சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம் வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி. எல்லோரும் எப்படி இருக்கீங்க?

வருஷக் கடைசி! தேங்க்ஸ் கிவிங்கில் ஆரம்பிச்சு புது வருஷம் வரைக்கும் குளிர் காலக் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆயிருச்சு அமெரிக்காவில். கொளுத்தின வெயிலுக்கு இதமா ஒரு நாள் ஆலங்கட்டி மழை வந்திச்சு எங்க ஊர்ல. மத்தியானத் தூக்கம் பாதியில கலைந்து வெளியே வந்து பார்த்தா, பனியைத் துளைத்து முளைத்த புற்களா? புற்கள் போட்டிருக்கும் புது உடையான்னு வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதமாய் ஆலங்கட்டி மழை. எங்க வீட்டு முன்னாடி எடுத்த போட்டோ நீங்களும் இரசிக்க:

Garden

லேசான மனசோட குளிருக்கு இதமா நம்ம கைமணம் பகுதியில வந்த முட்டைக்கோஸ் பக்கோடா போட்டேன். கொறிக்க, கொறிக்க சுவையாய் இருந்த முட்டைக்கோஸ் பக்கோடாவை நீங்களும் செய்யணுமா?

https://www.nilacharal.com/ocms/log/11160904.asp

பக்கோடா சாப்பிட்டுக்கிட்டே பேராண்மை படம் பார்த்தோம். ஒரு அரைமணி நேரம் பார்த்து விட்டு ஷாப்பிங் போகலாம்னு நினைச்சோம். ஆனா படத்தோட விறுவிறுப்பு எங்களை எழுந்திரிக்க விடலை. எதிரி நாட்டு ஏவுகணையைத் தடுக்கும் கதையை ஹாலிவுட் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். புதிய கதைக்களம், அதை அழகாகக் காட்டியிருக்கும் விதம்னு ஒரு பெரிய சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர்.

“காடு திறந்தே கிடக்கின்றது” பாட்டு எனக்கு ஞாபகம் வந்திச்சு. மற்றொரு புதிய களத்தில் வாழ்க்கையில் தோத்துப் போன கதாநாயகன் பத்தின ’வெயில்’ பட விமர்சனத்தை ரிஷி அவரோட சூட்டிங் அனுபவத்தோட சொல்லியிருக்கார்:

https://www.nilacharal.com/tamil/thirai/movie_review_295.asp

ஹலோ! யாருப்பா அது! ரிஷியோட சூட்டிங் அனுபவம்னு சொன்னதும் விருதுநகர் முழுக்க அவரோட கட் அவுட் வைக்கிறது? ரிஷி சூட்டிங் பார்த்த அனுபவம்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்பிடி?

வெயில் படத்தில் வந்த பசுபதியோட வாழ்க்கை மாதிரியே எனக்குத் தெரிஞ்ச ஒரு காதல் கதையைச் சொல்லப் போறேன். அதுக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் வைச்சு உங்க மனசு அந்த கதையைக் கேட்கற அளவுக்கு தெம்பான்னு பார்க்கலாமா?

நீங்க கணினி முன்னாடி இருக்கும் போதோ, புத்தகம் படிக்கும் போதோ செய்து பாருங்கள். வலது காலை சற்றே தூக்கி கடிகாரச் சுற்று முறையில் ஒரு வட்டம் போடுங்க. வட்டம் போட்டுக் கொண்டே, வலது கையால எண் ஆறை காற்றில் எழுதிப் பாருங்க. கால்கள் தானாகவே கடிகாரச் சுற்றுக்கு எதிர்த் திசையில் சுற்றும். யாருக்காவது காலோ, கையோ சுளுக்கினா அதுக்கு நான் பொறுப்பில்லை!!!

கதைக்குப் போலாமா?

ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவளைப் போல் ஒரு அழகிய பெண்ணை யாரும் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் தலைவர் குடும்பத்தினர் அந்தக் காதலை எதிர்த்தனர். இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒடத் தீர்மானித்து, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டது.

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு மனந்திருந்திய தலைவர் குடும்பத்தார் அந்தக் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர். அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். அதைக் கண்ட அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டாள். நீண்ட நாட்களுக்குப் பின், மனநிலை சரியடைந்த அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.

திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது. இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்ணின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அடுத்த நாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்ணும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும்அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால்….!

என்ன நடந்துச்சுன்னு மனசு பதறுதா? எனக்கும் தெரியாதுங்க. இதுக்குப் பேர்தான் மனதை அதிர வைத்த காதல் கதை.

சரி! சரி! கோபமோ எரிச்சலோ வேண்டாம். ரிலாக்ஸ் பண்ண டி.எஸ்.பியோட காமெடியான கிரிக்கெட் அனுபவத்தைப் படிங்க:

https://www.nilacharal.com/ocms/log/03230918.asp

அப்படியே அரட்டைக் கச்சேரிக்கு மங்களம் பாடலாமா? ஏன் இவ்வளவு சீக்கிரம்னு கேட்கிறீங்களா? அமெரிக்காவிலேயே அதிக பனி பெய்யும் மாநிலமான டென்வர் போறேன். டென்வர் போட்டோவோட நான் உங்களை சந்திக்கும் வரை புஷ்கூட விளையாடி, அன்பாவும், ஆரோக்கியமாகவும் இருங்க:

http://www.planetdan.net/pics/misc/georgerag.swf

பை..பை..

