சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோருமே எப்போதும் ரொம்ப நல்லாயிருக்கணும்ங்கறது தான் வேண்டுதலும் விருப்பமும்.

மாலீக் என்ன சொன்னீங்க? பாட்டிகளா? யாரைச் சொல்றீங்க? கண்டிப்பா என்னை சொல்லலைன்னு தெரியும். வேற யாரைச் சொல்றீங்க?

ஹேமா, நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நிலாவின் துணையும் தூண்டுதலுமில்லாமல் சூரியகலாவின் பாடலோ, மாரிமுத்துவின் நேர்காணலோ எதுவுமே சாத்தியமாகியிருக்காது. ம்… சொல்ல மறந்துட்டேனே. உங்களுடைய பாராட்டையும் பிரார்த்தனையையும் சூரியகலாவிடம் சேர்த்துட்டேன். என்ன ஓகேவா?

நேர்காணல்னு சொன்ன உடனே சில வாரங்களுக்கு முன்னே ஹிந்து நாளிதழில் வெளியான எழுத்தாளர் விமலாரமணியின் நேர்காணல் படிச்சது நினைவுக்கு வருது. அவங்களுடைய எழுத்துக்களும், படைப்புகளும் எனக்கு அறிமுகமானதே நிலாச்சாரலின் மூலமாகத்தான். அந்த நேர்காணலில், அவங்க எழுதி வெளியான முதல் நாவலில் இருந்து (உதயா), சிறு கதைகள், 1960களில் ஆல் இந்தியா ரேடியோவில் (AIR) பணியாற்றியது, 1970களில் மேடை நாடகங்கள் எழுதியது, அவருடைய ‘உலா வரும் உறவுகள்’ நாவல் சிறு சிறு மாற்றங்களோடு படமான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் இப்படி எவ்வளவோ விஷயங்களை அதிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன். கலக்குறீங்க… ஹும்… இல்லை இல்லை கலக்கிட்டுருக்கீங்க விமலாரமணி மேடம்! நிலாச்சாரலில் வெளிவந்துள்ள, வெளிவந்து கொண்டிருக்கும் விமலாரமணியின் படைப்புகள் கீழேயுள்ள சுட்டியில் இருக்கு. சமயம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க.

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Vimala%20Ramani

அந்த நேர்காணலில் ‘காலத்திற்கேற்ப என்னுடைய படைப்புகளில் வரும் பெண்கள் வளர்ந்திருக்கிறார்கள்’ என்று அவங்க சொல்லியிருப்பது எவ்வளவு உண்மைன்னு உங்களுக்கே புரியும்.

எளிமையான புதிர்கள் சொன்னா மொக்கையாயிருக்குன்னு சொல்றீங்க. சரி கொஞ்சமே கொஞ்சம் மூளைக்கு வேளை கொடுக்கிற மாதிரி புதிர்கள் சொன்னா யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறீங்க. சரி.. பொது அறிவு சம்பந்தமா கேள்வி கேட்டா அதுக்கும் யாருமே பதில் சொல்லாமா அமைதியா இருக்கீங்க. யாரும் முயற்சிகூட செய்யலியேன்னுதான் கொஞ்சம் வருத்தமாயிருக்கு. ஹூம்…!

சில நாட்களுக்கு முன் என்னுடைய வலது கண்ணில் விழுந்த தூசியின் காரணமாக இரண்டு மூணு நாட்கள் எதையும் சரியா பார்க்க முடியாம கஷ்டமாயிருந்தது. அப்போதான் நான் நினைச்சேன் ‘ஒரு இரண்டு மூணு நாள் சரியாப் பார்க்க முடியாத எனக்கே இவ்வளவு கஷ்டமாயிருக்குன்னா, பார்வையே இல்லாதவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்?’ என்ன திடீருன்னு இப்படி ஒரு ஞானோதயம்னு யோசிக்கிறீங்களா? கீழே இருக்கும் விஷயத்தைப் படிச்சா உங்களுக்கே காரணம் தெரிஞ்சுடும்.

