சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் நல்லா இருக்கீங்கதானே? நான் இங்கே எப்பவும் போல நலமா இருக்கேன்.

நம்ம நிலாச்சாரலில் பலருடைய படைப்புகள் மின்னூல் வடிவுல கிடைக்குங்கிறது உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அது மாதிரியான மின்னூல்களில் ஒன்று நம்ம நாகராஜன் சார் எழுதிய ‘அதிரடி மன்னன் ஜாக்கிசான்” எனும் நூல். அந்நூலை தரப்பரிசோதனை செய்திட்டிருந்தபோது ஜாக்கிசான் பற்றிய பல விவரங்கள் எனக்கு தெரிய வந்தது. நமக்கெல்லாம் தெரிஞ்ச வரையில் அவர் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார், அவருடைய சம்பளம் கோடியைத் தாண்டும்… இது மாதிரியான செய்திகள்தான். ஆனால் அவர் வளர்ந்த விதம், சிறுவயதில் அவர் அனுபவித்த கஷ்டங்கள், அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், அவருடைய விடாமுயற்சி, மன தைரியம் இப்படிப் பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தது. கூடிய விரைவில் இந்த நூல் மட்டுமில்லாம இன்னும் பல நூல்கள் விற்பனைக்கு வரவிருக்கு. அதுவும் சமீபத்துல எடிட்டரம்மா மின்னூல்களின் விலைகளைக் குறைச்சதோடில்லாம, சில சலுகைகளையும் அறிவிச்சிருக்காங்க. நீங்க உங்களுக்கு விருப்பமான நூல்களை மின்னூல் வடிவத்தில் வாங்கினது போலவும் ஆச்சு, எழுத்தளர்களை ஊக்குவிச்சது போலவும் ஆச்சு. புது மின்னூல்கள், அவற்றின் விலை மற்றும் சலுகை விவரங்களுக்கு கீழே இருக்கும் சுட்டியைத் தட்டுங்க.

https://www.nilacharal.com/ebooks_list.asp

தீபாவளிக்கு ரிலீஸான படங்களில் ஏதேனும் பார்த்தீங்களான்னு உங்களைக் கேட்டுட்டு நான் மட்டும் பார்க்காம இருப்பேனா? ஏற்கெனவே பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் ‘ஏழாம் அறிவு’ படத்தைப் பற்றின விமர்சனங்கள் நிறையவே படிச்சுட்டதால அனாவசியமா ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு முடிவு செய்து, ‘வேலாயுதம்’ படம் பார்க்கப் போயிருந்தோம். கதாநாயகனின் அறிமுகத்தின்போது வரும் படக்காட்சிகள் நல்ல நகைச்சுவையாகவே இருந்தன. படத்தின் கிளைமாக்ஸில் சொல்லியிருந்த செய்தி எனக்கும் பிடித்திருந்தது. ஓவர் பில்டப்களை தவிர்ப்பதாக நினைத்துக்கொண்டு படம் முழுக்க எல்லோரையும் காமெடியன்களாக மாத்திட்டாங்க (சில நேரங்கள்ல இது யாரு வில்லனா? இல்லை காமெடியனா அப்படீன்னு சந்தேகம் வருது!). படம் பார்க்கும்போது சின்ன வயதிலிருந்து இப்போ வரை நான் ரசித்து பார்க்கும் ‘ஸ்பைடர் மேன்’ கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியலை. ‘குருவி’ படத்துலேயிருந்து நிற்கும் ரெயிலில் ஏறுவதில்லைன்னு ஏதேனும் பிரமாணம் ஏதும் எடுத்திருப்பாரோன்னு நினைக்கிறேன். ஏன் சொல்றேன்னா எப்போப் பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலிலேயே ஏறுவேன்னு அடம்பிடிக்கறாரே! வீட்டுக்கு வந்தப்புறமும் ‘மொளச்சு மூணு இலயே விடல’ பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருந்தேன். சரி சரி… பொழுதுபோக்குப் படம் இல்லையா.. அப்படித்தான் இருக்கும்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்! எப்படியோ அதிக ஏமாற்றமில்லாம இயக்குனர் ராஜா காப்பாத்திட்டாரு.

