சுஜாதா – ஒரு மூன்றெழுத்து மந்திரம்

மரணம் என்பது சாஸ்வதமான ஒரு இயற்கை நியதி. அதனின்று யாவருக்கும் விலக்கு கிடையாது என்று புரிந்திருந்தும், சிலரின் மரணத்தை நம்மால் நம்பவே முடியவில்லை என்று அங்கலாய்க்கிறோம். அவர் மரணத்தை மனதார நம்ப, ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். காரணம் அவர்களுடைய வாழ்நாள் சாதனைகள் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தீவிரமாக நம்புவதால்தான். அப்படித்தான் சுஜாதா அவர்களின் மறைவை மனம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அவரின் கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், ஆழ்வார் பாசுரங்கள், அனைவருக்கும் புரியும் அறிவியல் கட்டுரைகள், ஸ்ரீ ரங்கத்துத் தேவதைகள், கடைசிப் பக்கங்கள் யாவும் முடிவின்றி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று அவரின் எண்ணற்ற வாசகர்கள் தீவிரமாக நம்பியதால்தான், எதிர்பார்த்ததால்தான் அவர் மறைவை நம்ப முடியவில்லை.

சிலருடன் நாம் நெருக்கமா பழகியில்லாத போதும் அவர்கள் நமக்கு அன்னியமாகவே தோன்றுவதில்லை. சுஜாதாவும் அப்படித்தான். அவருடைய எழுத்துக்களின் மூலம் நமக்கு மிகவும் அன்யோன்யமானவர்.

அவருடன் நெருங்கிய பரிச்சயமில்லை என்றபோதும் ஒரு பொது நிகழ்ச்சியின்போது (சிவாஜி படம் பற்றிய நிகழ்ச்சி என நினைவு) அவர் சோர்வாகக் காணப்பட்டார். அப்போது என்னையும் அறியாமல் அவருக்கு ஒன்றும் நேராமல் பல காலம் எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என மனதில் பிரார்த்திக்கத் தோன்றியது. அதுதான் சுஜாதாவின் எழுத்துக்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் சொந்தம், உறவு.

அவர் தன்னுடைய எழுத்துக்களில் தொடாத விஷயங்களே இல்லை. வயது வேறுபாடின்றி அவர் எழுத்துக்கு அனைவருமே நண்பர்கள். அவர் எத்தனை நாவல்கள், கதைகள் எழுதியிருக்கிறார் என்ற எண்ணிக்கைகளைவிட எத்தனை எத்தனை வாசகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். ஆங்கில நாவல், சிறுகதைகள், எழுத்துக்களின் மோகத்தில் மூழ்கியிருந்த காலத்தில் தன்னுடைய இனிய, வசீகரமான நடையினால் தமிழ் இலக்கியங்களை, தமிழ் எழுத்துக்களை மக்களுக்கு அண்மையாக்கிய பெருமை சுஜாதாவை நிச்சயமாக சாரும். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், ஆன்மிகம் என பல தளங்களில் இயங்கி தமிழ் வாசகர்களை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டவர் சுஜாதா. திரைப்படங்களில் நடிகர்கள், இயக்குனர், பாடலாசிரியர் இவர்களுக்கு இணையாக தன் வசனத்தை உயர ரசிக்க வைத்திருந்தார்.

கடைசியில் கூட இயக்குனர் ஷங்கரின் ரோபோ திரைப்படத்திற்கான வசனங்களை அவரிடம் கொடுத்து விட்டு என்னுடைய வேலையைத் திருப்தியாக முடித்துட்டேன். இனி ஒரு டென்ஷனுமில்லை, இதுதான் என் கடைசி படமாக இருக்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினாரென செய்திகள் கூறுகின்றன.

அவரின் கேள்வி பதிலுக்காக, தொடர்கதைகளுக்காக, நகைச்சுவைக்காக, ஆன்மீகக் கட்டுரைகளுக்காக, கணேஷ் வசந்திற்காக வாசகர்கள் வாராவாரம் காத்திருந்தார்கள். இனியும் காத்திருப்பார்கள், அவைகள் வாரா என்று தெரிந்திருந்தும்.

About The Author

2 Comments

  1. maleek

    சினிமா என்ற தங்கமாளிகையின் கதவு அவருக்கு திறந்திருந்தாலும்,கணையாழியின் கடைசிப்பக்கத்தில் இருக்கவே ஆசைப்பட்ட
    எளிய மனிதர்…அவர் இறந்திருக்கலாம் ஆனால் உலகெங்கிலும் ஏராளமான விதைகளை
    விதைத்து இருக்கிறது சுஜாதாவின் பேனா.

  2. mythili murali

    அய்யா,
    தாமதமாக பதிலெழுதுவதற்கு மன்னிக்கவும். சுஜாதா அவர்களின் எழுத்தில் மயங்கியவர்களில் நானும் ஒருவள்.
    மிக அழகாக சொன்னீர்கள். சிலரிடம் நேரடி பழக்கம் இல்லா விட்டாலும் மிக அன்னியோன்னியமாய் உணர்வோம். அத்தகய ஒருவரில் ஒருவர்தான் சுஜாதா. அவரின் மறைவு மிக்க அதிர்சியாய் இருந்தது. கொஞ்ச நாட்கள் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. ஆரரின் பழைய நவல்கலை புரட்டி பார்து சமாதானம் செய்து கொன்டேன்.

Comments are closed.