சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம்! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தீபாவளியெல்லாம் கொண்டாடி முடிச்சுட்டீங்களா? கொஞ்ச நாள் முன்னாடி நம்ம நிலாகிட்ட இருந்து ஒரு மெயில்… சில்லுனு ஒரு அரட்டை அடிக்க நீங்க ரெடியான்னு? பெண்கள் கிட்ட அரட்டை அடிக்கலாமான்னு கேட்டா, மாட்டேன்னு சொல்வாங்களா? சந்தோஷமா ஒத்துகிட்டேன். அரட்டை அடிக்க வாய்ப்பு தந்த நம்ம நிலா டீமுக்கும் இந்த அரட்டைல கலந்துக்கப் போற நம்ம நண்பர்களுக்கும் நன்றி!

அரட்டை அடிக்கிறது எல்லாருக்கும் பிடிச்ச விஷயம். அது இன்னிக்கு நேத்திக்கு வந்தது இல்ல, அது சங்க காலத்துல இருந்து இன்னிக்கு வரை புதுப் புது விதமா வளந்திருக்கு. ஃபோன்ல யாரு ரொம்பப் பேசுறாங்க, ஆண்களா, பெண்களான்னு ஒரு சர்வே எடுத்தா, ஆண்கள்தான் முதல் இடம்னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனா அவங்க பேசுறதுல 80% ஆபீஸ் கால்கள்தானாம்!
அரட்டை, உறவுகள், நண்பர்கள் கிட்ட பேசுறது அப்படின்னு பாத்தா, பெண்கள்தான் முதலிடம்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. (அப்பா…! தோழிகள் எல்லாம் ரிலாக்ஸ் ஆயிட்டீங்களா?…) “சன்னா மசாலா எப்படி செய்யணும்?, இன்னிக்கு என்ன சமையல்?, தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட், புதுசா என்ன சாரி வந்துருக்கு?” – என்பதில் தொடங்கி, “பக்கத்து வீட்டுக்காரி சும்மா சண்டை போட்டுட்டு இருந்தாளே, இப்ப எப்படி இருக்கா?“ – என்று முடித்து ஃபோனை வைப்பதற்குள் ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். இப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் கம்ப்யூட்டர் நெட் கனெஷன் வேறு. குழந்தை பிறந்த நாள் முதல் கல்யாணம் வரை எல்லாம் வெப் கேமராவிலேயே பார்த்துவிடலாம்.

ஒரு கொசுறு செய்தி: சங்க காலத்தில தலைவி கல்யாணம் செஞ்சுட்டு போகும்போது கூடவே தோழியும்(தோழிகளும்) போவாங்களாம். தலைவன் வேட்டையாடப் போனாலோ, பொருள் சம்பாதிசிட்டு வரப் போனாலோ தலைவிக்குப் போரடிக்காம அரட்டை அடிக்கத்தான் அந்தத் தோழி. (ஒரு பொண்ணுக்கே இங்க இப்ப வழியைக் காணும்… க்க்கும்.. அப்படின்னு நம்ம ஃபிரண்ட்ஸ் சில பேர் சொல்றது கேக்குது…)

