சிங்கம் சிங்கிளாதான் வருமா?

மூன்று ஆண்கள். சிறுசுகளும் பெண்களுமாக 12.

சாதாரணமாக ஒரு கூட்டத்தில் நாம் காணக்கூடிய தொகை இதுவாகத்தான் இருக்கும். அது எந்தக் கூட்டம் என்று நினைக்கின்றீர்கள்? ஒரு சிங்கக் கூட்டத்தில்தான் ஆணும், பெண்ணும் குட்டிகளுமாக இத்தனை இருக்கும். பெண் சிங்கக்குட்டிகள் வளர்ந்தாலும் கூட்டத்தை விட்டுப் பிரிவதில்லை. ஆனால் ஆண் சிங்கக் குட்டிகள், வளர்ந்ததும் தம் கூட்டத்தை விட்டுப் பிரிந்து இன்னொரு கூட்டத்தோடு இணைந்து கொள்வதோடு, நாளடைவில் அந்தக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதுண்டு.

தமக்குரிய வேலைகளை அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்து, இணைந்து செயற்படுகின்ற தனித்துவமான தன்மை கொண்டவை சிங்கங்கள். சராசரியாக, 15 வரையில் காணப்படுகின்ற ஒவ்வொரு சிங்கக் கூட்டத்தினுடைய செயற்பாடுகளும் தனித்துவமானவை.

பொதுவாக, ஒரு பெண் சிங்கம் 3 குட்டிகள் வரையில் ஈனுவதுண்டு. ஒரு குட்டியின் எடை சராசரி 3 இறாத்தலாக இருக்கும். சில தாய்ச் சிங்கங்கள் மிகக் கவனமாகக் குட்டிகளுக்கு உணவளித்துப் பராமரிக்கும். சில, உணவுப் பற்றாக்குறையால் தம் குட்டிகளை அனாதரவாக விட்டுவிட்டுச் சென்றுவிடுவதுமுண்டு. பொதுவாக, கூட்டத்தின் இரண்டு பெண் சிங்கங்கள் ஒரே நேரத்தில் குட்டிகளை ஈனும். எல்லாமே ஒன்றாக வளர்க்கப்படுவதுண்டு. தன் குட்டிகளைப் போல், மற்றைய குட்டிகளுக்கும் தாய்ச் சிங்கங்கள் பாலூட்டும். அதே போல, வேறு எங்காவது அனாதரவாக விடப்பட்ட குட்டிகளைக் கண்டாலும் அவற்றிற்குப் பாலூட்டுவது ஒரு சிங்கத்தின் சிறப்பான குணாம்சம்!

மனிதர்கள் சிங்கங்களிடமிருந்து நிறையப் படிக்கலாம் போலிருக்கின்றது. அனைத்துப் பிள்ளைகளுமே எங்கள் பிள்ளைகள் என்ற மனோபாவம் மனித சமுதாயத்தில் இருக்குமானால், உலகமே சொர்க்கமாகி விடும்.

அதே நேரம், இங்கே இன்னொரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். வேறொரு கூட்டத்திலிருந்து, பெண் சிங்கமொன்று தன் குட்டிகளையும், ஆணையும் இழந்து புதிய கூட்டத்தில் வந்து இணைவதுண்டு. இப்படியான தருணங்களில், கூட்டத்தின் ஆண் சிங்கம் தன் கூட்டத்துக் குட்டிகளையெல்லாம் கொன்று விடும். கொடுமை இல்லையா?

