கிளியோபாட்ரா-33

டார்சஸ் நகருக்கு வந்த கிளியோபாட்ராவை உற்சாகமாக வரவேற்றான் ஆண்டனி. அவளுக்காக தடபுடல் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தான். அந்த விருந்தில் பங்கேற்றவாறே இருவரும் இனிமையாக உரையாடினர்.

"கிளியோபாட்ரா… ரோமில் உன்னை பார்த்ததற்கும், இப்போது உன்னை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன. எனக்கு என்னவோ வயது ஏறிக்கொண்டே போகிறது. ஆனால், உனக்கு வயது குறைந்து வருவது போலவே தெரிகிறது. அவ்வளவு அழகாக இருக்கிறாய்".

"ஆண்டனி… நான் மட்டுமல்ல; நீங்களும்தான் மாறிப்போய் விட்டீர்கள். ரோமாபுரியில் நீங்கள் என்னைப் பார்த்த பார்வைக்கும், இங்கே இப்போது என்னைப் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறதே…"

"சரி… நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். என் மனைவி ஆக்டேவியாவை விட நீ மிகவும் அழகாக இருக்கிறாய். அந்த அழகு என்னை என்னமோ செய்கிறது".

"ஏன்… எனது அழகை நீங்கள் இப்போதுதான் ரசிக்கிறீர்களா? சீஸர் உயிருடன் இருக்கும்போதுகூட ஓரக்கண்ணால் ரசித்தது இல்லையா?"

"கிளியோபாட்ரா, உன்னிடம் பொய் சொல்ல முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன்…" என்றான் ஆண்டனி.

கிளியோபாட்ராவும், ஆண்டனி தன் வலையில் விழுந்துவிட்டான் என்பதை உறுதி செய்து கொண்டாள்.

ஆண்டனியிடமிருந்து விடைபெறும்போது, தான் விரைவில் ஏற்பாடு செய்யும் சிறப்பு விருந்தில் அவன் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள் கிளியோபாட்ரா. ஆண்டனியும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்.

ஆண்டனி – கிளியோபாட்ராவின் அந்தச் சந்திப்பு மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

சில நாட்களுக்குப் பிறகு கிளியோபாட்ரா அழைத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டான் ஆண்டனி. அவன், அதுவரை பார்த்திராத, அனுபவித்திராத அளவுக்கு இந்த விருந்து அமைந்திருந்தது.

விருந்து நடைபெற்ற இடம் நைல் நதிக்குள். ஆம்..! நைல் நதி மீது நிறுத்தப்பட்டு இருந்த பிரம்மாண்ட கப்பலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள் கிளியோபாட்ரா.

நகரும் மாளிகை என்று சொல்லும் அளவிற்குக் கப்பல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கப்பலின் வாயில் முதல் விருந்து நடைபெற்ற இடம் வரை கிளியோபாட்ராவின் அழகுப் பணிப்பெண்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். விருந்து நடைபெற்ற இடத்தில் நின்றிருந்த கிளியோபாட்ரா, ஆண்டனியைப் பார்த்ததும் அவனை நெருங்கினாள். எல்லோரது முன்னிலையிலும் அவனை அணைத்தபடியே வரவேற்றாள்.

நைல் நதியின் குளுமையை அள்ளியெடுத்துக் கொண்டு வந்த தென்றல் காற்று கூட தர முடியாத இன்ப உணர்வை ஆண்டனிக்கு கொடுத்தது, கிளியோபாட்ராவின் அந்தத்தழுவல்.

கட்டியணைத்த கிளியோபாட்ரா விலகிய பிறகுதான் அவள் அணிந்திருந்த பளபளக்கும் ஆடையை கூர்ந்து கவனித்தான் ஆண்டனி. உடலோடு ஒட்டிய மென்மையான மேலாடை அது. அதில், ஆங்காங்கே விலை உயர்ந்த ஆபரணங்கள் பளிச்சிட்டன.
ஆபரணங்களின் கவர்ச்சியைக் காட்டிலும் கிளியோபாட்ராவின் கவர்ச்சியே அதில் மேலோங்கி இருந்தது. உடலோடு ஒட்டிப்போய் இருந்த ஆடை, அவளது அழகை ஆழமாக ரசிக்கும்படி ஆண்டனியின் கண்களை இழுத்தது.

கிளியோபாட்ராவின் அழகு மேனியை மட்டுமின்றி, பிரம்மாண்ட கப்பலையும் விலை உயர்ந்த தங்க, வைர ஆபரணங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்த ஆண்டனிக்குப் பேச்சே வர மறுத்தது.

