சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே,

எப்படி இருக்கீங்க? கத்திரி வெயில் சுட்டெரிக்க ஆரம்பிச்சிடுச்சு. உடம்பில் தண்ணி சத்து அதிகமா செலவாகாமப் பாத்துக்க நிறைய தண்ணி குடிக்க சொல்றாங்க. தர்பூசணி, வெள்ளரி முக்குக்கு முக்கு கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும் பாருங்க, ருசி கண்ட நாக்கு, தர்பூசணியையும், வெள்ளரியையும் மருந்தாத்தான் நினைக்குது. மோர் குடிக்கலாம். ஆனாலும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவுக்கு மேலமாசி வீதில குடுப்பாங்க பாருங்க, அந்த மோருக்கு ஈடே இல்லைங்க. வஞ்சனையே இல்லாம மாங்காய், இஞ்சி, கொத்துமல்லி எல்லாம் போட்டு செம்பு செம்பா குடுப்பாங்க. அரசியல்வாதிங்க மாதிரி காரியத்துக்காக பிரியாணி போடாம, சேவைக்காக பண்றதாலதான் அத்தனை சுவையோ என்னவோ..

எங்க என்ன சாப்பாடு கிடைக்கும்னு மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கன்னு நீங்க சொல்றது காதுல கேட்குது. சம்பாதிக்கிறதே எண் சாண் வயித்துக்குதான்னுதாங்க நான் சொல்வேன். இந்த வெயிலுக்குக் குளுமையா உங்க கிட்ட ஏதாவது ருசியான வழி இருந்தா எழுதிப் போடுங்க.

நண்பர்கள் அனுப்புற மின்னஞ்சல்கள்ல நிறைய சிந்திக்க வைக்கிற தகவல்கள் வருது. அப்படி வந்த அஞ்சல்ல ஒன்னு உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சேன்:

ஒரு அந்நியோன்யமான தம்பதியருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து ஒரு பையன் பிறக்கிறான். அவனுக்கு இரண்டு வயது நிரம்பியது. ஒரு நாள் அந்தக் கணவர் வேலைக்குக் கிளம்பும் போது மருந்துக் குப்பி ஒன்று திறந்து கிடப்பதைப் பார்க்கிறார். அடுப்படியில் வேலையாயிருக்கிற மனைவியிடம் அதை உள்ளே எடுத்து வைக்கச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். வேலையில் மூழ்கியிருந்த மனைவியோ அதை மறந்துவிடுகிறார். சின்னப் பையன் மருந்தைத் தெரியாமல் எடுத்துக் குடிக்கிறான். அது பெரியவங்க அளவோட எடுத்துக்க வேண்டிய மருந்து. கொஞ்ச நேரத்தில் குழந்தை மயங்கி விழ அம்மா பதறிப் போய் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போகிறார். அங்கே அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. விஷயம் கேள்விப்பட்டு அந்த அப்பா அங்கு வந்து இறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு, அங்கு நிற்கிற தன் மனைவியிடம் சொல்கிறார்……
என்ன சொல்லிருப்பார்னு யோசிச்சு வைங்க. அரட்டையோட முடிவில சொல்றேன்.

தேர்தல் பிரச்சாரமெல்லாம் சூடுபிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. நல்லவங்களுக்கு ஓட்டு போடுங்க. இல்லைன்னா, எனக்கு ஓட்டு போட விருப்பமில்லைன்னு ஓட்டு போடுங்க.. அது எப்படின்னு கேட்கறீங்களா? இந்தத் தளத்தில் போய் பாருங்க..