நம்முடைய முந்தைய அரட்டையில், நாளேட்டில் வந்த செய்தியைப் பார்த்து பார்வையற்றோருக்கான (அரசு வங்கிகளின்) வேலை வாய்ப்புகள் பத்தின விவரங்கள் சேகரிக்க ஆரம்பித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். State Bank of Indiaவில் பணிபுரியும் மாரிமுத்து அவர்களுடன் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சாதாரணமா அவரோட பேசினா மட்டும் போதுமா? அவரைப் பற்றி மத்தவங்களும் தெரிஞ்சிக்கிற வகையில் அவருடைய பேட்டியை உங்களுக்காக (சும்மா இல்லீங்கோ!) ஒலி வடிவுல பதிவு செய்திருக்கிறோம். இந்தப் பேட்டியின் மூலமா அவரைப் பற்றியும், அவருடைய படிப்பு, வேலை தொடர்பாக அவர் எதிர் கொண்ட போராட்டங்கள்… இப்படிப் பல விஷயங்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். இந்த மாதிரி பேட்டியின் மூலமா பார்வையற்றவர்களுக்கு மட்டுமில்லாம பார்வையுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களுடைய முதன்மையான நோக்கம்.

சில வருடங்களாவே என்னுடைய வலது தோள் மற்றும் கையில் வலி இருந்துட்டிருந்தது. கோயமுத்தூருக்கு வந்தப்புறம் இப்போ சில மாதங்களா ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கேன். எப்போப் பார்த்தாலும் வலி இருந்தது போய் மன உளைச்சல் ஏற்படும்போதெல்லாம் மட்டும் வலி வர ஆரம்பிச்சது. (நிலாச்சாரலில் சேர்வதற்கு முன்னாலேயே ‘நேயம்’ மூலமா நிலாவின் அறிமுகம் கிடைச்சுது. அப்போ அவங்ககிட்டே நான் பல வருடங்களாக உணர்கின்ற ஒருவிதமான வெறுமையை நீக்கிட ஏதும் வழி சொல்ல முடியுமான்னு கேட்டிருந்தேன். மிகவும் எளிமையா EFT(Emotional Freedom Techniques) எப்படி செய்யறதுன்னு சொல்லிக் கொடுத்திருந்தாங்க.) கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வின் காரணமா மன உளைச்சல் ஏற்பட்டு கையும், தோளும் ரொம்பவே வலிக்க ஆரம்பிச்சது. நானும் வழக்கமாக செய்வது போல் EFT முறைகளை செய்து பார்த்தேன். யோகா, தியானம் இப்படி எல்லாம் செய்து பார்த்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வலி இருந்துட்டேயிருந்தது. எதேச்சையா ஞாயிறன்று நிலாவிடம் தாமரை இல்லப் பெண்களுக்கான பயிற்சி, வேலை வாய்ப்பு சம்பந்தமாக பேசிட்டிருந்தப்போ, நிலா என்னுடைய வெறுமையுணர்வு எப்படி இருக்குன்னு விசாரிச்சாங்க. வெறுமையுணர்வு அதிகமாகியிருக்கிறதையும், என்னுடைய கை வலியைப் பற்றியும் அவங்ககிட்டே சொன்னேன். அதுக்கு அவங்க ‘சில நேரங்கள்ல EFT முறைகளை சுயமா செய்து பலன் கிடைக்காதபோது சுகவரின் உதவியோட செய்தா பலன் கிடைக்கும்’ன்னு சொன்னாங்க. மன உளைச்சலின் காரணமா என்ன மாதிரியான உணர்வு தோன்றுகிறது, அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கு.. இது மாதிரியான சில அடிப்படை விவரங்களை கேட்டப் பிறகு ஒரு சுகவரா என்னுடன் சேர்ந்து EFT முறைகளில் என்னை வழி நடத்தினாங்க. அடுத்த 2 நாள்ல வலி படிப்படியா குறைஞ்சுது. மூணாவது நாள் சுத்தமா வலியேயில்லை. ரொம்ப நன்றி நிலா. (அவங்களுடைய வழி நடத்தலில் என்னுள்ளே சில கேள்விகள் எழுந்தது. அதை உள்ளுணர்வுன்னுகூட சொல்லலாம். இப்போ நான் அந்த கேள்விகளுக்கான விடை தேடும் படலத்தை ஆரம்பிச்சுருக்கேன். எப்பவும் எதுலேயும் என்னுடைய உள்ளுணர்வும் என்னை சரியா வழி நடத்தும்னு நம்பறவ நான். ‘மனித வாழ்க்கையின் ஆதாரமே தேடல்தான்’னு எங்கேயோ படிச்ச ஞாபகம். தேடலின் முடிவில் என்ன நடக்கும்னு தெரியாது. ஆனால் தேடலுக்கான பயணம் சுவாரசியமா இருக்கும்ங்குறதுல எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை.)

