சிபி (26)

"அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி, நானே ஒங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு இருந்தேன்."

"சொல்லுங்க தலைவர், என்ன விஷயமாப் பேசணும்னு இருந்தீங்க?"

"மொதல்ல நீங்க சொல்லுங்க. நீங்க என்ன விஷயமா இப்ப ஃபோன் பண்ணீங்க?"

"தலைவர், இந்த மதுக்கடை மறியலுக்கு நீங்க டேட் சொல்லலியே!"

"சொல்றேன். அதுக்கு முன்னால நா எதுக்கு ஃபோன் பண்ண நெனச்சேன்னு சொல்றேன்."

"சொல்லுங்க தலைவர்"

"அடுத்த சனிக்கிழம மெட்ராஸ்ல நம்மப் பொதுக்குழுக் கூட்டம். எல்லாருக்கும் லெட்டர் வரும். இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிட்டிருக்கேன். பொதுக் குழுவுல வச்சி மதுக்கடை மறியலுக்கு தேதி சொல்றேன்."

"சரி தலைவர். ஆனா தலைவர், மாநிலத் தலைவர் நீங்க, எல்லாரையும் தனித்தனியா ஃபோன் பண்ணிக் கூப்புட வேண்டியது அவசியந்தானா?"

"அவசியந்தா தம்பி. ஏன்னா, அடுத்த மாசம் மதுரைல ஒரு போட்டிக் கூட்டம் போட பீட்டர் ஏற்பாடு பண்ணிட்டிருக் காராம். அறிவரசனும், சண்முகமும் அதுக்கு ஆள் சேத்துட்டிருக் காங்களாம். இந்த சூழ்நிலைல நாமப் பெர்ஸனலா ஒவ்வொருத் தராக் கூப்டாத்தான் பொதுக்குழுவுக்கு வருவாங்க."

"ஆரம்பத்லயே நீங்க கண்டிப்பா நடந்துக்காம லூஸாவிட்டுட்டீங்க தலைவர். போட்டிக் கூட்டம் நடத்தற அளவுக்கு இப்ப அவங்க வளந்துட்டாங்க."

"அதெல்லாம் அவங்களத் திருத்திரலாம் தம்பி. எனக்கு நம்பிக்கையிருக்கு. பொதுக்குழுவுல அதப் பத்திப் பேசுவோம். வெள்ளிக்கிழம காலைல நா வருவேன். நீங்க ஃப்ரீ தானே தம்பி?"

"இதவிட என்ன வேல தலைவர்! ஒங்கள ரிஸீவ் பண்ண வந்துர்றேன். கோயம்பேடா இல்ல எக்மோரோ தலைவர்?"

"அத, வியாழக்கிழம சொல்றேன்."

வியாழக்கிழமை சொன்னார், எழும்பூர் என்று.

அப்பாடா என்றிருந்தது.

பதிமூணு மணி நேரம் பஸ்ஸில் உட்கார்ந்து வருகிற அவஸ்தை, தலைவருக்கு இந்த முறை இல்லை.

நமக்கோ, பஸ் பயணம் உவப்பானதாகவே இருப்பதில்லை.

போனவாரம், மாநிலப் பொதுச் செயலாளர் தங்க தேவனோடு குடியாத்தம் போய் வந்தபோது, நாலு மணி நேர பஸ் பிரயாணமே பிராணனை வாங்கி விட்டது.

எக்கச்சக்கமாய் உடற்பயிற்சி செய்து, உட்காருகிற பகுதியில் உடம்பில் குஷன் குறைந்து போய்விட்டது என்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

கார் ஓட்டுகிறபோது, ஸீட்டுக்கு மேலே தலகாணி ஒன்றைப் போட்டுக் கொண்டு, அதன் மேல் அமர்ந்தால் தான் சாலை கண்ணுக்கெட்டுகிறது.

வெள்ளிக்கிழமை, எழும்பூரில் தலைவரை அழைத்துக் கொண்டு போய் அறையில் விட்டாச்சு. ஜும்மாத் தொழுகையும் தலைவரோடு தொழுதாச்சு.

சனிக்கிழமை, பொதுக்குழு.

மூவர் அணி, முன்னரே கலந்து பேசி, கூட்டத்தை எப்படிக் குழப்புவது என்று திட்டமிட்டு வந்திருந்தது வெளிப்படையாய்த் தெரிந்தது.

கட்சியில் எல்லோரும் ஒற்றுமையாய் செயல்படவேண்டும், மாநிலத் தலைவருக்கு உறுதுணையாயிருக்க வேண்டும், மாநிலத் தலைவர் மனதைப் புண்படுத்துகிற செயல்களிலும், கட்சியைக் களங்கப் படுத்துகிற செயல்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நான் நல்ல விதமாய் எழுதி, மாவட்டத் தலைவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருந்த கடிதம், மூவரணியின் கடும் கண்டனத்துக்குள்ளானது.

"இந்த ஆள் யார் எங்களுக்கு எச்சரிக்கை விடுக்க?" என்று ஒரு கூக்குரல் எழுந்தது.

"நாங்கள்ளாம் ஸீனியர் லீடர்ஸ். எங்களுக்கு லெட்டர் போடறதுக்கு ஒங்களுக்குத் தகுதியில்ல. எங்களுக்கெல்லாம் நீங்க எழுதக் கூடாது" என்று கோபத்தைக் கொட்டினார் கோவை சண்முகம்.