போன வாரம் ரிஷி பண்டிகை ஷாப்பிங் பற்றி எழுதியிருந்தாரில்லையா… அது பற்றி என் கருத்து… மக்கள் எல்லாரும் வந்து வாங்கணும்னுதான் பெருசு பெருசா கட்டிடங்களைக் கட்டி வெச்சிருக்காங்க. எல்லாரும் எப்பவும் ஈஸியா வந்துட்டுப் போற மாதிரி வழி ஏற்படுத்தணும்னு யாரும் யோசிக்கலை போலிருக்கு. அது சரி.. நம்ம மக்களும் அந்த கூட்ட நெரிசலை பழகிக்கிட்டாங்கன்னு பேசாம விட்ருப்பாங்க. சாதாரணமான நாள்லயே, மாம்பலம் ஸ்டேஷனில் லேசா காலை வைத்தால் போதும், ரெங்கநாதன் தெருவைத் தாண்டி உஸ்மான் ரோட்டுக்கோ, பஸ் ஸ்டாண்டுக்கோ நம்மளை யாராவது தள்ளிக்கிட்டே போய்டுவாங்க. நம்ம நடக்கிறோமா, பறக்குறோமான்னு கூட தெரியாது. இதுக்கு இடையில், ஒரு பையன் சுடிதார் மெட்டீரியலெல்லாம் கையில வெச்சுகிட்டு “அக்கா! (எல்லாரையும் அக்கான்னுதான் கூப்பிடுவான்!) அரை அவர்ல சுடிதார் தைச்சுத் தர்றோம்கா”னு இன்னொரு குட்டித் தெருவுக்குள் நம்மை நகர்த்தப் பார்ப்பான். விட்டா நடு ரோட்லே அளவெடுத்து, தைச்சு, நமக்கு மாட்டியும் விட்ருவாங்க. மெயின் கடைகளை விட ரோட்டில் இருக்கும் சிறிய கடைகளின் ஆதிக்கம் அதிகமாவதுதான் பிரச்சினையோ என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லைப் பிரச்சினை, தண்ணிப் பிரச்சினையைக் கூட சமாளிச்சரலாம் போல இருக்கு, இதுக்கெல்லாம் என்ன தீர்வுன்னே தெரியலை….(யாராவது புதுமையான ஐடியா குடுப்பாங்கன்னு வெயிட் பண்றாங்க போல இருக்கு….!)

எனக்கு வித்தியாசமான இடங்களைப் பாக்க ரொம்பப் பிடிக்கும். நம்ம நாட்டோட எல்லைக்குப் போயிருக்கீங்களா? எதுக்கு வம்புன்னு கேக்கறீங்களா? ஆனா கண்டிப்பா எல்லாரும் போய்ப் பாக்க வேண்டிய ஒரு இடம் – நம்ம வாஹா பார்டர். பஞ்சாப் மாநிலத்தில் இருக்கிற அமிர்தசரஸுக்கு 28 கி.மீ தொலைவில இருக்கு இந்த இடம். அதைத் தாண்டி அந்தப் பக்கம் போனா லாகூர். காலையில் 5 மணிக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரின் பரேடுடன் கொடியேற்றுதலும், மாலை 5 மணிக்கு பரேடுடன் கொடியிறக்கமும், இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரி நடக்கும். நம்ம வீட்டுல நடக்கற விசேஷங்களுக்கு, சடங்குகள் நிறைய இருக்கற மாதிரி, கொடியேற்ற நிகழ்ச்சியும், கொடியிறக்க நிகழ்ச்சியும் ஒரு சடங்கு போல அரைமணி முதல் முக்கால் மணி நேரம் நடைபெறும். மக்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக இரு பக்கமும் நெட்டு வாக்கில் நீண்ட படிகள் இருக்கும்.

எல்லைப் படையினரின் பரேடின்போது அவர்கள் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் தமது காலைத் தலைவரை தூக்கித் தரை தொடும் அதிசயமும், அவர்கள் கொடியை ஏந்திச் செல்லும் பாங்கும், விறைப்பான சல்யூட்டும், “போலோ பாரத் மாதா கி ஜே!” – என்ற மக்களின் ஆரவாரமும் – நாமும் உணர்ச்சிப் பெருக்கில் உறைந்து விடுவோம் என்பதே உண்மை. வீட்டிற்கு ஒரு பிள்ளையை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கத் தோன்றும். நேரம் கிடைக்கும் போது விடுமுறையில் எல்லோரும் அவசியம் போய்ட்டு வாங்க!

