கிளியோபாட்ரா (27)

ஜூலியஸ் சீஸர், செனட் சபையில் கொலை செய்யப்பட்டதை அறிந்த கிளியோபாட்ரா தரையில் விழுந்த கண்ணாடி போல மனம் நொறுங்கிப் போனாள்.
“சீஸர்… என்னருமை காதலனாக வலம் வந்தவரே… உங்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட வேண்டுமா? இந்த உலகத்தையே உங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடித்தீரே… உங்கள் ஆசைகள் எல்லாம் கானல் நீராகிவிட்டதே… உங்களை மாத்திரமே நம்பி எகிப்தை விட்டு இந்த ரோமாபுரிக்கு வந்த என் கதி என்ன ஆகும்? இனி நான் என்ன செய்வேன்..?” என்று பலவாறு புலம்பியழுதாள் அவள்.

அவளைச் சந்திக்க வந்தான் ஜூலியஸ் சீஸரின் வலது கரமாக செயல்பட்ட ஆருயிர் நண்பன் ஆண்டனி. கிளியோபாட்ராவின் நிலையை புரிந்து கொண்டவன், தன்னால் முடிந்த ஆறுதலை அவளுக்குக் கூறினான்.

“எகிப்து அரசியாரே! நம் சீஸருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. இந்த உலகம் உயிருடன் இருக்கும்வரை நம் சீஸர் மக்கள் மனங்களில் இருந்து சாகமாட்டார். இப்போது அவரது உடல்தான் மரித்துப்போய் இருக்கிறது. அவர் கண்ட கனவு நிச்சயம் நனவாகும். இதே ரோமாபுரியில் அவர் ஆசைப்பட்டபடியே மன்னராட்சி மலரும். ஆனால்… “

“என்ன ஆனால்… தளபதியாரே! நீங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிடுங்கள். சீஸரை நினைத்து நினைத்து ஏங்கி வாடிப்போன என் முகம் மலர நல்ல வார்த்தைகள் சொல்லுங்கள்“.

“மதிப்பிற்குரிய அரசியாரே! எக்காரணம் கொண்டும் தாங்கள் கலங்க வேண்டாம். சீஸருக்குப் பிறகு தங்களுடைய நிலை என்னவாகும் என்றுதானே பயப்படுகிறீர்கள்? “

“ஆமாம்… “

“அந்த பயம் இனி உங்களுக்கு வேண்டாம். சீஸர் இருந்த இடத்தில் நான் இருந்து கொண்டு உங்களது லட்சியங்கள் நிறைவேற துணை நிற்கிறேன்“.

“அது உங்களால் முடியுமா ஆண்டனி? “

“ஏன் முடியாது? ஒரு மாவீரனால் போன உயிரை மீட்டு வர முடியாதே தவிர, வேறு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்“.

“சீஸர், என்னை தனது மனைவியாக்குவார்; எங்கள் அருமை மகன் டாலமி சீஸரை தனது வாரிசாக அறிவிப்பார் என்றெல்லாம் நான் கனவு கண்டேன். அந்த கனவு எல்லாம் தகர்ந்து போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்… “ என்ற கிளியோபாட்ராவின் அழகான வேல் விழிகளில் இருந்து கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தான் ஆண்டனி.

அப்போது, ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தவனாய், தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டு தவிப்போடு அதைச் சொல்லத் தொடங்கினான் அவன்.
“எகிப்து அரசியாரே! சீஸரை இழந்து தவிக்கும் உங்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டும் நான் இங்கே வரவில்லை. ரோமாபுரி அரசியல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றையும் சொல்லவே வந்தேன். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் அதை தங்களிடம் சொல்லிவிடலாமா வேண்டாமா என்று தவிக்கிறேன்… “

“ஏன் தயக்கம் தளபதியாரே! சீஸர் இறந்த செய்தியையே தாங்கிக்கொண்டு நிற்கும் என்னை, நீங்கள் சொல்லும் தகவல் ஒன்றும் செய்துவிடாது“.

“நான் சொல்லும் தகவல் சீஸரின் வாரிசு பற்றியது. அது, தங்களது ஆசைக்கு சாதகமாக இல்லையே என்பதால்தான் அதுபற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறேன்“.

“என்னை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் ஆண்டனி. சட்டென்று உண்மையைச் சொல்லுங்கள். சீஸருக்கும், எனக்கும் பிறந்த டாலமி சீஸரைத்தானே நம் சீஸர் தனது வாரிசாக அறிவித்து இருக்கிறார்? “

“இல்லை கிளியோபாட்ரா. தனது வளர்ப்பு மகனான கயஸ் ஜூலியஸ் சீஸர் ஆ’டோவியன்ஸ் என்பவரையே தனது அரசியல் வாரிசாக அறிவித்து உயில் எழுதி இருக்கிறார் ஜூலியஸ் சீஸர். தங்கள் மகன் பற்றியும், தங்களைப் பற்றியும் அந்த உயிலில் அவர் எதுவும் குறிப்பிடவில்லை… “ என்று ஆண்டனி சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்து அப்படியே உட்கார்ந்துவிட்டாள் கிளியோபாட்ரா.

