செல்லியம்மன் (2)

அவர்கள் அந்த நேரம் ஒரு பயங்கர ஒலியைக் கிளப்பிக்கொண்டு ‘கொலகொலோ’ என்று சில புரியாத சொற்களையும் மிக சத்தமாகச் சொல்வார்கள். இந்த சத்தமும் நள்ளிரவின் சூழ்நிலையும், இருளின் அமைதியில் அவர்களின் ‘டக் டக்’கென்ற நடையும் தீப்பந்தத்தின் வெளிச்சமும் சேர்ந்து மனதுக்குள் ஒருவித பீதியை உண்டுபண்ணும்.

ஊரிலிருந்து சுமார் ஐந்து கிமீ தூரத்தில் செல்லியம்மன் கோயில் இருக்கிறது. அந்த இடத்தை திருவரங்கம் என அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு அவர்கள் தீப்பந்தத்துடன் நெருங்குகிறார்கள். பின் மூன்றடுக்கு உரியில் இருக்கும் மாமிசப் பிரசாதத்தை அப்படியே அம்மனுக்குப் படைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் அவர்கள் வரவேண்டும்.

பின்னர் கொஞ்சம் பிரசாதத்தினை உண்டால் அவர்களுடைய ஆறு நாள் விரதம் முடிவடைந்து விடும். இந்த விரதத்தினை ஏனோ..தானோவென்று செய்தால் உடனடியாக எதிர்விளைவுகள் ஏற்படுமாம். உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து உயிருக்கே ஆபத்து நேரக்கூடிய வகையில் இருக்கும் என நம்புகிறார்கள்.

தவிர, இந்த ஏழு நாளும் அங்கு இருப்பவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளை இருப்பதால், நோயாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள் அனைவரும் விழா ஆரம்பமாவதற்கு முன்பாகவே ஊரின் அருகில் இருக்கும் மிலாரிப்பட்டு என்னும் கிராமத்திற்குச் சென்று தங்கிவிட வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக சிலர் அங்கு இருப்பர்.

ஏழாவது நாள். நாம் வரலக்ஷமி பூஜை செய்வதற்கு முன் கலசம் தயாரிப்பதுபோல் கலசம் தயாரிக்கப்பட்டு அதற்கு பட்டுப் பாவடை சுற்றி பூமாலைகளால் அலங்கரித்து அம்மனை அதில் ஆவாஹனம் செய்கிறார்கள். கலசரூபத்தில் இருக்கும் அம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தப்பட்டு ஊர்வலத்திற்குத் தயார் ஆகிறாள்.

ஒவ்வொரு தெருவிலும் ஊர்மக்கள் கூட்டம் கூட்டமாகக்கூடி அம்மனை வணங்கி ஆசி பெறுகிறார்கள். பெண்கள், சிறுவர்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

ஏழாம் நாள் இரவில் தெருக்கூத்து விழாவும் நடக்கும். ஆனால் அதற்கு ஆண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு.

இவ்வாறாக, விழா நிறைவுறும்.

இந்த ஊரில் அம்மன் கோயிலைத்தவிர ஒரு கற்பகாம்பாள் கோயிலும் உள்ளது. அதில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் அமர்ந்து அருள் புரிகிறார். பெயரிலேயே தெரிகிறது இந்தக் கோயிலில் வீற்றிருப்பது அகத்தியர் வழிபட்ட ஈசனென்று.

இங்கிருக்கும் நந்தி ஈசனைப் பார்க்காமல் வாயிலைப் பார்த்து அமர்ந்திருப்பது விசேஷமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

இந்தக் கோயிலின் ஈசனை வணங்கினால் மாங்கல்ய பலன் உடனே உண்டு. களத்திர தோஷம் நீக்கும் கோயில் இது என்று மக்கள் சொல்கிறார்கள்.

About The Author