செட்டியார் முறுக்கு வேண்டும், தம்பி! (1)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுட‎ன் “வெற்றிக்கு முதல் படி” நூலிலிருந்து)

ஒரு தம்பி வெற்றிப் படிகளைத் தாண்டிய கதை.

என் பெயர் சந்திர மோகன்.

என் பெயர் அதுவல்ல, முதலில் இருளாண்டி என்று என் அப்பா பெயர் வைத்தார். ஊர் தெரிந்ததும் பல மனிதர்கள், குறிப்பாக எழுத்தாளர்கள் – சினிமா நட்சத்திரங்கள் – புதுப் பெயரை வைத்துக் கொள்வதைக் கண்டேன். ஏதோ பெரிய ஒன்றைக் கண்டுபிடித்தாற்போல என் மனதில் ஒரு ஒளி!

இருளாண்டி! ஆண்டி! ஆண்டிப்பயல்! இருள் வேறு! என்றைக்கு நான் வெளிச்சத்துக்கு வருவது?

‘கெட்டும் பட்டணம் சேர்’ என்ற மொழிப்படி நான் சென்னைக்கு வந்தபோது "உன் பெயரென்ன?" என்று கேட்டார்கள்.

"சந்திரமோகன்" என்றேன்.

"பலே! நல்ல பெயர்!" என்றார்கள்.

சந்திரனே குளிர்ச்சி. அதிலே மோகனம் ஒரு கவர்ச்சி. குளிர்ச்சியும் கவர்ச்சியுமாக வாழ்வைத் தொடங்கினேன்.

இன்சூரன்சு ஏஜெண்டு வேலை கிடைத்தது. பிறருடைய அன்பைப் பெற நட்பைப் பெற கவனத்தைப் பெற என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தேன். பிறருக்கு நாம் ஏதாவது செய்தால் உதவினால்… என்ற எண்ணம் ஏற்பட்டது.

காரணம் – ஒருநாள் சாலையில் ஒரு வயதான பெரியவர் தலையிலே ஒரு மூட்டையைச் சுமந்து கொண்டு வந்தார். நிறையப் பைகள்.

நானும் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். பார்த்தேன். பெரியவர் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். கைச்சுமையை நான் வாங்கிக்கெண்டேன். என் வேலையை ஒத்திப் போட்டுவிட்டு அவர் வீடு வரை நடந்தேன்.

வீட்டில் பையை இறக்கி வைத்துவிட்டு திரும்பியபோது அந்தப் பெரியவர், "சுந்தரராமா!" என்றொரு குரல் கொடுத்தார். வீட்டினுள்ளிருந்து ஒரு கம்பீரமான மனிதர் வந்தார். பெரியவருடைய மகனாம். பெரிய கம்பெனியில் வேலையாம். என்னைப் பற்றிச் சொன்னார், பெரியவர். சுந்தரராமன் மனம் நெகிழ்ந்து போனார்.

இப்படித்தான் சதர்ன் ஏஜன்சீஸ் ஜெனரல் மானேஜர் சுந்தரராமனின் தொடர்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை அலுவலகத்திற்கு வரச் சொன்னார். எனது முதல் இன்சூரன்சு விற்பனை அங்கேதான் தொடங்கியது. நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. நான் செய்த சிறு உதவிக்கும், என் ஆயுள் காப்பீட்டுக் கழக விற்பனைக்கும் நெடுங்காலத் தொடர்பு இருக்குமென்று!

பலரும் கேட்கிறார்கள் – "எப்படி ஐயா! நீங்கள் தஞ்சையின் தலைசிறந்த ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் விற்பனையாளராக இருக்கிறீர்கள்?" என்று.

