சித்திர சபை

ஒரு நடனக் கச்சேரிக்குப் போயிருந்தேன். அதில் ஒரு நடனமணி “வஞ்சி வந்தனளே மலைக்குறவஞ்சி வந்தனளே” என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்தாள். அவள் பிடித்த அபிநயத்தில் திருக்குற்றாலநாதர் வந்த காரணமும் தெரியப்படுத்தினாள்.

நானும் பல தடவைகள் அங்கு போயிருக்கிறேன். ஆதிகாலத்தில் திருக்குற்றாலநாதர் கோயில் ஒரு பெருமாள் கோயிலாக இருந்தது. அப்பொழுது, ஒரு சமயம் அகத்திய முனிவர் இந்தத் திருக்கோயிலுக்கு வந்தார். பார்க்க சிவப்பழமாக நெற்றி முழுவதும் விபூதி அலங்கரிக்க சிவனடியாராக அவர் உள்ளே நுழைய, அவரை வைணவர்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். ‘இனி என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தபடி அவர் வெளியே வந்தார். பின், ஒரு வைணவரைப் போல் கழுத்தில் துளசிமாலை அணிந்து, நெற்றியில் திருமண் தரித்துத் திரும்பவும் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது உள்ளே இருந்த அர்ச்சகர்கள் ஓடி வந்து அவரை வரவேற்று அவரையே பூஜை செய்ய அனுமதியும் தந்தனர்.

"அட கோவிந்தா! நான் பூஜைக்குத் தேவையான பொருள் ஒன்றும் எடுத்து வரவில்லையே! தயவு செய்து நீங்கள் எனக்கு வாங்கி வரவேண்டும்" என்றார் அகத்தியர். பூசாரியும் சரி என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினார். இதுதான் தக்க சமயம் என்று அகஸ்தியர் கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார். அங்கு நின்ற கோலத்தில் இருந்த பெருமாளைப் பார்த்தார். தன் கையிலிருந்த சில மூலிகைகளைக் கசக்கினார். பெருமாளைப் பார்த்து "குறுகுக! குறுகுக!" என்று கூறியபடியே மூலிகைகளைக் கசக்கி அவர் தலைமேல் பிழிந்தார். பின், தன் கட்டைவிரலால் அழுத்தினார். பெருமாள் குறுகிச் சிவலிங்கமாக ஆனார். இப்படி, அகஸ்தியர் அழுத்தியதால் ஏற்பட்ட வடுவைச் சிவலிங்கத்தின் மேல் இன்றும் காணமுடிகிறது.

பெருமாளின் தலையை அழுத்தி உருவாக்கிய திருமேனி என்பதால் சிவலிங்கத்திற்குத் தலைவலி வருமோ என பயந்து அவரது சிரசில் மூலிகைச்சாற்றினால் அபிஷேகம் செய்து பூஜை செய்கிறார்கள். பின், இந்தத் தைலத்தைப் பிரசாதமாகத் தருகிறார்கள். இறைவன் மேனி இங்கு குறுகிப்போனதால் ‘திருக்குற்றால நாதர்’ என்ற பெயரில் அருள்புரிகிறார் என்பது வரலாறு. பஞ்ச சபைகளில் இது ‘சித்திர சபை’யாகப் போற்றப்படுகிறது.

திரிகூடமலை, ஞானபுரி, வேடன் வலம் வந்த ஊர், தேவகூடபுரம் என்று இந்த இடத்திற்குப் பல பெயர்கள் உண்டு.

இக்கோயிலில் அருள் புரியும் குற்றாலநாதரின் இடப்புறத்தில் அம்பாள் ஞான சக்தியாக அருள்புரிகிறாள் சக்தி பீடமே சக்தியாக இங்கு விளங்குவது மிகவும் விசேஷம்தான்!

இந்தக் கோயில் மஹாபாரதத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அர்ச்சுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் பெறக் கடுந்தவம் இயற்றினான். இதனால் அவன் வெற்றி பெற்று விடுவானோ என்று பயந்து அதைக் கலைக்க மூகன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பி வைத்தான். அர்ச்சுனன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனது தவம் கலையாமல் இருக்க ஒரு வேடன் போல் வந்து மூகனை அழித்தார். ஆனாலும், தவம் கலையவே, வேடனைப் பார்த்த அருச்சுனன் தன் தவம் கலைந்தது குறித்து வேடனுடன் வாதிட்டான். பாதியில் வேடன் மறைந்து விடவே, வந்தது பரமேஸ்வரனே என்பதை உணர்ந்தான். மீண்டும் இறைவனைக் காணத் துடித்தான். இறைவனுக்குப் பூஜை செய்வதற்காகத் தான் கொண்டு வந்திருந்த பெட்டியை எடுக்கச் சென்றால், அங்கு அதைக் காணவில்லை.

‘இது என்ன? பூஜைப் பெட்டியைக் காணவில்லையே! இது என்ன அபசகுனம்? இனி இந்த உயிர் இருந்து என்ன பிரயோசனம்’ என்றெண்ணி உயிரை விடத் துணிந்தான்.

அதற்கு மேலும் அவனைச் சோதிக்க மனமில்லாத சிவபெருமான் "அருச்சுனா! உன் சிவபக்திக்கு மெச்சினேன். நீ நேரே திரிகூடமலை செல்! அங்கு பூஜைப்பெட்டியைப் பெறுவாய்!" என்று கூறி, பாசுபதத்தையும் அளித்து ஆசி வழங்கினார்.

இது நடந்த நாள் பங்குனி உத்திரம் ஆகையால் இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கிறது. இங்கிருக்கும் பீடம் மிக சக்தி வாய்ந்தது. இதைக் கையால் தொழுதாலே சகல பாபங்களும் விலகும்.

தென்காசி தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ சென்றால் இந்த இடத்தை அடையலாம். இங்கு நிறையக் குறவர் குடும்பங்களைக் காணலாம். பலவித மணிகள், ஊசிகள், பாசிமணி என்று நம்மை விடாமல் துரத்தி வியாபாரம் செய்துவிடுவார்கள்.

திருநெல்வேலி வரை செல்பவர்கள். திருக்குற்றாலநாதரையும் கண்ணாரக் கண்டு அவரது ஆசி பெற்று வாருங்கள்!

About The Author