நாம் நமது வீடுகளுக்கு வேலி அடைத்தோ, வசதி கிடைத்தால் மதிலைக் கட்டியோ எல்லைகளைப் பிரித்துக் கொள்வதுபோலச் சிங்கங்களும் தமது எல்லைகளை நிர்ணயித்துக் கொள்கின்றன. இந்த வேலையை ஆண் சிங்கந்தான் செய்கின்றது. ஏறத்தாழ 259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள காட்டு நிலத்தை ஒரு சிங்கம் தன் கூட்டத்திற்காக எடுத்துக் கொள்ளும். எந்த உறுதியும் எழுதப்படாமல், எந்தச் சட்டத்தரணியும் கையொப்பம் இடாமல், காட்டுச் சட்டத்தில் ஒரு மிருகம் உரிமை கொண்டாடும் காணியின் அளவு இது. தனது எல்லையில் சிறுநீர் கழிக்கும் சிங்கம், அச்சுறுத்தும் வகையில் ஒரு முழக்கத்தையும் எழுப்பி, "இது என் காணி எல்லை. அத்துமீறி நுழைபவர்கள் எச்சரிக்கை" என்ற அறிவிப்பையும் காற்றில் மிதக்க விடுகின்றது.

ஒரு சிங்கம் எவ்வளவு காலம் வாழுமென்று நினைக்கின்றீர்கள்? பிறந்த ஐந்தாவது, ஆறாவது ஆண்டுகளில் முழு வளர்ச்சியைக் கண்டுவிடும் சிங்கங்கள், 13 ஆண்டுகள்தான் வாழ்கின்றன. அடைத்து வைத்தால் இவை 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றனவாம். சிங்கங்கள் இரண்டு வயதை அடையும்போது வேட்டையாடத் தொடங்கி விடுகின்றன. தன் குடும்பத்திற்குக் காணி தேடும் பொறுப்பை ஆண் சிங்கம் எடுக்க, வேட்டையாடும் பொறுப்பைப் பெண் சிங்கமே சுமக்கின்றது.

ஆனால் ஒரு குழுவாகவே இவை தமது வேட்டையை நடாத்துகின்றன. இதனால் மிகப் பெரிய காட்டெருமைகள், நீர் யானைகள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றவற்றையும் பிடித்து உண்ண முடிகின்றது. பெரிய விலங்குகளில் நன்கு வளர்ந்தவற்றை வேட்டையாடுவதைச் சிங்கங்கள் தவிர்க்கின்றன. வீணாகக் காயப்படுவதைத் தவிர்க்கவே இந்த முன் எச்சரிக்கை! வரிக்குதிரைகள், மான்கள் போன்றன சிங்கங்களை விட வேகமாக ஓடக்கூடியவை என்பதால் இந்தக் குழு வேட்டை முறை பெரிதும் கைகொடுக்கின்றது. ஒரு வயதை எட்டும்வரை குட்டிகள் வேட்டைகளில் கலந்து கொள்வதில்லை. சூழ்நிலை அழுத்தத்தால், சிங்கம் தனியாக வேட்டையாடுவதும் உண்டு. சில சமயங்களில், வேறு விலங்குகள் கொன்ற உயிரினங்களைத் திருடி உண்ணவும் சிங்கங்கள் தயங்குவதில்லை. சிங்கங்களுக்குத் தேவையான உணவின் 50 விழுக்காடு இப்படித் திருடப்படும் உணவிலிருந்துதான் கிடைக்கின்றது என்பது வியப்புக்குரிய தகவல்!

முன்னரே கூறியதுபோல, ஏறத்தாழ வேட்டையின் முழுப் பணியையும் பெண் சிங்கங்களே முன்னெடுத்துச் சென்றாலும், இவற்றின் வேட்டை முறை தனித்துவமானது. மடக்கிப் பிடிக்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்துவிட்டு, இரையை அந்த இலக்கை நோக்கிச் சிங்கங்கள் விரட்டுகின்றன. பின்பு குழுவாக இணைந்து இரையைத் தாக்கி வீழ்த்தி விடுகின்றன. மெதுவாகப் பதுங்கிச் சென்று, இரைக்கு 30 மீட்டர் தூரத்தை அண்மித்ததும் படுவேகமாக ஓடத்தொடங்குகின்றன. வெவ்வேறு திக்குகளில், ஒரே குழுவின் வெவ்வேறு சிங்கங்கள் இரையை வட்டமிடுகின்றன. எந்த இரை மிக நெருக்கமாக இருக்கின்றதோ அதைக் குறிவைத்து எல்லாமே ஓடிச் சென்று தாக்குகின்றன. இவற்றுக்கு வெகு கூரான பற்கள் இருப்பதால், இரையைக் கழுத்தில் கௌவி, மூச்சுத் திணற வைத்துக் கொன்றுவிடுகின்றன.

