சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே,

நீண்ட நாளுக்கு அப்புறம் எழுதினதால சென்ற அரட்டையில சுருக்கமான விஷயங்களோட முடிச்சிட்டேன். அதான் இந்த வாரம் கொஞ்சம் அதிகப்படியான விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்ன்னு இருக்கிறேன்.

இந்த வருட பட்ஜெட்டுல, வரிக்கான வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. ஆண்களுக்கு 1.4 லட்சத்தில் இருந்து 1.5 லட்சத்துக்கும், பெண்களுக்கு 1.9 லட்சத்தில் இருந்து 2 லட்சத்துக்கும், வயதானவர்களுக்கு 2.4 லட்சத்தில் இருந்து 2.5 லட்சத்துக்கும் உயர்த்தியிருக்காங்க. இதனால இப்ப வரி கட்டுறவங்களோட எண்ணிக்கை குறையிறதுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கு. மேலும் நமது நாட்டில் வரி விதிப்புத்தொகை அதிகமா இருக்குங்கிறது ஒரு தரப்பினரோட ஆதங்கம். சுமாரா 110 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் மூன்றரைக் கோடி மக்கள் மட்டும்தான் நேரடியான வரி செலுத்துபவர்களாம்!!

அதனால் வரி கொடுப்பவர்களிடம் அதிகமாக வரி வாங்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வரி கட்டுவோர் விகிதம் அதிகமாகிறதோ அப்போதான் வரி கட்டும் தொகை மிகக் குறைந்து நாட்டில் வளம் கொழிக்கும். ஆனால் நம் நாட்டின் கண்களாகிய விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்து வருவது வருத்தத்துக்குரியதே.

விவசாயிகளுக்கு சரியான மதிப்பளிக்க மறந்துவிட்டோமா அல்லது காலப்போக்கில் மறுத்துவிட்டோமா? தெரியவில்லை. அவர்களிடம் இருந்து தானிய வகைகளை அடி மாட்டு விலைக்கு வாங்கிவிட்டு, இங்கு கொள்ளை லாபத்திற்கு அவைகளை விற்பது யார்? அரசு உருவாக்கியஉழவர் சந்தை என்ற தற்போது எத்தனை ஊர்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது? என்ன நண்பர்களே.. உங்கள் ஊரில் அப்படி ஒன்று இருக்கிறதா? அது எப்படி செயல்படுகிறது? சொல்லுங்களேன்.

ஆமா.. இந்த வருட மகாசிவராத்திரி அன்னிக்கு யார் யாரெல்லாம் இரவு முழுவதும் முழிச்சிருந்தீங்க? அட இவ்வளவு பேர்தானா? இந்த வருடம் மகாசிவராத்திரி எந்த மாதம்கறதுல நிறையவே குழப்பிட்டாங்க. சில கோவில்கள்ல இந்த வருடம் தை மாதம்தான் கொண்டாடணும் அப்படின்னும், இன்னும் சில கோவில்கள்ல.. இல்லவே இல்ல, மாசி மாதம்தான் கொண்டாடணும்ன்னு சொன்னாங்க. ஆனா சில சாஸ்திர சம்பிரதாயங்களின்படியும், சரியான கணிப்புகளின்படியும் இந்த வருடம் தை மாதமே மகாசிவராத்திரி கொண்டாடணும்ன்னு சொன்னாங்க. அதுசரி.. நான் விஷயத்துக்கே வரலியே!

ங்..ம். ஏன் மகாசிவராத்திரி அன்னிக்கு மட்டும் இரவு முழுவதும் கண் முழிச்சி இருக்கணும்? சென்னையில பல தியேட்டர்கள்ல இன்று இரவு ஸ்பெஷல் ஷோ என்று மூன்று படங்களை சொற்ப டிக்கெட் பணத்தில் காண்பித்தனர் சிவராத்திரி அன்று. இதற்காகவா இந்த சிவராத்திரி? என்ன கொடுமை சார் இது..!!

அனைத்து சிவாலயங்களிலும் அன்று இரவு முழுவதும் பூஜைகளும், மந்திரம் ஓதுதலும், சுலோகங்கள் ஜபித்தலும் சிறப்பாக இருந்திருக்கும். நான் கோயம்புத்தூரில இருக்கிற வெள்ளியங்கிரி மலைக்குப் போயிருந்தேன். ஏழு தொடர் மலைகளைக் கடந்து போய் சுயம்புலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதிலும் ஏழாவது மலையைப் பார்த்தவுடன் தலை சுற்றிவிடுகிறது, பழனி மலையைப் பார்த்ததொரு உணர்வு. மற்ற மலைகளில் இருந்ததைவிட ஏழாவது மலையில் பலத்த சிவநாமம் மக்களிடமிருந்து. ஏழாவது மலையைப் பார்த்த பயத்தை மறைக்கவா? அல்லது விலங்குகளின் நடமாட்டத்தைக் குறைக்கவா? தெரியவில்லை.

