சின்ன அணுகுண்டு ஒண்ணு

மதிய சாப்பாட்டுக்காக டைனிங் டேபிளில் நான் உட்கார்ந்த போது, ஒரு நாற்காலி காலி.
அரை டிக்கட்டுக்கான நாற்காலி.
ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான் லஞ்ச் டைமில் இவள், நான் மற்றும் நம்ம அரை டிக்கட் அடங்கின குடும்பம் ஒன்று சேர்ந்து உணவு கொள்ள முடியும்.

வழக்கமாய் மட்டன் பிரியாணி இருக்கும். அல்லது குறைந்த பட்சம் வஞ்சிர மீன் குழம்பும் பொரியலும். இன்றைக்கு மட்டன் பிரியாணியோடு ஸைடு அட்ராக்ஷனாய்ச் சிக்கன் ஃப்ரையும் இருந்தது. தின்பதற்குத் தான் ஆள் பற்றாக்குறை.

“தொரைக்கிப் பசியில்லியாமா?” என்று இவளிடம் கேட்டேன்.
“அவனுக்கு சாப்பாடு வேண்டாமாம்” என்றாள், என் பக்கம் முகத்தைத் திருப்பாமலேயே.
“வேறே என்ன வேணுமாம்?”
“பட்டாசு வேணுமாம்.”
“பட்டாசத் திங்கப் போறானாமா?”
“பட்டாசத் திம்பானாக்கும்? வேங்கிக் குடுத்தீங்கன்னா தெருவுல மத்தப் பசங்களோட சேந்து சந்தோஷமா பட்டாசு கொளுத்துவான். சந்தோஷமா சாப்புடவும் செய்வான். வேங்கியே தரமாட்டேண்டு பிடிவாதம் புடிக்கீகளே எதுக்கு? என்ன, ஒரு ஐநூறு ரூவா ஆயிருமா!”

எல்லா சராசரித் தாயையும் போலப் பிள்ளைக்குப் பரிந்து கொண்டு வந்தாள். சராசரிக்கு மேம்பட்ட தகப்பன் நான் என்கிற உன்னதமான விஷயமெல்லாம் இவளுடைய பெண்புத்திக்கு எட்டாது.

“இந்தா, ஐநூறு ரூவாய்க்கி பயந்துக்கிட்டா அவனுக்கு நா பட்டாசு வேங்கித்தர மாட்டேங்கேன்? சும்மா ஔராத. அவனக் கூப்புடு, நா புத்திமதி சொல்றேன். சொன்னாக் கேட்டுக்குவான். கூப்புடு.”

“நா கூப்ட்டுப் பாத்தாச்சு. நீங்கதான் கூப்புடுங்க.”

நான் குரல் கொடுத்தேன். நாலைந்து தடவை குரல் கொடுத்த பின்னால் மேற்கொண்டு முரண்டு பிடிக்க இயலாமல், ஸ்லோ மோஷனில் நடந்து வந்து நாற்காலி விளிம்பில் உட்கார்ந்தான், முகத்தை இறுக்கிக் கொண்டு.

அவனுக்கு முன்னாலிருந்த ப்ளேட்டில் இவள் பரிமாறப் போனபோது அதை ஆட்சேபித்தான்.
“எனக்கு வேண்டாம்.”

“அம்மா ஊட்டி விட்டா சாப்புடுவியா” என்று இவள் கேட்டதற்கும் அவன் இடவலமாய்த் தலையாட்டி மறுப்புத் தெரிவித்தது என்னுடைய பொறுமையை உரசிப் பார்த்தது.

“வாப்பா ரெண்டு போட்டா சாப்புடுவான்” என்று நான் குரலில் கடுமையை வெளிப்படுத்தியது அவனை மேலும் காயப்படுத்த, சட்டென்று தலை நிமிர்ந்து, கண்ணீர் முட்ட என்னைப் பார்த்தான்.

இந்த எட்டு வருஷத்தில் ஒரு தடவைக்கூட மகனைக் கை நீட்டியறியாதவன், அராஜகமான அந்த வாக்கியத்தை அவன் மேல் பிரயோகித்திருக்கக் கூடாது என்று நான் உணர்ந்தபோது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மகனுக்கு ஆதரவாய் இவள் குரல் கொடுத்தாள்.

“ஆமா, சும்மாவே அவன் உம்ம்ன்னு இருக்கான். நீங்க வேற ரெண்டு போடறேன் நண்டு போடறேண்டு பயங்காட்டுங்க, நல்லா சாப்புடுவான். புள்ள ஆசையாக் கேக்கறானேண்டு வேங்கிக் குடுத்துட்டாத்தான் என்ன, நீ சாப்புடு ராஜா, சாச்சாட்ட சொல்லி பட்டாசு நா வேங்கித்தரச் சொல்லுதேன்.”

