குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் – இசை விமர்சனம்

"மரகதம்" என்ற பழைய திரைப்படம் ஒன்றில் சந்திரபாபு பாடும் பாடலின் முதல் வரியை எஸ்.பி.பி. சரண் தான் தயாரிக்கும் திரைப்படத்திற்கு பெயராகப் பயன்படுத்தியுள்ளார். சேரன் உட்பட பல பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றிய ராஜாமோஹன் தன் முதல் படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் ராமகிருஷ்ணண், தர்ஷணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஏழு உதவி இயக்குனர்களும் நடிக்கிறார்களாம்! இன்னும் கேளுங்கள். பின்னணியில் நின்று பணிபுரியும் படக்குழுவினரும் கூட வெள்ளித்திரையின் முன் வந்துபோகின்றார்களாம்! அட!!

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைதிருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அங்கும் ஒரு புதுமை! காஞ்சிபுரத்தில் படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து, அவ்வூர் மக்களுக்காக விளையாட்டுகளை எல்லாம் நடத்தி, வெற்றி பெற்றோரை இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தார்களாம். இன்னும் ஒரு ‘அட’ போடலாம்!

அதெல்லாம் இருக்கட்டும் – பாடல்களெல்லாம் ‘அட’ போட வைக்கின்றனவா! கேட்டு விடுவோம்.

முட்டத்து பக்கத்துல

கங்கை அமரன் "முட்டத்து பக்கத்துல டெண்ட் கொட்டாயி, கட்டு கரண்ட்டு கட்டு, வாடி வீராயி" என்று செந்தமிழில் பாட்டு எழுதியுள்ளார்! அவர் மகன் வெங்கட் பிரபுவே பாடியுள்ளார். எண்பதுகளில் கேட்ட கானா-ஸ்டைல் பாடல்களை நினைவூட்டுகின்றது. வித்தியாசமான முயற்சிதான், குறிப்பாக யுவனுக்கு! இசைத்தட்டின் முதல் பாடலே இதுவாக இருப்பதுதான் கொஞ்சம் முகத்தை சுளிக்க வைக்கிறது.

கடலோரம் ஒரு ஊரு

யுவனுக்கு பாராட்டுக்கள். "வேர் இஸ் தி பார்ட்டி"யுடன் சேர்ந்து அவ்வப்போது "மச்சான் மச்சான்", "கடலோரம் ஒரு ஊரு" போன்ற பாடல்களையும் தருகிறார். சோகமான வரிகளை அள்ளித் தந்திருக்கிறார் வாலி. காதை அடைக்காத இசை மனதிற்கு இதம் தருகிறது. இருந்தாலும், மெட்டை இதற்கு முன் எங்கேயோ கேட்டது போன்ற ஒரு உணர்வு !

சின்னஞ்சிறு மனசுக்குள்ள

இத்தனை கிராமிய மணத்துடன் ஒரு பாடலா! வாலியின் வரிகளிலும், யுவனின் இசையிலும் மணக்கும் வாசனை, பாடகர்கள் ஜாவேத் அலி, பெல்லா ஷிண்டே குரல்களில் கொஞ்சம் குறைந்து விடுவது போலத் தெரிகின்றது. ஜாவேத் அலி, மறைந்த பாடகர் ஷாகுல் ஹமீதை அவ்வப்போது ஞாபகப்படுத்துகின்றார். (ஹிந்தி கஜினியில் "ஹே குசாரீஷ்" என்று மனதை கொள்ளையடித்த அதே குரல்.) பாடலில், அங்கங்கே கொஞ்சம் "அச்சுபிச்சு" என்று இருந்தாலும்.. பரவாயில்லை. நல்ல மெலடியை தந்தமைக்கு நன்றி!!

நான் தர்மன்டா!

இசை முழங்க எஸ்.பி.பியின் குரலில் கணீரென ஆரம்பிக்கிறது இந்தப் பாடல்! உம் குரலுக்கு வயதே ஆகாதா? நிறைய எலெக்ட்ரிக் கிடார் பிரயோகிப்பு; கூடவே எக்கச்சக்க பீட்ஸ்; ட்ரம்பெட் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எஸ்.பி.பியின் குரல் அங்கங்கு கொஞ்சுகின்றது! "ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல! கானா பாட்டு மட்டும் எட்டு கட்டையில! இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்ல" – கங்கை அமரனிடம் கேட்க வேண்டும், பாலசுப்ரமணியத்திற்காகவே எழுதிய பாடலா?!

என் ராசாத்தி

"கடலோரம் ஒரு" பாடல் ஆரம்பித்தது போலவே இதுவும் ஆரம்பிக்கிறது. கங்கை அமரன் எழுதி(?) இருக்கும் இன்னொரு பாடல். யுவனிடமிருந்து இன்னும் ஒரு வித்தியாசமான முயற்சி. கிராமிய ஒப்பாரி ஸ்டைலில் வேல்முருகன் பாடியுள்ளார். பாட்டின் கருத்துக்கும், உணர்விற்கும் அத்தனை பீட்ஸ் தேவையில்லை என்று தோன்றுகிறது.

கடலோரம் ஒரு ஊரு

"யுவன் ஷங்கர் ராஜாவின் தமிழ் உச்சரிப்பு ஏன் இத்தனை கொடூரமாக இருக்கிறது" என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்காகவே, மீண்டும் இந்த பாடல் – எஸ்.பி.பி சரணின் குரலில். அங்கங்கே தன் குரலை அழகாய் மாற்றிப் பாடியிருக்கிறார். யுவனின் இசையில் இருந்த பாவத்தை அப்படியே பாட்டில் கொண்டுவந்தது நன்று!

திரைப்படத்திற்கு அழகான பெயர் சூட்டி, அற்புதமான – ம்ம், ‘அற்புதமான’ வேண்டாம் – ‘அம்சமான’ என்று வைத்துக் கொள்வோமே – பாடல்கள் தந்த "குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்" படக் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். படம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

About The Author

1 Comment

  1. Vignesh

    முட்டத்து பக்கத்தில” பாடல் பழைய கானா பாடல்களை நினைவு படுத்தவில்லை. இது கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற அதே கங்கை அமரன் எழுதிய “நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி” என்ற கிராமிய பாடலின் ரீமிக்ஸ் வடிவமே.

    மேலும் “கடலோரம் ஒரு ஊரு” பாடலின் வரிகளில் வாலி சோகத்தை அள்ளித் தரவில்லை. இப்பாடல் முழுக்க முழுக்க இளமை ததும்பும் ஜோடியின் காதல் விளையாட்டு பற்றிய வர்ணனை கொண்டது.”

Comments are closed.