சிபி (7)

உதகமண்டலத்துக்கும் மதுரைக்கும் ஹிந்தி அணுகுமுறையில் ரொம்ப வேறுபாடு. ஊட்டியில் எல்லாத் தரப்பினரும் ஹிந்தி பேசினார்கள். கடைக்காரர்கள், சினிமா தியேட்டர் ஊழியர்கள், குதிரைக்காரர்கள், பொட்டானிக்கல் கார்டன் கைடுகள் எல்லோரும் ஹிந்தி பேசினார்கள். சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கிற ஒரு மலைவாசஸ்தலத்தில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தியை எதிர்த்துக் கொண்டிருந்தால் பிழைப்பு நாறி விடும்.

ஹிந்திப் படங்களைத் திரையிடுவதற்கென்றே கார்னேஷன் தியேட்டர் என்றொரு பிரத்யேகத் திரையரங்கம் இருந்தது.

ஊர் முழுக்க ஹிந்தி தெரிந்தவர்கள் இருந்தாலும், சுற்றுலாப் பயணிகளால் கல்லூரி மாணவர்களுக்கு ஆகவேண்டியது ஏதுமில்லையென்பதாலோ என்னமோ நான் பி.யூ.ஸி படித்த அரசினர் கலைக் கல்லூரியில் ஹிந்தி அறிந்த பையன்கள் குறைவாகவே இருந்தனர். அந்தக் குறைவான பையன்களிலும், ஹிந்தியிலும் தமிழிலும் ஒருசேரப் புலமை பெற்றிருந்த பையன்கள் ரொம்பக் குறைந்தவர்களாகவே இருந்தனர். அந்த ரொம்பக் குறைந்த பையன்களிலும், எனக்கிணையாய்த் தலைமையேற்கிற தகுதி படைத்த பையன்கள் ரொம்ப ரொம்பக் குறைந்தவர்களாகவே இருந்ததால், ஹிந்தியைத்தவிர வேறு எந்த பாஷையின் வாசனையுமே அறிந்திராத என்.ஸி.ஸி பயிற்சியாளர்களான ஹிமாச்சல் பிரதேஷ் ஹவில்தார்கள், "ஹிந்தி கோன் ஜான்த்தா ஹை?"என்று வினா எழுப்பியபோது நான் வரிசையிலிருந்து விலகி, விறைப்பாய் சவுதானில் நின்றேன்.

அப்புறம் என்ன, என்.ஸி.ஸி பரேடுகளில் அடியேன்தான் பிரதான மொழிபெயர்ப்பாளன். அதோடு, ஹவில்தாருக்கு அடுத்த நிலையில், அணியினருக்குக் கட்டளைகள் பிறப்பித்து வேலை வாங்குகிற அணித் தலைவன்.

நம்பர் ஏக் கடா ரஹே, தோ தோ கதம் ஆகே, தீன் தோ கதம் பீச்சே, ஆகே பீச்சேச் சல்.

ப்ளட்டூன், தீனோந்த்தீன்மே பாயேஞ் சலேகா, பாயே மூட்.

தேஸ்ச் சல்.

லெஃப்ட் ரைட், லெஃப்ட் ரைட்…

எல்லாப் பசங்களுக்கும் நம்ம மேலே அப்பவே ஒருகாழ்ப்புணர்ச்சி.

மற்ற எல்லா செக்ஷன்களிலும் மாணவர்களுக்குச் சரிவிகிதத்தில் மாணவிகள் வியாபித்திருக்க, கணிதத்தைப் பிரதானப் பாடமாய்க் கொண்ட எங்க ஏ செக்ஷனில் மட்டும் பெண்களின் ஜனத்தொகையே இல்லை என்கிற கடுப்பு வேறே.

அரவனூர் அரண்மனையில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவியின் ‘அன்பே வா’ ஷூட்டிங். பிறகு, பொட்டானிகல் கார்டனில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’.

‘அன்பே வா’வைத் தொடர்ந்து கார்டனில், ‘ஆத்மி’ஷூட்டிங். திலீப்குமார் – வஹிதா ரெஹ்மான் நடித்த ஆத்மி. ‘ஆலயமணி’யின் ஹிந்திப் பதிப்பு. படம் வடக்கத்திப் படம் என்றாலும் தயாரிப்பாளர் நம்ம ஊர்க்காரர். பி.எஸ்.வீரப்பா.

