கிளியோபாட்ரா- 29

ரோமானிய அரசியலில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் ஆட்சியைக் கைப்பற்ற முனைப்புடன் இருந்தான் புரூட்டஸ். ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்தபோது தன்னுடன் கைகோர்த்த காஷியஸ் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து அவனும் பெரும் படையைத் திரட்டினான். மறைமுகமாக போருக்குத் தயாரானான். இதுபற்றிய தகவல் அறிந்த அகஸ்டஸ் சீஸரும், ஆண்டனியும் வேகவேகமாக பெரும்படையைத் திரட்டினர்.

இரு தரப்பினரும் மோதிக்கொள்ள தயாரானார்கள். இரு தரப்பினருமே ராஜதந்திரமான செயல்களில் இறங்கினர். இரு அணிகளாகப் பிரிந்து சென்று போரைச் சந்திக்க புறப்பட்டனர்.

இதற்கிடையில், புரூட்டஸின் அன்பு மனைவி போர்ஷியா இறந்துவிட… புரூட்டஸ் இன்னும் சோகமானான். செனட் சபையில் சீஸர் கொலை செய்யப்பட்டதையும், அதில் தனது கணவன் புரூட்டசுக்கு பெரும் பங்கு இருப்பதையும் அறிந்த போர்ஷியா, தனது கணவனுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிரச்சினை வரலாம்; அதனால் தானும் அவமானத்திற்கு ஆளாகலாம் என்கிற அச்சத்தில் நெருப்பை விழுங்கி இறந்தாள் என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

அன்பு மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தையும் தாண்டி போருக்குத் தயாரானான் புரூட்டஸ். போரில் வெற்றி பெற்றே ஆகவேண்டும், தோற்கும் நிலைமை வந்தால் எந்த நிலையிலும் உயிருடன் இருக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டான்

பிலிப்பி சமவெளி போர்க்களத்தில் அகஸ்டஸ் மற்றும்ஆண்டனி தலைமையிலான படைகளும், புரூட்டஸ் மற்றும் காஷியஸ் தலைமையிலான படைகளும் மோதத் தயாராக வீறுகொண்டு புயலென புறப்பட்டு வந்தன. இரு தரப்பு படைகளும் வந்த வேகத்தில் அந்த சமவெளியின் சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் புழுதிக் காடாக மாறின

அகஸ்டஸின் படைகள் பிலிப்பி சமவெளியை நோக்கி வர… ஆண்டனியோ புத்திசாலித்தனமாக மலைப் பகுதியைச் சுற்றி வந்து எதிரிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தாக்க முயன்றான். இதேபோல், காஷியஸ் தலைமையில் ஒரு படையும் தந்திரமாக முன்னேறி வந்தது.

ஒரு மலையின் உச்சியில் காஷியஸ் படைகள் வேகமாக வந்த காரணத்தால் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தன. மலை உச்சியில் இருந்து அவர்கள் பார்த்தபோது சற்று தொலைவில் பாலைவனப் புயல் போல் புழுதிப்படலம் எழுந்து வந்தது. குதிரைக் குழம்புகளின் அதிர்வுகளால் பூமியில் லேசான அதிர்வு தெரிந்தது. நிச்சயமாக அது அகஸ்டசின் படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கணித்தான். ஆனாலும் அது புரூட்டசின் படையாகக் கூட இருக்கலாம் என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்போது மூச்சு வாங்க குதிரையோடு வந்து நின்றான், காஷியசின் உதவியாளரான பிண்டாரஸ்.

