சில்லுனு ஒரு அரட்டை!

வந்தனம் வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி. எல்லோரும் எப்படியிருக்கீங்க?. ரொம்ப நாளாச்சு நாம பேசி!. ரிஷி ஒரு இரண்டு வாரம் வரலைன்னா கொ.ப.செ. என்னாச்சோ, கொடுக்க வேண்டிய பதவியை கொடுக்க மாட்டாரோன்னு பதறாங்க வாசகர்கள். எங்க கட்சியில பாருங்க, தல ஜோ, தொண்டன் நான்னு எந்த பிரச்சினையுமில்லாம கட்சி நடக்குது. கூட்டம் சேர்ந்தாலே குழப்பம்னு சொல்லி கட்சியைக் கட்டிக் காக்கிறோம்.

ஊர்ல எல்லோரும் என்னை தவறாம கேட்ட கேள்வி, அமெரிக்காவில் இருந்தாலும் எப்படி உங்க பொண்ணு இவ்வளவு தெளிவா தமிழ் பேசறான்னுதான். தமிழ் தெரியாதவங்ககிட்ட மட்டும்தான் ஆங்கிலம் பேசணும்னு சொல்லிக் கொடுத்திருக்கோம். ஒரு இனத்தோட அடையாளமா இருக்கிற மொழியை பயன்படுத்த தயக்கம் காட்டுறது நாமாகத்தான் இருப்போம். தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டே குழந்தைகளுக்கு முதல் மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாம் மொழியாக பிற மாநில, நாட்டு மொழிகளையும் படிக்க வைக்கிறாங்க. அதைத் தவறென்று கூற வரவில்லை. நடைமுறைக்கு தேவையான அளவாவது தமிழ் சொல்லித் தர வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். இது தொடர்பா எங்க தல ஜோ நடத்திய கூட்டத்தோட கட்டுரையை கீழே உள்ள சுட்டியில் படிச்சிட்டு வாங்க. நான் சோடா குடிச்சுக்கிறேன்.

https://www.nilacharal.com/ocms/log/10260906.asp

எதுக்கு இவ்வளவு காட்டமா பேசறேன்னு வேற பக்கம் போயிடாதீங்க. விஷயம் என்னான்னா கோவைக்கு போயிருந்தபோது பேருந்துக்காக காத்திருந்தேன். மிகப் பிரபலமான ஆங்கிலோ இந்தியப் பள்ளியிலிருந்து சில மாணவர்கள் அங்கே வந்தாங்க. எப்போதும் காரிலேயே சென்று பழகியவங்களுக்கு பஸ் பயணம் ஒரு உற்சாகத்தைக் கொடுக்க, கணபதி போக எந்த பஸ்ஸில் செல்ல வேண்டுமென்பது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தாங்க. அவங்க வந்து 30 நிமிடம் கழிச்சும் அவங்க போக வேண்டிய பஸ் இரண்டு வந்தும் போகவில்லை.

அந்தக் கூட்டத்தில் வயதில் சிறிய குழந்தை அழ ஆரம்பிக்க, அருகில் சென்று என்ன விஷயம்னு கேட்டேன். கணபதிக்கு போகும் பஸ்ஸின் எண் 3 என்று மட்டும் தெரிந்த அவர்களுக்கு போர்டில் தமிழில் எழுதியிருப்பதைப் படிக்க முடியவில்லை. 3B, 3G என பஸ் வரக் குழம்பிப் போய் இருந்துள்ளனர். அடுத்து வந்த பஸ் சற்று தள்ளி நிற்க, பாதாளச் சாக்கடை மூடியை தாண்டக் கூடத் தெரியாமல் அந்த பஸ்ஸையும் விட்டனர். அடுத்து வந்த பஸ்ஸில் அவர்களை ஏற்றி அனுப்பிய பின் அவர்களின் பெற்றோர் மேல் கோபமாக வந்தது. அடிப்படைத் தமிழைக் கூட சொல்லித் தராத அவர்களின் பதவிசு பணம் போனால் காணாமல் போகலாம். அப்போது அந்தக் குழந்தைகளின் நிலை?. படிக்கும் குழந்தை வீட்டில் எந்த வேலையும் செய்யாததைப் பெருமையாகச் சொல்லும் பெற்றோரும் இருக்கின்றனர்.

