கிளியோபாட்ரா-(21)

மறுநாள் காலை (கி.மு.44 பிப்ரவரி 15-ந் தேதி) –

லூபர்கால் திருவிழாவால் ரோம் நகரமே பரபரத்துக் கொண்டிருந்தது.பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.

ஜூலியஸ் சீஸர் தனது மனைவி கல்பூர்னியா, நண்பன் ஆண்டனி மற்றும்படைவீரர்கள் சூழ வந்தார். சீஸரை விழா நடைபெறும் மேடைக்கு அழைத்துச் சென்றான் ஆண்டனி.

மேடையில் மனைவியுடன் ஏறிய சீஸர், தனக்கு எதிரே திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். பதிலுக்கு ரோம் மக்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

விழா ஆரம்பித்த சிறிது நேரத்தில் சீஸருக்கு மணிமுடி சூட்டும் அறிவிப்பை வெளியிட்டான் ஆண்டனி. அதுவரை ஆரவாரத்தோடு காணப்பட்ட ரோம் மக்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் ‘கப்சிப்’ ஆனார்கள். ஆளாளுக்கு எதை எதையோ பேசிக் கொண்டார்கள்.

ரோம் மக்கள் மட்டுமின்றி, செனட் சபை உறுப்பினர்களும் பரபரப்பானார்கள். ‘சீஸர், மணிமுடிதரித்து, இந்த நாட்டுக்குப் பேரரசர் ஆகிவிட்டால் செனட் சபைஎன்ற ஒன்றே தேவையில்லாமல் போய்விடுமே… பிறகு, நமக்கும் அதிகாரம்போய்விடுமே…’ என்று அவர்கள் பயந்தனர்.

ஒருபுறம் மக்களும், இன்னொருபுறம் செனட் உறுப்பினர்களும் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சீஸர் பதற்றமாகிவிட்டார். "நான்எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. நல்லவேளை, கிளியோபாட்ராவை இங்கு அழைத்து வரவில்லை. அவள் இதையெல்லாம் பார்த்தால் மனது ஒடிந்து போய் இருப்பாள்…" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சீஸர், தானே முன் வந்து, "மணிமுடியைஏற்றுக் கொள்ளவில்லை" என்று அறிவித்து ரோமில் குடியாட்சியே தொடரும் என்றும் சொன்னார்.

இதற்கு பிறகுதான் அங்கே திரண்டிருந்த மக்கள் உற்சாகம் ஆனார்கள். ஆனாலும், ஆண்டனி விடுவதாக இல்லை. சீஸரின் வெற்றிகளைப் பட்டியலிட்டு, அதற்கு உரிய
பரிசுதான் இந்த மணிமுடி என்று கூறி, இரண்டாவது முறையாக அதை அவருக்கு அணிவிக்க முயன்றான்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று வேகமாக நோட்டமிட்டன சீஸரின் கண்கள். ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக மக்கள் பேசிக்கொண்டார்கள். "இந்த சீஸருக்கு என்ன ஆயிற்று? திடீரென்று மணிமுடி, மன்னராட்சி என்றுபேசுகிறாரே…" என்று முணுமுணுத்தனர்.

உடனே மணிமுடியை ஏற்க மறுத்தார் சீஸர். மக்களும் நிம்மதி ஆனார்கள்.அதன் பின்னரும் ஆண்டனி விடுவதாக இல்லை. மூன்றாவது முறையாக சீஸருக்கு மணிமுடி சூட்டப்போவதாக அறிவித்தான்.

இப்போது மக்கள் தரப்பில் இருந்தும், செனட்டர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் குரல் பலமாக வந்தது.

"இதுவரை சீஸர் நன்றாகத்தானே இருந்தார்? என்றைக்கு கிளியோபாட்ராவை இங்கே அழைத்துக்கொண்டு வந்தாரோ, அன்று முதலே மாறிவிட்டார். கிளியோபாட்ரா வேண்டுமானால் ஒரு நாட்டுக்கு அரசியாக இருக்கலாம். அதற்காக ரோமாபுரியிலும் மன்னராட்சிதான் நடைபெற வேண்டும் என்று விரும்புவது கோழைத்தனம்,
முட்டாள்தனம்…" என்று அவர்கள் சொன்னது, சீஸர் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.

நடந்த சம்பவங்களால் மேலும் பதற்றமான சீஸர், மணிமுடியை ஏற்கவில்லை.

"அது ஆண்டனியின் விருப்பம்தான். என்னுடைய விருப்பம் அது அல்ல…" என்று வேகமாக அறிவித்து, அதற்காக வருத்தம் கோரியபோது திடீரென்று மயங்கி கீழேசரிந்தார். அவரது கைகால்கள் வெட்டி வெட்டி இழுத்தன. வாயில் இருந்து நுரை தள்ளியது. இதைப் பார்த்து பதறிப்போன கல்பூர்னியா அழுதேவிட்டாள்.

இதைப் பார்த்த ஆண்டனியும் பரபரப்பாகிவிட்டான். அருகே கிடந்த இரும்புக்கம்பி ஒன்றை எடுத்து வந்த அவன், அதை சீஸரின் கையில் திணித்து, வேகமாக
அழுத்திப் பிடித்தான். சீஸருக்கு காக்காய் வலிப்பு நோய் உண்டு என்பதால் இப்படிச் செய்தான்.