http://erasmus-in-india.blogspot.com/2006/07/rule-49-o.html

என் நண்பன்கிட்ட யாருக்குடா ஓட்டு போடுவன்னு கேட்டா, ‘இருக்கிறதில் சின்னத் திருடன் யாருன்னு பார்ப்பேண்டா, அவனுக்குதான் என் ஓட்டு’ அப்படின்னான். அதென்ன கணக்குன்னு கேட்டா, “ஒரு திட்டத்துக்கு அரசாங்க ஒதுக்கீடு 10 லட்சம்னா, அதில் 6 லட்சம் திட்டத்துக்கு உபயோகிச்சுட்டு, 4 லட்சத்தை அமுக்கறவன் சின்னத் திருடன். 1 லட்சம் திட்டத்துக்கு உபயோகிச்சுட்டு, 9 லட்சம் அமுக்கறவன் பெரிய திருடன்” அப்படிங்கறான். நல்லாருக்கு அவன் கணக்கு. சுயேட்சைக்கு ஓட்டுப் போடலாமேன்னு சொன்னா, ‘சுயேட்சைக்கு போடுற ஓட்டு, பெரிய தலைங்க ஓட்டிலிருந்து பிரிஞ்சு வர்றது. இதனால் இவனும் ஜெயிக்காம, அவனும் ஜெயிக்காம, கடைசியில் எல்லாத் திருடனும் ஒன்னு சேர்ந்து கூட்டணித் திருட்டு, அதாவது கூட்டணி ஆட்சி அமைச்சிடுவாங்க. அப்புறம் அந்த 1 லட்சம் ஒதுக்கீடு கூட தொகுதிக்குக் கிடைக்காது’ன்னான். அவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு. அரசியல்வாதிங்களோட சொத்து விவரமெல்லாம் கூட தகவல் அறியும் சட்டம் மூலமா தெரிஞ்சுக்கலாம். அது எப்படின்னு இங்க சொல்லிருக்காங்க:

 http://eci.nic.in/right-to-information/right-to-information.asp

அப்புறம் எனக்கொரு தகவல் தேவைப்படுதுங்க. என் அலுவலகத்தில் ஒருத்தர் DELL மடிக்கணினி வச்சிருக்கார். வாங்கி ஆறு மாசத்திருந்து பிரச்சினைக்கு மேல பிரச்சினை. கிட்டத்தட்ட எல்லா பாகங்களும் (அதுவும் புதுசு இல்ல, மறு உபயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டது) மாத்திட்டாங்க. கடைசியில் 10 நாள் கொண்டு வச்சுப் பாருங்கப்பான்னு குடுத்தனுப்பிச்சுட்டார். திரும்பக் கொண்டு வந்து கொடுத்ததைப் பார்த்தா, முன்னிலும் சொத்தை. உபயோகிக்க முடியாத நிலைமைக்குப் போயிடுச்சு. எனக்கு புதுசு மாத்திக் குடுன்னு மின்னஞ்சல் அனுப்புனார். வாடிக்கையாளர் சேவை மையத்தோட பேசிப் பார்த்தார். ஒன்னும் கதைக்கு ஆகலை. வேணும்னா பாகங்களை (அதுவும் புதுசு இல்ல, மறு உபயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டது) மாத்தித் தர்றோம். புதுக் கணினி தர முடியாதுன்னுட்டாங்க. அவர் என்ன சொன்னார்னா, சரிபடுத்து, ஆனா திரும்ப பிரச்சினை வராதுன்னு எழுதிக்குடு. ஏன்னா ‘உத்தரவாத’ (warranty) காலம் வேற முடிஞ்சுடுச்சு (வேணும்னே சரி படுத்தாம இழுத்தடிச்சுட்டாங்களோன்னு ஒரு சந்தேகம் வேற இருக்கு). உபயோகிக்க முடியாத அளவு ஆகிப்போனப்புறம், உத்தரவாதம் இல்லாம எந்த சேவையையும் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டார். ‘சிறந்த வாடிக்கையாளர் சேவை’ன்னு பேர் வாங்கின DELL ஒரு பதிலும் சொல்லாம இரண்டு வாரமா மவுனம் சாதிக்கிறாங்க. கிட்டத்தட்ட 60000 குடுத்து வாங்கி 6 மாசம் கூட ஒழுங்கா வேலை செய்யலைன்னா, எப்படி இருக்கும்? அவரோட 2 வருட சேமிப்பில் வாங்கினது. நுகர்வோர் நீதிமன்றத்துக்குப் போகலாம்னு யோசிக்கிறார். அதுக்கு என்ன வழிமுறை, நியாயம் கிடைக்குமா இதெல்லாம் பத்தி அதிகம் தெரியலை. உங்களுக்கு தெரிஞ்ச தகவலை(அது அணுவளவானாலும் சரி) எழுதி அனுப்புங்க. ரொம்ப உபயோகமாயிருக்கும்.

இப்போ உங்களை சிரிக்க வைக்க ஒரு சின்ன புகைப்படக் கண்காட்சி [கடைசிப் படத்தைக் கட்டாயம் பாருங்க]:

http://www.worldofindia.com/interesting/panda/

சரி நம்ம மின்னஞ்சல் கதைக்கு வருவோமா? அந்தக் கணவர் அவர் மனைவியைப் பார்த்து அவர் குழந்தை இறந்த நேரத்தில் சொன்னது இது தாங்க:

‘கவலைப்படாதே, உன்கூட நான் இருக்கேன்’.

கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது அன்னைக்கு அந்தக் கணவர் தன் மனைவியைப் பார்த்து சொன்னது. குழந்தை இறந்துடுச்சு. அதைத் திரும்ப உயிரோட கொண்டுவர முடியாது. தன் மனைவியைக் குறை சொல்றதில் அர்த்தமில்லை. அவரே அந்த மருந்துக் குப்பியை எடுத்து வச்சுட்டுப் போயிருந்திருக்கலாம். யாரைக் குறை சொல்ல? அவரை மாதிரி தானே அவர் மனைவியும் குழந்தையைப் பறிகொடுத்திருக்காங்க…

அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்குத் தேவையாயிருந்தது ஆறுதலும், அரவணைப்பும். அதை அந்தக் கணவர் கொடுத்தார். இருக்கிற உயிரை நோகடிக்காமப் பார்த்துக்கிட்டார்.

எல்லாரும் அவரோட கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிச்சா, உலகத்தில் இத்தனை பிரச்சனை இருக்காது.
இந்தக் கதை சொல்ற கருத்து ரொம்ப அழகானது, “சில சமயங்களில், ஒரு பிரச்சினைக்கு யார் காரணம், யார் குற்றவாளின்னு ஆராய்றதுக்காகவே நாம நேரத்தை செலவிடுறோம். அது உறவாகட்டும், வேலையாகட்டும், நட்பாகட்டும்.. இப்படி செய்றதால, நாம இழப்பதென்னவோ ‘வாழ்க்கை’யைத் தான்..”

ஆழமான கருத்து தானே? நாமும் நம் உறவை, நட்பை, வாழ்க்கையை இழக்காம வாழ்வோம்.

அன்புடன் விடைபெறுவது,

ஜோ

About The Author

9 Comments

  1. C.PREMALATHA

    அரசியலைப்பற்றி பேசி அறுக்காம ஒரு உண்மைக் கதையை சொல்லி மனசைத் தொட்டுவிட்டீர்கள். வாழ்க நீங்கள்! வளர்க உங்கள் பணி.

  2. Dr. S. Subramanian

    ஜோ:
    எங்களுக்கெல்லாம் எண் சாண் உடம்பு ஒரு சாண் வயிறு. உங்களுக்கு மட்டும் எப்படி எண் சாண் வயிறு?
    ரொம்பப் பசி எடுக்குமே

  3. Jo

    சுப்ரமணியன் சார்.. கை தவறி எழுதிட்டதை சரியாப் பிடிச்சுட்டீங்களே. நீங்க கணிப்பொறி துறையில் ‘ ஆ சேர்ந்தீங்கன்னா, என் பொழப்பு அம்பேல். இந்த ஒரு சாண் வயிறோட பசியையே அடக்க முடியல, எட்டு சாணா?????????.

  4. Mahendra Raj

    To check the warrently you can use the below link. For my knowledge any computer prodcut will have atleast 1 year warrenty. Pls ask ur friend to check the warrenty.

    http://support.ap.dell.com/support/topics/topic.aspx/ap/shared/support/en/warranty_information?~ck=ln&c=in&l=en&lnki=0&s=gen

    I am also using DELL laptop only, less complaint in DELL. There may be one or two manufacturing defect. DELL may replace the LAPTOP if he knock the door with full details(warrenty, history of problem).

  5. Jo

    Hi Mahendra Raj

    Thanks for your reply on Dell issue. My friend has sent complete details – warrenty, history of problems everything. But they are not replacing the system. If one or two problems, he would have sustained. The system is not in working condition now (hardly within one year). But they are trying to compromise that they will replace parts (refurbished parts) but no guarantee. They are asking him to pay another 10000 rs for extended warranty. He would have paid if problems are less. But investing more on it is a waste. Thats why my friend is approaching consumer court.

    Thank you

  6. Jo

    ப்ரேமா, மகி, சிவா எல்லாருக்கும் நன்றி.. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

  7. Dr. S. Subramanian

    ஜோ:
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    உங்களது நிலாச்சாரல் குழுமத்தில் உள்ள எல்லோருக்கும் கூடத்தான்!
    வாழ்க தமிழர்கள், வளர்க தமிழ், ஓங்குக தமிழகம்!

Comments are closed.