குப்பை (7)

வேலைக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு அங் மோ கியோவிலிருந்து கே.கே.தாய் சேய் மருத்துவமனையை அடைவதற்குள் பேய் மழையில் சிக்கிக் கொண்டான். நல்ல வேளையாகக் கையில் குடை இருந்தது. வரவேற்பறையில் இருந்த பெண், அதிகாரியைப் பார்க்கக் காத்திருக்குமாறு கனிவுடன் கூறினாள்.

இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

அசாத் சுற்றுமுற்றும் பார்த்தான். அறையில் நிலவிய குளிர் அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

குளிரில் நடுநடுங்கிய சூலிங்கைப் போர்த்திவிடவும் போர்வை இல்லாமல் அவன் முழித்தான். பிரசவத்தில் இருவருக்கும் முன் அனுபவமா இருந்தது? கடுமையாய் வலிக்கும் என்பதைத் தவிர ஒன்றுமே இருவரும் அறிந்திருக்கவில்லை. என்ன தேவையாயிருக்கும் என்றும் தெரிந்திருக்கவில்லை.

**************

அவள் குளிரில் நடுங்கியபடி "பாப்பா எங்கே? பாப்பா எங்கே?" என்று அரற்றினாள். அவனுக்குப் படு எரிச்சலாய் இருந்தது. அவள் ஒப்புக் கொண்டபடி தானே அவன் குழந்தையை அகற்றினான். இப்போது இவள் புதுப் பிரச்சனையைக் கிளப்புகிறாளே என்று கோபப்பட்டான். திட்டப்படி அடுத்த கட்டம் விடிவதற்குள் ரவியின் வீட்டிற்குப் போக வேண்டும். ஆனால், அழும் அவளைப் பார்க்கவும் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு வேளை மனது மாறுகிறாளோ, இது என்ன புதுப் பிரச்சனை.

"சரி சரி, இரு, ஒரு தடவை பார்த்துக் கொள், பிறகு மறுபடியும் அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவேன். என்ன சரியா," கேட்டபடி குப்பைத் தொட்டியை நோக்கி ஓடினான். ஒரு முறை பார்த்து விட்டுப் போகட்டுமே, உடன் வைத்துக் கொள்வது தான் ஆபத்து, பார்ப்பதில் என்ன தவறு.

ஆனால், அங்கே சந்தடியும் தொப்பிகளுடன் நீலச்சீருடைகளும் தெரிந்தன. தயங்கி நின்றான். அதற்குள் அழும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு காவலரும் பொது மக்களும் கூடி விட்டிருந்தனர்.

வாகனங்களின் பூபாளத்தில் சிங்கப்பூர் விழிக்க ஆரம்பித்திருந்தது. மேலும் அங்கு நிற்காமல், விடு விடுவென்று ஓட்டமும் நடையுமாக வந்து அவளைக் கைத்தாங்கலாய் கிட்டத் தட்ட இழுத்தபடி ரவியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***************

மருத்துவமனையில் தாதிகள் கருமமே கண்ணாக ஒரே தாளகதியில் நடந்தனர். இவர்களுக்குள் எப்படி இந்தத் தாய்மையுணர்வு வந்திருக்கும்? ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் மட்டும் அவ்வுணர்வு வருவதில்லை. இவர்களில் பாதி பேருக்குக் குழந்தை கூட இருக்குமோ?

**************
ரவியின் குடும்பத்தினர் மலேசியாவிற்குப் போயிருந்தனர். இரண்டு நாட்கள் சூலிங் அவன் வீட்டில் தான் ஓய்வெடுத்தாள். தன் குழந்தையை ஒரு முறை கூடப் பார்க்க முடியாமல் போனதற்குத் தொடர்ந்து அவனைச் சபித்தபடியிருந்தாள். அவனோ குற்றவுணர்வில் குழம்பி, வாய் மூடி மௌனியானான்.

அடுத்த நாள் செய்தித் தாளிலாவது குழந்தையின் புகைப்படம் வருமென்று எதிர்பார்த்தாள். செய்தி மட்டுமே இருந்தது. ஓரிரு நாட்கள் அவனைத் தொந்தரவு செய்த சூலிங் ஒரே வாரத்தில் குழந்தையைப் பற்றி மறந்தே போனாள். பால் சுரப்பைக் கட்டுப்படுத்தத் தயாராய் வாங்கி வைத்திருந்த சீனக் கஷாயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு குடித்தாள். அவள் குணம் அறிந்திருந்த அவனுக்கு அப்போது அது பெரிய ஆச்சரியமாக இல்லை.

***************

இப்போது நபீஸாவிற்கு குழந்தையை வளர்க்கப் பொறுமை இருக்குமா என்று அவனுள் சிறு சந்தேகம் உண்டு. நாற்பதை நெருங்கும் அவளுடைய வயது ஒரு காரணமென்றால் இயல்பாக இருக்க வேண்டிய தாய்மை அவளிடம் இருக்குமா என்று இரண்டு நாட்களாகப் பல முறை அவன் யோசித்து விட்டான்.

**************

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author