ஆனால், எப்போதாவது ஒருமுறை அரிதாக வேட்டைக்குச் செல்லும் ஆண் சிங்கம் தனியாகத்தான் செல்லும் என்பது குறிப்பிட வேண்டியது. ஆக, சிங்கம் சிங்கிளாதான் வரும் என்ற சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் சரிதான்!

நன்கு வளர்ந்த ஒரு பெண் சிங்கத்திற்கு நாள்தோறும் சராசரியாக 5 கிலோ மாமிசம் உணவாகத் தேவைப்படுகின்றது. ஆணின் தேவையோ 7 கிலோ.

பிடித்த இரையை வயதுக்கேற்றபடிப் பகிர்ந்து உண்ணுகின்றன; குட்டிகளுக்குக் கடைசி இடந்தான். பிடித்த இரை சிங்கக் குடும்பத்திற்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என்பது சோகமான விடயம். தன் குட்டிகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, தனக்கு முறையாக உணவு கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பது பெண் சிங்கம். தேவைப்பட்டால் உணவுக்காகத் தன் குட்டிகளையும் அது கொல்லத் தயங்காது என்பது அதிர்ச்சியான தகவல்! இந்த இடத்தில் எங்கள் அம்மாக்கள் அதி உயர்ந்தவர்கள்தான்!

ஆப்பிரிக்க யானை, ஆசிய யானை என்பதுபோல ஆசியச் சிங்கம், ஆப்பிரிக்கச் சிங்கம் என்றுதான் சிங்கங்களையும் வகைப்படுத்துகின்றார்கள். ஆசியக் காடுகளில், இன்றைய நிலையில் ஏறத்தாழ 200 சிங்கங்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்பது கவலை தரும் விடயம்! ஒரு காலத்தில் மத்தியக் கிழக்கு நாடுகளில் காணப்பட்ட சிங்கங்கள்தான் இப்பொழுது இந்தியக் காட்டைத் தஞ்சம் அடைந்திருக்கின்றன. இங்கு தேக்குக் காட்டை ஒரு வனவிலங்குப் பகுதியாக்கிச் சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஆப்பிரிக்கக் காடுகளிலும் சிங்கங்கள் உலாவருகின்றன. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களுக்கு அடுத்ததாக மிக அதிக அளவில் காணப்பட்ட பாலூட்டி சிங்கமாக இருந்திருக்கின்றது. அதிகமானவை ஆப்பிரிக்கக் கண்டத்திலும், பரவலாக மேற்கு ஐரோப்பா, இந்தியா, அமெரிக்கா என்று காணப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தச் சிங்கங்கள் பெருமளவு அழிவைக் கண்டுவிட்டன.

வரிப்புலிக்கு அடுத்ததாக, ஏறத்தாழ 250 கிலோ எடைகொண்ட சிங்கந்தான் பூனைக்குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய உறுப்பினர். ஆண், பெண் இரண்டுமே பலமாக முழங்கும். இந்த ஒலி 8 கி.மீற்றர் தொலைவிற்கு அப்பாலும் கேட்கும் என்பது ஒரு முக்கியத் தகவல்! அன்றாடம் தவறாமல் நீர் அருந்தும் பழக்கம் உடையவை சிங்கங்கள். என்றாலும் நான்கு நாட்களுக்கு நீரே அருந்தாமல் தாக்குப் பிடிக்கும் உடல் சக்தியும் இவற்றுக்கு உண்டு. பிடித்துண்ணும் இரையின் உடலில் உள்ள ஈரத் தன்மை இவற்றின் உடலை வறண்டுவிடாமல் பாதுகாக்க உதவுகின்றது என்கிறார்கள்.

நமக்குத் தெரிந்த சிங்கத்தின் தெரியாத விடயங்கள் இப்படி நீள்கின்றன. இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை ஆச்சரியங்கள்!!!

About The Author