ஏற்கெனவே அழுது அழுது சிவந்து போன கன்னங்களும், கண்ணீர் வற்றிப்போன கண்களும் அவளை பரிதாபமாக காட்சியளிக்க வைத்தன. அவளுக்கு ஆறுதல் பல கூறிய ஆண்டனி, பாதுகாப்பு காரணங்களுக்காக கிளியோபாட்ரா டைபர் நதிக்கரை அரண்மனையைத் தவிர்த்து வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுவிட்டு திரும்பினான்.

இதற்கிடையில், ரோமாபுரி அதிபதி ஜூலியஸ் சீஸர் கொலை செய்யப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன. அடுத்து ரோமாபுரியைக் கைப்பற்றப்போவது யார் என்ற குழப்பமும் அதிகரித்தது. இதுதான் தக்க சமயம் என்று முடிவெடுத்த ஆண்டனி, ரோமாபுரியின் ஆட்சியைக் கைப்பற்ற காயை மெல்ல நகர்த்த ஆரம்பித்தான்.

அதேநேரம் சீஸரைக் கொலை செய்த புரூட்டஸ், காஷியஸ் உள்ளிட்ட செனட்டர்கள், தாங்கள் சீஸரைக் கொலை செய்தது நாட்டின் நலனுக்குத்தான் என்று மேடைகளில் ஏறி முழங்க ஆரம்பித்துவிட்டனர்.

மக்கள் திரண்டிருந்த ஒரு மேடையில் புரூட்டஸ் கர்ஜித்ததை ஆவேசமாகவே எழுதுகிறார் ஷேக்ஸ்பியர்.
“சீஸர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது பற்றி நான் கூறும் காரணங்களை அமைதியாகக் கேளுங்கள். உங்கள் அறிவால் என்னை ஆராய்ந்து தீர்ப்புக் கூறுங்கள். உங்கள் அறிவை விழிப்புறச் செய்து நல்ல தீர்ப்பு சொல்லுங்கள். இந்த கூட்டத்தில் சீஸரின் இனிய நண்பர் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இந்த புரூட்டசிடம் சீஸர் காட்டிய அன்புக்கு அது ஒன்றும் குறைவானதில்லை. அப்படியென்றால், நான் ஏன் சீஸருக்கு எதிராக கிளர்த்தெழுந்தேன் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான எனது பதில் இதுதான்.
… நான் சீஸரை குறைவாக நேசித்தேன் என்று அதற்கு பொருள் இல்லை. நான் சீஸருக்கும் மேலாக இந்த ரோமை நேசித்தேன். சீஸர் உயிரோடு இருந்து, நீங்கள் எல்லாம் அடிமைகளாக இருப்பதை விரும்புவீர்களா? அல்லது சீஸர் இறந்து, நீங்கள் எல்லாம் எல்லாவித உரிமைகளோடும் வாழ்வதை விரும்புவீர்களா? உரிமைகளோடு வாழ்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள்? அதைத்தான், உங்களுக்காக நான் செய்தேன்.
… சீஸர் என்னை நேசித்ததால் அவருக்காக நான் அழுகிறேன். அவர் புகழ்பெற்று வாழ்ந்ததற்காக நான் மகிழ்கிறேன். அவரது வீரத்துக்காக அவரை நான் மதிக்கிறேன். அதேநேரம், அவரது பேராசைதான் அவரது உயிரை இழக்கும்படியாக ஆகிவிட்டது.
… இந்த கூட்டத்திலே அடிமை மனிதர்கள் யாராவது இருந்தால், நான் சீஸரைக் கொன்றது தவறு என்று வாதிடலாம். அப்படிப்பட்டவர்கள் யாரேனும் இங்கு உண்டா? அப்படியொருவர் இருந்தால் தாராளமாக எழுந்து என்னிடம் கேள்விகள் கேட்கலாம். அப்படியொரு அடிமை மனிதன் இங்கே இருந்தால், அவன் பார்வையில் நான் குற்றவாளிதான். இந்த ரோமாபுரி மீது அன்பு பாராட்டாத எவன் ஒருவனாவது இங்கு உண்டா? அப்படியொருவன் இருந்தால், அவன் பார்வையில் நான் குற்றவாளிதான். பிறந்த நாட்டை நேசிக்காத எவரேனும் இங்கே உண்டா? அப்படி இருந்தால், அவர்கள் பார்வையில் நான் குற்றவாளிதான்.
… நீங்கள் எல்லாம் மவுனமாக இருப்பதை, அறிவைத் திறந்து சிந்திப்பதைப் பார்த்தால், நான் யாருக்கும் கேடு விளைவிக்கவில்லை என்பது நன்றாக புரிகிறது. என்னுடைய நண்பனை இந்த நாட்டின் நன்மைக்காக கொன்று இருக்கிறோம். அந்த வாள் என்னிடம்தான் இருக்கிறது. இந்த நாட்டுக்கு எனது சாவும் மகிழ்ச்சியைத் தரும் என்றால், அப்போதும் அந்த வாளை பயன்படுத்த நான் சற்றும் தயங்க மாட்டேன்…” என்று உணர்ச்சிப்பிழம்பாக புரூட்டசின் உரையைக் கொண்டு செல்கிறார் ஷேக்ஸ்பியர்.

