சம்பத்தத்தை

நினைவு தெரிந்த நாள் முதலாய் எனக்கொரு அத்தை இல்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு. "அத்தை மடி மெத்தையடி…." என்ற பாடலெல்லாம் அந்த ஏக்கத்தை அதிகப்படுத்தும். அந்தக்கால நடுத்தர பிராமண வகுப்பினரைப் பற்றிய கதைகளில் வரும் பாசமான அத்தைகள், சின்ன வயதிலேயே விதவையாகி அண்ணன் அல்லது தம்பி குடும்பத்தோடேயே இருந்து, குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்கும் அத்தைகள், லீவுக்கு அத்தை குழந்தைகளுடன் வீட்டிற்கு வருவது அல்லது அத்தை வீட்டிற்கு குழந்தைகள் ஜாலியாக செல்வது என்று எதைப் படித்தாலும் இந்த அத்தை ஏக்கம் என்னைப் பிடித்துக் கொள்ளும். (இந்த சமயத்தில் அரங்கேற்றம் சுந்தரிபாய் போன்ற வில்லங்கமான அத்தைகளை ரொம்பவும் வசதியாக நான் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன்).

எனக்கும் ஒரு அத்தை இருந்தாள். என்ன, அந்த அத்தை பிறந்து நான்கைந்து வருடங்களில் இறந்து போனாள். என் பாட்டி அந்தக் கதையை எத்தனை முறை சொன்னாலும் அலுக்காமல் சலிக்காமல் கேட்க நான் ரெடி. என் பாட்டிக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். அதில் பிழைத்திருப்பது என் அப்பாவையும் சேர்த்து 5 ஆண்பிள்ளைகள். தலைச்சன் பிள்ளை ஒரு ஆண்பிள்ளை. அதற்கு நீலகண்டன் என்று பெயர் வைத்ததாக பாட்டி சொல்லுவார். பிறந்த ஒரு சில மாதங்களில் இறந்துவிட்டது. அடுத்ததுதான் சம்பத்து என்று அழைக்கப்படும் என் ஒரே அத்தை. (பெயர் சம்பூர்ணம் என்று பாட்டி சொன்னதாக நினைவு). அதற்குப் பிறகு என் பெரியப்பா, என் அப்பா, சித்தப்பா… அதற்கும் அடுத்து ஒரு ஆண்பிள்ளை – விஜயகுமார். இந்தக் குழந்தையும் பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. அதற்குப் பிறகு என் இரண்டு சித்தப்பாக்கள். இக்கதையைக் கேட்கும்போதெல்லாம் நானும் என் அக்காவும் "நீலகண்டன் பெரியப்பா, விஜயகுமார் சித்தப்பா" என்றெல்லாம் சொல்லிக் கொள்வோம். சமீபத்தில் கூட என் அப்பா அதைக் குறிப்பிட்டு சிரித்தார். பிறந்த சில மாதங்களில் உயிரை விட்ட குழந்தைகளை பெரியப்பா, சித்தப்பா என்று உறவு முறை கொண்டாடியது வேடிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால் நான்கு வயது வரை வாழ்ந்த சம்பத்தைப் பற்றி நான் மனதில் நினைப்பது கூட சம்பத்தத்தை என்றுதான். இப்போதிருந்தால் அவளுக்கு 80 வயதிற்கு மேல் இருக்கலாம்.

