கிளியோபாட்ரா (28)

ஜூலியஸ் சீஸரின் மரணம் ரோமாபுரியை அல்லோலகல்லோலப்படச் செய்தது. ரோமாபுரியின் அடுத்த அதிபதி யார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. ரோமானிய அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் இறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே சீஸரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதேநேரம், சீஸரின் வாரிசாக உயிலில் எழுதப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்த கயஸ் ஜூலியஸ் சீஸர் ஒக்டாவியஸ் என்ற அகஸ்டஸ் சீஸர், ஜூலியஸ் சீஸர் செனட் சபையில் கொல்லப்பட்ட செய்தியை அறிந்து ஆவேசம் ஆனார். அப்போது அவர் ரோமில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு இருந்தார். சிறிதுநேரத்தில் தனது படைகளுடன் ரோமுக்கு திரும்பினார்.

யார் இந்த அகஸ்டஸ் சீஸர்?

கி.மு.63ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி ரோமாபுரியில் கையஸ் ஒக்டாவியஸ் என்பவருக்கு மகனாக பிறந்த இவரை, ஆண் வாரிசு இல்லாத ஜூலியஸ் சீஸர் தத்தெடுத்திருந்தார். சீஸரின் உடன் பிறந்த சகோதரனின் மகளது மகன்தான் இந்த அகஸ்டஸ்.

தனது கண் பார்வையில் வளர்ந்த அகஸ்டஸ் மீது, ஜூலியஸ் சீஸருக்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு. அந்தவகையில்தான் அவரைத் தனது வாரிசாக தத்தெடுத்தார். அவருக்கு ரோமானிய அரசியலிலும், ராணுவத்திலும் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார். சீஸர் அளித்த பயிற்சிகள் வீண் போகவில்லை. இளம் வயதிலேயே அவற்றில் சிறந்த தேர்ச்சி பெற்றார். ஜூலியஸ் சீஸர் கொலை செய்யப்பட்டபோது அகஸ்டஸின் வயது வெறும் பதினெட்டுதான்.

அகஸ்டஸ் சீஸர் ரோமாபுரி திரும்பிய போது அவருக்கு மிகப் பெரிய சவால்கள் காத்திருந்தன. ஜூலியஸ் சீஸரின் வலது கரமாக செயல்பட்டு வந்த ஆண்டனியும் மிகச்சிறந்த வீரன்தான். ஆனால் மதுவும் மாதுவும் தினமும் அவனுக்கு வேண்டும். இதைத்தான் பேரழகி கிளியோபாட்ராவும் சரியான நேரம் பார்த்து பயன்படுத்திக் கொண்டாள்.

ரோமானிய அரசியலின் இக்கட்டான நேரத்தில் வந்து சேர்ந்த அகஸ்டஸ் சீஸர், குழப்பமான அரசியல் சூழ்நிலையைச் சமாளிக்க முயன்றார். அப்போது, ரோமானிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த செனட்டின் மூத்த தலைவர்கள், ராணுவ தளபதிகள் இடையே கடும் போட்டி நிலவியது. அதில் முக்கியமானவர்களாக விளங்கியவர்கள் ஜூலியஸ் சீஸரின் வலது கரமாக இருந்து வந்த ஆண்டனி மற்றும் லெப்பிடஸ்.

அதனால், இளைஞராகக இருந்தாலும் ராஜதந்திரமான செயலில் இறங்கினார், அகஸ்டஸ். ரோமானிய அரசியலின் அப்போதைய பெரும் தலைகளான ஆண்டனி, லெப்பிடஸ் இருவரையும் இப்போதைக்கு அனுசரித்துச் சென்றால், பின்னாளில் ரோமாபுரியை நம் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார் அகஸ்டஸ். ஒருநாள் அவர்கள் இருவரையும் விருந்துக்காக அழைத்திருந்தார்.

ரோமில் உள்ள ஒரு பிரம்மாண்ட வீட்டில் அவர்களது சந்திப்பும் நிகழ்ந்தது. அகஸ்டஸே பேச்சை ஆரம்பித்தார்.

"ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசாக நான் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உங்கள் துணையின்றி என்னால் ஆட்சி செய்ய முடியாது. என் வளர்ப்புத் தந்தைக்கு நீங்கள் எப்படி பக்கபலமாக இருந்தீர்களோ, அதுபோன்று எனக்கும் உதவ வேண்டும் என்று கேட்பதற்காகவே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்.." என்றார் அகஸ்டஸ்.

அகஸ்டஸின் வேண்டுகோளை ஆண்டனியும், லெப்பிடசும் ஏற்றுக்கொண்டனர். ரோமானிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் இவர்களை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலை நீட்டினான் ஆண்டனி. சீஸரை கொலை செய்த சதிகாரர்கள் தொடங்கி… ஆண்டனிக்கு எதிராக செயல்படுபவர்கள் வரை ஏராளமானவர்களுடைய பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஏன்… லெப்பிடசின் சகோதரன் பெயர் கூட அதில் இருந்தது. அதுபற்றி லெப்பிடசின் கருத்தை கேட்டபோது, ‘அரசியலில் கொலை எல்லாம் சகஜமப்பா…’ என்று கூறிவிட்டார்.

தொடர்ந்து, அங்கிருந்து லெப்பிடஸ் விடைபெற்று புறப்பட்டுவிட, ஆண்டனியும், அகஸ்டஸும் முக்கியமான விஷயங்கள் குறித்து ரகசியமாக ஆலோசித்தனர். அகஸ்டசே கேட்டார்..

"ஆமாம் தளபதியாரே… ரோமப் பேரரசு முழுவதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறீர்களா?"

"நன்கு யோசித்து அருமையான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறேன்".

"அதை என்னிடம் சொல்லலாமே…"

"ஆமாம்… கண்டிப்பாக உன்னிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்?"

"இப்போதைய ரோமானிய அரசியல் சூழ்நிலையில் நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். நாம் இருவரும் ஒவ்வொரு பகுதியை நிர்வகிக்க வேண்டும். இன்னொரு பகுதியை லெப்பிடஸ் பார்த்துக் கொள்ளட்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் நம் மீது சந்தேகம் கொள்ள மாட்டார்கள்".

"நாம் இருவரும் நாட்டை இரண்டாகப் பிரித்து, நிர்வகித்துக் கொள்ளலாம். இடையில், லெப்பிடஸ் ஏன் வேண்டும்?"

"இப்போதைக்குதான் இவன் தேவை. பிறகு கழற்றி விட்டுவிடலாம். அல்லது கொன்று விடலாம்".

ஆண்டனியின் இந்த அதிரடியான திட்டம் அகஸ்டஸைச் சற்று கலங்க வைப்பதாக இருந்தாலும், வேறு வழி இல்லாததால் அதை ஏற்றுக்கொண்டார். நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்த ஆண்டனி, லெப்பிடசோடு அகஸ்டசையும் விரட்டிவிட்டு நாட்டை முழுவதுமாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று இன்னொரு மறைமுக திட்டமும் போட்டிருந்தான். அது அகஸ்டஸுக்குத் தெரியாது

"சரி…. எனது வளர்ப்பு தந்தை சீஸரைக் கொலை செய்த காஷியஸ், புரூட்டஸ் உள்ளிட்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களைப் பழி வாங்க வேண்டாமா?" என்று ஆண்டனியிடம் கேட்டார் அகஸ்டஸ்.

"நம்மைப் போலவே அவர்களும் ரோமானிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார்கள். தங்களது ஆதரவாளர்களையும், படைகளையும் திரட்டுகிறார்கள். நமக்கு எதிராக அவர்கள் எப்போது வேண்டுமானாலும் போர் செய்யலாம்.."

"நான் இப்போதே அவர்களை எதிர்கொள்ள படைகளைத் தயார் செய்கிறேன். தலைமைத் தளபதியான நீங்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். நாம் எதிரிகள் அனைவரையும் பந்தாடிவிடுவோம்".

"நீ சிறுவனாக இருந்தாலும் வீரத்தோடுதான் இருக்கிறாய், அகஸ்டஸ். ஆனாலும், இப்போதைக்கு போர் பற்றி எண்ண வேண்டாம். படைகள் நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எதிரிகளால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே அவர்கள் படையெடுத்து வந்தாலும் நாம் அவர்களை எளிதில் துவம்சம் செய்துவிடலாம்" என்றான் ஆண்டனி. தொடர்ந்து, இருவரும் விடைபெற்று கலைந்து சென்றனர்.

