சக்கரகட்டி – இசை விமர்சனம்

சில வருடங்களுக்கு முன், "சத்மா"வின் (அதாவது ஹிந்தி மூன்றாம் பிறை) "ஏஹ் சிந்தகீ" பாடலை ராஜா "தம்பிக்கு எந்த ஊரி"ல் உபயோகித்தார். இளையராஜா மட்டும் தன் "மன்றம் வந்த தென்றலை"யும், "விழியிலே, மணி விழி"யையும் வடக்கே கடத்தலாம், ஏ.ஆர்.ரஹ்மான் அவர் ஹிந்தி பாடல்களை இங்கே மீண்டும் உபயோகிக்கக் கூடாதோ!! மின்சார கனவின் பாடல்கள் வடக்கே சென்றன, ஹிந்தி பாடல்கள் ஸ்டாரில் இடம்பெற்றன. நாட்டில் மெட்டுகளுக்குப் பஞ்சம் போல!

"வேட்டிய மடிச்சுக்கட்டு" திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரம் சாந்தனு, கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் "சக்கரகட்டி". கலைப்புலி தாணு தன் மகன் கலாபிரபுவையும் அறிமுகப்படுத்துகிறார், இயக்குனராக. "ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து" என்று சொல்லி வெளிவந்திருக்கிறது இத்திரைப்படத்தின் இசைத்தட்டு.

டேக்ஸி டேக்ஸி…

"டேக்ஸி டேக்ஸி" என்று துவங்குகிறது முதற் பாடல். ப்ளேஸின் ராப்பிற்கு பஞ்சம் இல்லை. வழக்கம் போல இந்தப் படத்திலும் வேற்று மொழி வரிகளை உபயோகம் செய்கிறார் ரஹ்மான். இம்முறை ஃப்ரெஞ்சு. அவ்வார்த்தைகளின் பொருள் (புரிவதே அதிசயம்), "எனக்காக சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டேக்ஸியில் ஏற வேண்டும், பேரிஸில் ஏற வேண்டும்!". மற்ற குரல்கள் பென்னி தயாள், விவியன், மற்றும் ஜாவெத் அலி. நட்பைப் புகழ்கிறார் நா.முத்துகுமார். உவமைகள் குறைந்து போய், நட்பை டேக்ஸியோடு ஒப்பிடுகிறார். எத்தனை பேரால் இந்த உவமையை ரசிக்க முடியும் என்பது கவனிக்கத் தக்க ஒன்று!

மருதாணி விழியில் ஏன்…

ரஹ்மானிடமிருந்து ஒரு அற்புதமான, மிக அற்புதமான மெட்டு, "மருதாணி விழியில் ஏன்?". வார்த்தைகளை புரிந்துகொள்வதற்குள் ஒரு வழியாகி விடுவோம். "சண்டக்கோழி" மதுஸ்ரீ இன்னும் தமிழோடு சண்டை போடுகிறார். வார்த்தைகளை கடித்துத் துப்புகிறார். ஏன் ஐயா, ஆல்பத்தின் சிறந்த பாடலுக்கு இப்படி ஒரு உச்சரிப்புடையவரை தேர்வு செய்தீர்? இதே குரல் வளத்தோடு தமிழில் பாடக்கூடியவர் இல்லையென்று சொன்னால், நம்ப முடியவில்லை. கஷ்டப்பட்டு வரிகளைப் புரிந்துகொண்டால், எழுத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எட்டுத் தொகை பாடல்களில் வருவது போல, காதல் ஏக்கத்தால் தவிக்கும் ஒரு பெண் பாடும் பாடல். வாலி வாழ்க! "காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்" என்று முடியும் போது, "கார்ட்ஸ்" மாறுகிறதே – அது தான் ஏ.ஆர்.ரஹ்மான்! இசைப்புயல் தென்றலாய் வலம் வருகிறார்.

ஐ மிஸ் யூ டா…

"ஏமனே" என்பதுபோல ஏதோ உளறலோடு துவங்குகிறது, "ஐ மிஸ் யூ டா", சின்மயியின் மெல்லிய குரலில். முழுப்பாடலையும் கிசுகிசுப்பாய்ப் பாடியிருக்கிறார். நல்ல முயற்சி, நன்றாகவே உள்ளது. மிகவும் சாதாரணமான வரிகளின் இடையில் நா.முத்துகுமார் தன் கவித்துவத்தையும் ஆங்கங்கே காட்டுகிறார் – "தேகமோ எழில் ஓவியம், நீயில்லையேல் வெறும் காகிதம்!".

