குருவருள் வழங்கும் திருமுருகன்

திருச்சி லால்குடிக்கு அருகில் சுமார் 31 கி.மீ தூரத்தில் இருக்கிறது திண்ணியம் எனும் புண்ணியத் தலம். இந்த ஊரின் நடுவே மிகவும் அழகாக அமைந்திருக்கிறது முருகன் திருக்கோயில்.

வழக்கப்படி, வாயிலின் உள்ளே கொடிமரம், இடும்பன் சன்னிதி, மயில் வாகனம், சித்த கணபதி ஆகியோரைத் தரிசித்துவிட்டு உள்ளே போகிறோம். உள்ளே அருள்மிகு கோடீஸ்வரன் – அம்பிகை பிரஹன்நாயகி எழுந்தருளியுள்ளனர். இவரைத் தரிசித்தால் கோடி மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். வேறெந்தக் கோயிலிலும் இல்லாத வகையில், இங்கு முருகப்பெருமான் தனி மயிலில் வீற்றிருக்கிறார்; அதே போல் வள்ளிக்கும் தெய்வானைக்கும் கூடத் தனித்தனி மயில்கள். ஒரே நேரத்தில் தந்தையான ஈசனையும் புத்திரனான முருகனையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடிவதும் இந்த இடத்தின் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அத்துடன், குரு தட்சிணாமூர்த்தி போல் இங்கு முருகப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்து குருவின் அம்சமாக அருள்பாலிக்கிறார். செவ்வாய்க் கிரகத்தின் அதிபதியான முருகன் இங்கு குருவுக்கும் அதிபதியாகிவிடுவதால் இவரை வணங்க ஞானம், கல்வி வளரும். உத்சவமூர்த்தி மயில் வாகனத்தில் வள்ளி – தெய்வானையுடன் அமர்ந்து அருள்பாலிக்கும் காட்சி அழகோ அழகு! தல விருட்சம் வில்வம். இங்கு முருகனுக்குச் செவ்வரளிப்பூவும், விருட்சிப்பூவும் மாலையாகத் தொடுத்துப்போட, திருமணம் தடையில்லாமல் நடக்குமாம். மழலைச் செல்வமும் உண்டாகும் என்கிறார்கள் அங்கிருக்கும் கோயில் பணியாளர்கள்.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயில் இது. சோழவம்சத்தினர் பல சிவன் கோயில்களைக் கட்டி வந்தனர். அது போல் ஒரு சமயம், புதிதாக ஓர் ஊரில் சிவன் கோயில் கட்ட வேலைகள் தொடங்கின. கோயில் தூண்கள், விதானங்கள் எல்லாம் தயார் ஆகின. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படப்போகும் சிவலிங்கம், வள்ளி, தெய்வானை, கந்தன் சிலைகள் செதுக்கப்பட்டு ஒரு வண்டியில் போய்க் கொண்டிருந்தன. வழியில் வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய, திருச் சிலைகள் மண்ணில் அமர்ந்தன. அவற்றைத் தூக்கப் பெருமுயற்சிகள் செய்தும் சிலைகள் அசைந்து கொடுக்காததால், அதையே ஈசன் திருவுளமாகக் கருதி அந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு எடுத்தனர். அதுதான் இந்தத் திண்ணியம் திருக்கோயில்.

ஈசுவரனே விரும்பித் தேர்ந்தெடுத்த இடமாதலால் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்தத் தலம். இங்கு பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. கந்த சஷ்டிக்குப் பிறகு நடக்கும் சூரசம்ஹார உத்சவம் இங்கு மிகப் பிரமாதமாகக் கொண்டாடப்படுகிறது. சூர சம்ஹாரம் முடிந்த பின் முருகப்பெருமானின் திருக்கல்யாண உத்சவத்தைப் பார்க்கக் கோடிக் கண்கள் வேண்டும். தை மாதம் வரும் தைப்பூச விழா பார்க்கவும் கூட்டம் அலை மோதும். திருச்சி சென்றால் கண்டிப்பாக இந்தக் கோயிலையும் தவறாமல் தரிசித்து வாருங்கள்! முருகன் திருவருளும் குருவருளும் பெறுங்கள்!

About The Author