குடியரசு

எல்லோரும் இந்நாட்டு
மன்னர்கள் ஆனோம்.
உடன்
மந்திரிகளுக்கு அதிகாரம்
தந்து விட்டோம்.

யார் யாரோ மன்னர்கள்
அந்நாளில்
காதலுக்காக,
சமாதானத்துக்காக,
இன்ன பிற காரணங்களுக்காக
முடி துறந்தார்களாம்.
சலூனைத் தவிர வேறெங்கும்
நம்மால் முடி துறக்க
முடியவில்லை!

என்ன அதிசயம்..
கோடிக்கணக்கான நம்மை
நம்மிடம் பெற்ற
வாக்கு பலத்தால்
வெகு சிலர்
அலட்சியமாய்
ஆண்டு விடுகிறார்கள்!
நம் பலம் மட்டும்
விரலில் கரி பூசிக் கொண்டு விடுகிறது.
இலவசங்களால்
இங்கு நம் இனம்
இழந்து போவது
தன்மானத்தை மட்டுமல்ல..
நம் எதிர்காலத்தையும் கூடத்தான்!

கண்ணைத் திறந்து கொண்டே
நடுக்கடலில் விழச் சொல்கிறார்கள்
நம் அரசியல்வாதிகள்!
கண்ணீர் மறைக்கிறது நம்மை
அவர்களைப் பார்க்கவிடாமல்..
எத்தனை சுலபமாய்
தப்பித்து விடுகிறார்கள் அதனால்!

எந்த அரசியல்வாதியும்
பதவி போனபின்
தெருவுக்கு வருவதில்லை.
பதவியில் இருக்கும்போதோ
நம் தெருவுக்கே வருவதில்லை!

ஒவ்வொரு வருடமும்
தேசியக் கொடி மட்டும்
கம்பத்தில் உயர்ந்தால் போதாது..
நம் வாழ்வுத் தரமும் தான்.
நிஜமான குடியரசு தினம்
அன்றுதான்
கொண்டாடப்படும்
நம் ஆனந்தக் கண்ணீருடன்!

About The Author

2 Comments

  1. krishna

    ஒவ்வொரு வருடமும்
    தேசியக் கொடி மட்டும்
    கம்பத்தில் உயர்ந்தால் போதாது..
    நம் வாழ்வுத் தரமும் தான் சூப்பர் …..
    நான் தேடிய கவிதைகளில் மிகவும் அருமை நன்றி இதே போல் நிறைய எழுதவும் ….. அன்புடன் கிருஷ்ணா…(தமிழன்)

Comments are closed.