சிங் இஸ் கிங்

(மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கற்பனை நிகழ்வின் தழுவல்)

அது ஒரு வெள்ளிக்கிழமை, மாலை நேரம்.

டெல்லியின் சர்தார் தெருவில் வார விடுமுறைக்கு எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பெயருக்கு ஒன்றிரண்டு சீக்கியர்கள் இருந்தனர். அதில் சரண்சிங்கும் ஒருவர். வெள்ளி மாலையை மசாலா கலந்த தந்தூரி சிக்கனுடன் கொண்டாடுவது அவரது வழக்கம். அன்றும் வழக்கம் போல் தன் சமையலை ஆரம்பித்தார். மசாலா வாசம் மூக்கைத் துளைத்தது.

திடீரென, படபடவென்று சிங்கின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. சிக்கனை பங்கு போட நண்பர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என நினைத்தவாறே கதவைத் திறக்க, அங்கே கிறிஸ்தவ பாதிரியார் நின்றிருந்தார்.

அவரை வரவேற்று விஷயம் என்னவென்று கேட்டார் சிங்.

சற்றே தயக்கத்துடன் பாதிரியார் சொல்ல ஆரம்பித்தார்,"கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமை சிக்கன் உண்ணக் கூடாது. உங்கள் தந்தூரி வாசம் எங்களை சிக்கன் பற்றி எண்ண வைக்கிறது"

ஏதோ உளறுகிறார் என நினைத்த சிங்கை, விதவிதமான கதைகள், பிரசங்கங்களைக் கூறி கிறிஸ்தவராக மாற கட்டாயப்படுத்தினார் பாதிரியார். சிக்கனை நினைத்தபடியே எல்லாவற்றுக்கும் ‘சரி’ என தலையாட்டிக் கொண்டிருந்த சிங், அதற்கும் தலையாட்டி விட்டார்.

உடனே புனித நீரை எடுத்த பாதர், "சீக்கியராக பிறந்து, சீக்கியராக வளர்ந்த நீங்கள், தேவலாயப் புனித நீர் உங்கள் மீது தெளிக்கப்படுவதன் மூலம் கிறிஸ்தவராகிறீர்கள்" எனக் கூறி நீரைத் தெளித்துவிட்டு கிளம்பினார்.

ரொம்ப நாட்களாய் சிங்கின் தந்தூரியை நினைத்துக் கொண்டு ஜெபம் சொல்லிக் கொண்டு இருந்த கிறிஸ்தவர்கள், இனி நிம்மதியாய் தேவனை ஆராதிக்கலாம் என நிம்மதிக் கொண்டனர்.

அடுத்த வெள்ளி மாலை.

மீண்டும் சிங்கின் தந்தூரி வாசம். கோபமடைந்த கிறிஸ்தவர்கள், பாதிரியாருடன் சிங்கின் வீட்டிற்கு வந்தனர்.

"கத்தோலிக்கராக மாறிவிட்ட நீங்கள், இன்று சிக்கன் சாப்பிடக் கூடாதல்லவா? ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என பாதிரியார் கேட்க, வந்திருந்த அனைவரையும் அமைதியாய் ஒரு முறை பார்த்த சரண் சிங், பாதிரியாரின் கையிலிருந்த புனித நீரை சிக்கன் மீது தெளித்து,"சிக்கனாகப் பிறந்து, சிக்கனாக வளர்ந்த இந்த ஆன்மா, தேவனின் புனித நீர் தெளிக்கப்படுவதன் மூலம் தக்காளியாகவும், உருளைக் கிழங்காகவும் மாற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சிக்கனைக் கையிலெடுத்து சுவைக்கத் தொடங்கினார்.

About The Author

5 Comments

  1. kavitha

    எல்லாம் பெரியவங்க உங்களோட ஆசிர்வாதத்தாலதான்.
    அப்பாடா! குழுவில நாமதான் கடைக்குட்டின்னு காட்டியாச்சு.
    🙂

  2. R.V.Raji

    ராஜிக்குளேயே பிறந்து, ராஜிக்குள்ளேயே வளர்ந்த இந்த ஆன்மா,
    “கடைக்குட்டி”யின் புனித(நகைச்சுவை) நீர் தெளிக்கப்படுவதன் மூலம் உற்சாகமாகவும், புதுணர்ச்சியாகவும் மாற்றப்படுகிறது”

  3. V.M.KRISHNAN

    பரவால்ல. வித்யாசமான சிங்(கம்). அது (புனிதநீர்) எனக்கும் ஒரு அண்டா கிடைக்குமா? நிறைய விஷயத்துக்கு use ஆகும்

Comments are closed.