சிங்கம் 2 – இசை விமர்சனம்

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டு்ம் சூரியா, ஹரி மற்றும் தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் வெளிவரவிருக்கும் திரைப்படம் சிங்கம்-2. கடந்த சில வாரங்களுக்கு முன்னரே வெளிவந்த இப்படத்தின் பாடல்களைப் பற்றிப் பார்ப்போம். பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார் விவேகா.

வாலே வாலே

சூர்யாவின் அறிமுகப் பாடலாக இருக்கக்கூடுமெனத் தெரிகிறது.நரம்பிசைக் கருவிகளுடன் ஆரம்பித்து பின்னர் லோக்கல் குத்து மெட்டிற்கு மாறுகிறது. சங்கர் மஹாதேவனின் உயர் குரலில் பாடும் திறன் பாடலுக்கு பெரும் பலம். சூர்யாவிற்கு நடனம் ஆடவும் நிறைய வாய்ப்புகள் பின் பாதியில் கிடைக்கிறது.

"சாதின்னு சாமின்னு சண்டை போட்ட
சாதிக்கும் ஆசைய காற்றில் விட்ட" – சுளீர் வரிகள்!!

புரியவில்லை

மெலிதாகத் துவங்கி மேற்கத்தியசாயலில் பாடல் களைகட்ட ஆரம்பிக்கிறது. இதை ஸ்வேதா மேனன் பாடியிருக்கிறார். பாடும்போது குரலில் மகிழ்ச்சி அழகாக வெளிப்படுகிறது. சற்றே கர்நாட்டிக் தழுவிய இடையிசை என பாடல் மெலிதாக ஈர்க்கிறது.

"தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகமில்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை " – புரியாத வரிகள்!!

அச்சமில்லை அச்சமில்லை

சற்றே ஏறி இறங்கும் பீட்டுகள், அதற்கு ஏற்றவாறு குரலில் மாற்றத்துடன் பாடியிருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். அநேகமாக படத்தின் பின்புலத்தில் இதில் வரும் கோரஸ் குரல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் மட்டும்தான் பாரதியாரின் வரிகள். மற்றவை அனைத்தும் சூரியாவின் கதாபாத்திரமான துரைசிங்கத்தைப் பற்றி விவரிக்கிறது.

"காவல் காக்கும் வேளை
கணக்குப் போடும் மூளை
காத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்" – காவலர் வரிகள்

விதை போலவே

துரைசிங்கத்திற்கு மீண்டும்ஓர் எழுச்சிப் பாடல். பாடியிருப்பவர் ஹரிஹரண். இதுவும் நாயகனின் புகழ் பாடும் பாடல்தான், நாயகன் ஏதாவது முக்கிய முடிவெடுக்கும் தருணத்தில்ல் இப்பாடல் இடம் பெற்றிருக்கக்கூடும். வயலின் பாடலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

"தனியாக இருந்தாலும் படைதான் இவன்
தரணியைப் பிளக்கின்ற எடைதான் இவன்
புலனைந்தும் தெளிவாக இருக்கின்றவன்
புறம் நான்கும் எளிதாக வளைக்கின்றவன்" – புகழ் பாடும் வரிகள்!

கண்ணுக்குள்ளே

ஆட்டம் போட வைக்கும் குத்துப் பாடல். ஜாவேத் அலி மற்றும் பிரியா ஹிமேஷ் பாடியிருக்கிறார்கள். இதை கேட்கும்போது ஏனோ முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த "காதல் வந்தாலே" பாடலின் காட்சிகள் தோன்றி மறைகின்றன.

சிங்கம் டான்ஸ்

இசை அமைப்பாளருக்கே உரிய தனித்துவமான பாணியில் பீட்டுகள் அதிர, பாடல்களை பாபா ஷேகல் மற்றும் ஷர்மிளா பாடியிருக்கிறார்கள். ஆட்டம் போடத் தூண்டினாலும் அதை இறுதிவரை தக்க வைத்துக் கொள்ள பாடல் தவறி விட்டது. ஒருவேளை காட்சியாக நம்மைக் கட்டிப்போடலாம்.

சிங்கத்தை இங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் முன்னதை விட ஈர்ப்பு குறைவே. ஆனால் படத்தின் முன்னோட்டம் கவனிக்க வைக்கிறது. பாடல்கள் காட்சிகள் வடிவில் நம்மைக் கவர வாய்ப்பிருக்கிறது.

சிங்கம் 2 – பெரும் ஈர்ப்பு இல்லாத தேவிஸ்ரீபிரசாத்தின் இசை.

About The Author