சிபி (15)

ஏழாவது இனத்தைச் சேர்ந்த அரசியல் வாதியொருவர், எழுபதுகளில், நம்ம வாப்பாவைத் தேடிவந்த வரலாறும் உண்டு.

அப்போது வாப்பா திருநெல்வேலி மாவட்டத்துக்கு மேற்பார்வைப் பொறியாளர். பாளையங்கோட்டையில் தாத்தா-பாட்டி வீட்டில் வாசம்.

நாலாவது அத்தியாயத்தில், பொட்டல் புதூர் யானையெல்லாம் வந்து, லத்தி போட்டு விட்டுப் போனதே, அந்த விசாலமான வீடு.

வாப்பாவுடைய ஆஃபீஸ் அறை, வீட்டின் கேட்டையொட்டிய முன் பகுதியில் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில், வெள்ளைக் கதர் சட்டை வேஷ்டியணிந்த எளிமையான மனிதரொருவர் வாய்க்கால் பாலத்தைக் கடந்து கால்நடையாக வந்தார்.

கால்நடையாகவா?

ஆமாம். கால்நடைகள் தான் மனிதனாக வர முடியாது.

மனிதர்கள் கால்நடையாக வரலாம்.

ஏதோ மின்சார விநியோகம் சம்மந்தமாய் வாப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதருக்கு நான் தான் அம்மாவிடம் காஃபி வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

வாப்பாவோடு சந்திப்பு முடிந்து அவர், வந்தமாதிரியே திரும்பி நடந்து போனார்.

அவர் போன பின்னால், காலி கப் சாஸரை எடுக்க வாப்பாவின் அலுவலக அறைக்குள் பிரவேசித்த என்னிடம், "இந்த ஆள் கடைய நல்லூர்லயிருந்து வந்துட்டுப் போறார்ப்பா" என்றார்.

"சரி, அதுக்கென்ன வாப்பா" என்றேன் நான்.

"பஸ்ல வந்திருப்பார்."

"அதத்தான் சொல்ல வர்றேன். கடைய நல்லூர்லயிருந்து திருநவேலிக்கி டைரக்ட் பஸ் கெடையாது. தென்காசிக்கி வந்து பஸ் மாறித்தான் வரணும்."

"சரி. ரெண்டு பஸ் மாறி வந்திருப்பார். வந்துட்டுப் போறார், அதுக்கென்ன."

"அதுக்கென்னன்னு சொல்றேன். காலங்காத்தால கடைய நல்லூர்லயிருந்து கௌம்பி, தென்காசில பஸ் மாறி, திருநெல்வேலி ஜங்ஷன்ல எறங்கி, அங்கயிருந்து டவுன் பஸ் ஏறி மார்க்கெட் ஸ்டாப்ல எறங்கி என்னப்பாக்க நம்ம வீட்டுக்கு நடந்து வந்திருக்கார்."

"சரி, வந்துட்டுப்போறார் வாப்பா, அதுக்கென்ன" என்று நான் இப்போது இடைமறிக்கவில்லை. இவ்வளவு அழுத்தி அழுத்தி அந்த மனிதரைப் பற்றி வாப்பா என்னிடம் பேசுகிறாரென்றால் அதில் என்னமோ ஒரு விஷயம் இருக்கும்.

வாப்பா விஷயத்துக்கு வந்தார்.

"இவர் யார் தெரியுமா?"

"தெரியாது வாப்பா."

"காமராஜ் மினிஸ்ட்ரில மந்திரியாயிருந்தவர். எஸ் எம் அப்துல் மஜீத். மந்திரி மஜீத், மந்திரி மஜீத்னு பேப்பர்லல்லாம் பாத்திருப்பியே?"

"மந்திரி மஜீதா இவர்! பஸ்ல வந்து எறங்கி, நம்ம வீட்டுக்கு நடந்து வர்றார்?"

"அதத்தான் நானும் சொன்னேன். இவரையெல்லாம் பாத்து, ஆர்ப்பாட்டமில்லாம, ஸிம்ப்பிளாயிருக்கிறது எப்டீன்னு நாமெல்லாம் பாடம் படிச்சிக்கணும்."

