கிளியோபாட்ரா (41)

மீண்டும் கிளியோபாட்ராவுடன் சேர்ந்த ஆண்டனி, தனது படையின் பலத்தைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொண்தோடு, அவளுடன் இணைந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பித்திருந்தான். மனதளவில் ஆண்டனியை மெல்ல வெறுக்க ஆரம்பித்திருந்த கிளியோபாட்ரா, தனக்கு சக்தி வாய்ந்த ஓர் ஆண் தேவை என்பதால் வேறு வழியின்றி அவனுடன் இல்லற வாழ்வில் இணைந்திருந்தாள்.

இதற்கிடையில், எகிப்தை மையமாகக் கொண்டு கீழ்த்திசை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்ட ஆண்டனி, தன்னை கீழ்த்திசை நாடுகளின் சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்திக் கொண்டான். எகிப்தைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் கவர்னராக கிளியோபாட்ராவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். கிளியோபாட்ரா வழக்கம்போல் எகிப்தின் அழகு ராணியாக வலம் வந்தாள்.

கிளியோபாட்ராவுடன் ஆண்டனி உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்ட பின், அவன் தன் படைகளை வழி நடத்திச் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. கிளியோபாட்ரா தன்னுடன் இருப்பதே இதற்கெல்லாம் காரணம் என்று பெருமிதம் கொண்டான் ஆண்டனி.

சைபிரஸ், பாலஸ்தீனம், போனிசியா, சினாய், மத்திய சிரியா, சிலிசியா நாட்டின் பெரும் பகுதிகள் என கீழ்த்திசை நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டே போனான். அதில் அவனுக்கு கர்வமும் ஏற்பட்டது. அந்தக் கர்வத்துக்கு வெகுவிரைவிலேயே பலத்த அடியும் கிடைத்தது!

கி.மு.37 குளிர்காலத்தில் பார்த்தியன்களுடன் போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ஆண்டனி. அதற்காக பெரும் படைகளைத் திரட்டினான். கி.மு.36 மார்ச் மாதத்தில் இரு தரப்பினர் இடையேயும் போர் துவங்கியது. இந்தப் போரில் ஆண்டனி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று நினைத்த கிளியோபாட்ரா அவனுடனேயே போர்க்களத்தில் முகாமிட்டிருந்தாள். ஆனால், சூழல் தடையாக இருந்தது. கிளியோபாட்ரா இப்போது மூன்றாவது முறையாக கருத்தரித்திருந்தாள். அச்செய்தியை ஆண்டனியிடம் கூறினாள்.

"ஆண்டனி… நம் படைகள் வேகமாகவும் விவேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் வெற்றி நமக்குத்தான்!" என்று நெஞ்சம் நிமிர்ந்து சொன்னாள் கிளியோபாட்ரா.

"இதில் என்ன சந்தேகம் கிளியோபாட்ரா? நீ என்னருகில் இருந்தாலே வெற்றி என் பக்கம்தான்" என்று கூறி பரந்து விரிந்த தோள்களை உயர்த்திக் கட்டினான் ஆண்டனி

"பார்த்தியன்களுக்கு எதிரான இந்தப் போரில் நான் உங்களுடன் வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு திடீரென்று ஏற்பட்டு விட்டது".

"உனக்கு என்ன ஆயிற்று கிளியோபாட்ரா? ஏன் உன் பேச்சில் தயக்கம்?

"ஆண்டனி… இப்போது நான் மீண்டும் கருத்தரித்து இருக்கிறேன். நமக்கு இரண்டாவது முறையாக ஒரு வாரிசு என் வயிற்றில் வளருகிறது".

கிளியோபாட்ரா சொன்னதைக் கேட்ட ஆண்டனி மிகவும் மகிழ்ந்தான். "மகிழ்ச்சியான செய்திதானே சொல்லி இருக்கிறாய். இதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?"

"எனக்கும் மகிழ்ச்சிதான். இந்த நேரத்தில் உங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இதுபற்றி யோசிக்கிறேன்".

"நீ தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம் கிளியோபாட்ரா. பார்த்தியன்களுக்கு எதிரான போரில் வெற்றி நமக்கு என்பது எப்போதோ உறுதி செய்யப்பட்டுவிட்டது. இப்போது உனக்குத் தேவை ஓய்வு. அதனால், போர் முகாமில் நீ தங்க வேண்டாம். இன்றே… ஏன், இப்போதே அலெக்ஸாண்டிரியாவுக்குப் புறப்பட்டு விடு. அங்குள்ள நம் அரண்மனையில் நிறைய ஓய்வெடு" என்று கூறிய ஆண்டனி, அன்றே கிளியோபாட்ராவை எகிப்துக்கு அனுப்பி வைத்தான்.

