சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம், தோழர்களே, தோழியரே!

மறுபடியும் ஸ்வர்ணா. நலம்தானே எல்லோரும்? நானும் நலமே… ஆனா நம்ப நாடு நலமான்னுதான் கொஞ்சம் கவலை.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் ஒரு உலுக்கு உலுக்கிருச்சு இல்லையாங்க? ஒரு பத்து பேர் இன்னொரு நாட்டிலிருந்து கிளம்பி வந்து இவ்வளவு சேதம் விளைவிக்க முடியும்னா நம்பறத்துக்கு கஷ்டமா இருக்கு. உள்ளூர்ல உதவி இல்லாம இதெல்லாம் சாத்தியமான்னு கேள்வி வருதில்லையா? அதனால எனக்கென்னவோ சும்மா சும்மா அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்றதை விட்டுட்டு, நாம ஒவ்வொருத்தரும் விழிப்பா இருக்கிறது அவசியம்னு தோணுது. சுத்துப்பட்டுல ஏதாவது சந்தேகத்துக்கிடமா நடந்தா பொறுப்பா சம்பந்தபட்டவங்களுக்கு போனவாரம் ‘?!’ சொன்ன எண்கள்ல தெரிவிச்சா நல்லது.

சேவைன்னதும் ரெண்டு வாரம் முன்னாடி ஜி3 எழுதியிருந்த இ-ரிபல் அமைப்பு நினைவுக்கு வருதுங்க. அரட்டையைப் படிச்சிட்டு நம்ப வாசகர்கள் சிலர் அதில சேர்ந்திருக்காங்களாம். கவிதா கடுதாசி போட்டிருந்தாங்க. நானும் சேவை செய்யறேன் பேர்வழின்னு கொஞ்சம் முயற்சி செய்திருக்கேங்க… ஆனா இறங்கிப் பார்த்தா வெறுத்துப் போச்சு. நம்மள்ல 90% பேர் உதவி செய்ய உணர்ச்சிபூர்வமா முன்வறோமே ஒழிய நாம பண்ற உதவில அர்தமிருக்கா, அதனோட பலன் எப்படி இருக்கும்னே யோசிக்கறதில்லை. என்னைப் பொறுத்தவரை பண்ற உதவியோட பலன் மேக்ஸிம்மா இருக்கணும்.

உதாரணத்துக்கு, ஒரே ஒரு விதை போடத்தான் எனக்கு வசதி இருக்குன்னு வச்சிப்போம். கையில கிடைக்கற ஏதாவது ஒரு விதையைப் போடறதை விட, ஒரு பெரிய விருட்சத்தைத் தரக்கூடிய விதையைப் போடத்தான் நான் விரும்புவேன். அந்த மரம் கனிகள் தரலாம், நிழல் தரலாம் இன்னும் பல மரங்களை உருவாக்க விதைகள் தரலாம். அழகா இருக்குங்கறத்துக்காக ஒரு பூச்செடியை நட்டால் இவ்வளவு பலன் இருக்காதுங்கறது என்னோட எண்ணம். இப்படிதாங்க, ஏதேதோ சொல்லப் போக, சிலர் ரொம்ப கடுப்பாயிடுட்டாங்க. யார் செய்யற உதவியையும் நான் குறை சொல்ல வரலைங்க. செய்யறது செய்றீங்க, அது பெருகற மாதிரி செய்ங்கன்னுதான் கேட்டுக்கறேன். கவிதாகிட்டேயும், மக்களுக்கு ஒரு பொருளை இலவசமா கொடுக்கறதைவிட அதை சம்பாதிக்க என்ன வழின்னு சொல்லிக் கொடுக்க முடியுதா பாருங்கன்னு சொல்லியிருக்கேன். நட்டு கழண்ட கேசுன்னு அவங்க நினைச்சாலும் நினைச்சிருப்பாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.

ஒரு பின்தங்கிய கிராமம் இருக்குன்னு வச்சுக்குங்க, அதுக்கு தலைவரா நீங்க வர்றீங்க. கல்விக்கான உதவித் தொகை தர்ற பவர் உங்களுக்கு இருக்கு. ஆனா குறிப்பிட்ட தொகைதான் இருக்கு. நீங்க அந்தப் பணத்தில் ஒருத்தரை இஞ்சினியரிங் படிக்க அனுப்புவீங்களா, அல்லது அஞ்சு பேருக்குத் தொழிற்கல்வி கத்துத் தருவீங்களா? உங்க முடிவை அதுக்கான காரணத்தோட எனக்கு எழுதுங்க. உங்க பதில் எனக்குப் பிடிச்சிருந்தா ஒரு பரிசு தருவேன். (குலுக்கலெல்லாம் கிடையாது, ஆமா)
அடடா, இன்னிக்கு அரட்டை சீரியசா போகுதே! கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க. கீழே உள்ள க்ளிப்பிங்கைப் பார்த்து உங்க முகத்தில் ஒரு புன்னகையாவது வரலைன்னா என் ஊரை மாத்திக்கிறேன்.(அட, பேரை மாத்திக்கறேன்னு எத்தனை நாளைக்கு சொல்லிட்டிருக்கறது?)

