சிபி (5)

பாளையங்கோட்டைக் கான்வென்ட்டையடுத்துப் பரமக்குடியில், ஏ.சி.ஏ.வி ஹை ஸ்கூல் என்கிற பெயர் கொண்ட செட்டியார் ஸ்கூலில் படித்தபோது, மொத்த வகுப்பிலும் சிவந்த தோலோடு கூடிய, கன்னங்கள் உப்பிய, அம்சமான பையன் நான் ஒருவன்தான் என்பதால், வகுப்பறைக் கலைநிகழ்ச்சியின் கதாநாயகனாகக் கால்ஷீட் கொடுக்கிற வாய்ப்பு எனக்கே வாய்த்தது.

"காணாமல் போன பெட்டி": என்றொரு நாடகம். கதை, வசனம், டைரக்ஷன் – பாஸ்கர்.

செட்டியார் ஸ்கூலின் கரஸ்பாண்டன்ட் மகன் சூரியமூர்த்தி. கரஸ்பாண்டன்ட் மகனாயிருந்தாலும், கன்னங்கள் ஒட்டிப்போய், ஒல்லிக் குச்சியாயிருந்தானென்பதற்காக அவனுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. கதாநாயகியுடைய அப்பா வேஷம் அவனுக்கு.

"வருகிறார் வருகிறார் தும்மணசாமி வருகிறார்" என்று இயக்குநர் பாஸ்கரின் பாடல் பின்னணியில் ஒலிக்க, தும்மிக் கொண்டே மேடையில் தோன்றினான் சூரியமூர்த்தி. அடுத்து, துணை நடிகர்களின் அறிமுகமெல்லாம் முடிந்து, க்ளைமாக்ஸாய்க் கதாநாயகன் மேடையில் தோன்றுகிறபோது,

"வர்ராறு வர்ராறு, இனிஸிபெட்டரு வர்ராறு" என்கிற பாஸ்கரின் பாடலுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில், மேடையில் நான் மிடுக்காய் நடக்க, மாணவிகளெல்லாம் கைதட்டி மகிழ்ந்தார்கள். மாணவர்கள் பொறாமை புரிந்தார்கள்.

நான் நாடகத்தில் நடித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் ‘களத்தூர் கண்ணம்மா’ ரிலீஸானது, ரேவதி டூரிங் டாக்கீஸில். பிற்காலத்தில், கமலஹாசன் என்று பிரபலமடைந்த பரமக்குடிக் குட்டிப் பையன் கமல் நடித்த படம்.

செட்டியார் ஸ்கூலில் கமலுக்கு வரவேற்பு நடத்தப்பட்டபோது டிரில் மாஸ்டர் இக்னேஷியஸ் அவனை வாரித்தூக்கிக் கொண்டவர் கீழே இறக்கவேயில்லை. அந்த விழா நிகழ்ச்சிகளையெல்லாம் நான் எட்ட நின்றுதான் வேடிக்கை பார்த்தேன். குலோஸ் அப்புக்கு ஏன் நான் போகவேண்டும்? கமலஹாசனுக்கு சீனியராச்சே நான். கமல் நடிக்க வருமுன்பே நடிக்க வந்தவனில்லையா நான்!

கால ஓட்டத்தில், கமல் ஒரு முழுநேர நடிகனாய் ஆகிவிட, நான் உட்கார்ந்து ஓர் அரசியல் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அந்தப் பரமக்குடிப் பையன் உலக நாயகனாய் உயர்ந்ததற்குச் செட்டியார் ஸ்கூல் கதாநாயகனான இந்தப் பாளையங்கோட்டைப் பையன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.

ஹிந்தி டீச்சருக்கு என்மேலே பிரத்யேகமாய் ஒரு பிரியம் இருந்தது. நான் கதாநாயகனாய் அசத்திய பிறகு அந்தப் பிரியம் உச்சத்துக்குப் போய் விட்டது. ஹிந்திப் பாட்டு ஒப்பிக்கிற பள்ளிக்கூடப் போட்டியில் ஹிந்தி டீச்சரால் நான் உற்சாகப்படுத்தப்பட்டேன்.

மா காதீக்கீச் சாதர் தேதே

மை காந்தி பன் ஜாவூங்கா

ஸப் லோகோங்க்கே பீச் பைட்க்கர் ரகுபதி ராகவ காவூங்கா

(அம்மா எனக்குக் கதருடை கொடு! நான் காந்தியாய் மாறுகிறேன். அனைத்து மக்களின் மத்தியில் அமர்ந்து ரகுபதி ராகவ பாடுகிறேன்).

என்கிற ஆரம்ப வரிகள் கொண்ட பாட்டு. பாட்டு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஹிந்திப் பாட்டு என்பதால் அல்ல. காந்திப் பாட்டு என்பதால்.

முதல் பரிசு எனக்குத்தான்.