என்னைச் சிந்திக்க வைத்த அந்த நிகழ்வுக்குப் பின் நான் என் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பும் முறையில் சிற்சில மாற்றங்கள் செய்தேன். ஒரு நாள் நடை, ஒரு நாள் சைக்கிள், ஒரு நாள் கார் என்று பழக்கினேன். எவ்வளவு வீட்டுப் பாடம் இருந்தாலும் குளியல், துணிகளை மடித்து வைப்பது, குப்பையைப் போடுவது எனச் சிற்சில வேலைகளைச் செய்யவும் பழக்க ஆரம்பித்துள்ளேன்.

நாம் வளர்க்கும் விதத்தில்தான் குழந்தைகளின் குணமும் வளரும் எனத் தெரிந்தது. எப்போதும் அரசாங்கமே எல்லாத்தையும் செய்ய வேண்டுமென எண்ணாமல் நம்மால் முடிந்தளவு நம் குழந்தைகளையாவது நல்ல குடிமக்களாக முயற்சிக்கலாமே!. (அப்பாடா! தல ஜோ எழுதித் தந்ததைப் பேசி முடிச்சிட்டேன்!)

கொஞ்ச நாளா தழிழ்நாட்டுல சமச்சீர் கல்வின்னு சொல்லிட்டு இருக்காங்க. அதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கூற, அப்பாடத்திட்டத்தின் வரைவை கீழேயுள்ள சுட்டியில் பார்க்கலாம்.

http://www.pallikalvi.in/

ஆமா.. நாம சொன்ன உடனே கேட்டுரப் போறாங்களாக்கும்னு அலுத்துக்காம, ஊதற சங்கை ஊதி வைங்க. என் பொண்ணுக்காக ஆன்லைன் தமிழ்ப் பாடங்களைத் தேடினப்போ, தமிழ்நாடு அரசோட சுட்டியே கிடைச்சுது. ஒன்று முதல் 12 -ஆம் வகுப்பு வரையான பாடங்கள் pdfல் போட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழிகளில் இருக்கின்றன. முடிந்தளவு கணினியிலேயே சொல்லித் தந்து காகிதப் பயன்பாட்டை குறைக்கலாம். புத்தகம் வாங்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு பிரிண்ட் போட்டுத் தரலாமே.

http://www.textbooksonline.tn.nic.in/

டீம் எவரெஸ்ட் அப்படிங்கற யாகூ குழு மூலமா கல்விக்கு உதவுறாங்க ஒரு சில நல்ல மனசுக்காரங்க. உதவுறதுக்கு அவங்க போடும் ஒரே கண்டிஷன், மாதத்தில் இரண்டு நாட்கள் சமூக சேவை செய்யனும். அதைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை படிக்க:

http://teameverest.wordpress.com/2009/10/27/everest-young-helping-hands/

காலத்துக்கேற்ற மாற்றங்கள் தமிழில் வந்தாலும் இன்னும் என்னவெல்லாம் வேணும்னு கவிஞர்கள் சொன்னதை அழகான கட்டுரையா திரு. சுப்பராமன் அவர்கள் சொன்னதைப் படிச்சிட்டு வாங்க, பயணம் பத்திப் பேசலாம்.