அப்புறம்.. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில், இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆறுதலுக்கு பாகிஸ்தானை வெற்றி கொண்டதோடு சரி! ஹாக்கியை ஒலிம்பிக் போட்டியில் சேர்த்துக்கொண்ட பின்பும் இந்தியா எத்தனையோ தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தது. அப்படிப்பட்ட அணிக்கு இப்போது என்ன ஆயிற்று? ஹாக்கி வீரர்களின் ஒட்டு மொத்த பதிலும் மக்களைச் சாடுவதாகவே இருக்கிறது. மக்கள் ஹாக்கிப் போட்டியைத் தவிர்த்து விடுகின்றனர்.. அதனால் எங்களுக்கு சரியான ஸ்பான்சர்ஷிப் கிடைக்கவில்லை. ஆதலால் தரமான பயிற்சிகளும் கிடைப்பதில்லை என்கின்றனர். அவர்கள் கூற்றிலும் முற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது!

ஆனாலும் மக்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பார்க்கிறார்கள், அவர்களைக் குறை கூறியும் பயனில்லை. இன்றைக்கு தெருவுக்குத் தெரு கிரிக்கெட் விளையாட்டே பிரதானமாக இருக்கிறது. இருவர் இருந்தால் போதும் கிரிக்கெட் விளையாடலாம், ஆனால் ஹாக்கியில் அது சரிப்படாது. இப்படி இருக்கையில் பணம் கொழிக்கும் களமாக கிரிக்கெட் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அரசும் வருமானம் வரும் துறையையே மேலும் மேம்படுத்த முயற்சிக்கும். அதற்காக வருடத்துக்கு ஒரு முறை இந்தியாவின் தேசிய விளையாட்டை மாற்ற முடியாதுதான். வருங்காலத்தில் இந்திய ஹாக்கி அணி உயிர்த்தெழும் என்று நம்புவோம். அதற்கு இந்திய விளையாட்டுத்துறை என்ன செய்யலாம்? நண்பர்களே, உங்களுக்குத் தோன்றும் ஐடியாக்களை எடுத்து விடுங்கள்.

செய்தி…
"அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்"
"பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது"

என்ன பயந்துட்டீங்களா? இதெல்லாம் நம்ம நாட்டிலன்னு நினைச்சிங்களா? அதான் இல்லை, தென்கொரியாவில். இந்த நாட்டோட மக்கள் தொகை ஐந்து கோடி. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறதாம். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் நம்ம நாட்டுல, ஜெட் வேகத்துல மக்கள் தொகை பெருகி வருகிறது. "நாம் இருவர், நமக்கு ஒருவர்" என்று சொல்லி வந்த நம் அரசு, இப்போது "நாமிருவர், நமக்கேன் இன்னொருவர்?" என்று சொல்லவும் கூடும்! குழந்தை உண்டாகிவிட்டால், உடனே அது என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. நம்ம வீட்டில் இருக்கும் வயதானவர்கள் என்ன குழந்தை என்று சரியாக கணித்துச் சொல்லிவிடுவார்கள். பிறக்கப் போகுறது என்ன குழந்தைன்னு கண்டுபிடிக்குறதுக்கு ஒரு அட்டவணை உள்ளதாமே!

இந்த அட்டவணை 700 வருடங்களுக்கு முன்னால் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாம். புராண இதிகாசத்தின்படி, இது பீஜிங்கில் உள்ள ஒரு அரசனின் சமாதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாம். அந்த சமாதியைக் கண்டுபிடித்தபோதுதான் இந்த அட்டவணையும் வெளியுலகிற்கு வந்ததாம். இந்த அட்டவணையின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகள் 93% சரியென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம். கருத்தரித்த மாதத்தையும், அப்பொழுது அப்பெண்ணின் வயதையும் மிகச் சரியாக யூகிக்க முடிந்தால் 100% சரியாக சொல்ல முடியுமாம். அந்த அட்டவணையைக் கீழேயே கொடுத்துள்ளேன்.

loading the image...........

என்ன ஆராய்சி பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம், ஒரிஜினல் அட்டவணை சீனர்க ளோட லுனார் காலண்டரை அடிப்படையாக் கொண்டது. அதனால லுனார் வயது தெரிந்தால்தான் சரியாக கணிக்க முடியும். ஆனால் நான் இங்கே கொடுத்திருக்கிறது நம்ம இந்தியன் காலண்டரை அடிப்படையாக் கொண்டது. அதனால நீங்க உங்க வயதை லுனார் காலண்டர்படி மாற்றத் தேவை இல்லை. நான் ஆராய்ச்சி செய்த நான்கில் மூன்று பேருக்கு சரியாக உள்ளது. உங்கள் ஆராய்ச்சியின் முடிவு பற்றி எனக்குத் தெரிவியுங்க.