சம்பத்ததையைப் பற்றி (இனிமேல் அத்தை என்றே குறிப்பிடுவேன்) பாட்டி பெருமையாகச் சொல்லியிருக்கிறார். 4 வயதுக் குழந்தையாக இருந்தாலும் அத்தைக்கு குமுட்டி அடுப்பு பற்ற வைக்கத் தெரியுமாம். பாட்டிக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்திருக்கிறாள். (4 வயதுக் குழந்தைக்கு இதெல்லாம் தெரியும் என்பது அப்போது சற்று மிகைப்படுத்தியது போல் தோன்றியது. ஆனால் இப்போது யோசிக்கையில் 12 வயதில் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைத்த அந்தக் காலத்தில், 3 அல்லது 4 வயதிலிருந்தே வீட்டு வேலைகளைப் பழக்கிக் கொடுத்திருப்பார்கள் என்பதும் சாத்தியமே…) கைக்காரியத்தில் எவ்வளவு நேர்த்தியோ அதைப்போல பேச்சும் பெரிய மனுஷத்தனமாக பேசுவாள். அத்தை ரொம்பவும் அப்பா செல்லம். பாட்டி ஏதாவது கோவித்துக் கொண்டால் தாத்தா வேலையிலிருந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக போட்டுக் கொடுப்பாள். பிடிவாதம் அதிகம். பாட்டியைவிட ராஜம்மா அக்காவிடம்தான் ஒட்டுதல் அதிகம். ராஜம்மா அக்கா என்பது பாட்டியின் ஒன்று விட்ட அக்கா – பெரியப்பா பெண். சிறு வயதிலேயே கணவனை இழந்தவர். பாட்டிக்கு ராஜம்மா அக்காதான் பக்க பலம். எல்லா பிரசவங்களின் போதும் துணையாகக் கூட இருந்தவர். அத்தை உயிரை விட்டதும் ராஜம்மா அக்கா மடியில்தான். அத்தைக்கு உடம்பு சரியில்லாமல் போவதற்கு முன்னால் கூட (வயிற்றில் கட்டி என்று நினைக்கிறேன்) பாட்டி ஏதோ அவளைக் கோவித்துக் கொள்ள "என்னை இப்படி கரிச்சுக் கொட்டறயே. இனிமே உனக்கு பொண்ணே பொறக்காது" என்று சொன்னாளாம். "அதே போல் ஆச்சுடி" என்பார் பாட்டி. ஒவ்வொரு பிரசவத்தின் போதும் "இதாவது பெண்ணாக இருக்குமா" என்று ஏங்கி ஏங்கி ஏமாந்து போனாராம். 4 வயசுப் பெண்ணை சாதாரணமாகக் கோவித்துக் கொண்டதற்கு (அவள் சாகப் போகிறாள் என்று தெரியாமல்) இப்படி ஒரு விளைவா? என்று நினைத்துக் கொள்வேன்.

பாட்டி எல்லோரிடமும் கலகலப்பாக பழகுவார். ஆளுக்கேற்றபடி, அவர்கள் வயதிற்கேற்றப்படி சுவாரஸ்யமாகப் பேசுவதில் கில்லாடி. நிறைய புத்தகம் படிப்பார். புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டார். ஒண்ணாவது வரைதான் பள்ளிப் படிப்பு என்று நினைக்கிறேன். அதற்குள் கண்ணில் ஏதோ பிரச்சினை ஏற்பட கண் ஆப்பரேஷனுக்கென திருச்சியிலிருந்து எக்மோர் கண் ஆஸ்பத்திரிக்கு வந்து போவதிலேயே பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி. ஆனாலும் பாட்டியின் அப்பா (அவர் ஸ்கூல் வாத்தியார்) படிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தெருவில் அழைத்துச் செல்லும் போது விளம்பர வாசகங்களை எழுத்துக் கூட்டி படிக்க வைத்து, படிப்படியாக பாட்டி செய்தித்தாள், வாரப்பத்திரிகை, நாவல்கள் என்று முன்னேறினார். (இந்தக் காலத்தில் விளம்பரங்களைப் பார்த்து தமிழ் கற்றுக்கொள்ள முடியுமா…? ) பொது விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அபார ஈடுபாடு. என் அப்பா ஆஃபீஸ் விஷயமாக வீட்டில் வந்து எதைச் சொன்னாலும் அம்மாவை விட பாட்டிதான் அதிக சுவாரஸ்யத்துடன் கேட்டுக் கொள்வார். அப்புறம் அதற்கு ஃபாலோ அப் வேறு கேட்டுத் தெரிந்து கொள்வார்.

எந்த நடுத்தர வயதுப் பெண்ணிடமும் கொஞ்சம் நன்றாகப் பழகியவுடனேயே "நீ என் பொண்ணு மாதிரி" என்று உருகிச் சொல்வார். நான் பலமுறை இதற்காகப் பாட்டியை கேலி செய்திருக்கிறேன்.

