கொண்டாட்டங்களும் திண்டாட்டங்களும் -புத்தாண்டுச் செய்தி!

புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஈஸ்டர் பெருநாள், ரம்சான், தீபாவளி, நத்தார் என மதரீதியான கொண்டாட்டங்கள், ஆண்டுதோறும் வரிசையாக வந்து போகின்றன. சில கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதுமே விடுமுறை கிடைக்கிறது. சிலவற்றிற்கு நாட்டுரீதியாக விடுமுறை விடப்படுகிறது. இவற்றுள் மதம் பார்க்காமல், உலகளவில் மிகப் பெரிதாகக் கொண்டாடப்படுபவை ஆங்கிலப் புத்தாண்டும், கிறிஸ்மஸ் திருவிழாவும்தான்!

இரண்டு தசாப்தக் காலத்திற்கு மேலாக, சுவிஸ் மண்ணில் வாழ்க்கையைக் கழித்து விட்ட எனக்கு, டிசம்பர் பிறந்ததும் ஏன் அணை கடந்த வெள்ளம்போல, பொருட்களை வாங்க மக்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று யோசித்து யோசித்துத் தலைமுடியைப் பிய்த்து பிய்த்து மொட்டையாகியதுதான் மிச்சம்! விடை சரியாகத் தெரியவில்லை. 12ஆவது மாதத்தில் கிடைக்கும் 13ஆவது சம்பளம் செய்யும் திருவிளையாடலோ என்று கூட நினைத்துப் பார்த்ததுண்டு. இரண்டு சம்பளம் டிசம்பர் மாதத்தில் கிடைத்தாலும், எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்க அதென்ன காமதேனுவா?

11 மாதங்களில் இழப்பதை, 12ஆவது மாதத்தில் பல நிறுவனங்கள் உழைத்து விடுகின்றன. இதற்காக வேலை செய்பவர்களைக் கசக்கிப் பிழிந்து விடுகின்றார்கள் என்பது தனிக்கதை. அவர்கள் என்ன செய்வது? நத்தார் பண்டிகையை ஒட்டி, நவம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் களைகட்டிவிடும். டிசம்பர் 25இல் யேசுபாலன் பிறந்ததையொட்டித்தான் கிறிஸ்மஸ் பண்டிகை. ஆனால், இந்த நிறுவனங்களுக்கு இந்தப் புனிதமான பிறப்பு 2 மாதங்களுக்கு முன்பே நடந்துவிடுவது எப்படி என்கிற மர்மம் எனக்கு இதுவரை புரியவே இல்லை. புரியவும் வேண்டாம்!

ஆனால் இவற்றுக்கிடையில், இன்றைய கொண்டாட்டங்கள் வியாபாரரீதியாகி விட்டனவே என்பதுதான் பெரிய சோகம்! குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், பணம் புரள்வதால், மதரீதியான கொண்டாட்டங்கள் புத்தாடைகள் அணிவது, அன்பளிப்புகள் பரிமாறுவது, மது அருந்துவது, வகை வகையாகச் சாப்பிடுவது என்பவற்றோடு நின்றுவிடுகின்றன. ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும், வழிபட வேண்டும் என்பவையெல்லாம் முக்கியமற்ற சங்கதிகளாகி விட்டன.

இந்தக் கொண்டாட்டங்கள் நாடு, மொழி, மதம் என்பவற்றிற்கு அப்பாற்பட்டு, பல சமூகத்தவர்களை ஒன்றிணைக்கின்றன. இநது மதத்தவனுக்கும் நத்தார் அன்பளிப்பு கிடைக்கின்றது. தனக்குக் கிடைக்கும் நத்தார் பரிசை இஸ்லாமியர் ஒருவரும் அகமகிழ்வோடு வாங்கிக் கொள்கின்றார். எல்லோருமே தமது வீடுகளில் கிறிஸ்மஸ் மரத்தை அழகுபடுத்தி, ஒளியூட்டி அலங்கரித்து ஆனந்தப்படுகின்றார்கள். ஆனால், அந்தந்தக் கொண்டாட்டங்களின் நோக்கம் சிதைபடாமல் அவை கொண்டாடப்படுவதுதான் அழகு! அது இன்றைய யுகத்தில் நடக்கின்றதா?

மதரீதியான கொண்டாட்டங்களும் அதன் பின் சொல்லப்படும் செய்திகளும் இன்றைய நவீன யுகத்தினரிடம் போய்ச் சேரவில்லை என்பதே யதார்த்தம்!

தீபாவளித் திருநாள் என்பது ஒளிவிழா. பொல்லாதவன் ஒருவனை அழித்து உலகைக் களிப்பில் ஆழ்த்தி, இந்த மகிழ்ச்சி எல்லோரது முகத்திலும் ஒளியைச் சேர்க்கவேண்டும் என்பதே இந்தப் பண்டிகையில் உள்ள செய்தி! ஆனால் புதிதாக உடுத்துவதும், நன்றாகக் குடிப்பதும், உண்ணுவதுமாக இந்த நாளைக் கழிப்பவர்கள்தான் இன்று அதிகமாகி வருகிறார்கள்.
புத்தாண்டு பிறக்கின்றது. பிறக்கின்ற ஆண்டில் இதுவரை நம்மோடு ஒட்டிக்கொண்டிருந்த சில வேண்டாத பழக்கங்களைக் களைந்துவிட்டு, பிறக்கின்ற புது ஆண்டிலாவது ஒழுங்காக இருப்போம், நம்மை மாற்றிக் கொள்வோம் என உறுதிமொழி எடுப்பதை விடுத்து, புத்தாண்டின் பிறப்பையே ஆடிப் பாடி, குடித்துக் கும்மாளமிட்டு மகிழும் போக்குத்தான் இன்றைய இளைஞர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

மாட்டுக்கொட்டிலில் பிறந்து எளிமையை நமக்குச் சொல்லித் தந்த இறைவனின் பிறப்பை வர்த்தக நிறுவனங்கள் வியாபார அஸ்திரமாக்கி விட்டன.

இப்படிப்பட்ட பழக்கங்கள் ஒருபுறமிருக்க, மக்களில் ஒரு பகுதியினர் இப்படி முக்கியமான நாட்களைக் குதூகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், உலகின் பல பகுதிகள், வறுமையோடு போராடிக் கொண்டிருக்கின்றன. சமாதானத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்.

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் திண்டாட்டங்கள் பற்றிய சிந்தனை நமக்கெதற்கு என்கிற மனோபாவமே நம்மிடம் மேலோங்கி நிற்கின்றது. இது சரியா? இந்தச் சுயநலம் தேவையா?

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம் வளரட்டும்! அப்பொழுதுதான் கொண்டாட்டங்களுக்கான நோக்கம் நிறைவேறும்.

புத்தம் புதியதாய்ப் பூத்திருக்கும் இந்தப் புத்தாண்டு தினமன்று இதை நாம் மனதில் நிறுத்திக் கொண்டால், இனி பிறக்கும் ஒவ்வொரு நாளும் நறுமணம் வீசும் புதுமலராகவே இருக்கும்.

About The Author