சிலம்பாட்டம் – இசை விமர்சனம்

எத்தனையோ ஒளிப்பதிவாளர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக முயற்சி செய்திருக்கிறார்கள். வெற்றி அடைந்தவர்களும் உண்டு; தோல்வி அடைந்து மீண்டும் கேமரா பக்கம் திரும்பியவர்களும் உண்டு. இத்திரைப்படத்தில் கேமராமேன் சரவணன் இயக்குனர் ஆகிறார்.

பெயரிலிருந்தே தெரியவேண்டாமா யார் கதாநாயகன் என்று! இத்திரைப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினேகா நடிக்கிறார். புதுமுகம் சானா கான் கோயில் பூசாரியாக வரும் ‘சிம்பு’வுடன் இருப்பது போல நிறைய புகைப்படங்களை இணையத்தில் காணலாம். இன்னும் சில வாரங்களில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்கலாம். மீண்டும் சிலம்பரசனுடன் இணைகிறார் யுவன் ஷங்கர் ராஜா! அவருக்கே உரிய பாணியில், சிலம்பரசன் விரும்பும்படியாக பாடல்களை தந்துள்ளார் – நமக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்!!

சிலம்பாட்டம்

சிலம்பரசனுக்கு அறிமுகப் பாடல் போல! பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை இசை. வேகமான பீட்ஸ் அமைந்த பாடல் – அவ்வளவுதான்! ஷங்கர் மஹாதேவன் கணீர் குரலில் பாடியுள்ளார். ரஜினிக்கு ஆரம்பப் பாடல் எழுதிக் கொண்டிருந்த வாலி, அப்பொழுது எல்லாருக்கும் எழுத ஆரம்பித்துவிட்டார். தமிழை பாராட்டுவதோடு, நாயகனையும் பாராட்டித் தள்ளுகிறார். சிவாஜி திரைப்படத்தில் ரஜினி ஏதோ "பஞ்ச் டயலாக்" சொல்லப் போக, விவேக் சொல்லுவார், "விடல பசங்கள்ளாம் விரல் சொடுக்கறாங்க!". அந்த வசனத்தின் பொருள் இன்னும் யாருக்கும் புரியவில்லை போலும்!

நலந்தானா

ஆறரை நிமிடத்திற்கு ஒரு பாடல். அற்புதமான பாடல் என்று சொல்ல ஆசை தான். ஆனால் உண்மை என்னவென்றால், எப்பொழுது முடியும் என்ற கேள்வி சீக்கிரமே எழுந்து விடுகின்றது. "உடலும் உல்லமும் நலந்தானா" என்று சிலம்பரசன் பாடினால் எப்படி நலமாக இருக்க முடியும்? பிரபலமான பழைய பாடல்களிலிருந்து சின்னச் சின்ன வரிகளை எடுத்து ஒரு முழு பாடலை எழுதியிருக்கிறார் கங்கை அமரன். அங்கங்கே "ஜோடி நம்பர் ஒண்ணு", "மானாட மயிலாட" என்று சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பெயர்கள் வேறு! நடு நடுவே ராப்! எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், தலை கால் புரியவில்லை. கடைசியில் மைல் நீளத்திற்கு பெர்குஷன் வேறு! என்னதான் சொல்ல விரும்புகிறார்களோ!! கடவுளே!

மச்சான் மச்சான்

யுவன் ஷங்கர் ராஜாவை மனதார பாராட்ட வேண்டும். இம்மாதிரி பாடல்களை தரும் பொழுதுதான் தான் இன்னாருடைய மகன் என்று நிரூபிக்கின்றார். ஒரு நல்ல காதல் டூயட். நா.முத்துகுமாரின் முத்தான வரிகள். பாடியிருப்பது இசைஞானியே! பெண் குரல் பெலாஷெண்டே – பரவாயில்லை, தமிழில் பாடுகின்றார்! ஆச்சரியம் என்னவென்றால் அறுபத்தி ஐந்து வயதிலும் அவ்வளவு அழகாக பாடுகிறார் ராஜா! "கொன்னுபுட்டே" என்று உச்சஸ்தாயியில் பாடும் சமயம் – அப்பப்பா!! யுவன் ஷங்கர் ராஜாவிடம் இன்னும் சரக்கு மிச்சம் உள்ளது!!

வெச்சுக்கவா

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு பற்றாக்குறை போலுள்ளது. புதிதாக ஏதேனும் செய்ய ஏன் இத்தனை தயக்கம்? மீண்டும் மீண்டும் ஏன் பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் கெடுக்க வேண்டும்!! சிலம்பரசனிடம் யாரேனும் சொல்லவேண்டும் – இப்படிப் பாடினால் யாரும் அவரை "நெஞ்சுக்குல்ல வச்சுக் கொல்ல" மாட்டார்கள்! சுசித்ரா வழக்கம் போல பொளந்து கட்டுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அதிக வேலை இல்லை. கொஞ்சம் பீட்ஸை மட்டும் மாற்றி அமைத்துவிட்டார்.

வேர் இஸ் தி பார்ட்டி

"நான் டி.ராஜேந்தரின் மகனாக்கும்" என்று சொல்வது போல சிலம்பரசன் பாடல் எழுதியுள்ளார் – ‘டோல் பையா! டால் பையா! டையா! டுமீலே! டும்மா டும்மா கொய்யா!’ சென்னைத் தமிழில் அழகாக பாடியிருப்பவர்கள் முகேஷ் மற்றும் பிரியதர்ஷினி. இருவரும் பாராட்டுக்குரியவர்கள், குறிப்பாக மகேஷ். கொஞ்சம் வித்தியாசமான பாடல். இளைஞர்களைக் கவரலாம். நன்றாகவே இசையமைத்திருக்கின்றார் யுவன். ஏதோ ஒரு பிரபலமான பாடலிலிருந்து முதல் வரியை சுட்டிருக்கிறார்கள். அப்பட்டமான ‘காப்பி’. என்ன பாட்டு என்று ஞாபகம் வரவில்லை!! புஷ்பவனம் குப்புசாமியின் பழைய பாடல் தட்டுகளை எடுத்துக் கேட்கவேண்டும்!

ஐந்து பாடல்களுடன் இசைத்தட்டு முடிந்துவிட்டது – நல்லவேளை! ஒரே ஒரு பாடல் தனித்து நிற்கின்றது. இசைத் தட்டின் கடைசி பாடல் நல்ல முயற்சி. மற்றவை எல்லாம் "ஸோ-ஸோ"!

சரி, எனக்கு முக்கியமான வேலை இருக்கின்றது. முதலில் "நல்லவனுக்கு நல்லவன்" பாடல்களைத் தேடி எடுத்து, யேசுதாசின் குரலைக் கேட்க வேண்டும்! அப்பொழுதுதான் ஜென்ம சாபல்யம் ஆகும்! அதை மட்டும்தான் நெஞ்சத்தில் வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்!

கடைசியாக, இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்! தயவு செய்து கொஞ்சம் சொந்தமா யோசிங்களேன்!!”

About The Author

2 Comments

  1. karthikeyan

    அய்யா பாடல் எழுதினால் தான் தெரியும் அந்த வலி சும்மா விமர்சனம் பன்னாதிஙக சரியா படம் வந்தபெரகு பார்க்கலம் சிம்புன்னா சும்மா இல்ல மமு

  2. Rishi

    அகில உலக சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் கார்த்திகேயன் வாழ்க!
    கார்த்தி.. கோச்சுக்காதீங்க.. சும்மா ஜாலிக்கு..

Comments are closed.