தாத்தா அத்தையைப் பற்றி பேசியதே இல்லை. தாத்தா எப்போதுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் இறுதி வரை அவர் தன் பெண்ணை மறக்கவில்லை. அத்தைக்கு புடலங்காய் ரொம்பப் பிடிக்குமாம். அத்தை போனதிற்குப் பின் தாத்தா 96 வயதில் சாகும் வரை புடலங்காய் சாப்பிட்டதே இல்லை. வீட்டில் புடலங்காய் கறி செய்தாலும் தாத்தாவிற்கென்று தனியாக அம்மா வேறு காய் செய்வாள். வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்யும் போது கன்யா பெண்ணிற்கென்று ஒரு இலை உண்டு. அத்தை இறந்து போன திதியன்று வருடாவருடம் ஒரு சிறு பெண்ணிற்கு கவுன் வாங்கித் தருவார். இறுதியில் சில வருஷங்கள் சேவாலயாவில் 4 அல்லது 5 வயதில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணிற்கு ட்ரெஸ் வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து வந்தார். வருடா வருடம் தீபாவளியன்று விடிகாலையில் நாங்கள் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு, புது ட்ரெஸ்சில் பட்டாசுப் பொறி பட்டுவிடக் கூடாதே என்ற கவனத்துடன் வாசலில் புஸ்வாணம், வெடி என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருப்போம். தாத்தா ஒரு கம்பி மத்தாப்பைப் பற்ற வைத்துக் கொண்டு, பூஜை அறையில் வைத்திருந்த அத்தையின் ஃபோட்டோ முன்னால் அதைக் காண்பித்து விட்டு வருவார். அது ஃப்ரேம் செய்யப்பட்ட ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம். ரொம்ப பழைய படம் என்பதால் கொஞ்சம் மங்கலாக இருக்கும். கவுன் அணிந்த ஒரு சிறு பெண் காமிராவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் படம். அத்தை பாட்டி ஜாடைதான். இப்போது அந்தப் படம் எங்கே என்று தெரியவில்லை.

அத்தையின் திதி எந்த நாளென்று தெரியாது. அதனால் நவராத்திரி சமயத்தில் நான் வருடாவருடம் அத்தைக்கு ட்ரெஸ் வாங்கித் தருகிறேன்.

பாட்டி செப்டம்பர் 2000ல் செத்துப் போனார். பாட்டியின் காரியம் எல்லாம் முடிந்த அன்று மதிய வேளையில் எல்லோரும் சுற்றி அமர்ந்து பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் சித்தி மறைந்து போன தன் அம்மாவைப் பற்றிச் சொன்னார். எப்படி அவர் அம்மா உடல்நிலை சரியாக இல்லாதபோதும், சித்தியின் முதல் பிரசவத்தின் போது ஆஸ்பத்திரியில் கூடவே இருந்து குழந்தையை இரவு கண் விழித்துப் பார்த்துக் கொண்டார் என்றும், அவர் அப்பா விடியற்காலையில் எழுந்து சுடச் சுடக் கஞ்சி போட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வருவார் என்றும் சொல்லிவிட்டு. "இதையல்லாம் நான் என் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கேன். அவாளுக்கும் தெரியணுமில்லையா தாத்தா பாட்டி என்னென்னலாம் நமக்கு செஞ்சிருக்கான்னு.." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கு பாட்டியை நினைத்து அழுகை வந்தது. சொல்லியழக்கூடப் பாட்டிக்கு பெண்ணில்லையே என்று தோன்றியது. எல்லாப் பெண்களையும் பார்த்து "நீ என் பொண்ணு மாதிரி" என்று சொன்ன பாட்டியின் ஏக்கம் புரிந்தது.

இப்போதும் பாட்டியின் நினைப்பு வரும்போதெல்லாம் அத்தையின் நினைவும் அழுகையும் சேர்ந்தே வருகிறது.

About The Author

3 Comments

  1. amnotyou

    நம் பாச உணர்வுகளை சுண்டியிழுக்கும் அருமையான கதை அல்ல கவிதை இது புவனா,
    பாட்டியின் பரிவும்,அத்தையின் பிரிவும்,
    தாத்தாவின் வெளிக்காட்ட பாசவுனர்வும் இந்த கதையில் வரும் பெண்ணின் ஏக்கமும்
    அருமையாக வெளிகொனரபத்துள்ளடு.
    எத்தனை யுகங்கள்
    கடந்தாலும் மாறாதது பாசம் மட்டுமே,
    அதைவிட புனிதமும் இல்லை,
    அதேசமயம் அதிக வழியைத் ஏற்படுத்துவதும் ஏதுமில்லை..
    உங்கள் படைப்புகள் தொடர என் நல்வாழ்த்துகள்..

  2. Ravi

    மிகவும் அருமையாக எழுதப் பட்ட கதை. இந்த காலத்திற்கு மிகவும் வேண்டியது. அன்பு, பாசம் என்கிற குடும்பப் பிணைப்புகள் எதையும் அறியாத இந்த காலத்துக் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் படிக்க வேண்டிய கதை. நன்றி புவனா.

  3. Nadeeka rooban

    உனர்ச்சி புர்வமான கதை. வால்த்துக்கல்.

Comments are closed.