கிளியோபாட்ராவே அவனது தோளை மென்மையாக பிடித்து உலுக்கினாள்.

"என்ன ஆண்டனி… என்னையும் மறந்து, விருந்தையும் மறந்து எதையோ உங்கள் கண் தேடுகிறதே… அது என்னவென்று சொன்னால், நானும் உங்களது இனிய தேடலில் இறங்குவேன்தானே…?"

"நீ எனக்கு இங்கே விருந்து கொடுக்கும் இடம் நிச்சயமாக இந்த பூலோகம்தானா? இல்லை, சொர்க்கமா? என்ற சந்தேகமே எனக்கு வந்துவிட்டது. எகிப்தில் உள்ள பிரமிடுகளுக்குள்தான் நகைகள் பெட்டி பெட்டியாக இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், நீ இந்தக் கப்பலையே தங்க மரமாக மாற்றி இருக்கிறாயே… இப்படியொரு விருந்தில் நான் கலந்துகொண்டதே இல்லை. உன்னால் இந்த விருந்து எனக்கு கிடைப்பதால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது".

"உங்களது வர்ணிப்பையும், பிரமிப்பையும் பார்த்தால், வந்த வேலையையே மறந்துவிடுவீர்கள் போல் இருக்கிறதே…"

"நிச்சயமாக கிளியோபாட்ரா. அந்த ரோமாபுரியைவிட இந்த எகிப்தே இப்போது எனக்குப் பிடித்து விட்டது. இங்கேயே நிரந்தரமாக தங்கிவிடலாமே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது".

"சீஸருக்கு அடுத்த இடத்தை பிடிக்கப்போகும் நீங்கள் இந்த எகிப்திற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஏன்… நீங்கள் இங்கே இருந்தபடியே கூட உங்கள் அரசாட்சியைக் கவனிக்கலாம். ஆனாலும், இதையெல்லாம் இப்போது யோசிக்க வேண்டாம். உங்களுக்காக விருந்து காத்திருக்கிறது…" என்ற கிளியோபாட்ரா, விருந்து நடைபெற்ற கப்பலின் சொகுசான அறைக்குள் ஆண்டனியை அழைத்துச் சென்றாள்.

அறையின் ஒரு பகுதியில் பிரம்மாண்ட படுக்கை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதில் இருந்து தவழ்ந்து வந்த நறுமணப் பொருட்களின் வாசனை ஆண்டனியை ஒருவித கிறக்கம் கொள்ளச் செய்தது. அறையின் இன்னொரு ஓரத்தில் ஜன்னல் அமைத்து, அதில் ஒரு திரைச்சீலை தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த திரைச்சீலை ஒருவிதமாய் மின்னிக் கொண்டிருக்க, அதனை தொட்டுப் பார்த்தான் ஆண்டனி. அது, தங்க இழைகளால் கோர்க்கப்பட்டு இருப்பதை கண்டவன், வியப்பில் கண்களை அகல விரித்தான். அந்த திரைச்சீலையை அவன் விலக்கியபோது, நைல் நதிக் காற்று அவன் மீது மோதி, அந்த அறையை குளுமைப்படுத்திவிட்டுப் போனது.

அப்போது கிளியோபாட்ராவே அவனை அழைத்தாள்.

"நைல் நதியை ரசித்தது போதும் ஆண்டனி. உங்களுக்கான விருந்து தயாராகிவிட்டது. இங்கே வாருங்கள்…" என்று அவள், அழைக்க வேகமாக சென்று படுக்கையில் அமர்ந்தான்.

அடுத்த நிமிடமே அழகான பணிப்பெண்கள் இரண்டு பேர், ஆண்டனிக்காக தயார் செய்யப்பட்ட உயர் ரக மது வகைகளைக் கொண்டு வந்தனர். அவற்றை கோப்பைகளில் ஊற்றி கொடுத்தனர். ஆண்டனி ஒரு மதுப்பிரியன் என்பது கிளியோபாட்ராவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், முதலில் மது விருந்து நடத்தப்பட்டது. கிளியோபாட்ராவும் ஒரு கோப்பை மதுவை சப்பி பரவசப்பட்டுக் கொண்டாள்.

தொடர்ந்து, கிளியோபாட்ராவின் பணிப் பெண்கள் அசைவ உணவுகளைக் கொண்டு வந்தனர். போதையில் அந்த உணவுகளை ஒரு பிடி பிடித்த ஆண்டனி, சிறிதுநேரத்தில் கிளியோபாட்ராவின் மடியில் தள்ளாடியபடி விழுந்தான். அவளும் அதை ஆர்வமாய் ஏற்றுக்கொண்டாள்.

(இன்னும் வருவாள்…)

About The Author