http://eft.mercola.com/

Dyanalingam Ashramசில மாதங்களுக்கு முன் கோவைக்கு பக்கத்துல இருக்கும் (வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலிருக்கும்) தியானலிங்க ஆலயத்துக்குப் போயிருந்தோம். போகும் வழியில் நிறைய பாக்கு மரங்களைப் பார்க்க முடிஞ்சுது. அந்த மரங்களின் வரிசையைப் பார்க்கும்போது பள்ளிகள்ல ப்ரேயர் நேரத்துல சிறுவர், சிறுமியர்கள் சரியான இடைவெளி விட்டு வரிசையில நிக்கறதுதான் நியாபகம் வந்துது. எங்கே பார்த்தாலும் பசுமையா இருந்தது. இப்படி இயற்கைக் காட்சிகளை எல்லாம் பார்த்து ரசிச்சுக்கிட்டே தியானலிங்கம் போய் சேர்ந்தோம். அங்கே இருந்த சின்ன அறையில தியானம் செய்யும் போது ரொம்பவே அமைதியாவும் மன நிறைவாவும் உணர்ந்தேன். தியானம் முடிச்சிட்டு எப்பவும் போல கேமராவும் கையுமா சுத்த ஆரம்பிச்சுட்டேன். அங்கே நான் சுட்ட சில படங்களை இங்கே இணைச்சிருக்கேன்.

கடந்த 17 வருடங்களா ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மண்டல அலுவலகத்தில் தொலைபேசி ஆப்ரேட்டராக வெங்கடேஷ் அவர்கள் பணிபுரிகிறார். அவரிடம் பேசும் போது நிறைய விஷயங்கள் எனக்கு தெரிய வந்தது. சூரியகலா தன்னுடைய படிப்பை/பயிற்சி தொடரலாமா அல்லது வேலைக்கு போகலாமான்னு யோசிச்சிட்டு இருந்தப்போ ‘இந்த வயசுல நீ நல்லா படிக்கணும்’னு அவளை நல்ல விதமா வழி நடத்தினார். கூடிய விரைவிலே அவருடைய ஒலி வடிவ நேர்காணல் நிலாச்சாரலில் வெளியிடவிருக்கிறோம். இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமா இணையத்தில் ‘வள்ளுவன் பார்வை’ என்ற மின்மடல் குழுவை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார். இதுவரை இந்தக் குழுவில் 107 உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது (போனாப் போகுதுன்னு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டாங்க!!). இங்கே அவங்க எந்தவிதத் தடங்கலுமில்லாம எதைப் பற்றியும் பேசலாம், விவாதிக்கலாம், கேள்விகள் கேட்கலாம். அரசியல், பொது அறிவு, வரலாறு, நாட்டு நடப்பு, இலக்கியம், சமையல் குறிப்புகள் இப்படி எதைப் பற்றியும் அலசி ஆராயறாங்க. அதுவும் தமிழில். தவறி கூட யாரும் ஆங்கிலத்தை உபயோகிக்கறதில்லை. தமிழில் எப்படி விவாதமெல்லாம் அவங்களால செய்ய முடியுதுன்னு யோசிக்கிறீங்களா? தங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கென இருக்கும் தனிப்பட்ட விசைப்பலகையை உபயோகிக்கிறாங்க. அதன் பெயர் என்ன தெரியுமா? ‘வள்ளுவன் பார்வை விசைப்பலகை’.