சாச்சாவிடம் சொல்லி வாங்கித் தருவாளாமே! நான் மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். ரெண்டு பேரையும் கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்க வேண்டும். அம்மா கொடுத்த நம்பிக்கையில் பசி பெருக்கெடுத்துப் பையன் பிரியாணியையும் சிக்கனையும் ஒரு பிடி பிடித்தான்.

லஞ்ச் முடிந்து, மூணு பேரும் ஆறுதலாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது நிலவிய சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு மெல்ல என்னுடைய ப்ரெய்ன் வாஷிங்கை ஆரம்பித்தேன்.

“காலைல மதரசாவுக்குப் போனியா ராஜா?”
“ஆமா போனேன் வாப்பா.”
பயல் குரலில் உற்சாகம் கொப்பளித்தது. பட்டாசுக் கனவுகள் பலித்து விடுகிற புளகாங்கிதத்தில் இருக்கிறான்.
கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்துப் போட வேண்டும்.
“மதரசாவுல இன்னிக்கி என்ன சொல்லிக் குடுத்தாக?”
“ஹதீஸ் சொல்லிக் குடுத்தாங்க.”
“பட்டாசு வெடிக்கிறது ஹராம்னு சொல்லிக் குடுக்கலியா?”
“ஹராமா? ஹராம்னா என்ன வாப்பா?”
“நம்மளெல்லாம் இஸ்லாமானவங்க. நம்ம இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்காதது எல்லாமே ஹராம்தான். இந்துக்கள் கொண்டாடற பண்டிகையெல்லாம் நாம கொண்டாடப்படாது. அது ஹராம். தீபாவளி இந்துப் பண்டிகை, பட்டாசு இந்துக்கள் வெடிக்கிறது.”
“தீபாவளி இந்துப் பண்டிகை இல்ல வாப்பா, அது இந்தியப் பண்டிகை.”
போட்டானே ஒரு போடு!

போதாததற்குப் பக்கவாத்தியமாய்ச் சரவெடி வெடித்தது மாதிரி படபடவென்று கரவொலி. நம்ம ஆள்தான் கைதட்டி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டி ருந்தாள். அவளை நோக்கி நான் வெடித்தேன்.

“இந்தா, என்ன பெரிய தத்துவம் அவன் சொல்லிட்டாண்டு நீ ஸ்டாண்டிங் ஓவேஷன் குடுக்கற? நீ தான் இந்த வசனத்த அவனுக்கு சொல்லிக் குடுத்துருப்ப.”

“அப்படித்தான் வச்சுக்கோங்க. நீங்க தோத்துப் போய்ட்டீங்க. தோல்விய ஒப்புக்கிட்டு அவனுக்குப் பட்டாசு வேங்கிக் குடுங்க.”

“ஆமா, இங்க என்ன உலக மஹா யுத்தமா நடக்குது, நா தோத்துப் போறதுக்கு, நா இவனக் கன்வின்ஸ் பண்ணிக்கிறேன். நீ இதுல தலையிடாத.”

அவளை அடக்கிவிட்டு நான் இவன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டேன். “நா ஒன்ன மாதிரி சின்னப் பையனா இருந்தப்ப எங்க வாப்பா எனக்கு தீபாவளிக்கிப் பட்டாசே வேங்கித் தரல, நா அவரக் கேக்கவுமில்ல. ஏன்னா, அது ஹராமான விஷயம்னு அப்பவே எனக்குத் தெரியும்.”

“மண்ணாங்கட்டி. நீங்க காயல் பட்டணத்ல குடியிருந்தீங்க. அந்த ஊர்ல போலீஸ் ஸ்டேஷனும் கெடையாது. பட்டாசுக்கடையும் கெடையாது.”

“ஷ் ஷ். நீ குறுக்கப் பேசாதன்னு சொன்னேன்ல? நீ கேளும்மா கண்ணு. ஒனக்கு நல்லதுக்குத் தானே வாப்பா சொல்வேன்? வாப்பா செய்யாத எதையும் நீ செய்யக் கூடாது. முஸ்லிம்ஸ்க்கு விலக்கப்பட்ட எதையும் நீ செய்யக்கூடாது. அது அல்லாவுக்குப் புடிக்காது. இந்துக்கள் செய்யறத நம்மளும் செஞ்சா அல்லாவுக்குப் புடிக்காது. அல்லாவுக்குப் புடிக்காத காரியத்த நாம செய்யலாமா, நீயே சொல்லு.”

“இந்துக்கள் செய்யறத நாம செஞ்ச அல்லாவுக்குப் புடிக்காதா வாப்பா?”

“புடிக்காது. தீபாவளி கொண்டாடறது, பட்டாசு வெடிக்கிறது எல்லாம் இந்துக்கள் செய்யறது. இந்துக்கள் செய்யறதுலயிருந்து நாம விலகியே இருக்கணும்.”

“இந்துக்கள்ட்டயிருந்து நாம விலகியே இருக்கணுமா வாப்பா?”

“அப்படித்தான் வச்சுக்கோயேன்.”