பல சமயங்கள்ல நாம பல்வேறு சுருக்கப் பெயர்களை (acronym) உபயோகிக்கிறோம். போன வாரம் இப்படித்தான் ஏதோ பேசிட்டிருக்கும்போது ‘ஏய்! ஓ.பீ (O.B) அடிக்காதே’ அப்படீன்னு என்னுடைய தோழி சொன்னாள். இந்த சுருக்கப் பெயரின் விரிவாக்கம் மற்றும் அதன் நிஜ அர்த்தம் என்னவாகயிருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சேன். தேடவும் ஆரம்பிச்சேன். கல்லூரியின் முதல் வருடத்திலிருந்து இது நாள் வரை ‘ஓ.பீ’ என்ற சுருக்கப் பெயரின் அர்த்தம் ஒருவர் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்யாமல் ஏமாற்றினாலோ இல்லை ஏமாற்றப் பார்த்தாலோ ‘ஓ.பீ அடிக்காதே’ அப்படீன்னு சொல்றதைக் கேட்டு நானும் அப்படியே சொல்ல பழகிக்கிட்டேன். கொஞ்ச தேடலுக்கு அப்புறம் Out of Parade என்பதைத்தான் நாம் சுருக்கி ‘ஓ.பீ(O.B)’ என்று சொல்கிறோம். அதைக்கூட ‘ஓ.பீ(O.B)’ என்று சொல்லுவதைவிட ‘ஓ.பி(O.P)’ என்று சொல்லுவதே சரி, என்று தெரிய வந்தது.

அதே மாதிரி நாம ஒரு நாளைக்கு பல நூறு முறைகள் உச்சரிக்கும் ஒரு சுருக்கப் பெயர் ‘OK’. இந்த சுருக்கப் பெயருக்கு பல கதைகள் சொல்லுறாங்க. அதில் ஒன்று – பல வருஷங்களுக்கு முன்னாடி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது, தினமும் சாயங்காலம் போரிலிருந்து திரும்பி வரும் சேனைகளில் உள்ள வீரர்களைக் கணக்கிட்டு அன்று எத்தனை வீரர்கள் இறந்தார்கள் என்று அறிவிப்புப் பலகையில் எழுதி வைப்பார்களாம். வீரர் எவரும் சாகாத அன்று, ‘0 Killed’ என்று எழுதி வைப்பார்களாம் அதுவே நாளிடைவில் ‘O.K’வானது என்று சொல்கிறார்கள். உங்களுக்கு இது போன்ற சுருக்க பெயர்கள், அதனுடைய கதை ஏதாவது தெரியுமா? எனக்கு சொல்றீங்களா? சின்னச் சின்ன விஷயங்களானாலும் இது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் தெரியுமோ?

எனக்குப் பிடிச்ச விஷயங்களின் பட்டியல் ரொம்பவே பெருசு. அதுல ரொம்பவும் ஸ்பெஷலான விஷயம், சமைக்கிறது. இணைய தளங்களில் செய்முறைக் குறிப்புகள், டீவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து வீட்டில் முயற்சி செய்யறதுண்டு. வீட்டுத் தலைவர் மேல்தான் அத்தனை பரிசோதனையும்!! விபத்து எதுவும் பெருசா நடக்காத பட்சத்துல நானும் அதைச் சாப்பிடறதுண்டு! என்ன செய்யறது.. இப்படித்தானே காலங்காலமா நடக்குது! Master Chef Australia, Master Chef Indiaவின் நிகழ்ச்சிகளை மிஸ் செய்யாம பார்ப்பேன். ஏன் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் பார்க்க மாட்டீங்களோ அப்படீன்னு புருவம் உயர்த்தும் சிலருக்கான பதில் – ‘கண்டதைக் கற்றால்தானே பண்டிதராக முடியும்‘. என்ன சரிதானே? சரி.. விஷயத்துக்கு வருவோம். அதில் அவங்க செய்யக்கூடிய விதவிதமான இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் வகைகளுக்காகவே பார்ப்பேங்கிறது தனியா சொல்லத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். எல்லாம் சரி.. அந்த நிகழ்ச்சியின் மூலமாக என்னவெல்லாம் கத்துக்கிட்டேன்னு கேக்கறவங்களுக்கு ஒரு அறிவிப்பு. யாருக்கெல்லாம் ரிஸ்க் எடுக்க தைரியம் இருக்கோ அவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு தாராளமா எப்போ வேண்டுமானாலும் வரலாம்.

