சூது கவ்வும் – இசை விமர்சனம்

நல்ல தமிழ்த் தலைப்போடு விஜய் சேதுபதியுடன் கைகோத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி. படத்தின் முன்னோட்டக் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது பாடல்களும் வெளியாகியுள்ளன. சந்தோஷ் நாராயண் இசையில் பாடல்கள் எப்படி இருக்கின்றன?… பார்ப்போம்!

come na come

வானொலி அறிவிப்பு போல் தொடங்கிப் பின் பாடலாகிறது. பயன்பாட்டிலுள்ள வார்த்தைகளையே அழகாகக் கோத்துப் பாடலாக்கியிருக்கிறார்கள். கணேஷ் குமார் எழுதி, பாடியிருக்கிறார். "ஹே என்னடா?" என இடை இடையே வரும் குரல் ஈர்க்கிறது. போகிற போக்கில் சில உண்மைகளையும் சொல்கிறது.

"மெய்யும் பொய்யும் ஜோடியில்ல,
ஜோடி சேந்தா தப்பும் இல்ல!
யாரும் உண்மைய சொல்வதில்ல,
சொல்லிய பலபேர் இங்க இல்ல!" – உண்மை வரிகள்.

எல்லாம் கடந்து போகுமடா!
கோவை ஜலாலின் குரலில் எம்.ஜி.ஆர் காலத்துப் பாடலை நினைவுபடுத்துகிறது இந்தப் பாட்டு. பழைய பாடலைக் கேட்பதுபோல் இருந்தாலும் ஒலியின் துல்லியம் பாடல் புதிதுதான் என உணர்த்துகிறது. அருமையான உருவாக்கம்!

"வாழ்க்கை ஒரு வட்டம் – கேள்வி
கேட்பதொரு குற்றம்
விடை அறிந்து விட்டால்
புவி தாங்காதடா!
கண் தூங்காதடா!" – தத்துவ போதனை!

சகா

வயலினின் வருடும் இசையுடன் தொடங்கும் இந்தத் தன்னம்பிக்கைப் பாடலைப் பாடியிருக்கிறார் திவ்யா ரமணி. நீளம் குறைவுதான். சீக்கிரம் முடிந்து விட்டதே எனத் தோன்றச் செய்யும் பாடல்.

"காலங்கள் பாதை மீறலாம்
காயங்கள் மேலும் ஆகலாம்
நீரோட்டம் இங்கு ஓடும் வரை
நீந்தித்தான் பாரடா" – நம்பிக்கை வரிகள்.

காசு பணம்

கானா பாலாவே எழுதி, பாடியிருக்கிறார். மேற்கத்திய இசை, கானா வரிகள் எனப் புதுமையான கலவையாக இருக்கிறது. இதை ‘வெஸ்டர்ன் கானா’ எனக் குறிப்பிடலாம்.

"கொடை புடிச்சு நைட்டுல
பறக்கப்போறேன் ஹைட்டுல
தலகாலு புரியல
தலகீழா நடக்குறேன்" – மேலைக் கானா.

Sudden Delight

படத்தின் தீம் இசைக்கோவை இதுதான். தொடக்கம் முதல் இறுதி வரை அதனுடனே நம்மையும் பயணிக்க வைக்கிறது. இடையில் வரும் சில வரிகளை எழுதியிருப்பவர் ஆதி. ஒருவித இனம் புரியாத எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பாடல்.

"நல்லது எது, கெட்டது எது?
கெட்டதுக்கு நல்லது, கெட்டது"

மொத்த ஆல்பத்துக்கும் ஆஸ்திரேலியாவில் வைத்து இசைச் சேர்ப்பு செய்திருக்கிறார்கள். அதன் தரம் பாடலைக் கேட்கையில் புரிகிறது. எனவே இசை, படத்துக்குப் பெரும் பலம். சந்தோஷ் நாராயண் படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்துகிறார்

சூது கவ்வும் – இசையின் மற்றொரு பரிமாணம்!

About The Author