‘அக்பர் பீர்பல் கதா மாலா’ என்றொரு பெரிய எழுத்து ஹிந்திப் புஸ்தகம் பரிசாய்க் கிடைத்தது. அந்தப் பரிசு முக்கியமல்ல. அதற்குப் பிறகு வகுப்பறையில் வைத்து ஹிந்தி டீச்சர் கொடுத்த பரிசுதான் முக்கியம்.

அத்தனை மாணவ மாணவிகளுக்கு முன்னால், என்னை இறுக்கிப் பிடித்து, கன்னத்தில் ஒரு முத்த்த்தம்.

பரமக்குடியிலிருக்கும்போதுதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். நாங்கள் குடியிருந்த காட்டுப் பரமக்குடி ஸப் ஸ்டேஷனிலிருந்து குள்ளமான வாடகை சைக்கிளில் டவுனுக்குப் போகிற வழியில் கீழே விழுந்து உள்ளங்கையில் சைபால் தடவிக் கொண்டதெல்லாம் அப்போதுதான்.

அடுத்த வருஷம், ஸ்ரீவைகுண்டத்தில் குமர குருபரர் சுவாமிகள் ஸ்கூலில் படிக்கிறபோது, ஐயா ஒரு சைக்ளிங் எக்ஸ்பர்ட். எந்த அளவுக்கு எக்ஸ்பர்ட் என்றால், பின் சக்கரத்தில் பலூன் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் மாதிரி பட படவென்று ஒலியெழுப்ப, முன்னால் ஹாண்டில் பாரில் காங்கிரஸ் கொடியைச் சொருகி, கொடி பற பறக்க, பலூன் பட படக்க ஊரைச் சுற்றி வருகிற அளவுக்கு எக்ஸ்பர்ட்.

அந்த வருஷ எலக்ஷனில் ஏ.பி.ஸி வீரபாகு காங்கிரஸ் வேட்பாளராய்ப் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மீட்டிங். கூட்டம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்னமேயே போய் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன், “அன்று ஊமைப் பெண்ணல்லோ! இன்று பேசும் பெண்ணல்லோ” பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்காக.

காங்கிரசை ஆதரித்துச் சத்தியமூர்த்தி மன்றத்தார் நாடகம் போட்டபோது, நாடகம் ஆரம்பிக்குமுன் என்னை மேடையில் ஏற்றிவிட்டார்கள். சொற்பொழிவாற்றுவதற்கல்ல. "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல" என்று பாட்டுப் பாடுவதற்கு.

எப்படியோ, மாணவப் பருவத்திலேயே அரைக்கால் டிரவுஸரோடு அரசியல் மேடையிலேறி சாதனை படச்சாச்சி.

அதற்குப் பிறகு, மீண்டும் பாளையங்கோட்டைக்கு வந்து ஜான்ஸ் ஸ்கூலில் படித்தபோது சிநேகிதனானான் ஜெயசிங் செல்வகுமார். செய்துங்கநல்லூரிலிருந்து தினசரி பஸ்ஸில் வந்து போகிறவன். அந்த வயசிலேயே திராவிடச் சிந்தனைகள் கொண்டிருந்தவன்.

ஜான்ஸ் ஸ்கூல் டிராயிங் மாஸ்டர் என்னைப் போல ஒரு தேசியவாதி. அவரவர் கற்பனையைக் கொட்டி எல்லா மாணவர்களையும் சுதந்திரமாய் ஒரு படம் வரைந்து காட்டச் சொன்னார். நம்ம கற்பனையைக் கொட்டி நான் வரைந்த வண்ணப் படத்தில், ஒரு பூனை வானத்திலிருந்து பாராச்சூட் மூலம் பூமிக்கு இறங்குகிறது. பாராச்சூட்டில் மூணு கலர். சிகப்பு, வெள்ளை, பச்சை. என்னுடைய பூனையின் மூஞ்சி மூஞ்சுறு மாதிரி இருந்தாலும் அந்த வண்ணத் தேர்வுகளுக்காக எனக்குப் பத்துக்கு ஒன்பது மார்க். ஜெயசிங்கின் படம் என்னதை விடச் சிறப்பாயிருந்தும் அவனுக்கு நாலு மார்க்தான். அவன் ஒரு வீடு வரைந்திருந்தான். வீட்டுக் கூரையில் ஒரு கொடி பறக்கிறதாம். கருப்பு – சிகப்புக் கொடி. அந்தத் தி.மு.க படத்துக்கு நம்ம காங்கிரஸ் வாத்தியார் நாலு மார்க் கொடுத்ததே தாராளம்.

ஜெயசிங் என்னிடம் பொருமினான்.

"என்னோட படம் நல்லா இல்லியால?"

"நல்லாத்தான் இருக்குது, அதுக்கென்ன?"

"ஒன்னோட பூச்சாண்டிப் படத்த விட எம்படம் நல்லா இருக்கா இல்லியா?"

"இருக்கலாம். அதுக்கென்ன?"

"இந்த டிராயிங் மாஸ்டர் மேல கேஸ் போடப் போறேன்."

"ஹை! என்னன்னு?"