"எதிரிகள் நம்மை சூழ்ந்துவிட்டார்கள். ஆண்டனியின் படை நமது கூடாரத்தை எல்லாம் தீ வைத்து அழித்துவிட்டது.." என்ற பிண்டாரஸ், தனக்கு பின்நோக்கி கை காண்பித்தான். அங்கே பெரும் புகை மூட்டம் வான் நோக்கி திரண்டு மிரட்டியது
அதைப் பார்த்த காஷியஸ் மிரண்டு போனான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாத அவன், தனது தலைமை படைவீரன் ஒருவனை அழைத்தான். அவன் பெயர் டிடினியஸ்

"அங்கே நம்மை நோக்கி மலை அடிவாரத்தில் வரும் படையைப் பார். அது நம் புரூட்டஸின் படையா அல்லது எதிரியின் படையா என்று பார்த்து வா…"

டிடினியஸ், குதிரையில் வேகமாக மலை அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தான்

தனியாகச் சென்ற டிடினியசை எதிரே வந்த படைவீரர்கள் மடக்கிவிட்டார்கள். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் குதிரையில் இருந்து இறங்கினான் டிடினியஸ். எதிரே வந்த படைவீரர்கள் சிலர் அவனைத் தனியாக அழைத்துச் சென்றனர். அப்போது அந்த படைவீரர்கள் எழுப்பிய ஆரவாரம் காஷியஸ் காதையும் வந்தடைந்தது.

டிடினியசை எதிரிகள் கைது செய்துவிட்டார்கள் என்று, தனது உதவியாளர் பிண்டாரஸ் உதவியுடன் கணித்தான் காஷியஸ். இதனால் நாமும் தோற்றுவிடுவோம் என்று அஞ்சினான் அவன்.

அடுத்தநொடியே பிண்டாரசை அழைத்துக்கொண்டு தனியாக சென்றான் காஷியஸ்.

"பிண்டாரஸ்… நாம் நினைக்காத ஒன்று நடந்துவிட்டது என்று எண்ணுகிறேன். டிடியஸ் என் நண்பனும்கூட! அவனைக் கைது செய்தவர்கள் எதிரிகள்தானே? இதில் எந்த மாற்றமும் இல்லையே…?"

"ஆமாம்! நிச்சயம் அவர்கள் நம் எதிரிகள்தான். நம் படை என்றால், அவர்கள் நம்மை நோக்கி அல்லவா வந்து இருப்பார்கள்? டிடினியசும் திரும்பி வந்து இருப்பானே..?"

"ஆமாம்… நிச்சயம் அவர்கள் எதிரிகள்தான்…" என்ற காஷியஸ் ஒரு நிமிடம் அமைதியாக எதையோ யோசித்தான்.

"என்ன யோசிக்கிறீர்கள்? தோல்வி அடைந்துவிடுவோம் என்று பயப்படுகிறீர்களா?" என்று பிண்டாரஸ் கேட்டான்.

"தோல்வியை நினைத்து பயப்படவில்லை. ஒருவேளை என்னை எதிரிகள் கைது செய்துவிட்டால், என்னை எப்படி நடத்துவார்கள் என்றுதான் எண்ணிப் பார்த்தேன். அப்படியொரு அவமானத்தைச் சந்திக்க வேண்டுமா என்றும் எண்ணுகிறேன்".

"அதனால், என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"அவமானப்பட்டு உயிர் துறப்பதைவிட விரும்பி உயிரை விடுவது எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்".

"நீங்கள் என்னை மேலும் குழப்பம் அடையச் செய்கிறீர்கள்".

"பிண்டாரஸ், நான் சொல்வதை நீ செய்வாயா?"

"நிச்சயமாகச் செய்வேன். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் இன்னமும் சொல்லவில்லையே…"

"எதிரிகள் கையால் மரணிப்பதைவிட உன் கையால் இறப்பதையே நான் விரும்புகிறேன்…"

பிண்டாரஸ் அதிர்ந்து போய்விட்டான்.