இவ்வாறு புரூட்டஸ் தரப்பினர், சீஸரைத் தாங்கள் கொலை செய்தது சரிதான், காலத்தின் கட்டாயம் என்று ஒருபுறம் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்க… ஆண்டனியோ ரோமானிய அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கும் முயற்சிகளில் இறங்கினான். அவனும் மேடை ஏறி, சீஸரின் கொலைக்கு நியாயம் கேட்டான். ஒரு மேடையில் அவன் முழங்கியபோது ரோம் மக்கள் கொந்தளித்தே விட்டார்கள். அவனது பேச்சு இங்கே…
“சீஸர் பேராசைக்காரன் என்று புரூட்டஸ் கூறுகிறார். அவர் சொல்வது உண்மை என்றால், லூபர்கா திருவிழாவில் நான் வழங்கிய மணிமுடியை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தது ஏன்? சீஸர் பயன்படுத்திய பெட்டியில் இருந்து ஒரு பத்திரத்தை இன்றுதான் நான் கண்டறிந்தேன். அது அவரது உயில். அதை இப்போது நான் உங்கள் முன்பு படித்தால், நீங்கள் செத்துக்கிடக்கும் சீஸரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மீது முத்தமிடுவீர்கள்.
… ஆனாலும், அந்த உயில் பற்றி நான் உடனே சொல்வதாக இல்லை. ஒருவேளை அதுபற்றி நான் இப்போது குறிப்பிட்டால் நீங்கள் எல்லாம் கொதித்தெழுந்து விடுவீர்கள். சீஸரைக் கொலை செய்தவர்களுக்கு தீங்கிழைத்து விடுவீர்களோ என்றுகூட அஞ்சுகிறேன்.
… சீஸரின் வீழ்ச்சியால் நானும், நீங்களும் எல்லோருமே வீழ்ந்துவிட்டோம். சீஸர் விஷயத்தில் ரத்தவெறி பிடித்த துரோகமே நம்மை வென்றது. உங்கள் கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரைப் பார்த்தால், இரக்கத்தின் வலிமையை இப்போது நீங்கள் உணர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நீங்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் புனிதமானவை.
… இந்த பேச்சின் மூலம் நான் உங்களைப் புரட்சிக்கு தூண்டுவதாக நினைக்க வேண்டாம். இப்போது நான் சீஸர் எழுதி வைத்துள்ள உயிலை வாசிக்கிறேன். ரோம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுபத்தைந்து பவுன் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், டைபர் நதிக்கரையில் உள்ள மக்கள் உலவும் இடங்கள், மரங்கள் நிறைந்த தோப்புகள் ஆகியவற்றை உங்களுக்கே உரிமையாக்கி இருக்கிறார். அந்த இடங்கள் உங்களுக்கும், உங்களுக்குப் பிறகு உங்களது வாரிசுகளுக்கும் சொந்தம் என்றும் அந்த உயிலில் நமது சீஸர் குறிப்பிட்டுள்ளார்.

… ஆனால், இதெல்லாம் நடைபெறாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன். ஆம்… நம் சீஸர்தான் இப்போது நம்மோடு இல்லையே… இப்படிப்பட்ட ஒரு சீஸர் இனி எப்போது வருவார்?” என்று புரட்சியை உசுப்பேற்றிவிட்ட ஆண்டனி, தனது கண்களில் இருந்து கண்ணீரை வலுக்கட்டாயமாக வரவழைத்துவிட்டு பேச்சை நிறுத்தினான்.

அவன் கொளுத்திப்போட்ட புரட்சித்தீ வேகமாக வேலை செய்தது. ரோம் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொந்தளித்தனர். சீஸர் அநியாயமாக கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று மனம் வருந்தினர். அதற்குக் காரணமான காஷியஸ், புரூட்டஸ் உள்ளிட்டவர்களைப் பழிவாங்க முடிவெடுத்தனர்.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

  1. உமா ஆனந்தி

    பல அறிய தகவல்களின் தொகுப்பாக வெளிவரும் கிளியோபாட்ரா தொடர் எல்லோருக்கும் பயனுள்ளது.

Comments are closed.