நம்ம சின்னப் பிள்ளையா இருக்கும்போது ஸ்கூல்ல ஏதாவது தப்பு செஞ்சா ஆசிரியர்கள், “தோப்புக்கரணம்” போடச் சொல்லுவாங்க. அப்புறம் கோயில்ல பிள்ளையாரைப் பார்த்தா தலையில குட்டிக்கிட்டு “தோப்புக்கரணம்” போடுவோம். உங்களுக்கு ஞாபகமிருக்கா? ஏன்னா இதெல்லாம் நம்ம பிள்ளைகளுக்கு (இன்றைய இளைய சமுதாயத்துக்கே) தெரியாது. நாகரீக வளர்ச்சியில் அதையும் கூட மறந்ததுபோல் இருந்துவிட்டோம். ஆனா கவலைப்படாதீங்க, இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் (நாமளும்தான்) இந்தத் “தோப்புக்கரணத்தை” போடத் தொடங்கி விடுவோம். எப்படின்னு கேக்கறீங்களா?

இதோ இப்படித்தான், கீழே உள்ள வீடியோவைப் பாருங்க.

http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs

“சூப்பர் ப்ரைய்ன் யோகா” எப்படி இருக்கு?… ஏற்கெனவே அரிசி, மஞ்சள் அப்படின்னு ஏகப்பட்டதுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியாச்சு. இனிமே “தோப்புக்கரணம் அப்படிங்கறதும் அமெரிக்கர்கள் கண்டுபிடித்ததுதான்” என்று புதிய வரலாறு படித்தாலும் படிப்பார்கள் நம் இளைய தலைமுறையினர். நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாமே மதம் அல்லது கடவுள் சார்ந்ததாக இருக்கின்றன. அமெரிக்கர்கள் எல்லாவற்றையும் அறிவியல் சார்ந்ததாகப் பார்க்கிறார்கள். அதுதான் வித்தியாசம்!

எல்லாம் பேசிட்டு சினிமாவைப் பத்தி பேசாம இருக்க முடியுமா? எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில ஒரு மலையாளக் குடும்பம் இருக்காங்க. அவங்க பொண்ணு வளைகுடா நாட்டுக்குன்னு ஏசியாநெட் தொலைக்காட்சி தயாரித்த ஒரு நிகழ்ச்சியை நடத்திட்டு வந்தாங்க. திடீர்னு ஒரு நாள் சினிமாவிலிருந்து அழைப்பு வந்தது. இப்போ அவங்க ஒரு படம் நடிச்சு முடிச்சுட்டாங்க! படம் பேரு “கேரளோற்சவம் 2009”. பினு மோகன் என்ற நடிகருக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. சங்கர் என்பவர்தான் இந்தப் படத்தோட இயக்குநர். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகப் போகுது. பொறுங்க பொறுங்க அந்தப் பொண்ணு பேருதானே!

“விஷ்ணு ப்ரியா”.

இப்ப எதுக்கு இந்த மேட்டர் அப்படீன்னு கேட்டீங்கன்னா, எப்படியும் 2 படம் முடிஞ்சதும் தமிழுக்கு வந்துருவாங்க. அப்ப நீங்கல்லாம் இவங்க யாரு, எந்த ஊருன்னு தவிக்கக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான். அப்புறம் அந்தப் பொண்ணுக்கு நிலாச்சாரல் மூலமா தமிழ் மக்கள் கிட்ட ஃப்ரீயா ஒரு பப்ளிசிட்டி. என்ன சொல்றீங்க? (என்ன ஒரு அக்கறை! – வடிவேலு ஸ்டைல்ல).

அவங்களோட படங்களை இங்க போயிப் பார்த்துக்கலாம்.

http://www.bharatstudent.com/cafebharat/photo_gallery_3-Malayalam-Actress-Vishnu_Priya-Photo-Galleries-4,2,777,4.php

ஒரு இனிப்பான செய்தியோடு நம்ம அரட்டையை முடிச்சுக்குவோம். சமீப காலமா தொலைக்காட்சியில கேட்பரீஸ் சாக்லேட்டுக்கு ஒரு விளம்பரம் வருது. “இந்த பண்டிகைக்கு யாரை சந்தோஷப்படுத்தப் போறீங்க” – அப்படின்னு வரும். பண்டிகைன்னு மட்டும் இல்லாம, தினமுமே குறைந்தது ஒருத்தரையாவது சந்தோஷப்படுத்த முடிஞ்சா அது மாதிரி சந்தோஷம் உலகத்தில வேறு எதுவும் இல்லை… (“தினமும் ஒருத்தருக்கு ஒரு கேட்பரீஸ் சாக்லேட் வாங்கிக் கொடுத்தா நம்ம பட்ஜெட்டுக்கு தோஷம்தான் வரும்”-ன்னு எடக்கு மடக்கா யாரும் கேள்வி கேப்பாங்களோ?)

