சிபி (17)

முந்தையஆட்சியில், இருந்திருந்தாற்போலத் தொலைக்காட்சி செய்திகளில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை ஒளிபரப்பினார்கள்.

அடுத்த மாதத்திலிருந்து, காரில் போகிறவர்கள் கட்டாயம் ஸீட் பெல்ட் அணிய வேண்டுமாம்.

அடுத்த மாதம் வரைக்கும் காத்திருப்பானேன் என்று அடுத்த நாளே நம்ம மாருதியைக் கிளப்பிக் கொண்டு மெக்கானிக்கிடம் போனேன்.

"நம்மக் கார்ல ஸீட் பெல்ட் மாட்னா ஸீட்டே கிழிஞ்சி போயிரும் சார்" என்று அனுதாபப்பட்டார் அவர்.

"ஆமா, இத்தினி நாள் இல்லாம இப்ப ஏன் திடீர்னு ஸீட் பெல்ட் மாட்டணும்னு ஆசப்படறீங்க?"

"நா ஆசயெல்லாம் படலீங்க. நேத்து ராத்திரி நீங்க டி வி பாக்கலியா?"

"ஓ! ஆச ஆசயாப் பாத்தேனே! நித்யானந்தா ஸெக்ஸ் ஸி டி காட்னாங்க."

"அதில்லீங்க. அடுத்த மாசத்லயிருந்து ஸீட் பெல்ட் கட்டாயம்னு டி வி ந்யூஸ்ல சொன்னாங்களே?"

நான் பேசி வாயை மூடும் முன் அவர் வாயைத் திறந்தார். எனக்கு பதில் தருவதற்கு அல்ல, சிரிப்பதற்கு. சிரித்தார். வாய்விட்டு சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார்.

"அந்த ந்யூஸ நம்பியா சார் நீங்க ஸீட் பெல்ட் போட வந்தீங்க? போலீஸ்காரங்களுக்கு நேரம் போகலன்னா இப்டி ஏதாவது அதிரடி அறிக்கை விடுவாங்க. மண்டைல ஒரு தட்டுத் தட்டி அரசாங்கம் அவங்கள அடக்கிரும். ஸீட்டாவது பெல்ட்டாவது! அத அமுல்ப்படுத்தவே மாட்டாங்க பாருங்க!"

சொன்னவர் கார் மெக்கானிக் அல்ல. சோதிடத் திலகம்.

அந்த ஆருடத்தை அவர் சொல்லிப் பல வருஷங்களாச்சு. இன்று வரை ஸீட் பெல்ட் சட்டம் நடைமுறைக்கு வரவேயில்லை.

ஹெல்மெட் சட்டம் கூட அப்படித்தான். ட்டூ வீலர் ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என்று சட்டம் இருப்பதாய் ஊரில் ஒரு பேச்சு இருக்கிறது. ஓட்டுகிறவர் மட்டும் அணிந்தால் போதுமாம். பின்னால் உட்கார்ந்து போகிறவர் ஹெல்மெட் அணிய அவசியமில்லை. பின்னாலிருக்கிறவன் கீழே விழுந்து மண்டை உடைந்தால், ஃபெவிக்கால் போட்டு ஒட்டிவிட முடியுமோ என்னமோ.

ட்டூ வீலர் ஓட்டுகிற பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டுமென்று கட்டாயமில்லை. பெண்களின் ஜனத் தொகையைக் குறைப்பதற்காக, அன்றைய ஆணாதிக்க அரசாங்கம் செய்த சதிவேலையாயிருக்கும் இது.

தென் மாவட்டங்களில் ஹெல்மெட் என்பது இன்றைக்கும் கூட ஒரு காணக்கிடைக்காத வஸ்துவாய்த் தானிருக்கிறது.

****

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சுறுசுறுப்பில், "நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்" என்கிற அன்பான அரசு அறிவிப்பு ஒன்று தொலைக்காட்சியில் வந்தது.

போலீஸ்காரர்கள் யாரும் அன்றைக்கு டி வி பார்க்காததால், ஹெல்மெட் சட்டம் அமுலுக்கு வந்த விவரம் போலீஸ்காரர்களுக்குத் தெரியவில்லை. இன்று வரைக்கும் தெரியவில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், புரட்சித் தலைவியைப் போற்றிப் புகழ்ந்து, போயஸ் தோட்டத்தை வளைத்து வளைத்து ஷிஹான் ஹுசைனி ஒட்டியிருந்த சுவரொட்டிகளின் எண்ணிக் கையளவு கூட ஹெல்மெட் தலைகள் அந்த ஏரியாவில் தென்படவில்லை.

ஹெல்மெட் புறக்கணிப்பைப் பொறுத்துப் போலீஸ் காரர்கள் தாராளமயமாயிருந்தாலும், ஸெல்ஃபோனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுகிறவர்களைப் போலீஸ்காரர்கள் அவ்வப்போது பிடிக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்வப்போது என்றால், என்னைப் போன்ற அப்பாவிகள் வண்டியோட்டுகிற போது.

இந்த ஸப்ஜெக்ட்டை வைத்து ஏற்கனவே சமநிலைச் சமுதாயம் மாத இதழில் ஒரு சிறுகதை எழுதியாச்சு. அந்த சிறுகதையிலிருந்து முக்கியமான ஒரு காட்சியைத் திரும்பவும் இந்த நாவலில் நம்ம வாசகர்களுக்குப் பணிவன்புடன் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமேற்பட்டிருக்கிறது இப்போது.

****

ஹெல்மெட் அணியாத ட்டூ வீலர்க்காரர்களைப் போலீஸ்காரர்கள் எப்படி கண்டு கொள்வதில்லையோ, அப்படியே ஸெல்ஃபோன் பேசிக் கொண்டே வண்டியோட்டு கிறவர்களையும் கண்டு கொள்வதே இல்லை.

