தில் பேசிக்கொண்டிருக்கிறேனா? அல்லது கனவில் மிதந்து கொண்டிருக்கிறேனா என்றுகூட சந்தேகம் வருகிறது…“ என்று சீஸர் ஆனந்த
பரவசத்தில் மூழ்கியபோது, அங்கே கிளியோபாட்ரா வந்தாள்.

கிளியோபாட்ராவைப் பார்த்ததும் அவள் பக்கம் தனது காந்தக் கண்களைத் திருப்பினான் ஆண்டனி.

“வணக்கம் எகிப்து பேரரசியாரே! எங்கள் பேரரசர் சீஸரின் மனம் கவர்ந்த பேரழகே!“

“உங்களுக்கும் எனது பணிவான வணக்கம் வீரத் தளபதியே!“

தன்னிடம் பணிந்த ஆண்டனிக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் சொன்னாள் கிளியோபாட்ரா.

பின், “என்ன… இருவரையும் பார்க்கும்போது அதீத மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பவர்கள் போல் தெரிகிறதே… நானும் அந்த மகிழ்ச்சியில் பங்கு
கொள்ளலாமா?“ என்றாள்.

உடனே, சீஸரே வாய் திறந்தார்.

“எனது பேரழகே! என் நம்பிக்கைக்குரிய நண்பன் ஆண்டனி, என்னை இந்த நாட்டின் பேரரசனாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அந்த செய்தியைப் பற்றிதான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்“

“அது பற்றி பேச என்ன இருக்கிறது? இந்த ரோமாபுரிக்கு பேரரசர் ஆக உங்களைவிட்டால் வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது? மேலும், பேரரசர் ஆக வேண்டும் என்பது உங்களது லட்சியம் அல்லவா? இதை என்னிடம் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறீர்களே…“

“நிஜம்தான் அழகே! நாளைக்கே நான் மணிமுடி சூட்டிக்கொள்ள வேண்டும் என்று இவன் ஆசைப்படுவதோடு, அதற்கான விழாவையும் ஏற்பாடு செய்துவிட்டான்“.

“அப்படியா? இந்தச் செய்தியைக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தானே நான் ஆவலோடு காத்திருந்தேன். இப்போது அதற்கான காலம் கனிந்துவிட்டது. வெற்றி வீரனான உங்களுக்கு இந்த ரோமாபுரி உரிய கவுரவம் செய்ய இருக்கிறது…“ என்று கூறி
உணர்ச்சிவசப்பட்டாள் கிளியோபாட்ரா.

“அவசரப்படாதே கிளியோபாட்ரா! இந்த ரோமாபுரிக்கு பேரரசர் ஆவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இப்போதைய குடியாட்சி முறையை விட்டுவிட்டு முடியாட்சி முறையை ஏற்க நாட்டு மக்கள் தயாராக இல்லை. இந்த விஷயத்தில் என்னுடன் நெருங்கிப் பழகும் சில செனட்டர்கள் கூட எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நான் மணிமுடியை ஏற்றுக்கொள்ள முடியும்?“ என்று கூறிய சீஸரின் பேச்சில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.

“அவசரப்பட்டு நீங்களாகவே முடிவெடுக்க வேண்டாம் நண்பரே! எப்போதும் உங்கள் வலது கரமாக செயல்படும் இந்த ஆண்டனி, இந்த விஷயத்திலும் அப்படியே நடந்துகொள்வான். நாளைய விழாவில் நான் உங்களுக்கு மணிமுடி சூட்டுவதாக
அறிவிக்கிறேன். அங்கே கூடியிருக்கும் மக்கள் அதை வரவேற்றால் மணிமுடியை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மறுத்துவிடுங்கள்“ என்றான் ஆண்டனி.

கிளியோபாட்ராவுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது.

“எனது பேரரசரே! எத்தனையோ ஆயிரம் மைல் தொலைவு கடந்து நான் இந்த ரோமாபுரிக்கு வந்திருக்க காரணம், உங்களைப் பேரரசராக்க் காண வேண்டும் என்கிற எனது தணியாத ஆசையே… அதற்கான நேரம் இப்போதுதான் கூடி வந்திருக்கிறது. தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு இந்த ரோமப் பேரரசின் பகுதிகளை விரிவாக்கிய உங்களுக்கு இந்த மணிமுடி ஏற்ற பரிசுதான். அதைக் கண்டிப்பாக நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்“.

“நீ சொல்வது சரிதான் அன்பே! நாளைய விழாவில் மணிமுடி சூட நான் தயாராகிவிட்டேன். எல்லாம் சிறப்பாக நடக்கும் என்று நம்புவோம்…“ என்றார் சீஸர்.

“விழா சிறப்பாக நடக்கும். நீங்கள் எல்லோரது ஆதரவுடனும் மணிமுடியை ஏற்பீர்கள். நானும் இதை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்“ என்றாள் கிளியோபாட்ரா.

“இல்லை அன்பே… அந்த விழாவில் நீ கலந்து கொள்ள ஏற்ற தருணம் அல்ல இது. எனக்கு எதிராக சூழ்ச்சி நடப்பது நன்றாகவே தெரிகிறது. உன்னை ஒரு அயல்நாட்டு பேரரசியாக இந்த ரோம் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர,எனக்குரியவளாக ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை. ரோம் மக்கள் உன்னை ஏற்றுக் கொள்ளும்வரை நீ சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று
நினைக்கிறேன்…“ என்றார் சீஸர்.

வேறு வழி தெரியாத கிளியோபாட்ராவும் அமைதியாகி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இதைக் கவனித்த ஆண்டனி அங்கிருந்து விடைபெற தயாரானான்.

“நண்பரே! இப்போது நான் புறப்படுகிறேன். நாளைய விழாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்…“ என்று சீஸரைப் பார்த்து கூறிய ஆண்டனி, கிளியோபாட்ரா பக்கம் திரும்பினான்.

அங்கே அவள் அழகு சிலைபோல் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளை ஏக்கப் பார்வையோடு பார்த்த ஆண்டனி, “எப்பேர்பட்ட பேரழகியாக இருக்கிறாள் இவள்? சீஸர் கொடுத்து வைத்தவர். நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா என்றுமனதிற்குள் எண்ணியவாறே அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

(இன்னும் வருவாள்…)

About The Author