வஞ்சிக்கோட்டை வாலிபனில், "சபாஷ் சரியான போட்டி"என்கிற சாகாவரம் பெற்ற வசனத்தை அட்டகாசமாய் உச்சரித்து,அதை ஓர் ஆவணமாக்கிய வீரப்பா.

வீரப்பாவை விரட்டிப்போய் ஆட்டோகிராஃபெல்லாம்வாங்கியாச்சு.

தமிழ்ப் படங்களில் தனி முத்திரை பதித்த வில்லன்கள் ரெண்டு பேர். ஒருவர் பி.எஸ்.வீரப்பா, மற்றவர் எம்.ஆர்.ராதா.

அட்டகாசத்துக்குப்பி.எஸ்.வீரப்பாஎன்றால்,ஆர்பாட்டத்துக்கு எம்.ஆர்.ராதா.

குரலில் ஏற்ற இறக்கம், நெளிவு சுளிவோடு, வில்லத்தனத்துக்குள்ளே ஹாஸ்யத்தைப் புகுத்தித் திரையரங்குகளைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தவர். கலகலப்பாய்ப் போய்க்கொண்டிருக்கிற எம்.ஆர்.ராதாவுடைய மேடை நாடகங்கள், கை கலப்பில் முடிந்த கதைகளெல்லாம் உண்டு. நகைச்சுவை வில்லன் வேடத்தில் எம்.ஆர்.ராதாவைப்போலச் சாதனை படைத்த நடிகர் உலக அளவிலே கூட ஒருவரும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம்.

இலங்கை வானொலிக்காக எம்.ஆர்.ராதாவைப் பேட்டி கண்ட மயில்வாகனன், விழுந்து விழுந்து சிரித்த சிரிப்பு இன்னுங்கூடக் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஆர்.ராதாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஒரு செவி வழிச் செய்தி. உதவி இயக்குநரிடம் தன்னுடைய வசனத்தைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு, மனப்பாடம் செய்ததை அப்படியே மைக்கின் முன்னே கக்கி விடாமல், அதில் தன்னுடைய சொந்தச் சரக்கையும் கலந்து கலகலப்பாக்குவாராம்.

எம்.ஆர்.ராதாவுடைய தனி ஆவர்த்தனப் படமான ரத்தக் கண்ணீரில், பார்வை பறிபோன குஷ்டரோகியாய் அவர் அசத்துகிற காட்சிகளில் தியேட்டர்கள் ஸ்தம்பித்துப் போயின.

கண்பார்வை பறிபோன குஷ்டரோகியின் நண்பனான எஸ்.எஸ்.ஆரிடம், அதிகக் கூலி கேட்டுத் தொந்தரவு செய்கிற போர்ட்டரைத் திட்டுகிறார் எம்.ஆர்.ராதா.

அந்தப் போர்ட்டர் இவரை ஏசுகிறான்.

"ஒனக்கு இப்டி வாய் இருக்கறதாலதான் கடவுள் ஒன்னஇந்த மாதிரி வச்சிருக்கார்."

போர்ட்டருடைய வசைக்கு எம்.ஆர்.ராதா பதிலாய்க்கொடுக்கிறார் ஒரு சம்மட்டியடி.

"ஆமாமா, கடவுள் ஒங்களயெல்லாம் டாப்ல வச்சிருக்காரு,எங்கள அண்டர் கிரவுண்ட்ல வச்சிருக்காரு. போடா."

அரை நூற்றாண்டுக்கு முந்திய திரைப்படம் ஒன்றில், இப்படியொரு நறுக்குத் தெறிக்கிற வசனம்!

தேவதாஸ், சந்திரலேகா, பராசக்தி, நாடோடி மன்னன், பாவ மன்னிப்பு, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், எங்க வீட்டுப் பிள்ளை, கர்ணன், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற, தமிழ்த் திரையுலக வரலாற்றில் மைல் கற்களாய் முத்திரை பதித்த படங்களின் பட்டியலில், எம்.ஆர்.ராதாவுடைய புரட்சிப் படமான ரத்தக் கண்ணீருக்கும் நிச்சயமாய் ஓர் இடம் இருக்கிறது.

சிவாஜி படங்களில், சிவாஜி கணேசனோடு எம்.ஆர்.ராதா தோன்றுகிற காட்சிகளில், அடக்கி வாசிக்க அவர் வற்புறுத்தப்பட்டதாகவும் ஒரு வதந்தி உண்டு.