பையன் ஒரு வழியாய் நம்ம வழிக்கு வந்து விட்டான். இவள்தான் வழியை மறித்துக் கொண்டு நின்றாள்.
“நீங்க பேசறது அல்லாவுக்கே பொறுக்காது. தீபாவளி கொண்டாடறோம்னு நாம கோவிலுக்குப் போகப்போறோமா, வீட்ல பூஜை பண்ணப் போறோமா? புள்ள ஆசையாப் பட்டாசு கேட்டா அதத் தட்டிக் கழிக்கிறதுக்கு ஹராம்ங்கிறீங்க, இந்துக்கள்ட்டயிருந்து விலகியிருக்கணும்ங்கறீங்க. நாம எல்லாம் இஸ்லாமானவங்க மட்டுமில்ல, அதோட இந்தியர்களுங்கூடங்கற உண்மையை மறந்துட்டு சின்னப்புள்ள மனசுல விஷத்த வெதக்கிறீங்க. நீங்க செய்யறது கொஞ்சங்கூட சரியில்ல.”

பொரிந்து தள்ளியவளை நான் பொருட்படுத்தவே இல்லை. இவளைத் திருத்த முடியாது. கொஞ்சம் மட்டந்தட்டியாவது வைக்கலாம்.

“சரி சரி மேடம், நீங்க கொஞ்சம் வாய மூடுங்க. யார் காதிலயாவது விழுந்து தொலச்சா அப்பறம் மத நல்லிணக்க அவார்டு, தேசிய ஒருமைப்பாடு அவார்டுன்னு ஏதாவது குடுத்துரப் போறாங்க. நம்ம மகன் புரிஞ்சிக்கிட்டான். ஒம் மரமண்டக்கிப் புரியாது. நீ அவனக் கெடுத்துராத. நீ ஒன் ரூம்ல போய்த் தூங்குடா ராஜா. ஆறு மணிக்கி எந்திரிச்சாப் போதும். மக்ரிப் தொழுகக்கிப் பள்ளிவாசலுக்குப் போவோம். போய்ப் படுத்துக்க.”

“இந்துக்கள்ட்டயிருந்து நாம விலகியே இருக்கணும்” என்கிற மந்திரத்தைக் கபாலத்துக்குள்ளே புதைத்தபடியே பையன் படுக்கப் போனான்.

கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம்தான். பரவாயில்லை. பையனை வழிக்குக் கொண்டு வர பயன்பட்ட வாக்கியமென்கிற முறையில், மிகையை மன்னித்து விடலாம்.

இருட்டுகிற நேரத்தில் ரெண்டு பேரும் மக்ரிப் தொழுகைக்காக மசூதிக்குக் கிளம்பினோம். தொழுகை முடிந்து வெளியேறுகிற வழியில், வழக்கம் போல தாய்க்குலத்தின் க்யூ. எல்லோர் அணைப்பிலும் பச்சிளங் குழந்தைகள். குழந்தை களுக்கு ஓதிப்பார்க்க, நம்பிக்கையோடு காத்திருக்கிற பெண்கள்.

“கொஞ்சம் இரு, குழந்தைகளுக்கு ஓதிவிட்டு வருகிறேன்” என்று செய்கையால் இவனுக்கு உணர்த்திவிட்டு, வரிசையாய் ஒவ்வொரு குழந்தையாய் ஓதிக்கொண்டே வந்து, கடைசிக் குழந்தைக்கு வந்த போது ஓடி வந்து இவன், கையைப் பிடித்து இழுத்து என்னைத் தன்னை நோக்கிக் குனியச் செய்து, என் காதில் கிசுகிசுத்தான் அவசரமாய்.

“வாப்பா, இந்தப் பாப்பாவுக்கு ஓதாதீங்க. இது இந்துப் பாப்பா. என்னோட க்ளாஸ்ல படிக்கிற பரமசிவத்தோட அம்மா இவங்க. இவங்க இந்து வாப்பா.”

செய்கையால் அவனை அமர்த்திவிட்டு ஓதி முடித்தேன். மசூதி வளாகத்துக்கு வெளியே வந்து நான் பைக்கை ஸ்டார்ட் செய்ய, பின்னால் ஏறிக் கொள்கிற வரைக்கும் இவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு வாயைத் திறந்தான்.

“வாப்பா, நம்ம வூட்டுக்கு லெஃப்ட்ல போவணும், நீங்க ரைட்ல போறீங்க?”

“இப்ப ரைட் டைரக்ஷன்லதான் போறேன் ராஜா நான்” என்றேன்.

“எங்க போறீங்க வாப்பா?” என்று குறுகுறுப்போடு கேட்டான்.

“பட்டாசுக் கடக்கி ராஜா” என்றேன்.

“டபுள் ரைட் டாடி” என்று பின்னாலிருந்து இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

(நன்றி : பாக்யா, அக்டோபர் 2008)

About The Author

1 Comment

Comments are closed.