"ஆமாம் பிண்டாரஸ். நீ இப்போது என்னைக் கொல்ல வேண்டும். இதோ இந்த வாளால்தான் சீஸரைக் குத்திக் கொன்றேன். அதே வாளால் நீ இப்போது என்னைக் குத்திக் கொன்றுவிடு. எதிரிகளிடம் சிக்கி மரணிப்பதைவிட இதைப் பெரிய தியாகமாக கருதுகிறேன்…" என்று காஷியஸ் சொல்ல… கலவர முகத்தோடு நின்று கொண்டிருந்தான் பிண்டாரஸ்

"நான் எப்படி உங்களைக் கொலை செய்ய முடியும்? என் மனம் அதற்கு இடம் கொடுக்காது…" என்று மறுத்தான் அவன். ஆனால், காஷியஸ் தனது முடிவில் உறுதியாக இருந்தான்

"இந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்துபவன் நான்தான். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்…" என்ற காஷியஸ், பிண்டாரஸ் கையில் தனது கூரிய வாளை வலுக்கட்டாயமாக திணித்தான். அதை வாங்கிய பிண்டாரஸ் கைகள் நடுங்கியது அப்பட்டமாக தெரிந்தது. அப்போதும் காஷியசைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை.

"என்ன யோசிக்கிறாய், பிண்டாரஸ்? நீ கோழையா? ஏன் இப்படி நடுங்குகிறாய்? ஒருவனின் உயிர் எப்போது வேண்டுமானாலும் போய்த்தானே ஆக வேண்டும்? அதனால், என் கண்களை நான் மூடிக் கொள்கிறேன். இந்த வாளை நேராக என் மார்பில் பாய்ச்சு. அப்படியொரு மரணத்தைத்தான் நான் இப்போது விரும்புகிறேன்…" என்று கடைசியாகச் சொல்லி முடித்த காஷியஸ், தன் கண்களை மூடிக் கொண்டான். நடுங்கிய கைகளோடு கூரிய வாளை அவனது மார்பில் பாய்ச்சினான் பிண்டாரஸ்
அடுத்த நொடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த காஷியஸ் துடிதுடித்து இறப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தினான் பிண்டாரஸ்
இதற்கிடையில், தனி ஆளாக குதிரையில் புறப்பட்டுச் சென்ற டிடினியஸ் முகத்தில் பேரானந்தம் பொங்கி வழிந்தது. ஆம்… அவன் சந்தித்தது எதிரிகளை அல்ல. புரூட்டசின் படையைத்தான். அந்த மகிழ்ச்சியில்தான் எல்லோரும் ஆரவாரம் இட்டார்கள். ஆனால், காஷியஸ்தான் அதைத் தவறாக கணித்து, அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டான்.

இதற்கிடையில், நடந்து கொண்டிருந்த போரில் இளைஞனான அகஸ்டசின் படை புரூட்டசின் படையிடம் தோற்று பின்வாங்கி ஓடியது. ஆனால், ஆண்டனி தலைமையில் சென்ற படையின் கை ஓங்கி இருந்தது. அவன் காஷியஸ் தலைமையில் புறப்பட்டு வந்த படையை முறியடித்துவிட்டான்

அகஸ்டஸ் படை பின்வாங்கி ஓடியதால் களிப்புடன் காஷியசைத் தேடி வந்த டிடினியஸ் உள்ளிட்ட படை வீரர்கள், அவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை அறிந்து அதிர்ந்தனர் (காஷியசைக் கொன்ற பிண்டாரஸ், பக்கத்து நாட்டுக்கு ஓடிவிட்டதாக குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்). தன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று எண்ணிய டிடினியஸ், காஷியஸ் மார்பைத் தைத்திருந்த வாளை உருவி, அதனால் தன்னைத்தானே குத்திக்கொண்டு சாய்ந்தான். இவனது மரணமும் மறக்க முடியாது வரலாறாக பதிவாகியது

அதேநேரம் –

அகஸ்டஸ் படையைத் தோற்கடித்த மகிழ்ச்சியில் இருந்த புரூட்டஸ், காஷியசின் மரணம் பற்றி அறிந்து வருந்தினான். காஷியஸ் உடலையும், அவனுக்காக உயிர் துறந்த டிடினியஸ் உடலையும் மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டான்.
அவனும் விரைவில் காஷியஸ் போன்றே சாகப் போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை.

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

Comments are closed.