சரி.. நண்பர்களே, இத்துடன் நம்ம அரட்டை சங்கத்தைக் கலைத்து விடுவோம். வணக்கம்.

About The Author

11 Comments

  1. maleek

    அதெல்லாம் சரி, இதுக்கு ஏன் சங்கத்தைக்கலைக்கனும்?

  2. Rishi

    மாலீக்
    மாயன் சங்கத்தைக் கலைக்கவில்லை.. சங்கமத்தைத்தான் கலைத்திருக்கிறார். மீண்டும் பிறிதொரு நாளில் சங்கமம் நிகழும்.

  3. latha

    வாவ். இப்படியெல்லாம் காலன்டர் இருக்கா. சூப்பர் சார்

  4. SANTHOSHI

    மாயன்!
    மகாசிவராத்திரிக்கு நீங்கள் கோவை வந்திருந்தீர்களா? சொல்லியிருந்தால் உங்களை எங்கள் இல்லத்திற்கு அழைத்திருப்போமே! மேலும் அன்று நானும் விழித்திருந்து லோக்கல் கேபிள் நிகழ்ச்சியின் மூலம் ஈஷா யோகா சிவராத்திரி நிகழ்ச்சிகளை நேரடியாக பார்த்து ரசித்தேன். அப்புறம் இந்த அட்டவணை மூலம் நாங்களும் ஒரு சில பேருக்கு ஜோசியம் சொல்லி அது சரியாக அமைய காலரை தூக்கிவிட்டுக் கொண்டோம். என் சகோதரி செவிலியராக பணிபுரிவதால் அவரிடம் இந்த அட்டவணை உள்ளது. பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  5. Devika

    \வருங்காலத்தில் இந்திய ஹாக்கி அணி உயிர்த்தெழும் என்று நம்புவோம். அதற்கு இந்திய விளையாட்டுத்துறை என்ன செய்யலாம்?//
    இந்திய விளையாட்டுத்துறை மட்டும் முயன்றால் எதும் நடக்காது. இதற்க்கு பள்ளிகள், இல்லம், மீடியாக்கள் மற்றும் அரசு இவை எல்லாம் ஒன்று சேர்ந்து முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் முறையான பயிற்ச்சி கொடுக்க வேண்டும், இன்றைய தலைமுறைகள் நாளய தலைவர்கள் அதனால் குழந்தைகளை ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் காட்ட செய்ய வேண்டும். இது ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும் என நினைக்கிறேன்.

  6. Maayan

    வலைதலத்தில் வந்த போது என் கள்ளில் சிக்குன்டுவிட்டது லதா.

  7. Maayan

    //மகாசிவராத்திரிக்கு நீங்கள் கோவை வந்திருந்தீர்களா? சொல்லியிருந்தால் உங்களை எங்கள் இல்லத்திற்கு அழைத்திருப்போமே!//
    உங்கள் அன்புக்கு நன்றி சந்தோஷி, நான் அன்று ஈஷா யோகா மையத்திலேயே தங்கிவிட்டுதான் சென்றேன். எவ்வளவு பயங்கற கூட்டம், தொடர்ந்து பின்னிரவும் கார்கள் அணிவகுத்துக்கொண்டெ இருந்தன ஈஷா யோகாவுக்கு.
    //என் சகோதரி செவிலியராக பணிபுரிவதால் அவரிடம் இந்த அட்டவணை உள்ளது.//
    அனேக பேர் இதை பயன்படுத்துகின்றனர் என்று நானும் கேள்விப்ப்ட்டேன்!

  8. maayan

    உங்கள் கருத்துக்கு நன்றி தேவிகா. இன்று பல மாணவர்கள் ஹாக்கி விளையாட்டை விட்டு ஒதுங்கிதான்விட்டனர்.

  9. Dr. S. Subramanian

    //என் கள்ளில் சிக்குன்டுவிட்டது//
    கள் சாப்பிடும் பழக்கம் எப்போதிலிருந்து, மாயன்?

  10. Maayan

    //கள் சாப்பிடும் பழக்கம் எப்போதிலிருந்து, மாயன்?//
    புடிச்சிட்டீங்களே டாக்டர், அது கண்ணில்”ன்னு சொல்ல வந்தேன், டங்..க் ஸ்லிப் ஆயிடுச்சு!”

  11. Dr.S. Subramanian

    மாயன்:
    மெய்யாகவே கள் என்று தான் நினைத்தேன். மேலும் இங்கு ஒரு மொந்தை அனுப்பச்சொல்லி எழுதலாம் என்று நினைத்தேன். மகாகவி பாரதியின் பாட்டு (திக்கு தெரியாத காட்டில்..) நினைவுக்கு வந்தது– ….மோடி கிருக்குதடி தலையை நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே”. பழைய கள் தான் அதிக சுவை.”

Comments are closed.