வீட்டிற்குத் திரும்பிய ஆண்டனிக்கு தூக்கம் வர மறுத்தது. எதிரிகளையும் வெல்ல வேண்டும், அகஸ்டஸையும் ஓரம் கட்ட வேண்டும் என்று அவன் போட்ட குழப்பமான கணக்குதான் அதற்குக் காரணம். அதேநேரம், அவன் மனதிற்குள் கிளியோபாட்ராவும் வந்துபோனாள்.

சீஸர் கொலை செய்யப்பட்டதை அறிந்து துடித்துப்போன அவளுக்கு முதல் ஆளாகச் சென்று ஆறுதல் கூறியவன் ஆண்டனிதான். அத்துடன், சீஸர் கொலை செய்யப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் கிளியோபாட்ரா எகிப்து செல்வது நல்லதல்ல, சில மாதங்கள் போகட்டும் என்றும் அன்பாகவும் ஆதரவாகவும் அறிவுரை கூறியவனும் அவனே! அந்த அதீத அக்கறையில் அவனது தனிப்பட்ட விருப்பம் ஒன்றும் ஒளிந்திருந்தது.

மறுநாள் காலை டைபர் நதிக்கரையோரம் இருந்த அரண்மனையில் கிளியோபாட்ராவைச் சந்தித்தான் ஆண்டனி. வழக்கமாக அவள் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சி காணாமல் போய் இருந்தது. ஏதோ பறிகொடுத்தவள் போல் அமர்ந்திருந்தாள். ஆனால், ஆண்டனியைப் பார்த்த மாத்திரத்தில் சற்று உற்சாகமானாள்

சீஸர் உயிரோடு இருக்கும்போது கிளியோபாட்ராவிடம் சில அடிகள் தள்ளியே நின்று பேசிய ஆண்டனி, இன்று கிளியோபாட்ராவுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டான். அவனது கண்களில் ஒருவித போதை தெரிந்தது. கூடவே, அதன் ஓரங்களில் இனம்புரியாத காதலும் எட்டிப் பார்த்தது. மேலும், அதுவரை கிளியோபாட்ராவை மிகுந்த மரியாதையுடன் அழைத்தவன், இப்போது தனக்குரியவள் என்பதுபோல் உரிமையோடு அழைத்துப் பேசினான். கிளியோபாட்ராவும் அதை ஏற்றுக்கொண்டது ரோமானிய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்த காத்திருந்தது.

சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு ஆண்டனியே பேசினான்.

"கிளியோபாட்ரா… ஏன் இன்னும் சோகமாக இருக்கிறாய்? சீஸர் இல்லாவிட்டால் என்ன நான் இருக்கிறேனே…"

"நீ என்ன சொல்ல வருகிறாய்?"

"சந்தோஷமும், துக்கமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இன்று இந்த ரோமாபுரிக்கு தளபதியாக இருக்கும் நான் நாளைக்கே சீஸரைப் போல் அதிபதி ஆகிவிடலாம். அதனால், உனது கவலை தேவையற்றது. இன்று முதல் மீண்டும் மகிழ்ச்சியான கிளியோபாட்ராவைப் பார்க்க ஆசைப்படுகிறேன்…" என்று உருகினான் ஆண்டனி

"உனது ஆறுதலான, அக்கறையான பேச்சு என் மனதை இதமாக்கிவிட்டது. உனது இந்த நம்பிக்கையான பேச்சை நான் நிறைய உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.." என்ற கிளியாபாட்ரா முதன் முறையாக ஆண்டனியின் வலது கையை உயர்த்தி, தனது சிவப்பு இதழ்களால் முத்தமிட்டாள்.

கிளியோபாட்ராவின் முத்தத்தில் போதை தலைக்கேறி தள்ளாடிப் போன ஆண்டனி, தனது இதயத்தில் அவளுக்கு ஒரு சிம்மாசனத்தை ஏற்படுத்திக்கொண்டான். அதேபோல் கிளியோபாட்ரா மனதிலும் அவன் இடம்பிடித்தான்.

(இன்னும் வருவாள்…)

==

About The Author