செய்திகள் அலசல்

நம்ம சரக்கு நொம்ப நல்ல சரக்கு

லண்டனிலுள்ள ஒரு உணவு விடுதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு கோப்பை மது 28 லட்சம் ரூபாய்க்குப் பரிமாற ஏற்பாடு செய்துள்ளதாம். அப்படியென்ன ஸ்பெஷல் இந்த சரக்கில்? லூயிஸ் 12 பிராந்தியுடன் அரை பாட்டில் கிரிஸ்டல் ரோஸ் ஷாம்பெய்ன், சிறிய அளவு பிரவுன் சுகர் சேர்த்து மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட வாசனைத் தூள், இருபத்து நாலு காரட் தங்க இழைகள் கலந்த கலவை இது. மது பரிமாறப்பட்ட குவளையின் அடியில் 11 காரட் வைர மோதிரம் இருக்குமாம். சாப்பிட்டு முடியும் வரை அதனால் பாதுகாவலர்கள் உங்களுடனேயே இருப்பார்கள்!

அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

***

உலகில் அழுக்கு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களில் முதல் பத்தில் இந்தியாவிலுள்ள இரண்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை குஜராத் மாநிலத்திலுள்ள வாப மற்றும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகிந்தா. அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் நிறுவனம், சுற்றுச்சூழல், சுகாதாரம், அடிப்படை வசதிகள், சராசரி வாழ்நாள் உணவுப் பழக்கம், கல்வி நிலை உட்படப் பல விஷயங்களை ஆராய்ந்து சேகரிக்கப்பட்ட விவரம் இது.

வேதனை தரும் சாதனை!

***

சன் டி.வி.யில் கோலங்கள் தொடர் இழு இழு என்று இழுத்துக் கொண்டு போகிறது. தொல்ஸைத் தேடுவதிலேயே இரண்டு மூன்று எபிசோடை ஓட்டி விட்டார்கள். கடைசியில் அபியை மலையிலிருந்து உருட்டியே கொன்று விட்டார்கள். கடைசி வரையில் கூட இது கனவு என்று சொல்லி விட மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த தாய்மார்கள் (ஏன்? தந்தையர் மட்டும் விதி விலக்கா என்ன?) கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இனிமேலும் கதையைத் தொடர்வது like playing Hamlet without the prince of Denmark. அபியாக நடித்த தேவயானி வேறு சேனலுக்குத் தாவி விட்டதால் தான் இப்படி ஆயிற்று என்று நோக்கர்கள் கருத்தறிவிக்கிறார்கள். அப்பக்கூட, "அவருக்கு பதில் இவர்" உத்தியைக் கையாண்டிருக்கலாமே? "இப்ப சத்திக்கு" தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வுவது போல கதையில் தோன்றுகிறது. தருமம் மறுபடி வெல்லும். எப்படி என்று பார்க்கத்தான் சோபா நுனியில் அமர்ந்து, நகத்தைக் கடித்துக் கொண்டு காத்திருக்கிறோம்.

கடைசி செய்தி – கோலங்கள் மெகா சீரியலில் அபி நிஜமாகவே இறந்திருப்பாள் என்று ஒரு சாராரும், இறந்திருக்கவே முடியாது என்று மறு சாராரும் ஒரு பட்டி மன்றமே நடத்திக் கொண்டிருக்க அனைவர் வயிற்றிலும் பால் வார்ப்பதுபோல் அல்லது அனைவர் மனத்திலும் கோலம் போட்டதுபோல் அபி நேற்று ஸ்லோ மோஷனில் ஒரு பாதுகாப்புப் படை புடை சூழ நடந்து வந்து அசத்திவிட்டார். இந்த சீரியலின் இயக்குனர் ‘திரு திரு’ச்செல்வம் இனியாவது கதையை வேகமாக நகர்த்தி "அல்லாரை ஒறுத்து நல்லாரை வாழ்த்தி" சுபம் போடுவார் என்று நம்பலாமா?

***

அண்மையில் சென்னையில் நடந்த காந்தி அன்பர்கள் கூட்டத்தில், மிக முக்கியமான, ஆனால் அதிகமாக கவனத்தை ஈர்க்காத ஒரு பிரச்சினை பற்றி விவாதிக்கப் பட்டது. இது கட்டணக் கழிப்பிடங்கள் அமைக்கும் அநியாயத்தைப் பற்றியது. அனைத்துப் பொதுமக்களுக்கும் இந்த அடிப்படை வசதியைத் தருவது அரசின் கடமை. இதற்குப் போய் எப்படிக் கட்டணம் வசூலிக்கலாம்? கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி, தினசரி 40 ரூபாய் கூலி வாங்குகிற ஒரு பெண் எப்படி 4 ரூபாய் கழிப்பிடத்துக்காகச் செலவிட முடியும்? அதனாலேயே பலர் பொது இடங்களில் தனிமை தேடி, அல்லது சங்கடத்துடன் பொதுவாகவே ஒதுங்க வேண்டியதாக இருக்கிறது. இதில் இன்னொரு கொடுமை, பல கிராமங்களில், மாலை 6 மணிக்கு, பீஸ் போலக் கழிப்பிடத்தை மூடி விடுகிறார்கள். வேலையை முடித்துக் கொண்டு அப்போதுதான் உடல் உபாதை தீர்த்துக் கொள்ள வரும் பெண்களின் சங்கடம் சொல்லி முடியாது. இது மனித உரிமை மீறல் என்று பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். விவாதம் சூடாகவே இருந்தது. காந்தி அன்பர்கள்தானே, என்ன, பஸ் ரயிலைக் கொளுத்தி ஆர்ப்பாட்டமா செய்யப் போகிறார்கள் என்று அரசு மெத்தனமாகவே இருக்கும் என்று நம்பலாம்.