சின்னம்மா…

காதுகளை உறுத்தும், தேய்ந்து போன குழலிசையில் ஆரம்பிக்கிறது "சின்னம்மா" பாடல். கிராமத்திய இசையை எடுத்துக் காட்டுவதில், ஏ.ஆர்.ரஹ்மானின் முயற்சிக்கு முழு மதிப்பெண்கள். பாடலுக்கு யாராயிருந்தாலும் தாளம் போட்டே ஆக வேண்டும். பா.விஜய் ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய மெட்டிற்கு பாடல் எழுதியுள்ளார். கொஞ்சல்-கெஞ்சல்-கிளிஞ்சல்-இடைஞ்சல்-அஞ்சல்-மஞ்சள்-காய்ச்சல்-கூச்சல் என்று அடுத்தடுத்த வரிகளில் விளையாடுகிறார். பழைய ட்யூன் என்று கண்டுகொள்ள இயலாத வண்ணம் அற்புதமான வரிகளால் அலங்கரித்ததற்கு பா.விஜய்க்கு ஒரு சபாஷ் போடலாம்!! பென்னி தயாளின் குரல் இந்த பாடலில்தான் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ‘தமிழில்’ பாடுகிறார், நன்று! பெண் குரல், மீண்டும் சின்மயி! சென்ற பாட்டிற்கும் இதற்கும் குரலில் எவ்வளவு வித்தியாசம் காட்டுகிறார்! திறன்!!

ஏலே, நேரம் வந்துடுச்சு ஏலே…

அருமையான (வேறெங்கே கேட்டது போல இருந்தாலும்) கிதார் இசையுடன் தொடங்குகிறது "ஏலே, நேரம் வந்துடுச்சு ஏலே!" பாடல். பாடல் முழுவதும் ஜாஸ் கிதாருடன், வயலினையும் வயோலாவையும் கலந்து விளாசுகிறார் ரஹ்மான். "பெர்குஷன்" இல்லாது தலையாட்ட வைத்ததற்கு ஒரு சபாஷ். நா.முத்துகுமாரின் வரிகள் டைம் மெஷினில் சென்று உலக யுத்தத்தை நிறுத்தவும், கோக்கோலாவுக்கு பதில் இளநீர் பருகவும் சொல்கின்றன. ரசிக்க வைக்கும் கற்பனை. சரணங்களுக்கு நடுவில் வரும் கிதார்-கார்ட்ஸ் செய்யும் லீலைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரண்டு வரிகளில், மேற்கத்திய இசையிலிருந்து நம் இசைக்குக் குதித்து, மீண்டும் மேற்கே செல்கிறது பாடல்! க்ருஷ்ஷும், நரேஷ் ஐயரும் அற்புதமாக பாடியுள்ளார்கள். ரஹ்மானின் மிகச்சிறந்த இசையமைப்புகளில் இந்தப் பாடல் நிச்சயம் இடம்பெறும்.

நான் எப்போது பெண்ணானேன்…

கடைசிப் பாடல், "நான் எப்போது பெண்ணானேன்!". மீண்டும் பா.விஜய், ரஹ்மானின் "யே ரிஷ்தா க்யா கெஹ்லாதா ஹே!" பாடலுக்கு தமிழ் வரிகள் எழுதியுள்ளார். ஹிந்தியில் பாடிய அதே "ரீனா பரத்வாஜ்" இந்தப் பாடலையும் பாடியுள்ளார். "பாபா கிச்சுகிச்சுத்தா" ஞாபகம் உள்ளதா? மதுஸ்ரீயோடு ஒப்பிடும் போது சற்றே பரவாயில்லை, அவ்வளவுதான்.

தன் பழைய பாடல்களை மட்டும் நம்பாமல், வேறிரண்டு அற்புதமான பாடல்களையும் கொடுத்ததற்கு பாராட்டுக்கள். இருந்தாலும், புதிய மெட்டுக்கள் அமைப்பதே சினிமா இசையின் வளர்ச்சிக்கு வழி!! யாராயிருப்பினும், மன்னிப்போம், மறப்போம்!

"பாய்ஸ்" முதல் ஏ.ஆர்.ரஹ்மான் திசை மாறிச்சென்று "வேறு மாதிரி" பாடல்கள் அமைக்க ஆரம்பித்துவிட்டார். "கண்டுகொண்டேன்", "காதலர் தினம்" போன்ற இசையைத் தருவதில்லை என்று எண்ணுபவர்கள் இந்தப் பாடல்களை கண்டிப்பாக கேட்கவேண்டும். அந்த பழைய ரஹ்மான் ஆங்காங்கே சக்கரகட்டியின் பாடல்களில் சர்க்கரை போல் இனிக்கிறார். ஆங்காங்கேதான்!!

About The Author

3 Comments

  1. vasanth

    உங்கள் கருத்துக்களில் உண்மை வெளிப்படவில்லை, குறை சொல்லும் உணர்வு அங்கிங்கெனாதபடி அப்பட்டமாய் தெரிகிறது !!!

  2. ரவி

    மிக சரியான விமர்சனம். பாராட்டுக்கள்

Comments are closed.