எனது பதில் ஒரு புன்முறுவல்தான்! காரணம் இதிலே எந்த ஒரு கம்பசித்திரமுமில்லை.
என் தந்தை காலமானபோது, "மகனே! உன்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவு. தம்பியைப் பார்த்துக் கொள். தங்கையைப் பார்த்துக்கொள். அம்மாவைப் பார்த்துக்கொள். யாருக்கு உதவினாலும் அது பத்து மடங்காகத் திரும்பிவரும் என்பதை நம்பு" என்று சொல்லிவிட்டுப் போனார்.

அது ஒரு சோடா பாட்டில் கம்பெனி. மேலாளரைப் பார்க்க விரும்பினேன். முன் அறையில் கூட்டம். ‘என்னைப் பார்ப்பார்களா?’ என்ற சந்தேகம். ‘வாய்ப்பு இல்லை இங்கு’ என்று நானே எனக்குள் சொல்லிக்கொண்டு கீழே இறங்கினேன். லாரியில் பல "சோப்புத்தூள்" டிரம்கள் வந்து இறங்கியவண்ணம் இருந்தன. அவை எல்லாம் பாட்டில் கழுவ என்றார்கள்.

நான் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு மருந்துக்கடை மேலாளரைப் பார்க்க சென்றேன். அவரும் வேலையாக இருந்தார். இருமல் மருந்து தயார் செய்யும் நிறுவனம் அது.
இருமல் மருந்து தயார் செய்ய சுத்தமான தண்ணீர் வேண்டும். "இந்தப் பக்கத்தில் உள்ள தண்ணீர் சுண்ணாம்புத் தண்ணீர். அதற்காக தண்ணீரைச் சுத்தப்படுத்த இப்போதுதான் ஓரு எந்திரம் வாங்கினேன். இது இல்லாவிட்டால் என் பொருளின் தரம் குறைந்து போய்விடும்" என்றார் அந்த மேலாளர்.

எனக்கு ஏதோ ஒன்று பொறியில் தட்டினாற்போல இருந்தது! "இதே சிக்கல்தான் பக்கத்து சோடா பாட்டில்காரருக்கும் இருக்க வேண்டும். அவரும் தண்ணீரைச் சுத்தப்படுத்த ஏராளமாக செலவழிக்க வேண்டும். ஏன் அவரிடம் இதைப்பற்றி சொல்லக் கூடாது?"

மறுநாள் சோடா பாட்டில் கம்பெனிக்குப் போனேன். "ஜீ.எம்.மைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் தெரிவிக்க வேண்டும். ஒரே ஒரு நிமிடம்!" என்றேன், செயலரிடம். அனுமதி கிடைத்தது. உள்ளே போனேன்.

"ஐயா! இந்தப் பக்கத்துத் தண்ணீர் சுண்ணாம்புத் தண்ணீர் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் தண்ணீரைச் சுத்தப்படுத்துகிற ஒரு எந்திரம் வாங்கிப் போட்டால், இப்படி ஆயிரக்கணக்கில் இரசாயனப் பொருளை வாங்கிக் கழுவவேண்டாம். குறைந்த அளவில் இரசாயனப் பொருளை பயன்படுத்தினால் போதும்" என்றேன்.

என்னை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தார். ‘பையன் புத்திசாலி’ என்று என்னைப் பார்த்து வெளிப்படையாக சொல்லிவிடவில்லை. அந்த எண்ண ஓட்டம் அவரது கண்களிலே தெரிந்தது. என்ன நடந்தது அதன்பின்?

ஓராண்டுக்குள் என்னை மீண்டும் கூப்பிட்டார். ஒரு பெரிய இன்சூரன்சு பாலிசியை அவருக்கும் அவர் நிறுவனத்துக்குமாகப் பெற்றேன்.

(மீதி அடுத்த ‏இதழில்)

About The Author

2 Comments

  1. tamim

    இது ஒரு புதிய பகுதியாக இருக்கிரது நன்ராக இருக்கிரது தொடருட்டும் உஙல் பனி பாராட்டுக்கல். தமிம், ஷார்ஜா.

Comments are closed.