படப்பிடிப்புக் குழுவினரும், சக நடிகர்களும் எம்.ஜி.ஆருக்கு முன்னால் கை கட்டி வாய்பொத்தி நின்று மரியாதை செய்து கொண்டிருந்த கஷ்ட காலத்தில், "என்ன ராமச்சந்திரன்"என்று எம்.ஜி.ஆரைப் பெயர் சொல்லி அழைக்கிற தெனாவட்டுக்காரர் என்றும் எம்.ஆர்.ராதாவைப் பற்றிச் சொல்லுவார்கள்.

அந்தத் தெனாவட்டின் டிகிரி கொஞ்சம் கூடிப்போனதோ என்னமோ, எம்.ஜி.ஆரின் மேலே எம்.ஆர்.ராதாதுப்பாக்கியைப் பிரயோகித்துவிட்டார்.

டைரக்டர் சொல்லாமலேயே.

நிஜத் துப்பாக்கியை.

தொண்டையில் குண்டு பாய்ந்து குணமடைந்த எம்.ஜி.ஆர்வெற்று மார்போடு, மேனியெங்கும் பேண்டேஜோடு, கூப்பிய கரங்களோடு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடச் சொல்லி வேண்டுகிற சுவரொட்டிகள் ஊட்டியெங்கும் ஒட்டப்பட்டிருந்தன.

தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட அசம்பாவிதத்தைத் தி.மு.க செமித்தியாய் சாதகப்படுத்திக் கொண்டது.

1967 பொதுத்தேர்தல்.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு திருப்புமுனை.

நீலகிரியிலிருந்து தரையிறங்கித் திரும்பவும் பாளையங்கோட்டையில் நான்.

தேர்தல் முடிவுகளை ரேடியோவில் கேட்கவே பிடிக்கவில்லை.

ரேடியோவை அணைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, வடக்கு பஜார் ரோடில் ராத்திரி வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது, சக பாதசாரிகள், சைக்கிளில் போகிறவர்கள், பஸ் ஸ்டாப்பில் நிற்கிறவர்கள், சாலையோர லாலாக் கடையில் அல்வா வாங்கித் தின்றுகொண்டு நின்றிருந்தவர்கள் எல்லோரும் தேர்தல் முடிவுகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததைக் காதில் வாங்கிக் கொள்ளவே மனசாகவில்லை.

பின்னாலிருந்து ஒரு கை வந்து அதிரடியாய் என் முதுகில் இறங்கியது.

யாரென்று திரும்பிப்பார்த்தால், அஞ்சு வருஷங்களுக்கு முந்தி பார்த்த முகமொன்று, உதட்டுக்கு மேலே மென் மயிர்கள் படர்ந்த முகமொன்று என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

ஜெயசிங் செல்வகுமார்.

செய்துங்க நல்லூர்க்காரப் பையன்.

ஜான்ஸ் பள்ளிக்கூட சிநேகிதன்.

எனக்காகவும், அந்த அப்பாவி டிராயிங் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்துக் காங்கிரஸ் அனுதாபிகளுக்காகவும், அகில இந்தியாவிலுமிருக்கிற எல்லாக் காங்கிரஸ்காரர்களுக்காகவும் ஏசுநாதரின் தண்டனையை யாசித்தவன்.

ரொம்பக் குதூகலமாயிருந்தான். உச்சக்கட்டப் புளகாங்கிதத்திலிருந்தான்.

"ஒங்கக் காங்கிரஸ் அம்பேல் ஆயிரிச்சி டேய்!தமிழ்நாட்ல இனி எங்க ஆட்சி"என்று உரக்கக் கூவினான்.

"கொஞ்சம் வாயத் தொற டேய்"என்றான்.

அனிச்சையாய்த் திறந்த என்னுடைய வாய்க்குள்ளே திருநெல்வேலி அல்வாத் துண்டு ஒன்றை ஊட்டினான்.

"இது எதுக்குத் தெரியுமா டேய்?"

"அதான் சொன்னியே."

"நா பாதியத்தான் சொன்னேன். மீதியையும் கேட்டுக்க. ஒங்கத் தலைவர் காமராஜர் விருதுநகர்ல அவுட்."

–தொடர்வேன்…

About The Author