சத்திய யாத்திரை

வேல் தைத்த புண்ணுள்ளே
வெந்தழலை வைத்தது போல்
பால் கொழித்த வங்கத்தில்
பஞ்சம்; பின் படுகொலைகள்;
கோல் ஊன்றித் தவவழியில்
கொடுமை முற்றும் போக்கிடவே
கால் நோக நடக்கின்றார்
காந்தி எனும் முதுகிழவர்

உள்ளத்துள் வலு வுண்டு;
உடலினெனில் பல முண்டோ?
மெள்ளத் தான் சொல்லுவரோ?
மென்பாதம் கனன் றிடுமோ?
வெள்ளமெனப் பொங்கு(ம்) மத
வெறியை அன்பு வென்றிடுமோ?
எள்ளித்தான் சிலர் நகைப்பர்;
என்றாலும் அவர் தெய்வம்.

புத்தனெனும் ஒரு முனிவன்
போதித்தான் அற வாழ்வை;
இத்தருணம் நம்மிடையே
எழுந்தருளி இப் புனிதன்
சத்தியச்செங் கோல் ஏந்தி
சமராடும் சோதரரின்
சித்தத்துள் சிநேகத்தைச்
சேர்த்திடவே சென் றுள்ளார்.

ரத்தத்தின் கொதிப் பேறி
ராக்கதர்கள் ஆர்ப் பரித்துக்
கத்திகளால் அன்னை உடல்
காய முறத் தாக்குகிறார்;
எத்திசையும் புயல் வீசும்;
என்றாலும் புன் முறுவல்;
உத்தமராம் இவர் அன்பு
உலகத்தின் உறு தென்பு.

(காந்திஜியின் நவகாளி யாத்திரையின் போது 1947 ஆகஸ்ட் மாதம் அர்ப்பணித்த பனுவல்)

About The Author