அதேநேரம், ஆண்டனியின் வெற்றிக்காக ஒரு லட்சம் வீரர்களும், பத்தாயிரம் குதிரைப்படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எதிரி நாட்டை நோக்கி முன்னேறினார்கள்.பார்த்தியன்களும் பெரும் படையைத் திரட்டி இருந்தனர்.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். பகலில் போரும், இரவில் ஓய்வுமாக பல நாட்கள் கழிந்தன. இந்தப் போர் நிகழ்ந்த காலத்தில் கடும் குளிர் நிலவியது. அத்துடன், உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆண்டனியின் பெரும்படை அவற்றைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. பார்த்தியன்கள், உள்நாட்டுக்காரர்கள் என்பதால் ஆண்டனியின் பெரும் படை தங்கள் நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடுப்பு வேலி அமைத்து தாக்குதல் நடத்தினர்.

எதிர் தாக்குதல் நடத்திய ஆண்டனியின் படைக்குப் பெரும் பொருட்செலவும், வீரர்களின் திறன் இழப்பும் ஏற்பட்டது. இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தப் போர் தொடர்ந்தால் கடும் பஞ்சத்தாலேயே தனது படைவீரர்கள் மாண்டு விடுவார்கள் என்று அஞ்சினான் ஆண்டனி.
மேலும், கருவுற்றிருந்த கிளியோபாட்ரா எப்படி இருக்கிறாளோ என்ற பரிதவிப்பும் அவனை வாட்டியது. அதனால் அவனது வீரமான பேச்சிலும் சற்று தொய்வு காணப்பட்டது. இதையடுத்து, இப்போது பார்த்தியன்களை எதிர்த்து போர் புரிய வேண்டாம் என்று எண்ணிய ஆண்டனி, தனது படையை எகிப்து நோக்கித் திரும்ப உத்தரவிட்டான்.

ஆண்டனியின் படை பின்வாங்கி எகிப்து நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை அறிந்த கிளியோபாட்ரா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். மிகப்பெரிய படை இருந்தும் பார்த்தியன்களை வெல்ல முடியாமல் ஆண்டனி திரும்பி வருகிறாரே என்று எரிச்சல் அடைந்தாள்.

ஆனால், எகிப்து திரும்பிய ஆண்டனியிடம் கோபத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக பாசத்தையே பொழிந்தாள் கிளியோபாட்ரா. ஆண்டனியே இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்தியன்களுக்கு எதிராக போர் முயற்சியில் வீணான பெரும் பொருட்செலவையும், வீரர்களின் திறன் இழப்பையும் அறிந்திருந்த கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு உற்சாகம் ஊட்டும் பொருட்டு அறிவுரைகள் பல வழங்கினாள்.
சில மாதங்கள் கிளியோபாட்ராவின் அரண்மனையிலேயே ஓய்வெடுத்து வந்தான் ஆண்டனி.

கி.மு.36 இறுதியில் ஆண்டனியின் இரண்டாவது குழந்தை பிறந்தது. தாயைப் போலவே அழகில் ஜொலித்த அந்தக் குழந்தைக்கு டாலமி பிலடெல்பஸ் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் தம்பதியினர்.

இதற்கிடையில், ரோமில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசான ஆக்டேவியன், ஆண்டனிக்கு ஒரு தூது அனுப்பினான். ஆண்டனியுடன் நட்புறவுடன் பழகிய, "கடல் அரசன்" என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டு, கீழ்திசை நாடுகளின் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தவனுமான செக்ஸ்டஸ் பாம்பேயை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அந்தத் தூது.

ஆக்டேவியனிடம் முடியாது என்று சொல்லிவிட்டால், அது தன் இயலாமையைக் காட்டிவிடும் என்று உணர்ந்த ஆண்டனி, பெரும்படையுடன் செக்ஸ்டஸ் பாம்பேயை எதிர்கொண்டு போரிட்டு அவனை வீழ்த்தினான்.

ஆண்டனியின் இந்த உதவிக்குக் கைமாறாக ரோமாபுரியில் ஆண்டனியின் சிலையை நிறுவினான் ஆக்டேவியன். ஆண்டனிக்கு ஆக்டேவியன் சிலை நிறுவ இன்னொரு காரணமும் இருந்தது. கிளியோபாட்ராவை விட்டு விலகி, தனது சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனி மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது!

(இன்னும் வருவாள்…)

About The Author

1 Comment

Comments are closed.