http://in.youtube.com/watch?v=mnbY2jALfqI

ஆனாலும் இந்தக் குட்டி சிரிக்கறது கொஞ்சம் ஓவர்ங்க. இத்தனூண்டு இருந்துகிட்டு அது அடக்க முடியாமா நினைச்சு நினைச்சு சிரிக்கறதைப் பார்க்கும் போது எனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் மனசு லேசாகிடும். என்னோட விருப்பத் தேர்வா இந்த சுட்டியை சேமிச்சு வச்சிருக்கேன். இந்த க்ளிப்பிங் யூட்யூப்ல கூட ரொம்ப பாபுலர். யார் பெத்த பிள்ளையோ, இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்துது…

ஆனா பாருங்க, தான் பெத்த பிள்ளையையே காசுக்காக கடத்தியிருக்கற கொடுமை பிரிட்டன்ல நடந்திருக்கு. பிபிசில தற்செயலா இந்த செய்தியைப் படிச்சேன். சில மாசங்களுக்கு முன்னால 8 வயசு ஷேனன் மாத்யூஸ் காணமப் போச்சு. மேலை நாடுகள்ல இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவாங்க போலிருக்கு. போலீஸோட சேர்ந்து பொதுமக்களும் தேடு தேடுன்னு தேடிருக்காங்க. ஊடகங்களும் பயங்கர பப்ளிசிடி கொடுத்திருக்காங்க. ஷேனனோட அம்மா தொலைக்காட்சியில வாரக்கணக்கா அழுது புலம்பியிருக்கு. ( இந்தம்மாவுக்கு மொத்தம் ஆறு குழந்தைங்க- அஞ்சு வெவ்வேற ஆண்கள் மூலமா!!! ) 40 நாள் கழிச்சு போலீஸ்காரங்க ஷேனனைக் கண்டுபிடிச்சு, கடத்தல்காரனைக் கைது செய்திட்டாங்க. சில நாட்களில அந்தம்மாவும் கைது. புலன் விசாரணைல அந்தம்மா, மனநிலை சரியில்லாத தன் முன்னாள் காதலனை விட்டு ஷேனனைக் கடத்த வைத்ததாகவும் மயக்க மருந்து கொடுத்து அவரோட வீட்ல அடைச்சு வைச்சிருந்ததாகவும் தெரிஞ்சிருக்கு. திட்டம் என்னன்னா – மீடியால எப்படியும் கண்டு பிடிக்கறவங்களுக்கு 50,000 பவுண்ட் வரைக்கும் சன்மானம் அறிவிப்பாங்க… உடனே ஒரு பொது இடத்தில ஷேனனை ரிலீஸ் செஞ்சு, தானே கண்டுபிடிச்ச மாதிரி கடத்தினவரே நாடகமாடி பணத்தே வாங்கி ஆளுக்குப் பாதியா பிரிச்சுகலாம்! ஆனா, அந்தூர் போலீஸ்காரங்க சித்ரவதை எதுவும் செய்யாமலேயே உண்மையை வரவழைச்சிட்டாங்க.

நம்ப ஊர்ல ரெண்டு வாரம் முன்னால சோளிங்க நல்லூர்ல நடந்த போலீஸ் கதையைக் கேளுங்க. ஒரு ஆளு தன்னோட பைக்ல சிக்னலுக்காக காத்திட்டிருக்கும் போது டிராஃபிக் போலீஸ் ஒருத்தர் அவரை ஓரம் கட்டி நிறுத்தி பைக் சாவியைக் கைல எடுத்து வச்சிக்கிட்டு, ஆவணங்களை எல்லாம் காட்டச் சொல்லி கேட்டிருக்காரு. அந்த பைக்காரர், ‘‘ என்கிட்ட எல்லா டாகுமெண்ட்ஸும் இருக்கு. ஆனா முதல்ல என்னோட சாவியைக் கொடுங்க. நான் எல்லாத்தையும் காட்றேன்’’ னு சொல்லியிருக்கார். ‘‘ரூல்ஸ் பேசறியா ஃபைன் போட்டுடுவேன்”னு’ போலீஸ்காரர் மிரட்டியிருக்காரு. நம்மள்ல முக்கால்வாசிப் பேரு என்ன செஞ்சிருப்போம்? எதுக்கு வம்புன்னு இருநூறு ரூபாயைக் கொடுத்துட்டு ஓடியிருப்போம். ஆனா நம்ப பைக் ஹீரோ அதைச் செய்யலை. ‘‘நான் கஷ்டப்பட்டு உழைச்சு வாங்கின வண்டியோட சாவியை எடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’’ன்னு சொல்லி வண்டியை சிக்னல்ல குறுக்கா படுக்க வைச்சுட்டார். வழக்கம்போல வம்பு பார்க்க கூட்டம் கூடியாச்சு. அதையும் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் அந்த ஹீரோ. சுத்தி இருந்தவங்க கிட்ட நடந்ததை விளக்கி பத்துப் பேர்கிட்ட கையெழுத்து வாங்கி புகார் தயார் செய்திட்டார். அப்புறம் என்ன நடந்திருக்கும்னு நீங்களே ஊகிச்சுக்க முடியுமே!

