சர்வம் – இசை விமர்சனம்

விஷ்ணுவர்தன் இயக்க நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ‘அறிந்தும் அறியாமலும்’. இருவரும் மீண்டும் ‘பட்டியலில்’ இணைந்தனர். அதற்குப் பிறகு இரண்டு பேருமே தத்தமது பாதைக்கு மாறினார்கள். அஜீத்தை வைத்து மாபெரும் வெற்றிப் படத்தைத் தந்தார் விஷ்ணுவர்தன். பாலாவின் "நான் கடவுள்" மூலம் நல்ல பெயர் பெற்றுவிட்டார் ஆர்யா! இச்சமயத்தில், விஷ்ணுவர்தன் – ஆர்யா மூன்றாவது முறையாக இணைகிறார்கள், ‘சர்வம்’ என்ற திரைப்படத்தின் மூலம். த்ரிஷா படத்தின் கதாநாயகி. ராம்கோபால்வர்மாவின் செல்லப்பிள்ளை ஜே.டி.சக்ரவர்த்தி வில்லனாக நடிப்பதாகப் பேச்சு! படம் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காதலர் தினத்தன்று திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. விஷ்ணுவர்தன் இயக்குகின்றார் என்றால், யுவன்தானே இசை! எல்லாப் பாடல்களையும் பா.விஜய் எழுதியிருக்கிறார்.

அடடா.. வா அசத்தலாம்!

தன் மகனின் இசையென்றால் மட்டும் இளையராஜா இது போன்ற பாடல்களை எல்லாம் பாடுகின்றாரே! விஷ்ணுவர்தனும் கொண்டாட்டமாகவே இருந்திருக்கக் கூடும். ‘நம்ம காட்டுல மழை பெய்யுது’ என்று பட்டியல் திரைப்படத்தின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கொஞ்சம் வேதாந்தம் கலந்து ஜாலியாக பாட்டை எழுதியிருக்கிறார் கவிஞர். ஒரு வரி தமிழிலும் ஒரு வரி ஆங்கிலத்திலும் (நிறைய இடங்களில் வெறும் மொழிபெயர்ப்பு!) மாறி மாறி வருகிறது. டெக்னோவையும் புல்லாங்குழலையும் கலந்து தந்திருக்கின்றார் யுவன். சபாஷ்!
நீதானே

"சில இரவுகள்தான்" என்று யுவன் குரலில் காதல் ஏக்கத்துடன் ஆரம்பிக்கின்றது இந்த பாடல். என்ன ஆச்சரியம்! அநேக இடங்களில் யுவனின் உச்சரிப்பு சரியாக உள்ளது! அந்த "நரம்புக்குல்லே"வையும் திருத்திக் கொண்டிருக்கலாம்! முயற்சி செய்கிறார், சீக்கிரம் தேறி விடுவார். பாடலின் மற்ற அம்சங்களெல்லாம் நன்றாகவே உள்ளன. அற்புதமான பாவம்! காதல் வரிகள் எழுத பா.விஜய்க்கு கற்றுத் தரவா வேண்டும்? வார்த்தைகள் புரியும்படி இசையமைத்ததற்கும் பாராட்டுக்கள். ஆங்காங்கே வரும் பெண் குரலும், செகண்ட்ஸும் பாடலுக்கு மெருகு சேர்க்கின்றன. பாட்டின் பீட்ஸ் எத்தனையோ பழைய பாடல்களை நினைவூட்டினாலும்.. பரவாயில்லை, பொறுத்தருள்வோம்!

சுட்டா சூரியனை

நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் பாடல். விஜய் ஏசுதாசின் குரலில் வயதுக்கேற்ற முதிர்ச்சியில்லையோவென்று அவ்வப்பொழுது தோன்றும்! ஆனால் இந்தப் பாடலில் கனகச்சிதப் பொருத்தம்! பீட்ஸை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் யுவன். நடுவே ராஜா – ஏசுதாஸின் பழைய "மேகம் கருக்குது" பாடலின் ஒரு வரியையும் அழகாய் சேர்த்திருக்கிறார். அந்த மெட்டுதான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேஷனோ என்று யோசிக்கக் கூட தோன்றுகிறது! ஆம், இன்ஸ்பிரேஷன்தான், நகல் இல்லை!

காற்றுக்குல்லே

ஐயகோ! தெரியாத்தனமாக யுவனின் உச்சரிப்பு பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன், மன்னிக்க வேண்டும்! இன்னும் நிறைய நிறைய பயிற்சி தேவை. இளையராஜாவின் மகன் இப்படி பாடுகின்றார் என்று நினைத்துப் பார்த்தால், கொஞ்சம் வலிக்கின்றது. பாட்டு என்னவோ பரவாயில்லை. நல்ல மெலடி, வருடும் வயலின் இசை. பாடல் முழுவதும் மழைத்துளி சொட்டுவது அழகாய்க் கேட்கின்றது! சவுண்ட் இன்ஜினியர்கள் வேலை என்று சொல்லி விடாதீர்கள்.

சிறகுகள்

குசாரிஷ் "ஜாவேத் அலி"யும், சண்டக்கோழி "மதுஸ்ரீ"யும் சேர்ந்து தமிழில் (தமிழா அது என்று கேட்கத் தோன்றுகிறது!) பாடுகின்றார்கள். பாடல் மெட்டெல்லாம் நன்றாகவே உள்ளது. இசைத் தட்டின் ஒரே காதல் டூயட். மொத்தத்தில் பரவாயில்லை.

ரீமிக்ஸ் செய்வதையெல்லாம் நிறுத்தி விட்டு, சொந்தமான பாடல்களை யுவன் தந்திருக்கின்றார். இன்னும் முக்கியமாக, எல்லா பாடல்களும் கேட்கும்படியாகவே உள்ளன.

"காதல்" என்றொரு கான்ஸெப்ட்டே இல்லாமல் ‘பில்லா’ படத்தை எடுத்திருந்தார் விஷ்ணுவர்தன். பழைய பில்லாவில் இருந்த ரொமான்ஸையும் நீக்கியிருந்தார். நம் ஊரில் இது போலெல்லாம் செய்ய தைரியம் வேண்டும். மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். "சர்வம்" திரைப்படத்தில் என்ன எக்ஸ்பெரிமண்ட் செய்யப்போகிறாரோ? புது முயற்சிகளை வரவேற்போம்!”

About The Author