****

"ஹிமாலய்க்கி கோத் மே’ என்றொரு ஹிந்திப் படம் வந்தது. "இமயத்தின் மடியில்" என்று அர்த்தம். மனோஜ் குமாரும் மாலா சின்ஹாவும் நடித்த படம். மனோஜ் குமாருக்கும் மந்திரி மஜீதுக்கும் என்ன சம்மந்தம்? சம்மந்தம் இருக்கிறது. நேரடியாய் இல்லாவிட்டாலும், கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுகிற சம்மந்தம்.

மனோஜ் குமாருடைய ஹிந்திப் படம், எம்.ஜி.ஆர். நடித்துத் தமிழில் வெளியானது. தலைப்பு, இமயத்தின் மடியில் அல்ல. புதிய பூமி.

மந்திரி மஜீதுடைய கடைய நல்லூர்த் தொகுதியில், அறுபதுகளின் இறுதியில், இடைத் தேர்தல் வந்த சமயத்தில் புதிய பூமி ரிலீஸானது. கடைய நல்லூர்த் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர், சம்சுதீன் என்கிற கதிரவன். புதிய பூமியில் எம் ஜி ஆரின் பெயரும் கதிரவன். இடைத் தேர்தல் சமயத்தில் திரைப்படம் ரிலீஸான போதே கதிரவனின் வெற்றி, உறுதியாகி விட்டது.

தேர்தல் முடிவு வெளியானவுடன், தமிழகத்து சுவர்களெங்கும் புதிதாய்ப் புதிய பூமிப் போஸ்டர்கள், வெற்றிக் களிப்பில் எம்.ஜி.ஆர். இருக்கிற படத்தோடு, ‘கதிரவனுக்கு வெற்றி!’ என்கிற வாசகத்தோடு.

****

காமராஜரின் அமைச்சரவையில் பணியாற்றியிருந்தாலும், மந்திரி மஜீத், காங்கிரஸ் கட்சி பிளவு பட்டபோது காமராஜரோடு வராமல் இந்திராக் காங்கிரஸுக்குப் போய்விட்டார்.

எழுபதுகளில், இந்திராக் காங்கிரஸிலும்கூட உதாரண புருஷர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.

காமராஜரைப் பின் தொடர்ந்து வராமல், இந்திரா காந்தியோடு போய்விட்டவர்களில் ஆர்ப்பாட்டமில்லாதவர், அமைதியானவர் அப்துல் மஜீத் என்றால், ஆர்ப்பாட்டத்துக்குப் பேர்போன பெண்மணியொருவரும் அப்போது இருந்தார். சட்டசபையைக் கலக்கோ கலக்கென்று கலக்கி, செய்திப் பத்திரிகைகளில் அடிக்கடி அடிபடுகிற எம். எல். ஏ.

டி என் அனந்த நாயகி. அனந்த நாயகியுடைய பரபரப்புப் பேச்சுகளை விறுவிறுப்பாய்ப் பிரசுரித்து தினத்தந்தி, பரபரப்பைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தது.

‘காலையில் எழுந்ததும் தினத்தந்தி, காப்பி குடிப்பது அதன் பிந்தி’ என்றிருந்த காலம் அது.

சங்க காலத்தில், ‘புள்’ என்றிருந்ததைப் பிற்காலத்துத் தமிழ்ப் பெரியவர்கள் ‘பறவை’ என்று எளிமைப் படுத்தினார்களாம். அந்தப் பறவையையும், எல்லோருக்கும் புரிகிற மாதிரி தினத்தந்தியில், ‘குருவி’ என்று பாமரப்படுத்தினார்கள் என்று சொல்லுவார் நம்மப் பாளையங்கோட்டைத் தோழர் ஜோதி விநாயகம்.

பறவையினம் எல்லாமே குருவியாகி விடுமா? அது என்னங்க தமிழ்? என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. கோனார் நோட்ஸ், வெற்றி நோட்ஸின் உதவியில்லாமல், பதவுரை, பொழிப்புரை தேவையில்லாமல் பாமரர்களுக்குப் புரிந்தால் அது நல்ல தமிழ் தான்.

ஸ்பிக் தொழிற்சாலையில் என்னோடு பணியாற்றிய சந்திரமோஹனுடைய மணவாட்டி ஒரு மலையாளி.