About The Author

16 Comments

  1. PREMALATHA

    வணக்கமுங்கோ! நீங்க சொன்ன கதையோட முடிவு எனக்கு தெரியுமுங்கோ! சொல்லவாங்கோ, அதுதானுங்கோ, கனவில் வந்த பெண் கோபத்துடன் கறை போகலைனா ஸர்ப் எக்சல் போடு என்று சொல்லிவிட்டு சென்றாதாமுங்கோ. ஏணுங்க இப்படி எல்லோரையும் பயப்படுத்துறீங்க? ஆலங்கட்டி மழை போட்டோ அருமைங்கோ…..

  2. Jo

    கையும் காலும் சுளுக்குச்சோ இல்லையோ, வீட்டில் எல்லாரும் நான் செய்றதைப் பார்த்து பைத்தியம் பிடிச்சுடுச்சோன்னு பயந்து போய்ட்டாங்க.. வித்தியாசமான அனுபவம்.

  3. P.Balakrishnan

    அமெரிக்காவின் ஆலங்கட்டி மழையை நானும் அனுபவித்துள்ளேன். பள்ளியில் படிக்கும்போது நம்மூரில் தகரம் வேய்ந்த வீடுகளில் பெய்யும் ஆலங்கட்டி மழை எழுப்பும் ஓசையை ரசிப்போம்; அது ஒரு தனி ரகம்; அது ஒரு சங்கீதம்! தகரக் கூரை போட்ட சினிமாக் கொட்டகையில் பெய்யும் ஆலங்கட்டி மழை படத்தில் வரும் வசனத்தைவிட சத்தம் மிகுந்ததாய் இருக்கும்.

  4. Narasingam

    ஆலங்கட்டி மழை என்ட்ரவுடன் நினைவு வருவது சவுதிஅரெபியாவில் பெய்த (2007)ஆலங்கட்டி மழைதான் நான் ரசித்தது.கதயால் கடித்தவர்க்கு ஒரு தாங்ஷ்

  5. Kavitha Prakash

    கதையோட முடிவைச் சொன்னதுக்கு நன்றி பிரேமாலதா.

  6. Rishi

    போட்டோ மிக அழகு, கவிதா. உங்க மனசு போலவே!!
    (அச்சோ! நெஜமாத்தான் சொல்றேங்க.. அந்தப் பனிக்கட்டியைத் தூக்கி தலைல வைக்கல!)

  7. Rishi

    கவிதா
    அரிசோனாவுல இருக்கேன்ங்கிறீங்க. திடீர்னு டென்வர் போறீங்க. நயாகரா போறீங்க..! ஆலங்கட்டி மழைங்கிறீங்க….ம்ம்ம்ம்… என்ஜாய்!

  8. Kavitha Prakash

    நண்பரே !

    நான் போனால் நீங்க போன மாதிரி ! ( சத்தியமா நீங்க வைச்ச பனிக்கட்டியை உங்களுக்கு வைக்கல.)

  9. mano

    வெயில் படம் வந்து எவளவோ நாளான பிரகாய்யா கமென்ட்ஸ் எழுதிரீங்க??? தோலை உறீச்சு புடுவேன் ஆமா…..[[அந்த காலாட்டி கையாட்டி சூப்பர்மா]]

  10. Rishi

    கவிதா
    அப்போ பனிக்கட்டி வச்சிட்டேனு சொல்றீங்களா! ஆஅவ்வ்வ்!
    அதென்னவோ உண்மைதான். நீங்க போனா நாங்க போன மாதிரிதான். உங்க விளக்கமும் படங்களும் எங்களுக்கு அப்படியே கண் முன்னே காட்டுவது போலல்லவா இருக்கிறது!

  11. Rishi

    மனோ
    அமெரிக்காவுல தோல் என்ன விலை விக்குது?
    அது சரி… காலாட்டி கையாட்டினதுல சுளுக்கிடுச்சாமே உங்களுக்கு? இதுக்காக கவிதா மேல கேஸ் போடப்போறேன்! தவறான செய்திகளை அரட்டைல சொல்றதுக்காக…!

  12. Kavitha Prakash

    ரிஷி,

    // யாருக்காவது காலோ, கையோ சுளுக்கினா அதுக்கு நான் பொறுப்பில்லை!!!//

    நான் தெளிவா அரட்டையில சொல்லியிருக்கேன். மனோவோட சுளுக்குக்கு நான் பொறுப்பில்லை.
    கேஸ் போட்ட, உங்க சந்தோஷம் பறி போகலாம்னு கனவு வருது எனக்கு.
    🙂

Comments are closed.