அங்கே நான் படிச்சு ரசிச்ச சில விஷயங்கள்:

=> "பொள்ளாச்சி ஸ்டேட் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கிரீன் சேனல்’ என்ற திட்டத்தின் கீழ் மக்கள் குறிப்பிட்ட தொகையை இருப்பு சேமிப்பில் போடும் போது சிலிப்பில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏ.டி.எம்.(ATM) கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவர்களின் ஏ.டி.எம்.(ATM) கார்டுகளை பயன்படுத்தி சேமிப்பில் பணம் போட்டு கொள்ளலாம். ஏ.டி.எம்.(ATM) கார்டுகளை மட்டும் வங்கியின் கவுன்டர்களில் கொடுத்தால் போதும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சேமிப்பில் வைத்திருப்பவர்கள் மட்டும் சிலிப்புகளை பயன்படுத்தினால் போதும். பொள்ளாச்சி ஸ்டேட் பேங்க் கிளையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புகளில் தொகை செலுத்த வருகின்றனர். இதுவரை பேப்பர் சிலிப்புகளை பயன்படுத்தி வந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்துக்கும் கீழ் தொகை வைத்திருப்பவர்கள். இந்தத் திட்டத்தினால், மாதம் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேப்பர்கள் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கிளையிலும் இதுபோன்ற லட்சக்கணக்கான பேப்பர்கள் மிச்சப்படுத்தப்படுகிறது. இதனால், பேப்பரின் பயன்பாடு குறைவதுடன் மரங்களை அழித்தல் குறைகிறது. இயற்கை பாதுகாக்கப்படுகிறது" என்கிறார் பொள்ளாச்சி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர் சிவராஜ். (நம்ம ஊருக்கான ‘கிரீன் சிக்னல்’ எப்போ கிடைக்குமோ?)

=> அவ்வையார் இயற்றிய நாலு கோடிப் பாடல்கள்: (அவ்வையார் நூல்களிலிருந்து)

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்

கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"

(ஒவ்வொரு பாடலும் ஒரு கோடி பெறுமாம். அதனால மொத்தம் நாலு கோடி.)

=> நகைச்சுவைத் துணுக்கு:

அவன்: "என்னடா அந்த ஓட்டல் மட்டும் மத்தியானத்திலே மூடிடுறாங்க?"
மற்றவன்: "அதுவா, லஞ்ச் டயம் என்பதாலே அங்க வேலை செய்யறவங்க எல்லாம் வெளியே சாப்பிடப் போயிடுவாங்க."

இது சும்மா ஒரு முன்னோடி தான். இதுபோல இன்னும் நிறைய விஷயங்களை அவங்களுடைய குழுவில் பங்கேற்று தெரிஞ்சுக்க முடியும்.

http://groups.google.com/group/valluvanpaarvai?hl=ta

பல நேரங்கள்ல தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி செய்திகள்ல படிக்கும்போதெல்லாம் இம்மாதிரியான வளர்ச்சியின் பலன் எல்லாவிதமான மக்களையும் சென்றடையுதான்னு சந்தேகம் எப்பவுமே எனக்குண்டு. ஆனா ‘வள்ளுவன் பார்வை’ குழு, ‘வள்ளுவன் பார்வை விசைப்பலகை’, பார்வையற்றோருக்கு உதவும் வகையில் JAWS(Job Access with Speech) மென்பொருள் நிறுவப்பட்ட அலைபேசிகள் – இது மாதிரியான பல விஷயங்கள் தெரியவரும்போது இனியும் இது போன்ற சந்தேகங்கள் தேவையில்லைன்னு புரியுது.

இந்த வாரம் சங்கீதா என்கிற இன்னொரு பார்வையற்ற பெண்ணின் குரலை பதிவு செய்திருக்கேன். சங்கீதாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை. இவங்க இசையில் எம்.ஃபில் செய்யறாங்க. இவங்க எம்.ஃபிலில் எடுத்திருக்கும் தலைப்பு ‘நாட்டுப்புறப் பாடல்கள்’. கடந்த 2 வருஷமா கர்நாடக இசையில பயிற்சி எடுத்துட்டு வராங்க. படிப்பைத் தவிர CSGAB(College Students & Graduate Association) என்கிற சங்கத்தின் உறுப்பினரா மட்டுமில்லாம, NIVH(National Institute for Visually handicapped)ல் வானோலி சம்பந்தமான FM broadcasting & voice based advertising பயிற்சியும் எடுத்திருக்காங்க. சரி இவங்க பாடின பாடலை கேட்கலாம் வாங்க.

கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். கணிதத்துல ஒரு சின்ன மேஜிக் செய்யது பார்க்கலாமா?

259 x உங்களுடைய வயது x 39 = ?

13837 x உங்களுடைய வயது x 73 = ?

(உங்க வயதென்னன்னு எனக்கு சொல்லவேண்டாம்) ஆனா விடை என்ன வருதுன்னு பார்த்தீங்களா? ஆச்சர்யமாயிருக்கில்லையா?

இந்த சின்னக் கணக்கு செய்து பார்க்க முடியும்னு நினைக்கிறேன். உங்களுடைய பதிலுக்காக ஆவலுடன் காத்துட்டிருப்பேன்.

சரிங்க நிறையவே அரட்டை அடிச்சுட்டேன். நம்மளுடைய அரட்டையை மறுபடியும் அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீ யூ…

About The Author

11 Comments

  1. யாகவா

    நான் ஒரு தடவ சொன்னா கோடி தடவ சொன்ன மாதிரி! ஹ..ஹா…ஹா

  2. யாகவா

    என்னங்க நீங்க! இங்க நீங்க மட்டும்தான இருக்கீங்க அப்போ நீங்கதான பாட்டி, மாலீக் கரெக்டாதாங்க சொல்லியிருக்காரு.

    வெள்ளியங்கிரி மலை அடிவாரத்துக்கு போய்ட்டு மூனு படம்தான் கெடச்சதா? இதத்தான் சுத்தி சுத்தி எடுத்தீங்களா! கடவுளே!

    அதுசரி அங்க பூண்டி கோவிலுக்கு போனீங்களா? அருமையான இடம். சில நேரங்கள்ளா யானைகளும் இறங்கிவரும் (அருமையா படம் பிடிக்கலாம்!!). அங்க சில துறவிகள் பல வகையான மூலிகைச் செடிகளையெல்லாம் பறிச்சி வச்சிருப்பாங்க. மிக அருமையா பொழுதுபோக்கவேண்டிய இடம் மட்டும் இல்லிங்க அது….. மெய்மறந்து நம்முள்ளேயே நாம் கரைந்துவிடக்கூடிய இடம்.

    ம்ம்ம்…..பாதரச உலோகத்தால செய்யப்பட லிங்க குளத்தில குளிச்சீங்களா! தியானலிங்கத்துக்குள்ள போகுறதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய முக்கியமான வேலை இது.

  3. Yash

    யாகவா,

    மாலீக் எழுதினதை சரியாப் படிச்சீஙளா? அவரு பாட்டிகள்னு சொல்லி இருந்தாரு… லிங்கக் குளத்துலக் குளிச்சிட்டுதான் தியானலிஙத்துக்குள்ளே போனோம். இங்க மூணு படம் போட்டதுக்குக் இவ்வளவுதானான்னு கேக்கறீங்க. நிறைய படங்கள் போட்டா இதென்ன அரட்டையா இல்லை வேற ஏதவதான்னா கேட்டிருப்பீங்க. உங்களை நேர்ல சந்திக்கும் போது அங்கே நான் எடுத்த மற்ற படங்களை கண்பிக்கறேன். கடைசி வரைக்கும் என்னுடைய கேள்வி எதுக்குமே பதில் சொல்லாம சமாளிச்சுட்டீங்க. 😉

  4. ambika

    i read your articles regularly, very nice and i read the nilacharal stories. i like ur website very much. I am interested in reading anuradha ramanan wrtings, but i cannot find it in the web. can u help me to find it or can u upload it in nilacharal

  5. leela

    அர்புதம் ஆனால் உன்மை……… தொடருஙல் பனியை

Comments are closed.