சிறுபான்மையர்ப் பிரிவுத் தலைவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றொரு கோரிக்கையையும் வைத்தார்.

என்னுடைய கடிதத்தைத் தன்னுடைய பத்திரிகையில் பிரசுரித்திருந்த டாக்டர் பொன் குமாரும் திட்டித்தீர்க்கப்பட்டார்.

"பீட்டரா பொன் குமாரா என்று பார்த்து விடுகிறேன்" என்றொரு அநாகரிகமான சவால் எழுந்தது, மதுரைக்காரப் பொதுச் செயலாளரிடமிருந்து.

சவால்கள், சவடால்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை.

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மேல் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இப்பொழுதே திரும்பப் பெறவேண்டும் என்று கூச்சலிட்டார்கள்.

"ஒழுங்கு நடவடிக்கையை இன்றைக்கு வாபஸ் வாங்கவில்லை என்றால், நாளைக்கு நான் ராஜினாமா" என்று பீட்டர் ஒரு பிட்டைப் போடவும், ஆதரவாளர்களெல்லாம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள்.

இவ்வளவு நேரம், உட்கார்ந்தபடியே மற்றவர்களை இயக்கிக் கொண்டிருந்த அறிவரசன் எழுந்தார்.

"இந்த ஒழுங்கு நடவடிக்கைக்குழு மேலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை" என்று இரைந்தவர், மோத்திலாலை நோக்கி, “உங்கள் மேலேயே நாங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.” என்று அவரை வம்புக்கிழுக்கவும் மோத்திலால் முழுசாய் எழுந்து நின்றார்.

"மாநிலத் தலைவரையே மதிக்காதவர் நீர், என்னையா மதிக்கப் போறீர்?" என்று ஆரம்பித்து மோத்திலால், ஒரு மூணு

நிமிஷம் தன்னுடைய சிம்மக்குரலில் கர்ஜித்த கர்ஜிப்பில் ஆடிப்போனார் அறிவரசன்.

வி பி சிங் காலத்தில், நம்மக் கட்சியின் மாநிலத் தலைவராயிருந்த கலைக்குறிசில் சிவாஜி கணேசனே பார்த்துப் பொறாமை கொண்ட, அட்டகாசமான கட்டபொம்மன் மீசை மோத்திலாலுடையது.

அந்த தடித்த மீசை துடித்த துடிப்பில், மூவரணியின் துடிப்பெல்லாம் அடங்கிப் போனது.

போதாததற்கு, சந்தான கிருஷ்ணனும், தூத்துக்குடி சக்திலிங்கமும் ஏவுகணைகளை எடுத்து விட, அந்த மூன்று முன்னணி வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு முன்னால் மூவரணியின் விதண்டாவாதங்கள் எடுபடாமல் முடங்கிக் கொண்டன.

இந்த சாதகமான சந்தர்ப்பத்தில் தான் ஐயா எழுந்தார்.

ஐயா என்றால்? அடியேன் தான்.

"மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அவர்களைக்குறித்து எனக்கொரு மனக்குறை இருக்கிறது" என்று நான் ஆரம்பிக்கவும், அனைத்துக் கண்களும் அகலமாய்த் திறந்தன. மூவரணி ஆதரவாளர்களின் கண்கள், அளவுக் கதிகமாய்.

"மூன்று வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கத் தவறிவிட்டார் நம் தலைவர். அதது இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும். அவரவரை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைக்க வேண்டும். மாநிலத் தலைவருக்கெதிராய்க் குரலெழுப்புகிற இந்த மூன்று பொதுச் செயலாளர்களும் இந்த வேலையை மூன்று வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள். அப்போதே நம் தலைவர் எச்சரிக்கையடைந்து அவர்கள்மேல் நடவடிக்கை எடுத்து, மூன்று பேரையும் தனித்தனியாய்ப் பிரித்து, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவர்களுக்குப் பின்னே மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு கும்பலை அவர்கள் சேர்த்திருக்க முடியாது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் இன்றைக்கு இந்தக் கூச்சல் குழப்பமும் இருந்திருக்காது. எதுவுமே இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் எல்லோருக்கும் நல்லது. எடுத்துக்காட்டாக…" என்று ஒரு ஸ்பேஸ் விட்டேன்.

மேலே என்ன பேசப்போகிறான் என்று எல்லோரும் பார்த்திருந்தார்கள்.

நான் மேலே உரை நடையில் பேசவில்லை. சொந்தத் தயாரிப்பான நம்மக் கவிதை வரிகளை எடுத்து விட்டேன்:

அழகான இளம் பெண்ணின் மலையாளக் கூந்தல்
அது
தலையில் இருந்தால் கேந்தி
இலையில் கிடந்தால் வாந்தி

படபடவென்று கரவொலி.

மூவரணி ஆதரவாளர்கள் கூட அக்கம் பக்கம் பார்த்து, அடக்கமாய்க் கை தட்டினார்கள்.

தலைவர் என்னை ஏறிட்டுப் பார்த்து சிக்கனமாய் ஒரு புன்னகையை சிந்தினார். என்னை அமரச் சொல்லிவிட்டுத் தலைவர் பேச எழுந்தார்.

(தொடர்வேன்)

About The Author