‘செல்’லுனு ஒரு அரட்டை

ஒரு காலத்தில் டெலிபோன் வைத்திருந்தாலே செல்வாக்கான ஆள் என்று சொல்லப்பட்டது, ஆனால் இன்று செல்போன் இல்லையென்று சொன்னால் ‘செல்போன் கூட இல்லாமல் இப்படி ஒரு பிரகிருதி உயிர்வாழ முடியுமா!’ என்பது போல ஏற இறங்கப் பார்க்கிறார்கள். ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்பவர்களுக்கு ‘நகமும் சதையும்’ என்று உவமை சொல்வார்கள். இன்று ‘செல்லும் காதும்’ என்று மாற்றிச் சொல்லலாம்!

வாசலில் வரும் பிச்சைக்காரன் கூட ‘அம்மா.. தாயே! செல் ரீசார்ஜிற்குப் பணம் போடும்மா’ என்று கேட்பான் போலிருக்கிறது.

திருவள்ளுவர்கூட செல்லைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் என்று என் பையன் என்னிடம் சொன்னபோது நான் ‘திரு திரு’வென்று விழித்தேன். "யான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்கக்கால் தான் நோக்கி மெல்ல நகும், என்று சொல்லியிருக்கிறாரே, என்ன அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டபோது மறுபடியும் ‘திரு திரு’.

"அப்பா, நான் நோக்கியாவில் பேசும்போது அவள் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பாள். நான் பேசவில்லையென்றால் அவள் பேசி மெல்லச் சிரிப்பாள்’ என்ற அர்த்தத்தில் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்" என்றான் அந்தப் பரிமேலழகன். இப்படியாவது திருவள்ளுவர் வளர்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்!

இனிமேல் அரசு வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிட செல் வைத்திருப்பதைத்தான் அடிப்படையாக வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு வதந்தி. செல் இல்லாதவர்கள் எல்லாம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று புள்ளி விவரம் தயாரிக்கப்படுமாம். அடுத்த தேர்தலில் என்ன இலவசம் கொடுக்கலாம் என்று அரசியல் கட்சிகள் மண்டையைக் குடைந்து கொண்டபோது எல்லாருக்கும் இலவச செல்போன் கொடுக்கலாம் என்று ஒரு ஐடியா எழுந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். ஆனால் செல்போன் மட்டும் கொடுத்தால் போதுமா? ரீசார்ஜ் செய்ய யார் பணம் கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசனையாம்!

ஆரம்பத்தில் செல்போன் மற்றவர்களை எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற உபயோகத்தில்தான் இருந்தது. போகப் போக செல்போனில் காமிரா, எம்பி3, வீடியோ, ஈமெயில், ஐ போட் என்று பல இணைப்புகள். பாத்ரூமிலேயே சமையலறை, ஹால், படுக்கை அறை எல்லாம் இணைந்திருப்பதுபோல. கடைசியில் எந்த வசதிக்காக செல்போன் பயன்படுகிறதோ அது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

"அருளில்லாருக் கவ்வுலகம் இல்லை செல்லில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு" என்றே சொல்லலாம். செல்லில் அநாவசியமாகப் பேசி அரட்டை அடிக்கக் கூடாது என்பதற்காக ‘சொல்லுக செல்லில் பயனுடைய சொல்லற்க செல்லில் பயனிலாச் சொல்’ என்று பலகை எழுதிக் காரியாலயங்களில் மாட்டலாம். நல்ல பேச்சாளர்களுக்கு ‘சொல்லின் செல்வர்’ என்று பட்டம் கொடுப்பதுண்டு. செல்லை விட்டு ஒரு கணமும் பிரியாமல் பேசிக்கொண்டே இருப்பவருக்குச் ‘செல்லில் சொல்வர்’ என்று பட்டம் கூட அளிக்கலாம்.

செல்போனைப் பற்றிக் கடைசியாக ஒரு ஜோக் சொல்லாமல் போனால் இந்த அரட்டை முழுமை பெறாது.

அந்த உடற்பயிற்சி நிலையத்திலிருந்து அவன் உடைகளை மாற்றிக் கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது செல்போன் ஒலிக்க, அவன் அதைக் கையில் எடுத்து ‘ஹலோ’ என்றான்.

அடுத்த முனையிலிருந்து "டார்லிங், நான்தான் பேசறேன். நீங்க க்ளப்பிலதான் இருக்கீங்களா? நான் உங்க கிளப்புக்குப் பக்கத்தில இருக்கிற ஷாப்பிங் சென்டர்லேருந்து பேசறேன். நான் ஒரு அழகான பட்டுப்புடவை வாங்கினேன். 25 சதவிகிதம் தள்ளுபடி, சரிதானே?".

"ஊம், சரிதான்"

"அப்புறம் எனக்கு ஒரு ஸ்கூட்டர் புக் பண்ணனும்னு சொன்னேன் இல்லையா? நான் கேட்ட மாடல் வந்திருந்தது. இன்னிக்கு புக் பண்னிட்டேன்.. பரவாயில்லையா?"

"அதனாலென்ன?"

"நிலம் ஒன்னு மலிவா வருதுன்னு ப்ரோக்கர் சொன்னார். நல்ல இடம். அட்வான்ஸ் கொடுத்துட்டேன். ஓகே தானே?"

"ஊம், எனக்கு ஓகேதான்".

"சரி டார்லிங். நான் போனை வச்சுடறேன், ராத்திரி மீட் பண்ணலாம்"

"உம்ம் சரி" என்று போனை வைத்தவன், "இந்த செல்போன் யாருதுன்னு யாருக்காவது தெரியுமா?" என்று கத்திக் கேட்டான்.

About The Author

7 Comments

  1. ROYAL

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  2. P.Balakrishnan

    செல் விருந்தோம்பி – என்று வள்ளுவர் பாடியதுகூட செல் போனைப் பற்றித்தானோ..?..! . செல்போனை வைத்திருக்கும் வயதானவர் செல்லான் கிழவன்” (குறள்-“

  3. P.Balakrishnan

    செல் விருந்து” என்று வள்ளுவர் கூறியது செல் போனைப்பற்றித்தானோ ..?..!..”செல்போன் வைத்திருக்கும் வயதானவர் “செல்லான் கிழவன்” (திருக்குறள்-ஆயிரத்து முப்பத்தொன்பது)-என்று அழைக்கப்பட்டிருப்பாரோ..?..!..”

Comments are closed.