செய்திகள் அலசல்

மத்திய அரசு மருத்துவ மாணவர்களின் படிப்பை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளக உயர்த்தி கிராம சேவையைக் கட்டாயமாக்கியதற்கு பா.ம.க.வைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தன. மாணவர்கள் போராட்டம் ஒரு உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் முதலமைச்சர் தலையீட்டால் சற்றே அமுங்கியிருக்கிறது. இதில் நமக்குப் புரியாத சில விஷயங்கள்.

இந்தச் சட்டம் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கொந்தளிப்பு ஏன்?

கிராம சேவை முடிந்த பின்தான் பட்டம் என்றால் பட்டம் பெறாத, தகுதியில்லாத மருத்துவர்களை கிராமங்களுக்கு அனுப்பலாமா?

மருத்துவர்களை அனுப்புமுன்னால் அந்த கிராமங்களில் குறைந்த பட்சம் ஒரு முதலுதவி நிலையம், மருந்து வசதிகள் இருக்குமா?

நான்கு மாதங்கள் கிராம சேவை எனும் பட்சத்தில் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் மருத்துவர்கள் மாறினால் அது கிராம மக்களுக்குத் தொல்லையாக இருக்காதா?

கட்டாய மருத்துவ சேவை என்றால் மாணவர்கள் ஏதோ டிகிரி வாங்க வேண்டுமென்பதற்காகக் காலத்தைக் கழிப்பார்களே தவிர முழு மனதோடு செயல் படுவார்களா?

இதையெல்லாம் யாரிடம் கேட்க வேண்டும்?

***

தமிழகம் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருக்கிறது, எல்லாம் குடிமகன்கள் விஷயத்தில்தான். ஆறு கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் ஒரு கோடிக் குடிமகன்கள் இருக்கிறார்களாம். 2006-2007ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 7450 கோடி. இந்த வருடம் பத்தாயிரம் கோடிக்கு இதை உயர்த்த வேண்டும் என்பது அரசின் இலக்காம். ‘குடி உயரக் கோன் உயரும்’ என்று இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது!

***

சென்னையில் ஒரு மர்ம வாயுவின் தாக்கம் மணலி தொடங்கி கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பரவியது. இதை சுவாசித்த பொது மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத் திணறலினால் அவதியுற்றனர். இதற்கான �காரணத்தை ஒவ்வொரு தொழிற்சாலையாக ஆராய்ந்தபோது மணலியிலுள்ள எண்ணய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளிவந்திருக்கிறது என்று அறிந்தார்கள். முதல் நாள் எங்கள் ஆலையிலிருந்து ஒன்றும் கசியவில்லை என்று ஆலை மேலாளர்கள் சத்தியம் செய்தார்கள். அந்த ஆலையில் பராமரிப்பு வேலை நடப்பதால் வெளியேறும் ஹைட்ரோ கார்பன்கள் காற்றில் கல்ந்து நெடியை ஏற்படுத்துகின்றனவாம். அதனால் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று சொல்லிவிட்டர்கள்.

அப்படியே ஆனால்தான் என்ன, மக்கள் என்ன அரசியல்வாதிகளா அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கு? சாலையில் மேடு பள்ளத்தினால் விபத்து ஏற்பட்டாலும், மின் கசிவினால் இறந்தாலும், மூடப்படாத சாக்கடைகளில் விழுந்தாலும், அரசுக் கட்டிடம் இடிந்து விழுந்து இழப்பு ஏற்பட்டாலும் ஒரு ‘அச்சச்சோ’ வும் ஒரு லட்சம் உதவித் தொகையும் போதுமே, இறந்தவர்களுக்கு வாய்க்கரிசி போட!

***

தாயுள்ளம் தன் குழந்தைக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறும், அவள் தன் உயிரையும் கொடுப்பாள் என அறிவோம். ஆனால் இந்தத் தாய் கொஞ்சம் வித்தியாசமானவள். திருமங்கலத்தைச் சேர்ந்த மலர் என்ற பெண்மணி தன் ஒரு வயதுக் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது அருகிலிருந்த தோட்டத்திலிருந்து பூவண்டுகள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொட்டிவிட்டன. தன் உடல் முழுதும் வண்டுகள் மொய்க்க, அவள் தன் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டாள். அந்த வழியாகச் சென்ற சிலர்தான் அந்தக் குழந்தையை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார்களாம்.

***

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு நிலப் பிரச்சினை சம்பந்தமான வழக்கு மூன்றாண்டுகளாகியும் தீர்க்கப்படவில்லை, காரணம் கடவுளரான ராமரும், மகாவீரும் சாட்சியாக வராததுதான். ஆதய்யா கிராமத்திலுள்ள கோவில் ஒன்றில் ராமர் சிலையும் மகாவீர்சிலையும் பிரதிட்சை செய்யப்படுள்ளன. இது சம்பந்தமாக ஏற்பட்ட நிலப்பிரச்சினை வழ்க்கில்தான் ராமரும் மகாவீரும் எதிர்வாதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பதிவுத் தபாலில் அனுப்பப்பட்ட விலாசத்தில் ராமரும் மகாவீரும் இல்லாததால் கோர்ட் அதிகாரி கோர்ட்டிடம் அவர்களது முழு விலாசத்தையும் தெரிவிக்கும்படிக் கேட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து கோர்ட் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தது, "இந்த நாளிதழின் மூலம் தெரிவிக்கப்படுவது யாதெனின் 22ம் தேதி காலை 10-30க்குள் நீங்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி உத்தரச்விடப்படுகிறது, தவறினால், இவ்வழக்கில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்க நேரிடும்"

ராமரும் மகாவீரும் இன்னும் ஆஜராகவில்லை, கோர்ட் அவமதிப்பு வழக்குத் தொடரலாமே!

*** 

பரம வீர் சக்ர விருது பெற்றவர் பாணா சிங். கார்கில் போரில் ஒரு போஸ்ட்டை மீட்டெடுத்தார். அதை கௌரவிக்கும் பொருட்டு அந்தப் போஸ்ட்டுக்கு ‘பாணா போஸ்ட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பரம வீர் சக்ர விருதுக்காக, இவருக்குக் கிடைக்கும் தொகை மாதம் 166 ரூபாய். இந்த கேப்டன்” சரணடைந்த தீவிரவாதிக்குக் கிடைக்கும் உதவித் தொகை மாதம் 2000 ரூபாய். நாட்டைக் காக்கும் போர் வீரனை விட தீவிரவாதிக்குத்தான் அதிக மதிப்பு போல” என்று அங்கலாய்க்கிறார்.

***

அக்கரை

தன்னுடைய மற்ற எந்த வாரிசுகளுக்கும் எதையும் தன் உயிலில் எழுதிவைக்காமல் தன்னிடம் ஆயுள் முழுவதும் நன்றியாக இருந்த நாய்குட்டிக்கு தன் 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அனைவற்றையும் எழுதி வைத்திருக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த லியோனா ஹெம்ஸ்லே. உறவினர்களிடமிருந்து அதற்கு ஏற்பட்டுள்ள கொலை அபாயங்களிலிருந்து காப்பாற்ற அதற்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறதாம். இது நாயமா என்று உறவினர்கள் குரைக்கிறார்களாம்.

About The Author