சந்தோஷத்துடனும், நட்புடனும் விடை பெறுகிறேன்.

About The Author

11 Comments

  1. P.Balakrishnan

    வேலூர் பகுதியைச் சேர்ந்த பலர் தலைமுறை தலைமுறையாக இந்தியப் படையில்
    பணியாற்றுகின்றனர். நாட்டைக் காக்கும் நல்ல செய்தியை அரட்டையாக வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

  2. sandya

    ரொம்ப ஜோர் மா உங்க அரட்டை ! நான் ரொம்ப எஞ்ஜாய் பன்னினென்.

  3. megala

    இந்திய விடுதலைக்கு வித்திட்டதற்க்கு ஒரு தூண்டுக்கோளாக இருந்தது வேலூர் சிப்பாய் புரட்சிதான். ஆனால் வரலாற்றில் இரு வரிகளிள்தான் விவரம் இருக்கும். புரட்சியின்போது இறந்த ஆங்கிலேயர்களுக்கு மட்டும் தான் கல்லறை அமைக்கப்பட்டது.இந்திய சிப்பாய்களின் பெயர் பட்டியல்கூட எறிக்கப்பட்டன. அந்த நாட்டு பற்று இன்றும் தொடர்கின்றது நான் வேலுரை சேர்ந்தவள் என்பதற்க்கு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன் நாட்டுப்பற்றைவிளக்கிய வாசகிக்கு மிகவும் பாராட்டுகள். வெளியிட்டமைக்கு நன்றி.

  4. maleek

    ஆனா எங்களுர் பெண்கள் எல்லாம் அப்படி இல்லிங்க,தாம் உண்டு தன்
    வேலை உண்டு என்று இருப்பார்கள்!

  5. megala

    வோம் பேஜ்ஜில் சில்லுனு ஒரு அரட்டை அரங்கத்திற்க்கு வந்துகீற………………(அது என்ன சென்னை மொழி ) வந்துருக்கின்ற என்று வெளியிட்டுஇருந்தால் நன்றாக இருக்கும். அழகான தமிழ் வார்த்தைகளிருக்க இதுபோன்ற வரிகள் வேண்டாமே
    உலகம் முழுக்க உலாவரும் நிலாவில் கறும்புள்ளிகல் வேண்டாம்.
    நா.மேகலா”

  6. DeviRajan

    கருத்துக்களைப் பகிர்ந்துகிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

  7. Rishi

    கலக்குறீங்க தேவி.
    முதல் பரீட்சையிலேயே டிஸ்டிங்ஷன் வாங்கியாச்சு!! வாழ்த்துக்கள்!!

  8. Rishi

    வணக்கம் மேகலா,
    ஆலோசனைக்கு நன்றி. அதை எழுதியது நான்தான். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்தேன். மன்னிக்கவும். கவனத்தில் கொள்கிறோம்.

  9. DeviRajan

    வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷி. இந்த டிஸ்டிங்ஷன் க்குப் உங்க மாதிரி நண்பர்களோட சப்போர்ட் தான் காரணம் என்பதை மிகப் பெருமையோடு இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  10. gomathi mylraj

    தினமுமே குறைந்தது ஒருத்தரையாவது சந்தோஷப்படுத்த முடிஞ்சா அது மாதிரி சந்தோஷம் உலகத்தில வேறு எதுவும் இல்லை… என்னை மிகவும் கவர்ந்தது. “தோப்புக்கரணம்”- என்ன கொடுமை இது.

Comments are closed.