https://www.nilacharal.com/ocms/log/09280909.asp

இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஒரு மாதமாகியும் எங்க கொங்கு நாட்டு வாசம் மனசை விட்டுப் போகலை. ஆதவன் படத்தில சூர்யாவோட கொங்கு தமிழைக் கேட்டு, மீண்டும் ஒருமுறை ஊருக்குப் போன அனுபவம் என்றால், வடிவேலோட காமெடியால சிரிச்சு வயிறு புண்ணாயிப் போச்சு. மிக, மிகப் பழைய, பழகிய கதை என்றாலும் படத்தின் முதல் பகுதிக்காக கொங்கு முன்னேற்றப் பேரவை சார்பில் பாஸ் மார்க் போடறேன். கையோட (காதோட ) ஆதவன் இசை விமர்சனத்தைப் படிச்சிட்டு வாங்க:

https://www.nilacharal.com/ocms/log/09140917.asp

பயணங்கள் நம் எண்ணங்களை விசாலமாக்கும்னு நிலா எழுதிய பயணக் கட்டுரையைப் படிச்சதும் நான் கலிஃபோர்னியாவில் சந்தித்த ஹெலன், தாமஸ் இருவரும் நினைவிற்கு வந்தாங்க. அமெரிக்காவில் முதன் முதலாய் வந்திறங்கி, தங்கிய ஹோட்டலை காலி செய்த போது நடந்தது இது. எங்கள் எதிர் அறையில் இருந்த ஹெலன் மூன்று முறை திருமணமானவர். மூன்றாமவருடன் அலுவலகப் பணிக்காக அந்த விடுதியில் தங்கியிருந்தார். பொழுது போகாத நேரங்களில் நாங்கள் இருவரும் பார்க்கில் குழந்தைகளை விளையாட விடுவதுண்டு. இந்தியக் கலாசாரத்தில் வளர்ந்த எனக்கு அவரின் 3 திருமணங்கள் சற்று உறுத்தவே, அவரே பேச வந்தாலும் நான் தவிர்க்கவே விழைவேன்.

விடுதியைக் காலி செய்யும் நாளன்று காலையில் அபார்ட்மெண்ட் கீ வாங்கப் போன என்னவர் மாலையாகியும் வரவில்லை. நானோ அறையைக் காலி செய்து விட்டதால், ஹோட்டல் வரவேற்பறையில் குழந்தையுடன். கைப்பையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எனக்கே பசியும், கணவரிடமிருந்து எந்தவிதத் தகவலும் வராத பதட்டமும் இருக்க, குழந்தையோ பசியில் அழ ஆரம்பித்தாள். கையிலிருந்த பிஸ்கட்டும் தீர்ந்த நிலையில் சற்று தூரம் நடந்தால் இருக்கும் இந்திய உணவகம் நினைவிற்கு வர நடக்க ஆரம்பித்தேன். அமெரிக்க டாலர்கள் இல்லாத நிலையில் நகைகளைக் கொடுத்து உணவு வாங்குவது, பின் கணவர் வந்தால் திருப்பிக் கொள்ளலாமென சென்றேன்.

விடுதியின் வெளியே ஹெலன் தாமசுடன் என்னை நோக்கி வந்தார். எதேச்சையாய் வரவேற்பறை வந்த அவர்களின் முதல் மகன் நான் அங்கு பதட்டத்துடன் இருப்பதைக் கூற, என்னவென்று அறிய வந்துள்ளனர். அதன் பின் அவர்கள் அறையிலிருந்து குழந்தைக்கும், எனக்கும் உணவு, குளிரைத் தாங்க உடை கொடுத்து, என்னவர் வரும் வரை என்னுடனே இருந்தனர். பலதாரத் திருமணத்தை உலக மகாக் குற்றமாகக் கருதி அவர்களுடன் நேசம் பாராட்டாத என் மடத்தனத்திற்கு அன்று விழுந்தது சரியான அடி. எத்தனை திருமணங்கள் செய்தாலும், யார் மூலம் குழந்தைகள் வந்திருந்தாலும் அந்தக் குழந்தைகளை தன் சொந்தக் குழந்தையாகவே பாவித்து வளர்க்கும் அமெரிக்கரைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