நடந்து முடிந்த Master Chef Australia – Season 2வில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றாங்க. அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்காவைச் சேர்ந்த 62 வயதான குமார் அந்நிகழ்ச்சியின் முதிர்ந்த போட்டியாளரா மட்டுமில்லாம, சிறந்த 24 சமையல்காரர்களுள் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் பங்கேற்ற கேட் என்ற பெண்மணி Master Chef Australia – Season 2வின் சிறந்த சமையற்காரர் என்ற பட்டத்தை வென்றிருக்காங்க. எந்த ஒரு உணவையும் ரொம்பவும் அக்கறை + நிதானம் + படைப்பாற்றலோடு அவங்க தயார் செய்வதை பலமுறை ரசிச்சு பார்த்திருக்கேன். ஒருமுறை அவங்க செய்த ஒரு ஐஸ்கிரீம் வகையின் சுவையை மிகவும் ரசித்து உண்ட நடுவர்கள் எழுந்து நின்னு அவங்களைப் பாராட்டினாங்க. சமையல் பத்தி பேசும்போதுதான் சாப்பிடுவது சம்பந்தமான ரெண்டு வித்தியாசமான செய்திகளைப் படித்தது நினைவுக்கு வருது.

வீட்டில் நான் நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளும்போதெல்லாம் எங்கம்மா என்கிட்டே, "அது வயிறா இல்லை வண்ணானுடைய சாலா. கொஞ்சம் அதுக்கும் ஓய்வு கொடு"ன்னு சொல்றதுண்டு. ஆனால் எங்கம்மாவிற்கு மட்டும் ராய்பூரைச் சேர்ந்த கலேஷ்வர் சிங் பற்றி தெரிஞ்சா இனிமே என்னைப் பார்த்து இந்த டயலாக் சொல்லமாட்டாங்கன்னு நம்பறேன். வயிற்று வலியின் காரணமாக சட்டிஸ்கர் அருகில் உள்ள கோர்பாவின் சிரிஷ்டி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கலேஷ்வர் சிங்கை அனுமதிச்சிருக்காங்க. சொனாக்ரஃபி செய்ததில் நிறைய பொருட்கள் வயிற்றில் அடைபட்டிருந்தது தெரியவந்திருக்கு. பிரச்சினையைப் புரிந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்தாராம். இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ரொம்பவும் அதிர்ச்சியோட மருத்துவர் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளிவந்தாராம்.

திரும்பத் திரும்ப மருத்துவரின் மனதில் தோன்றிய ஒரே கேள்வி, ‘எப்படி இந்த மனுஷனால பல மாதங்களா 6 கிலோ எடையுள்ள இரும்பாலான பொருட்களோட நடமாட முடிஞ்சுது?’ அப்படீங்கிறதுதான்! இரும்பாலான பொருட்களா? 6 கிலோவா? அப்படி என்னதான் சாப்பிட்டிருக்காருன்னு பார்த்தா – 421 நாணயங்கள், 12 நட்டுகள், 3 சாவி கொத்து வளையங்களை நண்பர் சாப்பிட்டிருக்காரு. வடிவேலு ஒரு படத்தில் டியூப்லைட் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை விற்பனை செய்வாரு. அவரிடம் வந்த ஒருவர் ட்யூப் லைட்டை வாங்கி உடைத்து அனாயசமாக ‘கடக் முடக்’ என்று கடித்து சாப்பிடுவார். அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சியடைவாரு. அதுமாதிரியான அதிர்ச்சிதான் எனக்கும் ஏற்பட்டது. சாப்பிட்ட பொருட்கள் பற்றிய விவரம் தெரிஞ்சபோது, எப்படி அவரால இதுகளை எல்லாம் சாப்பிட முடிஞ்சுது அப்படீன்னு நான், நீங்க எல்லாம் ஆச்சரியப்பட்டு முடிக்கும் முன்னரே இது போல இருக்கும் இன்னொருவரைப் பற்றியும் சொல்லிடறேன்.