கல்யாணத்துக்கு முந்தித் தமிழ் அட்சரங்களே தெரியாமலிருந்தவர், கல்யாணமாகி, சில வருஷங்களிலேயே அம்சமாய்த் தமிழ் பேசக் கற்றுக் கொண்டார். கேட்டதற்கு, தினத்தந்தியை தினமும் வாசித்துத் தமிழ் பேசக் கற்றுக் கொண்டதாய்ச் சொல்கிறார்.

ஆனால், இன்றைய தினத்தந்தி, அன்றைய தினத்தந்தி போலத் தரமாயில்லையென்கிற மனக்குறை இருக்கிறது, பருவப் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்! பலே ஆசாமி கைது!! என்பது போன்ற சிறப்புச் செய்திகளெல்லாம் இப்போது தினத்தந்தியில் காணக் கிடைக்காததால்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு கெட்ட கனவு வந்தது, தினத்தந்தியில் கன்னித் தீவு படக்கதை முடிவுக்கு வந்து விட்டதாக. காலையில் விழித்துக் கொண்டதும், முதல் வேலையாய்ப் போய் தினத்தந்தி வாங்கிப் பார்த்தேன். அப்பாடா! கன்னித் தீவு தொடர்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரும். பரவாயில்லை, தினத்தந்தி அப்படியொன்றும் தரம் தாழ்ந்து விடவில்லை.

ஒரு வேளை, கன்னித்தீவை ‘முற்றும்’ போட வேண்டிய நிலமை வந்தால், சிந்துபாத் ரசிகர் மன்றத்தினரும் அழகி லைலா ரசிகர் மன்றத்தினரும் சாலை மறியல் பண்ணித் தமிழ்நாட்டைக் கலக்கி விடுவார்கள் கலக்கி.

நண்பனிடம் ஒருவன் பத்து ரூபாய்க் கை மாத்து வாங்கினானாம். எப்போது திருப்பித் தருவாய் என்று கேட்டதற்கு, தினத்தந்தியில் கன்னித் தீவு கதை முடிந்ததற்கு மறுநாள் என்றானாம். நாற்பது வருஷங்களுக்கு முந்தி ரிலீஸôன இந்த ஜோக், இன்றைக்கும் செல்லுபடியாகிறது பாருங்க!

சிந்துபாத் ஜிந்தாபாத்!

அனந்த நாயகியின் ஆர்ப்பாட்டமான சட்டசபைச் சொற்பொழிவுகள், அந்த அம்மையார் கட்சி மாறி, காமராஜரை விட்டு விலகி இந்திராக் காங்கிரசுக்குப் போன பின்னாலுங்கூட தினத்தந்தியில் பிரசுரமாகிக் கொண்டு தானிருந்தன. என்ன ஆச்சோ தெரியவில்லை இருந்திருந்திருந்தாற் போல அம்மையார் அடக்கமாகிவிட்டார். அம்மையாரின் அமைதியைப் பொறுத்துக் கொள்ளமாட்டாமல் குமுதத்தில், ஆஃபீஸ் பையன் எழுதுவதாய்க் கவிதையொன்று பிரசுரமானது.

அனந்த நாயகி அம்மா
கட்சி மாறின கையோடு நீங்கள்
அட்ரஸ் மாறினீர்
ஆளைக் காணோம்
இழவுப் பேப்பரை
எதற்குப் படிப்பது
தூக்கி எறிந்தேன்
துவண்டு போனேன்
திடீர்னு ஒரு நாள்
டமால்னு சத்தம்
அம்மா பேச்சு
ஆரம்பிச்சாச்சு
டெய்லிப் பையா
தினமும் வாய்யா

ஆஃபீஸ் பையனுடைய அசத்தலான கவிதையில், ஒரு வரியை உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்: ‘கட்சி மாறின கையோடு.’