ஒரேயொருவனை மட்டும் கண்டு கொண்டார்கள். அந்த ஒரேயொருவன் இந்த அடியேன் தான்.

அண்ணா நகர் சாந்தி காலனி ஸிக்னலில், கைனட்டிக் ஹோண்டாவில் காலூன்றி நின்று கொண்டிருந்த போது மொபைல் மணியடித்தது. ஹலோ, ஸிக்னல்ல நிக்கிறேன், அப்புறம் பேசறேன் என்று சொல்லி நான் கட் பண்ணவும் பச்சை விளக்கு எரியவும் சரியாயிருந்தது. புத்திசாலிக் கான்ஸ்டபிள் ஒருவர், ஓரமாய்க் காத்திருந்தவர், ஓடி வந்து வழி மறித்தார்.

நிக்கிற போதுதான் பேசினேன், பேசிக் கொண்டே நகரவில்லை என்று நான் எடுத்துச் சொன்னது எடுபடவில்லை அவரிடம்.

சமயோஜிதமாய் எனக்கொரு யோசனை தோன்ற, ஸெல்லில் நான் ஒரு நம்பரை அழுத்தினேன்.

நம்மக் கட்சியின் மாவட்டத் தலைவருடைய நம்பர்.

"சார் வணக்கம். மாவட்டத் தலைவர் தானே பேசறீங்க?"

டக்கென்று சுதாரித்துக்கொண்ட காவலர் என் கையைப் பிடித்தார்.

"மாவட்டத் தலைவரயெல்லாம் கூப்டாதீங்க சார், நீங்க கௌம்புங்க."

பிறிதொரு நாளில் நம்ம மாநிலப் பொதுச் செயலாளரிடம் இந்த சம்பவத்தைச் சொன்னபோது பொதுச் செயலாளர் ஹாஸ்யமாய்ச் சொல்லுவார்,

“நல்ல வேள மாவட்டத் தலைவர அந்தப் போலீஸ்காரர் பாக்கல. பாத்திருந்தா, ஒங்கள ரிலீஸ் பண்ணிட்டு அந்த ஆளப் புடிச்சி வச்சிட்டிருப்பார்.”

ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

ஆனால், இதை வாசிக்கிற உங்களுக்கு சிரிப்பு வந்திருக்காது.

வராதுதான். ஏனென்றால், நீங்களுங்கூட எங்க மாவட்டத் தலைவரைப் பார்த்ததில்லை.

****

மாவட்டத் தலைவரைக் கிண்டலடித்த அந்த மாநிலப் பொதுச் செயலாளர்தான் நம்ம மூவரணித் தலைவர்களில் தலையாயவரான அறிவரசன். கிண்டலடித்ததெல்லாம் பழங்கதையாகிப் போனது இப்போது.

மாவட்டத் தலைவர் ஒரு தினசரி டாஸ்மாக் கஸ்டமர் கூட.. கிண்டலுக்குண்டான குடிமகன் அவர் என்பது இப்போது முக்கியமில்லை. மாநிலத் தலைவருக்கு எதிரான பிரச்சார முயற்சியில், அறிவரசனின் பிரதான சீடராய் மாவட்டத் தலைவர் இப்போது அங்கீகாரம் பெற்று விட்டார் என்பது தான் முக்கியம்.

இவருக்கு முன்பு மாவட்டத் தலைவராயிருந்த எத்திராஜன், பிளவுபடுவதற்கு முந்தையக் காங்கிரஸ் கட்சியின் அபேட்சகராய் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியில் கவுன்ஸிலரா யிருந்தவர். அறுபதுகளில், மஸ்டர் ரோல் ஊழலில் ஊறி, மாநக ராட்சி நாற்றமெடுத்துக் கிடந்தபோது, கட்சிப் பாகுபாடில்லாமல் ஊழல்வாதிகள் தண்டனை பெறுவதற்கு உதவியவர்களில்

எத்திராஜனும் ஒருவர். நேர்மைக்கும் நாணயத்துக்கும் அறியப்பட்டவர். சட்டமன்றத் தேர்தலில் ஒரு லோக்கல் தாதாவை எதிர்த்து அவர் சக்கரம் சின்னத்தில் போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்கு என்னுடைய சிறிய பங்களிப்பாய் நான் கொடுத்தப் பத்தாயிரத்தைத் தயக்கத்தோடு பெற்றுக் கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு அப்படியே என்னிடம் திருப்பிக் கொடுத்த, விதிவிலக்கான ஓர் அரசியல்வாதி.

லெனின் என்கிற பெயர் சூட்டப் பெற்ற தன்னுடைய குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் பெற எத்திராஜன் சென்ற போது ஒரு சலசலப்பு.

"என்ன மதம் சார்?"

"இந்து."

"லெனின்ங்கறது இந்துப் பேர் இல்லியே."

"ஸ்டாலின்ங்கறது இந்துப் பேர்ன்னா, லெனினும் இந்துப்பேர் தான்."

போட்டாரே ஒரு போடு! அடாவடி அதிகாரியின் மண்டையில் அதிரடியாய் ஒரு தட்டுத் தட்டிச் சான்றிதழைப் பெற்று வந்தார் எத்திராஜன்.

மே முதல் தேதியில், மேதினத்தில் பிறந்த தன்னுடைய ஒரே மகளுக்கு எத்திராஜன் சூட்டிய புரட்சிப் பெயர் : மேதினி!

நம்முடைய ஏழாவது இனத்தின் இலக்கணத்தையும் தாண்டி, ஒப்புவமையில்லாத உத்தமர் எத்திராஜன்.

இப்போது இல்லை.

(தொடர்வேன்)

About The Author