கலேஷ்வர் சிங் ஒரு விதம்னா ஃப்லோரிடாவைச் சேர்ந்த Tempestt Henderson இன்னொரு விதம். இவங்க சோப்பு மற்றும் சலவைத் தூளை விரும்பி சாப்பிடறாங்களாம். ஏன் இதையெல்லாம் சாப்பிடறீங்கன்னு கேட்டா… இனிப்பும் உப்பும் கலந்து சுவையா இருப்பதாலே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு பதில் சொல்றாங்க இந்த அம்மணி. செவிலியருக்கான பயிற்சி பெறும் இவங்களுக்கு சோப்பு மற்றும் சலவைத்தூள்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி தெரிந்திருந்தும் அவங்களாலே அவைகளை சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியலையாம். இது மாதிரியான வினோதமான உணவுப்பழக்கத்தினால் ஏற்படும் கோளாறுக்கு PICA என்று பெயராம். மன அழுத்தம், கவலை மற்றும் உளவியல் காரணமாக மட்டுமில்லாமல் உடலில் தாது பொருட்களின் குறைபாடுகளாலும், இந்தக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள். என்ன கொடுமை சார் இது? ஹூம்…

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். நம்ம மொபைலில் இருந்து அனுப்பக் கூடிய குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்களில், கீ செயின்களில், ஆடைகளில் இன்னும் சரியா சொல்லணும்னா ஆண்கள்/பெண்கள் அணியக்கூடிய டீ-சர்ட்களில்னு இப்படி பல இடங்களை ‘உணர்ச்சித்திரங்கள்’ (emoticons) ஆக்கிரமிப்பு செய்திருக்கும். இவைகள் இல்லாத ஒரு குறுஞ்செய்தியை யாருமே அனுப்புவதில்லைன்னு சொன்னால் அது மிகையில்லை. அது மாதிரியான சில உணர்ச்சித்திரங்கள் நம்முடைய முகத்தில் உண்மையாகவே தோன்றினால் எப்படி இருக்கும்னு இங்கே ஒருத்தர் கற்பனை செய்திருக்காரு. அவருடைய பெயர் தெரியலை. ஆனால் இதப் பார்த்தப்புறம் இந்த உணர்ச்சித்திரம் முகத்தில் தோன்றினால் எப்படியிருக்கும்னு நானும் யோசிக்க ஆரம்பிச்சு என்னுடைய கற்பனா சக்தியையும் லேசா தட்டிவிட்டிருக்கேன். நீங்க இது மாதிரி எதையாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா?

http://www.colorflys.com/insane-interpretations-of-everyday-emoticons/

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

3 Comments

  1. janani

    யஷ் சூப்பர் பா அரட்டை. i think ok means Orl Korrect (all correct). Earlier people use like this. And your chatting is as always rocking

  2. Dr. S. Subramanian

    You might also have heard people say OC la kedaichchudhu” to denote that they got it free. The OC stands for OCS which meant On Company Service. When people helped themselves to some freebies from company store the expression came into usage.

    Snafu is an acronym used to express a disastrous situation. It expands to “Situation Normal All Fouled UP”. It is funny like “good news bad news”. Here the good news is everything is normal. Bad news: everything has gone haywire.”

  3. Dr. S. Subramanian

    Yash:
    I write this with great hesitation for fear of receiving a title” from you. What you mentioned by “OP” or “OK” is not an acronym but just an abbreviation like AM (ante-meridien) or PM (post-meiridien) or ABC (Alcoholic Beverage Control). An acronym is a word formed by the first letters of the words in a phrase or group of words such as MADD (Mothers againstg drunk driving) or Snafu as I indicated before. People use the two interchangeably although there is a line of distinction between abbreviation and acronym.”

Comments are closed.