"ஓரவஞ்சனை செய்றதுக்காக. என்ன அழகா நா வரஞ்சிருக்கேன், அதுல தி.மு.க கலர் இருக்குங்கறதுக்காக எனக்கு நாலே நாலு மார்க்காம். ஒன்னோட காங்கிரஸ் கண்றாவிக்கி ஒம்போது மார்க்காம்."

"ஏல, கண்றாவின்னுல்லாம் சொல்லாத! நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் குடுத்த கச்சி காங்கிரஸ். மஹாத்மா காந்தியோட கச்சி காங்கிரஸ்.’"

"சுதந்திரம் கெடச்சவொடன கச்சியக் கலச்சிருங்கன்னு காந்தி சொன்னார்ல்லல? ஏன் கலக்யல?"

"ஆமா, ஒன்ட்ட வந்து சொன்னாராக்கும்?"

"யார்ட்ட வேணுன்னாலும் கேட்டுப் பாரு! காந்தி சொன்னார்."

"சரி, சரி! என்னோட படத்ல இருக்கறது காங்கிரஸ் கொடியில்ல. இது நம்ம தேசியக்கொடி!"

"ஆமா! ஒரே மாதிரி கலர். மத்தியில ராட்டை போட்டுக்கிட்டா காங்கிரஸ் கொடி. ராட்டையத் தூக்கிப்புட்டு சக்கரம் போட்டுக்கிட்டா தேசியக்கொடி. யாரைல்ல ஏமாத்துதீக? தேசியக்கொடில இருக்கற அதே கலர் ஒரு கச்சிக் கொடியில எப்டில இருக்கலாம்?"

எனக்குச் சுருக்கென்று குத்தியது. அதானே! தேசியக்கொடியிலிருக்கிற அதே நிறங்கள் ஒரு கட்சிக் கொடியில் எப்படி இருக்கலாம்? சக்கரம் போட்டால் தேசியக்கொடி, ராட்டையைப் போட்டுக் கொண்டால் காங்கிரஸ் கொடியா? என்னமோ உறுத்துகிறதே!

சுதந்திரம் வாங்கித் தந்த, தியாகிகள் மிகுந்திருந்த காங்கிரஸ் கட்சி காலக் கொடுமையால் இந்திராக் காங்கிரஸ்காரர்கள் கைக்குப் போய்விட்ட பின்னாலும் அதே மூவர்ணக் கொடிதான் தொடர்கிறது. ஆனால், இந்திராக் காங்கிரஸ்காரர்கள் இந்த ஒரு விஷயத்தில் நியாயவாதிகள். கொடியின் மத்தியில் பெரும்பாலும் இப்போது ராட்டையைப் போடுவதில்லை அவர்கள். இடைக்காலத்தில், ராட்டையைத் தூக்கி விட்டுப் பசுவும் கன்றும் சின்னத்தைப் போட்டிருந்தார்கள், இந்திரா காந்தி முகத்தைப் போட்டிருந்தார்கள். இப்போது, மத்தியில் கை சின்னத்தைப் போடுகிறார்கள், சோனியா படத்தைப் போடுகிறார்கள், ராகுல் படத்தைப் போடுகிறார்கள். சபாஷ்! பார்ப்பதற்குச் சந்தோஷமாய்த்தானிருக்கிறது.

"ஹலோ!"

"யாரது?"

"நா, டி.ஜெயசிங் செல்வகுமார். செய்துங்கநல்லூர்க்காரப் பையன். ஜான்ஸ் ஸ்கூல்ல ஒங்கூடப் படிச்சவன். என்ன அம்போன்னு விட்டுட்டு நீ நிகழ்காலத்துக்கு வந்துட்டியே ராஜா, ஞாயமா?"

"அடடே! சாரி, சாரி ஜெயசிங்! இரு, நா திரும்பவும் கடந்த காலத்துக்கு வர்றேன்."

அப்புறம் ஜெயசிங் என்ன சொன்னான்?

மனப்பூர்வமாய் அவன் ஒரு சாபம் கொடுத்தான்.

"ஆட்சி ஒங்க கைல இருக்குங்கற திமிர்ல காங்கிரஸ்காரப் பயலுவ நீங்க அக்ரமம் பண்ணிட்டிருக்கிகல. கர்த்தர் மேலயிருந்து பாத்துட்டேயிருக்கார் தெரியுமால? நீ வேணா பாரு, கட்டாயம் ஒங்களையெல்லாம் ஏசுநாதர் தண்டிப்பார்."

அவனுடைய சாபம் பலித்ததா, ஏசுநாதர் தண்டித்தாரா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

அல்லது ஏழாவது அத்தியாயத்தின் இறுதியில் காண்க.

–தொடர்வேன்

About The Author

1 Comment

  1. Sundar

    ஒரு காலத்தில் தொடர் பகுதியில் மனிதரில் எத்தனை நிறங்கள், அமானுஷ்யன் போன்ற அற்புதமான நாவல்கள் வந்து கொண்டிருந்ததும் திங்கள்கிழமை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது. நிலாச்சாரலின் உச்ச கட்டங்கள் அவை.

Comments are closed.