சுந்தரபாண்டியன் – இசை விமர்சனம்

சசிகுமார், தான் தயாரித்துக் காதல் நாயகனாக நடித்திருக்கும் படம். இசை என்.ஆர்.ரகுநந்தன். தனது முந்தைய படத்தில் தேசிய விருது வாங்கியவர், இதிலும் நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளார்.

காதல் வந்து

ஆல்பத்தின் இந்த முதல் பாடலைப் பாடியிருப்பவர் ஹரிசரண். காதலின் குணம் சொல்லும் பாடலுக்கு இசை நன்றாக உதவியிருக்கிறது. நா.முத்துகுமாரின் வரிகள் பாடலைக் கவனிக்க வைக்கின்றன.

"உன் பார்வையிலே புது மாற்றம் நடக்கும், உன் வார்த்தையிலே மெளனம் குதிக்கும்" போன்ற குணம் சொல்லும் வரிகள் அதிகம்.

நெஞ்சுக்குள்ளே

நாயகியின் ஆசை கூறும் பாடல், சைந்தவியின் மயக்கும் உச்சரிப்பில் மனதைப் பதம் பார்க்கிறது. தாமரையின் எழுத்துகள் பாடலுக்குக் கூடுதல் பலம்! ஒவ்வொரு வரி முடிவிலும் வார்த்தையை இழுத்துப் பாடியிருக்கும் விதம் அருமை!

"பட்டாம் பூச்சி நான் என்றால், எட்டுத் திசை நீயே!… எந்தப் பக்கம் போனாலும் நீதான் நிற்பாயே!" எனச் சிறகடிக்கும் வரிகள் இதம்.

இறக்கை முளைத்தேன்

ஜீ.வி.பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கும் பாடல்; ஆல்பத்தின் ஒரே டூயட்! இது கேட்போரையும் இறக்கையுடன் உயரே பறக்க வைக்கிறது! இன்ஸ்டண்ட் ஹிட் ஆகும் வாய்ப்பு இந்தப் பாடலுக்கு அதிகம். அதற்கு முழுக் காரணம் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

"சாலை ஓரத் தேநீர் – அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேறும் போதும் – இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!" எனக் கார்க்கியின் வரிகள் அருமை!

கொண்டாடும் மனசு

மாஸ் ஹீரோ அறிமுகப் பாடல் போல் இருக்கும் இதுதான் ஆல்பத்தில் பெரிதும் ஈர்க்காத பாடல்! பல ஹீரோக்கள், இது போன்ற தத்துவப் பாடல்களை ஏற்கனவே பாடிவிட்டதாலோ என்னவோ இது கவனம் பெற மறுக்கிறது.

காதலை மீட்கப் போராடும் இந்தச் சுந்தரபாண்டியனுக்கு இந்த ஆல்பம் கைகொடுக்கும்!

About The Author