***

பஞ்சாயத் ராஜ் அமைச்சராக உள்ள மணி சங்கர் அய்யர் தெரிவித்த புள்ளி விவரம்: சுமார் எட்டரைக் கோடி இந்தியர்களுக்கு தினசரி வருமானம் 20 ருபாய்க்குக் கீழ். அதில் பெரும்பான்மையோரின் வருமானம் நாளொன்றுக்கு 9 ரூபாய்க்கும் கீழ். கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குக் குடி பெயர்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதனால்தான்.
ரொம்ப ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடித்திருக்கிறீர்கள் மணி சங்கர் அய்யர் ஸார், ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ? நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். அதுவும் பஞ்சாயத்து ராஜ்யத் துறை. உங்கள் துறை மூலம் நிறைய நல்ல விஷயங்கள் செய்ய முடியும் என்கிறார்களே, கொஞ்சம் உட்கார்ந்து யோசித்துப் பாருங்களேன்!

***

குஜராத் மாநிலத்தில் ஆனந்த் நகரம் பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற இடம். இப்போது ஆனந்த் பிரசித்தி பெற்று வருவது வேறு காரணங்களுக்காக. அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளிலிருந்து இங்கு வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதுவரை 55 பேர் வாடகைத் தாய்களாக இருக்கின்றனர். குழந்தை ஒன்றுக்கு 2 லட்சம் வரை வாடகை வசூலிப்பதற்கு இவர்களின் வறுமையே காரணமாம்.

***

உலகம் முழுவதும் இப்போது ஆறாயிரம் மொழிகள் இருக்கின்றனவாம். ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அறிக்கையின்படி இதில் 80 சதவிகித மொழிகள் அடுத்த நூற்றாண்டில் அழிந்துவிடும். இப்போது இருக்கும் மொழிகளில் 12 மொழிகள் மட்டுமே மிக வலுவாக இருக்கும். இந்திய மொழிகளில் இந்தி, வங்காளி மொழிகள் இவற்றில் அடக்கம்.

***

ஓய்வு பெற்ற நீதிபதி மலை சுப்ரமண்யம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். வக்கீல் பரீட்சை பாஸ் செய்ததும், பொய் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் அந்தத் துறையில் சேராமல், போலீஸ், ராணுவ வேலைகளுக்கு முயற்சி பண்ணினாராம். அவை கிடைக்காமல் போகவே, வக்கீலாகவே வந்தாராம். வக்கீலான பின், பொய் சூது வாது எல்லாம் நிறையவே கற்றுக் கொண்டு விட்டாராம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். ஒரு வக்கீல் பொய் சொல்ல மட்டேன், பொய் சாட்சி தயார் செய்ய மாட்டேன், பொய்க் கேஸ் எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் லட்ச லட்சமாக வருமானமும் பெரும் புகழும் கூட ஈட்ட முடிந்தது. இது நடந்தது தென் ஆப்பிரிக்காவில். பாரிஸ்டராக தொழில் நடத்திய அவர் பெயர் மோஹன் தாஸ்.

***

சொன்னது நீதானா?

அரசியலமைப்புச் சட்டப்படி பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றுக்கும் தனித்தனியான செயல்முறைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் ஒரு துறையினர் மற்றவரின் துறையில் தலையிடுவது முறையல்ல. அப்படிச் செய்தால் அரசியலமைபுச் சட்டத்தின் நுண்ணிய சமநிலைகள் பாதிக்கப்பட்டு விளைவுகள் ஏற்படும். நீதிபதிகள் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர புதுப்புது சட்டங்களை உருவாக்கக் கூடாது.

(உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஏ.கே. மாதுர் அடங்கிய பென்ச்.)

***

எகிப்து நாட்டில் குப்பை பொறுக்குவது அசிங்கமில்லை. அதனை அங்கே தொழிலாக அங்கீகரித்து அதைச் செய்பவரைத் தொழிலதிபராக மதிக்கின்றார்கள். குப்பை பொறுக்குபவருக்கென ஒரு சர்வ தேச அமைப்பு உள்ளது. பிரேசிலில் நடந்த சர்வதேச குப்பை பொறுக்குபவர் மகாநாட்டிற்கு இந்தியாவைச் சேர்ந்த சந்த்ரா மவுரியா கலந்து கொண்டார்.

***

சட்டப்படி செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காக, குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, பின் வறுமையில் வாடும் குழந்தைகளுக்குத் தேவையான உணவு முதலியவற்றுக்கு உதவி செய்து வந்தால் மனதின் சுமைகள் வெகுவாகக் குறைந்து உற்சாகம் ஏற்படும் – நிம்மதி உங்களுக்குச் சொந்தம் என்று அகில உலக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.(வரிகளையெல்லாம் செலுத்திய பின் ஏதுங்க மிச்சம் என்கிறார் எல்லாவற்றுக்கும் அலுத்துக்கொள்ளும் ஏகாம்பரம்)

***

About The Author