புதிய மனிதர்களின் அந்தரங்கம் எப்படி இருப்பினும் அவர்களின் நட்பு நறுமணத்தையே தரும் என்ற உணர்வைத் தந்த ஹெலன் தாமஸை, அந்தப் பெயருடையவர்களை சந்திக்க நேரும் போதெல்லாம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. நிலாவோட அமெரிக்கப் பயணத்தை இரண்டு கட்டுரையா தொகுத்திருக்காங்க. படிச்சிட்டு என் உணர்வு சரியான்னு சொல்லுங்களேன்.

https://www.nilacharal.com/ocms/log/10260919.asp

மறுக்காப் பேசற வரைக்கும், வாசகர்கள் எல்லோரிடமும் அன்பும், ஆரோக்கியமும் தழைக்கணும்னு பாளையத்தம்மனை வேண்டி என்ர வணக்கத்தை சொல்லிக்கிறேனுங்க!

About The Author

7 Comments

  1. DeviRajan

    அம்மணிக்கு கோயமுத்தூருங்களாக்கும்! நல்ல வெயில்ல சிறுவாணித் தண்ணியைக் குடிச்சமாதிரி சும்மா சில்லுனு இருந்துச்சுங்கோ! என்ர உறவுக்காரங்க எல்லாம் கோயமுத்தூரு தாங்க அம்மணி! அடுத்த முறை இந்தியா வரும்போது என்ர வீட்டுக்கெல்லாம் வந்துட்டுப் போங்க கண்ணு!!!

  2. DeviRajan

    தமிழ் மக்களைத் தவிர மற்ற எல்லா மொழிக்காரர்களும் தங்கள் தாய்மொழியைக் குழந்தைகளுக்கு சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். எங்கள் வீட்டிலும் தமிழ் தான். நாங்கள் இந்தியா செல்லும் போது என் பெண்(4 வயது) நன்றாக தமிழ் பேசியது கண்டு எல்லாரும் ஆச்சிரியப்பட்டார்கள். ஆனால் இங்குள்ள ஆங்கிலோ- தமிழ்க் குடும்பங்களின் மத்தியில் இது ஒரு பெரும் சவாலாக தான் இருக்கிறது.

  3. kavitha

    ஆமாங்க அம்மணி !. உங்க ஒரம்பரை வீட்டுக்கெல்லாம் மறுக்கா இந்தியா வரும் போது வாரனுங்க!.

  4. maleek

    கோவை சரளாக்களே! உங்களூர் பாஷையைக் கேட்க இனிமையாகத்தான் இருக்கு.கொங்கு நாட்டு தமிழ்னா சும்மாவா?..கொக்க மக்கா.

  5. PREMALATHA

    நாங்களும் கோவைதானுங்கோ! அது என்னங்கோ அப்படி சொல்லிப்புட்டீங்கோ. உங்க கட்சியில சேரலாமுன்னா நீங்க சேத்துக்க மாட்டீங்க போலிருக்கே! பாளையத்தம்மன் சத்தியமா சொல்றோமுங்கோ உங்கள் கட்டுரையும் அம்சமாத்தான் இருக்குதுங்கோ! இருந்தாலும் ரிஷி பதவி கொடுக்கும்போது வேண்டாம்னு எப்படி அம்மணி சொல்றது. ஒரு விசயம் சொன்னீங்க பாருங்க இந்த தமிழிலிலேயே பேசுறது அது கரெக்டுங்கோ! எங்க வீட்டிலேயும் அல்லாரும் தமிழுதானுங்கோ.

  6. kavitha

    வாங்க பிரேமலதா வாங்க. கட்டுரையில ஏடாகூடமா சொன்னாத்தானே எங்களுக்கு பின்னூட்டம் போடுவீங்க !.

    ரிஷிகிட்ட பதவி வாங்கிட்டு, எங்களுக்கு அவரோட ரகசியத்தையெல்லாம் மறக்காம சொல்லிடுங்க கண்ணு!

Comments are closed.