ஸ்தாபனக் காங்கிரஸ் என்றும் இந்திராக் காங்கிரஸ் என்றும் காங்கிரஸ் கட்சி பிரிந்த போது, சிண்டிகேட் என்று சிலரால் சிலகாலம் சிறுமைப் படுத்தப் பட்டாலும், காமராஜருடைய ஸ்தாபனக் காங்கிரஸ் தான் ஒரிஜினல்க் காங்கிரஸாய்ப் பத்திரிகைகளில் அங்கீகாரம் பெற்றிருந்தது. இந்திராக் காங்கிரஸுக்கு ஓடிப் போனவர்கள், கட்சி மாறியவர்களாய்த் தான் கருதப்பட்டார்கள்.

காமராஜரின் மறைவுக்குப் பின்னால், ஜனதாக் கட்சியாய் மாற்றம் பெற்ற ஸ்தாபனக் காங்கிரஸுக்கு 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வோடு கூட்டணி. சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர்.க் கட்சியோடு கூட்டு என்பது காலத்தின் கூத்து.

சிவாஜி கணேசன் இந்திராக் காங்கிரஸில், தி.மு.க. கூட்டணியில்.

பாண்டிச்சேரி உட்படத் தமிழ்நாட்டு நாற்பது தொகுதிகளில், அ.தி.மு.க. வுக்கும் ஜனதாக் கட்சிக்கும் ட்வென்ட்டி ட்வென்ட்டி.

சிவாஜி வாழ்க, எம்.ஜி.ஆர். ஒழிக என்று சுவர் விளம்பரம் செய்திருந்த காலமெல்லாம் காலாவதியாய்ப் போய், எம்.ஜி.ஆர். ரசிகர்களோடு இணைந்து, ‘நாளை நமதே, நாற்பதும் நமதே’ என்று முழக்கமிடவேண்டிய கட்டாயத்தில் ஜனதாக் கட்சித் தொண்டர்கள்.

நம்முடைய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆலடி அருணா. அவரை எதிர்த்துத் தி.மு.க. வின் டி எஸ் ஏ சிவப்பிரகாசம்.

சிவப்பிரகாசம் தோற்க வேண்டும், அருணா ஜெயிக்கவேண்டும் ஆண்டவனே என்று பிரார்த்தனைகள் வைத்துக் கொண்டிருந்தாலும், சிவப்பிரகாசத்துக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாயிருப்பதாய் ஒரு கருத்து இருந்தது.

பாளையங்கோட்டை வடக்கு பஜார் ரோடிலெல்லாம் தி.மு.க. வின் விளம்பரங்களும், கட் அவுட்களும் தான் தூக்கலாய்த் தெரிந்தன. சிவப்பிரகாசம் ஜெயித்தே விடுவாரோ என்கிற உறுத்தலோடு நான் தலை கவிழ்ந்து மெல்ல நடந்து கொண்டிருந்த போது, ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ என்கிற உற்சாகமான பாடலைக் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். ஒலி பெருக்கி அல்ல. ரெண்டு அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு இணையாய் நடந்து கொண்டிருந்தார்கள். அந்த இருவரில் ஒருவர் தான் பெருங்குரலெடுத்துப் பாடிக் கொண்டு நடந்தார்.

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழ மாட்டார்.

அருமை! அ.தி.மு.க. பாடகர்! நம்மத் தோழமைக் கட்சியின் தொண்டர்! அவருடைய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொள்ளப் பார்த்தது. தொற்றிக் கொண்டேயிருக்கும், அவர் பாடலோடு நிறுத்திக் கொண்டிருந்தால். நம்மப் போதாத காலம், தொண்டர், பாடலை நிறுத்திவிட்டு வசனம் பேச ஆரம்பித்தார், தன்னுடைய தோழரிடம்.

“பாவி எம் ஆர் ராதா, நம்மத் தலைவரச் சுட்டுப்புட்டாம்ல. அதான் வசனம் பேசயில தலைவர் கொரல் ஒரு மாறி இருக்கு. வாய் கொளறுது. ஆனா, தலைவர் பாட்டுப் பாடையில பாத்தியா? கொரல் சும்மா கிண்ண்ண்ணுன்னு இருக்கு, என்னல?”

நான் திரும்பவும் தலை கவிழ்ந்து கொண்டேன்.

பரவாயில்லை. டி எஸ் ஏ சிவப்பிரகாசமே ஜெயித்து விட்டுப் போகட்டும்.

(தொடர்வேன்)

About The Author