சிறிதுநேரத்தில் வலிப்பு தணிந்து எழுந்து அமர்ந்தார் சீஸர். அவரது வாயில் ஒட்டியிருந்த நுரையை தனது அழகிய கரத்தால் ஒற்றியெடுத்து அப்புறப்படுத்தி
சுத்தம் செய்தாள் கல்பூர்னியா. சிறிதுநேரத்தில் அனைவரும் அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

லூபர்கால் விழாவில் மணிமுடி சம்பந்தமாக எழுந்த பிரச்சினை செனட்டர்கள் மத்தியில் வெகு ஆழமாக எதிரொலித்தது. அவர்களில் பலர் சீஸரை வசை மாரி
பொழிந்தனர்.

ஜூலியஸ் சீஸருடன் நெருங்கிப் பழகி வந்த சிலர், செனட்டரான காஷியஸ் தலைமையில் சீஸரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு சதித்திட்டம் தீட்டினர்.
இதையொட்டி மறைவாக கூட்டம் போட்டு தங்களது ஆதரவாளர்களுடன் பேசினர். பல இரவுகளை அதற்காக செலவிட்டனர். அந்த கூட்டங்களில் சீஸரை எப்படி கொலை செய்வது? எங்கே கொலை செய்வது? யார் கொலை செய்வது? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன.

சீஸருடன் நெருங்கிப் பழகி வந்த செனட்டர் புரூட்டசும் ஒருகட்டத்தில் அதில் சேர்ந்துகொண்டான். அவனுக்கு அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம்
ஆரம்பத்தில் வந்ததே கிடையாது. ஆனாலும், சீஸர் பேரரசர் ஆவதை அவன் துளியும் விரும்பவில்லை.

ஒருநாள் –

புரூட்டசும், காஷியசும் தனியாக சந்தித்துப் பேசினர். புரூட்டஸ் கேட்டான்,

"சீஸரிடம் நான் அன்பானவனாகவே பழகி வருகிறேன். கண்டிப்பாக அவரைக் கொலை செய்துதான் ஆக வேண்டுமா?"

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? நாம் எல்லோருமே சுதந்திரமனிதர்களாகத்தானே பிறந்தோம்? பின் ஏன் சீஸருக்கு அஞ்சி நடக்க வேண்டும்? நான் சிறுவனாக இருந்தபோது ஒருமுறை, பொங்கி வந்த டைபர் நதியில் என்னோடு நீந்தி வரமுடியுமா என்று சவால்விட்டான் சீஸர். இருவரும் நீந்தினோம். நான் நீந்திக் கரை சேர்ந்தேன். ஆனால், சீஸர் சிக்கிக்கொண்டான். மூர்ச்சையற்றுப் போன அவனைக் காப்பாற்றி கரை சேர்த்தேன். அன்று அவனுக்கு உயிர்பிச்சை கொடுத்த நான், இன்று அவனுக்குக் கீழ், பணிபுரிய வேண்டுமா?"

"நீ சொல்வது நியாயம்தான், காஷியஸ். அது சின்ன வயதில் நடந்தது. அதையும், இப்போது நடப்பதையும் ஏன் முடிச்சுப்போட்டு பேசுகிறாய்?"

"இப்போது நாம் சீஸருக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் இனிமேல் கொடுக்கவே முடியாது. அவன் பேரரசன் ஆகிவிட்டால் அவன் வைப்பதுதான் சட்டம். நாம் அவன் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இன்று, சீஸர் நல்லவன்தானே… என்று கேட்கும் உன்னை அவன் நாளை கொலைகூட செய்யலாம். மனிதன் மனம் ஒரு குரங்கு. அது எப்போது வேண்டுமானாலும் மரத்திற்கு மரம் தாவும். ஆட்சியின் ஒட்டு மொத்த அதிகாரமும் ஒருவனிடம் போய்ச் சேர்ந்தால் நான் சொல்வது
நிச்சயம் நடக்கும்…" என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான் காஷியஸ்.

புரூட்டசுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குழப்பமான மனநிலையோடு காணப்பட்டான்.

"ஏன் இன்னும் யோசிக்கிறாய்? நான் சொல்வதை திரும்பத் திரும்ப யோசி.இன்னொன்றையும் சொல்கிறேன், கேள்… சீஸர் என்று அவன் பெயரையும், புரூட்டஸ் என்று உன் பெயரையும் நான் உச்சரிக்கிறேன். இருவரது பெயரும் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும், சீஸர் பெயரே மகத்துவம் பெறுகிறது. அவன் மட்டும்தான் இந்த உலகை ஆளப் பிறந்தவனா? அவன் வைப்பதுதான் சட்டமாக வேண்டுமா? நமக்கு எல்லாம் அந்த தகுதி கிடையாதா?"

"நீ சொல்வது புரிகிறது காஷியஸ். ஆனாலும்…"

"எதைச் செய்தாலும் உடனே முடிவெடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி எடுக்கும் எந்த முடிவிலும் அர்த்தமும் இல்லை; அது வெற்றிபெறவும்செய்யாது."

"இல்லை, காஷியஸ்… எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இன்னொருநாள் சந்திப்போமே…? " என்று கேட்டான் புரூட்டஸ். காஷியசும் சம்மதித்தான்.

இருந்தாலும், சீஸரை ஒழித்தே தீர்வது என்று உறுதியான முடிவை மனதிற்குள் எடுத்துக்கொண்டான் புரூட்டஸ்.

அதேநேரம், மார்ச் 15-ம் தேதி ரோமானியப் பேரரசராக மணிமகுடம் சூடிக்கொள்ள தயாரானார் ஜூலியஸ் சீஸர்.

(இன்னும் வருவாள்…)

About The Author