திருட்டுப் பயலே படத்தில, விவேக், ‘‘ஃபாரின்ல பொது இடத்தில கிஸ் அடிக்கலாம். ஆனா பிஸ் அடிக்க முடியாது. நம்ம ஊர்ல எங்க வேணாலும் பிஸ் அடிக்கலாம் கிஸ் அடிக்க முடியாது’’ன்னு சொல்வாரு. சமீபத்தில என் தோழியை விமான நிலையத்தில வரவேற்க போனபோது அவ அதைச் சொல்லி கிண்டல் செய்தா. ஏன்னா மீனம்பாக்கம் அவ்வளவு அசுத்தமா இருக்குங்க. தோழி ஃபாரின் போய்ட்டு அஞ்சு வருஷம் கழிச்சு வர்றா. அவளுக்கே நம்ப ஊரைப் பார்த்து இவ்வளவு கிண்டல் இருந்தா, அயல்நாட்டுக்காரங்களுக்கு எவ்வளவு கேவலமா இருக்கும்னு தோணுச்சு. சுத்தம் சோறு போடும்னு படிக்கறதெல்லாம் ஏட்டோட போட்டுடறோம்னு தோணுது. ஆனா மக்கள் மனசில பதியுற மாதிரி சொல்ல தொலைக்காட்சி போல இன்னும் நிறைய வழிகள் இருக்கே! முழுமனசோட நாம அதைச் செய்யறதில்லையோ? மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யோசிக்கவும்…

ஹாங்… அந்த ஏர்போர்ட் ஃப்ரண்ட் சொன்ன ஒரு பயனுள்ள செய்தி. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில ஏதாவது வேலை ஆகணுமானா கொம்பால தண்ணி குடிக்கணுமாம் (இந்தியாவில இருக்கற நாமே தலையால தண்ணி கொடுக்க வேண்டிருக்கு) ஆனா அவ தன் வேலையெல்லாம் ட்ரை ஸ்டார் மூலம் சுலபமா பண்ணிக்கறாளாம்… அந்த நிறுவனம் ‘எவ்ரி டே சர்வீஸஸ்’ங்கற பேர்ல என்ன வேலைன்னாலும் பண்ணித் தருவாங்களாம். மேலும் விபரம் வேணுமானா இந்த இணைய தளத்தைப் பார்க்கவும்:

http://www.tristarhousing.com

இந்த வாரம் சீரியஸா போனதுக்கு பிராயச்சித்தமா அடுத்த அரட்டையை அக்மார்க் அட்டகாசமா மாத்த முயற்சி செய்யறேன்…
யாருக்காவது வெஜாவாகணும்னு ஆசையிருந்தா எழுதுவீங்களாம்… எங்க ‘தலை’ சொல்லச் சொன்னாங்கோ… (போட்டிக்கா வர்றீங்க? இருங்க இருங்க தம்பிகளை விட்டு கவனிக்கச் சொல்றேன் – சொர்ணாக்கா)

‘ரை… ரைட்… அடுத்த வெஜா இன் வெயிட்டிங்’ அப்படின்னு பின்னணி குரல் கேக்குது.
மங்களம் சுப மங்களம்…

About The Author

3 Comments

  1. kavitha

    Hi Swarna,
    I didnot mistake the comments from You. Since i suffered from Mams not able to send the reply.I agree with you ur view about seeds.We will take care of ur point of view also. our motive is to make a sincere attempt that will bring a significant change to the society rather than just discussing the evils of it …
    Thanks,

    Cheers,
    e_rebel team

  2. Hema Manoj

    Dear Sorna,

    Maximum benefit message is very nice and wise suggestion. thanks for sharing your wonderful thought.

    Warm Regards
    Hema Manoj.

  3. Rishi

    அந்த பைக் மேட்டர் ரொம்பவே ரசிச்சேன்…. அதானே.. நம்ம மேல தப்பு இல்லன்னா யாருக்கு பயப்படணும்.. இந்த பைக் ஹீரோவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப்

Comments are closed.